Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 99

சிறைக்காவலன் கிறிஸ்தவனாக ஆகிறான்

சிறைக்காவலன் கிறிஸ்தவனாக ஆகிறான்

பேய் பிடித்திருந்த ஒரு வேலைக்காரப் பெண் பிலிப்பி நகரத்தில் இருந்தாள். அந்தப் பேய் அவளைக் குறிசொல்ல வைத்தது. இப்படி, அவளுடைய எஜமான்களுக்கு அவள் நிறைய பணம் சம்பாதித்துக் கொடுத்தாள். பவுலும் சீலாவும் பிலிப்பிக்கு வந்தபோது, “இவர்கள் உன்னதமான கடவுளின் ஊழியர்கள்” என்று கத்திக்கொண்டே அவர்கள் பின்னால் போனாள். இப்படியே பல நாட்களுக்குச் செய்துகொண்டிருந்தாள். அந்தப் பேய்தான் அவளை இப்படிச் சொல்ல வைத்தது. கடைசியில் பவுல் அந்தப் பேயிடம், ‘இயேசுவின் பெயரில் சொல்கிறேன், இவளை விட்டு வெளியே போ’ என்று சொன்னார். உடனே, அந்தப் பேய் அவளைவிட்டு போனது.

இனிமேல் அவளை வைத்து சம்பாதிக்க முடியாது என்று அவளுடைய எஜமான்களுக்குப் புரிந்துவிட்டது. அதனால், அவர்களுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர்கள் பவுலையும் சீலாவையும் நடுவர்களிடம் இழுத்துக்கொண்டு போய், ‘இந்த ஆட்கள் சட்டத்தை மீறுகிறார்கள். நகரத்தில் பயங்கர குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்!’ என்று சொன்னார்கள். பவுலையும் சீலாவையும் அடித்து, சிறையில் தள்ளும்படி நடுவர்கள் உத்தரவு போட்டார்கள். சிறைக்காவலன் அவர்களைப் பயங்கர இருட்டான உள்சிறையில் தள்ளி, அவர்களுடைய கால்களை மரச் சட்டங்களில் மாட்டி வைத்தான்.

அங்கே பவுலும் சீலாவும் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள். அதை மற்ற கைதிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடுராத்திரியில் திடீரென்று பயங்கர நிலநடுக்கம் வந்ததால் சிறைச்சாலை கிடுகிடுவென்று ஆடியது. சிறைக் கதவுகள் திறந்தன. கைதிகளுக்குப் போட்டிருந்த சங்கிலிகளும் அவர்களை மாட்டி வைத்திருந்த மரச் சட்டங்களும் கழன்றன. சிறைக்காவலன் வேகமாக உள்சிறைக்குப் போய்ப் பார்த்தான். கதவுகள் திறந்து கிடந்தன. கைதிகள் எல்லாரும் நிச்சயம் தப்பித்து போயிருப்பார்கள் என்று நினைத்தான். அதனால், தற்கொலை செய்துகொள்வதற்காக தன் வாளை எடுத்தான்.

அப்போது பவுல், ‘ஒன்றும் செய்துகொள்ளாதே! நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்!’ என்று சத்தமாகச் சொன்னார். அந்தச் சிறைக்காவலன் வேகமாக உள்ளே ஓடி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்னால் மண்டிபோட்டான். “மீட்பு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அப்போது அவர்கள், ‘நீயும் உன் வீட்டில் இருக்கிறவர்களும் இயேசுமேல் நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, பவுலும் சீலாவும் யெகோவாவின் வார்த்தைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். சிறைக்காவலனும் அவனுடைய வீட்டில் இருந்தவர்களும் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.

“மக்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்தி, ஜெபக்கூடங்களிலும் சிறைச்சாலைகளிலும் ஒப்படைப்பார்கள். நீங்கள் ராஜாக்களுக்கும் ஆளுநர்களுக்கும் முன்னால் நிறுத்தப்படுவீர்கள். சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பாக அது உங்களுக்கு அமையும்.”—லூக்கா 21:12, 13