Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

அன்பானவர்களே:

யெகோவாவை வணங்குகிற நாம் எல்லாருமே அவருடைய வார்த்தையான பைபிளை ரொம்ப நேசிக்கிறோம். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்கள் எல்லாமே திருத்தமானவை என்றும் அது நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது என்றும் நம்புகிறோம். அதோடு, மனிதர்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்புக்கு அருமையான அத்தாட்சிகளை பைபிள் தருகிறது என்றும் நம்புகிறோம். (சங்கீதம் 119:105; லூக்கா 1:3; 1 யோவான் 4:19) கடவுளுடைய வார்த்தையிலுள்ள முத்தான உண்மைகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் மனதார ஆசைப்படுகிறோம். அதற்காகத்தான், “பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்” என்ற இந்தப் புத்தகத்தை நாங்கள் வெளியிடுகிறோம். இப்போது இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சில விஷயங்களை சொல்கிறோம்.

இந்தப் புத்தகத்தை முக்கியமாக பிள்ளைகளுக்காகத் தயாரித்திருக்கிறோம். ஆனாலும், பைபிளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிற பெரியவர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். பைபிள் எல்லாரும் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். அதனால், அதிலுள்ள பாடங்களை மறுபடியும் படிப்பது நம் எல்லாருக்குமே பிரயோஜனமாக இருக்கும். அது நமக்கு உண்மையான சந்தோஷத்தையும் தரும்.

மனிதர்கள் படைக்கப்பட்ட சமயத்திலிருந்து அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி இந்தப் புத்தகம் சொல்கிறது. அவை எல்லாமே பைபிளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கின்றன. பைபிள் சம்பவங்களைத் தெளிவாகவும் எளிமையாகவும், முடிந்தவரை கால வரிசைப்படியும் விளக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.

இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிற விதமும், இதில் இருக்கிற படங்களும் பைபிள் சம்பவங்களை அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவருகின்றன. அதில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆட்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் வித்தியாசப்பட்ட ஆட்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் படிக்கலாம். சிலர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தவர்கள், சிலர் கீழ்ப்படியாதவர்கள். அவர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது. (ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:6) இந்தப் புத்தகத்தில் 14 பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியின் ஆரம்பத்திலும் அதில் கற்றுக்கொள்ளப் போகும் சில பாடங்களின் சுருக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் பிள்ளையோடு சேர்ந்து ஒரு பாடத்தைப் படித்த பிறகு அதிலுள்ள படங்களைப் பற்றியும் கலந்துபேசுங்கள். பிறகு, நீங்கள் இரண்டு பேரும் அந்தப் பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களை வாசியுங்கள். ஒவ்வொரு பாடமும் பைபிளிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். பைபிள் விஷயங்களை ஓரளவு தெரிந்துகொள்ள பெரியவர்களுக்கு உதவும்போதும் இதே முறையைப் பின்பற்றலாம்.

பைபிள் சொல்வதைக் கற்றுக்கொண்டு அதன்படி நடக்க, நல்மனமுள்ள சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இந்தப் புத்தகம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படிக் கற்றுக்கொள்ளும்போது அவர்களும் யெகோவாவின் அன்பான குடும்பத்தோடு சேர்ந்து அவரை வணங்க முடியும்.

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு