Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 82

ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார்

ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார்

மற்றவர்கள் தங்களைப் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே பரிசேயர்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஏழைகளுக்கு உதவி செய்தார்கள், பொது இடங்களில் ஜெபம் செய்தார்கள், பெரிய ஜெபங்களை மனப்பாடம் செய்து ஜெபக்கூடங்களிலும் தெரு முனைகளிலும் அவற்றைத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அதனால்தான், பரிசேயர்களைப் போல ஜெபம் செய்யாதீர்கள் என்று இயேசு சொன்னபோது மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மக்களிடம், ‘பரிசேயர்களைப் போல ஜெபம் செய்யாதீர்கள். நிறைய வார்த்தைகளைச் சொல்லி ஜெபம் செய்தால் கடவுள் சந்தோஷப்படுவார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது தவறு. ஜெபம் என்பது உங்களுக்கும் யெகோவாவுக்கும் இடையில் இருக்க வேண்டிய விஷயம். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள். உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொல்ல வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்.

நீங்கள் இப்படி ஜெபம் செய்ய வேண்டும்: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்”’ என்று சொன்னார். அந்தந்த நாளுக்குத் தேவையான உணவுக்காக ஜெபம் செய்ய வேண்டும். பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், சொந்த விஷயங்களுக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார்.

‘ஜெபம் செய்வதை நிறுத்திவிடாதீர்கள். யெகோவா அப்பாவிடம் நல்ல விஷயங்களைக் கேட்டுக்கொண்டே இருங்கள். எல்லா அப்பா அம்மாக்களும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பொருள்களைக் கொடுக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். உங்கள் மகன் உங்களிடம் ரொட்டி கேட்டால், கல்லைக் கொடுப்பீர்களா? மீன் கேட்டால், பாம்பைக் கொடுப்பீர்களா?’ என்று இயேசு கேட்டார்.

பிறகு அவர்களிடம், ‘நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கும்போது, உங்கள் அப்பாவான யெகோவா உங்களுக்குத் தன்னுடைய சக்தியை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார்? நீங்கள் அவரிடம் கேட்டால் மட்டும் போதும்’ என்று சொன்னார். இயேசு சொன்னபடி நீ செய்கிறாயா? நீ எந்த விஷயங்களைப் பற்றி ஜெபம் செய்கிறாய்?

“கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.”—மத்தேயு 7:7