Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 78

இயேசு பிரசங்கிக்கிறார்

இயேசு பிரசங்கிக்கிறார்

இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு, ‘கடவுளுடைய அரசாங்கம் பக்கத்தில் வந்துவிட்டது’ என்று பிரசங்கிக்க ஆரம்பித்தார். கலிலேயாவிலும், யூதேயாவிலும் அவர் பயணம் செய்தபோது, சீஷர்களும் அவர்கூடவே போனார்கள். இயேசு தன்னுடைய சொந்த ஊரான நாசரேத்துக்குத் திரும்பிய பிறகு அங்கிருந்த ஜெபக்கூடத்துக்குப் போனார். அப்போது ஏசாயாவின் சுருளைத் திறந்து, ‘எல்லாருக்கும் நல்ல செய்தியை சொல்வதற்காக யெகோவா தன்னுடைய சக்தியை எனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்று சத்தமாக வாசித்தார். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? இயேசு அற்புதங்கள் செய்வதைப் பார்க்க மக்கள் ஆசைப்பட்டாலும், முக்கியமாக நல்ல செய்தியைச் சொல்வதற்காகத்தான் கடவுள் தன்னுடைய சக்தியை இயேசுவுக்குக் கொடுத்தார் என்பதுதான் அதன் அர்த்தம். பிறகு இயேசு அங்கே இருந்தவர்களிடம், ‘இன்றைக்கு இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிவிட்டது’ என்று சொன்னார்.

பிறகு இயேசு கலிலேயா கடலுக்குப் போனபோது, அங்கே மீன் பிடிக்கிற நான்கு பேரைப் பார்த்தார். அவர்கள் பெயர் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான். அவர்களிடம், ‘என்னோடு வாருங்கள். நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்று சொன்னார். அவர்கள் உடனே மீன் பிடிக்கிற வேலையை விட்டுவிட்டு இயேசுவின் பின்னால் போனார்கள். அவர்கள் இயேசுவின் சீஷர்களாக ஆனார்கள். அவர்கள் கலிலேயா முழுவதும் பயணம் செய்து, யெகோவாவின் அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் சொன்னார்கள். ஜெபக்கூடங்களில், சந்தைகளில், தெருக்களில் பிரசங்கித்தார்கள். அவர்கள் எங்கே போனாலும் ஒரு பெரிய கூட்டம் அவர்கள் பின்னால் போனது. எல்லா இடங்களில் இருந்த மக்களுக்கும் இயேசுவைப் பற்றி தெரியவந்தது. ரொம்பத் தூரத்தில் இருந்த சீரியா மக்களுக்கும் தெரியவந்தது.

கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, நோய்களைக் குணமாக்குவதற்கும், பேய்களை விரட்டுவதற்கும் இயேசு தன்னுடைய சீஷர்கள் சிலருக்குச் சக்தி கொடுத்தார். அவர் நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் போய் பிரசங்கித்தபோது மற்றவர்களும் அவருடன் போனார்கள். மகதலேனா மரியாள், யோவன்னாள், சூசன்னாள் போன்ற உண்மையுள்ள பெண்கள் பலர் இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் கவனித்துக்கொண்டார்கள்.

இயேசு தன்னுடைய சீஷர்களுக்குப் பயிற்சி கொடுத்த பிறகு, பிரசங்கிப்பதற்காக அவர்களை அனுப்பினார். அவர்கள் கலிலேயா முழுவதும் பயணம் செய்தார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு இன்னும் பலர் இயேசுவின் சீஷர்களாக ஆனார்கள், ஞானஸ்நானமும் எடுத்தார்கள். நிறைய பேர் அவருடைய சீஷர்களாக ஆவதற்கு ஆசைப்பட்டார்கள். அறுவடைக்குத் தயாராக இருக்கிற வயல் போல அவர்கள் இருப்பதாக இயேசு சொன்னார். அதனால், ‘அறுவடைக்கு இன்னும் நிறைய ஆட்களை அனுப்பச் சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்’ என்று அவர் சொன்னார். பிறகு, தன்னுடைய சீஷர்களில் 70 பேரைத் தேர்ந்தெடுத்தார். யூதேயா முழுவதும் பிரசங்கிப்பதற்கு அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் எல்லா விதமான ஆட்களுக்கும் சொன்னார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது, நடந்த விஷயங்களைப் பற்றி இயேசுவிடம் சொல்ல ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள். பிரசங்க வேலையை நிறுத்துவதற்கு பிசாசினால் எதுவுமே செய்ய முடியவில்லை.

தான் பரலோகத்துக்குப் போன பிறகும் தன்னுடைய சீஷர்கள் இந்த முக்கியமான வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று இயேசு நினைத்தார். அதனால், ‘நல்ல செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கியுங்கள். கடவுளுடைய வார்த்தையை மக்களுக்குச் சொல்லிக்கொடுத்து, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்’ என்று அவர்களிடம் சொன்னார்.

“நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்.”—லூக்கா 4:43