Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 91

இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார்

இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார்

இயேசு இறந்த பிறகு, யோசேப்பு என்ற பணக்காரர் பிலாத்துவிடம் போனார். இயேசுவின் உடலை மரக் கம்பத்திலிருந்து இறக்கி, அதைக் கொண்டுபோக அனுமதி கேட்டார். வாசனைப் பொருள்களாலும், நல்ல நாரிழைத் துணியாலும் இயேசுவின் உடலைச் சுற்றிக் கட்டி, ஒரு புதிய கல்லறையில் வைத்தார். கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை வைத்து மூடினார். முதன்மை குருமார்கள் பிலாத்துவிடம் போய், ‘இயேசுவின் சீஷர்களில் சிலர் வந்து அவருடைய உடலை எடுத்துக்கொண்டு போய், அவர் திரும்பவும் உயிரோடு வந்துவிட்டார் என்று சொல்வார்களோ என்று பயமாக இருக்கிறது’ என்றார்கள். உடனே பிலாத்து அவர்களிடம், ‘கல்லறைக்கு முத்திரை போட்டு, காவலுக்கு ஆட்களை வையுங்கள்’ என்று சொன்னார்.

மூன்று நாட்கள் கழித்து, மகதலேனா மரியாளும் வேறு சில பெண்களும் விடியற்காலையில் கல்லறைக்குப் போனார்கள். அங்கே அந்தக் கல்லை யாரோ எடுத்துப் போட்டிருந்ததைப் பார்த்தார்கள். உடனே, மகதலேனா மரியாள் வேக வேகமாக பேதுருவையும் யோவானையும் பார்க்கப் போனாள். மற்ற பெண்கள் கல்லறைக்குள் போனார்கள். அங்கே ஒரு தேவதூதர், ‘பயப்படாதீர்கள்! இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார். கலிலேயாவுக்குப் போய் அவரைப் பார்க்கும்படி அவருடைய சீஷர்களிடம் சொல்லுங்கள்’ என்று அந்தப் பெண்களிடம் சொன்னார்.

மகதலேனா மரியாள் பேதுருவையும் யோவானையும் பார்த்ததும், ‘இயேசுவின் உடலை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்’ என்று சொன்னாள். பேதுருவும் யோவானும் உடனே கல்லறைக்கு ஓடினார்கள். அது காலியாக இருந்ததைப் பார்த்ததும் தங்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள்.

மரியாள் கல்லறைக்குத் திரும்பிப் போனபோது, உள்ளே இரண்டு தேவதூதர்களைப் பார்த்தாள். உடனே அவர்களிடம், ‘என் எஜமானை எங்கே கொண்டுபோனார்கள் என்று தெரியவில்லை’ என்று சொன்னாள். பிறகு, வேறொருவரைப் பார்த்தாள். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்துக்கொண்டு, ‘ஐயா, அவரை எங்கே கொண்டுபோனீர்கள் என்று சொல்லுங்கள்’ என்று கேட்டாள். அப்போது அவர், “மரியாளே!” என்று சொன்னார். அவர் இயேசுதான் என்று அவள் புரிந்துகொண்டாள். உடனே, “போதகரே!” என்று சொல்லி அவரைப் பிடித்துக்கொண்டாள். இயேசு அவளிடம், ‘என்னைப் பார்த்ததாக என் சகோதரர்களிடம் போய்ச் சொல்’ என்றார். உடனே, மரியாள் சீஷர்களிடம் ஓடிப்போய் தான் இயேசுவைப் பார்த்ததாக சொன்னாள்.

அன்று எருசலேமிலிருந்து எம்மாவு என்ற ஊருக்கு இரண்டு சீஷர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். வழியில் ஒருவர் அவர்களோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘உங்களுக்குத் தெரியாதா? மூன்று நாட்களுக்கு முன், முதன்மை குருமார்கள் இயேசுவைக் கொலை செய்துவிட்டார்கள். ஆனால் இப்போது சில பெண்கள் அவர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்கிறார்கள்’ என்றார்கள். அதற்கு அவர், ‘தீர்க்கதரிசிகள் சொன்னதை நீங்கள் நம்பவில்லையா? கிறிஸ்து இறந்துபோவார். ஆனால் திரும்ப உயிரோடு எழுப்பப்படுவார் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்களே!’ என்று சொன்னார். பிறகு அவர்களுக்கு வசனங்களை விளக்கிச் சொன்னார். அவர்கள் எம்மாவுக்கு வந்ததும், சீஷர்கள் அவரைத் தங்களோடு வரும்படி சொன்னார்கள். இரவு சாப்பாட்டின்போது அவர் ரொட்டிக்காக ஜெபம் செய்தார். அப்போதுதான் அவர் இயேசு என்று தெரிந்துகொண்டார்கள். பிறகு அவர் மறைந்துவிட்டார்.

இரண்டு சீஷர்களும் எருசலேமில் அப்போஸ்தலர்கள் கூடியிருந்த வீட்டுக்கு வேக வேகமாகப் போய், நடந்த விஷயங்களைச் சொன்னார்கள். அவர்கள் அங்கே இருந்தபோதே, அந்த வீட்டுக்குள் இயேசு எல்லாருக்கும் முன் தோன்றினார். முதலில், அவர் இயேசு என்று அப்போஸ்தலர்கள் நம்பவில்லை. அப்போது இயேசு, ‘என் கைகளைப் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள். கிறிஸ்து இறந்து, மறுபடியும் உயிரோடு எழுந்திருப்பார் என்று எழுதியிருக்கிறதே’ என்று சொன்னார்.

“நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்.”—யோவான் 14:6