Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 86

லாசருவை இயேசு உயிரோடு எழுப்புகிறார்

லாசருவை இயேசு உயிரோடு எழுப்புகிறார்

லாசருவும் அவருடைய சகோதரிகளான மார்த்தாளும் மரியாளும் பெத்தானியாவில் இருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்கள். ஒருநாள் மார்த்தாளும் மரியாளும், ‘லாசரு ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கிறான். சீக்கிரமாக வாருங்கள்’ என்று இயேசுவுக்கு அவசரமாக செய்தி அனுப்பினார்கள். அப்போது இயேசு பெரேயா மாகாணத்தில் இருந்தார். அவர் உடனடியாகக் கிளம்பாமல் இன்னும் இரண்டு நாட்கள் அங்கேயே இருந்தார். பிறகு தன் சீஷர்களிடம், ‘லாசரு தூங்கிக்கொண்டிருக்கிறான். நான் அவனை எழுப்ப வேண்டும். வாருங்கள், பெத்தானியாவுக்குப் போகலாம்’ என்று சொன்னார். அதற்கு அப்போஸ்தலர்கள், ‘லாசரு தூங்கினால், அவனுக்கு உடம்பு சரியாகிவிடுமே’ என்று சொன்னார்கள். அப்போது இயேசு, ‘லாசரு இறந்துவிட்டான்’ என்று அவர்களிடம் தெளிவாகச் சொன்னார்.

இயேசு பெத்தானியாவுக்கு வந்தபோது லாசருவை அடக்கம் செய்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்ல நிறைய பேர் வந்திருந்தார்கள். இயேசு வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் மார்த்தாள் அவரைப் பார்க்க வேகமாகப் போனாள். அவரைப் பார்த்ததும், “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றாள். அப்போது இயேசு, ‘உன் சகோதரன் மறுபடியும் உயிரோடு வருவான். மார்த்தாளே, நீ இதை நம்புகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு மார்த்தாள், ‘உயிர்த்தெழுதல் நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று நம்புகிறேன்’ என்றாள். இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொன்னார்.

பிறகு மார்த்தாள், ‘இயேசு வந்திருக்கிறார்’ என்று மரியாளிடம் போய்ச் சொன்னாள். மரியாள் அவரைப் பார்க்க ஓடினாள். அங்கே இருந்தவர்களும் அவள் பின்னால் போனார்கள். அவள் இயேசுவின் காலில் விழுந்து அழுதாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. மரியாள் அவரிடம், ‘எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால், எங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான்’ என்று சொன்னாள். அவள் படும் வேதனையைப் பார்த்து இயேசுவும் அழ ஆரம்பித்தார். அதைப் பார்த்து, ‘இவருக்கு லாசருமேல் எவ்வளவு பாசம்’ என்று அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் சிலர், ‘இயேசு ஏன் தன் நண்பரைக் காப்பாற்றவில்லை?’ என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். இயேசு அடுத்து என்ன செய்தார்?

இயேசு கல்லறைக்குப் போனார். அதன் வாசல் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது. ‘அந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்’ என்று இயேசு சொன்னார். அதற்கு மார்த்தாள், ‘அவன் இறந்து நான்கு நாள் ஆகிவிட்டது, நாறுமே’ என்று சொன்னாள். ஆனாலும் அந்தக் கல்லை எடுத்துப் போட்டார்கள். அப்போது இயேசு, ‘அப்பா, என் ஜெபத்தைக் கேட்பதற்காக நன்றி. நீங்கள் எப்போதுமே என் ஜெபத்தைக் கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்று இந்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் இப்போது சத்தமாக ஜெபம் செய்கிறேன்’ என்று சொன்னார். பிறகு, “லாசருவே, வெளியே வா” என்று சத்தமாகக் கூப்பிட்டார். அப்போது, ஆச்சரியத்திலும் ஆச்சரியமான சம்பவம் நடந்தது! லாசரு கல்லறையை விட்டு வெளியே வந்தார். அவருடைய உடல் நாரிழை துணிகளால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அங்கே இருந்தவர்களிடம், ‘இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள், இவன் போகட்டும்’ என்று சொன்னார்.

அதைப் பார்த்த நிறைய பேர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள். ஆனால், சிலர் பரிசேயர்களிடம் போய் அதைப் பற்றிச் சொன்னார்கள். அப்போதிலிருந்து இயேசுவையும் லாசருவையும் கொல்ல பரிசேயர்கள் வழிதேடினார்கள். இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து பரிசேயர்களை ரகசியமாகப் போய்ப் பார்த்தான். ‘இயேசு இருக்கும் இடத்தைக் காட்டினால் எனக்கு என்ன தருவீர்கள்?’ என்று கேட்டான். அவனுக்கு 30 வெள்ளி காசுகள் தருவதாக அவர்கள் சொன்னார்கள். அந்தச் சமயத்திலிருந்து இயேசுவைப் பரிசேயர்களிடம் பிடித்துக் கொடுப்பதற்கு யூதாஸ் சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தான்.

“உண்மைக் கடவுள் நமக்கு மீட்பு தரும் கடவுளாக இருக்கிறார். உன்னதப் பேரரசரான யெகோவாதான் சாவிலிருந்து நம்மைத் தப்பிக்க வைக்கிறார்.”—சங்கீதம் 68:20