Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 1

“உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்”

“உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்”

மத்தேயு 4:10

முக்கியக் குறிப்பு: தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட வேண்டியதற்கான காரணம்

1, 2. கி.பி. 29, இலையுதிர் காலத்தில் இயேசு ஏன் யூதேயா வனாந்தரத்துக்கு வந்தார், அங்கே அவருக்கு என்ன நடந்தது? (ஆரம்பப் படம்.)

கி.பி. 29, இலையுதிர் காலத்தின் ஆரம்பம் அது. சவக்கடலுக்கு வடக்கிலுள்ள யூதேயா வனாந்தரத்தில் இயேசு இருக்கிறார். அவர் ஞானஸ்நானம் எடுத்து அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, கடவுளுடைய சக்தி அவரை அந்த இடத்துக்கு வழிநடத்தியது. பாறைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த அந்த வறண்ட நிலப்பகுதியில் இயேசு 40 நாட்களுக்கு விரதம் இருக்கிறார். தனியாக இருந்து ஜெபம் செய்வதற்கும் தியானிப்பதற்கும் அந்தக் காலத்தைப் பயன்படுத்துகிறார். ஒருவேளை அந்தச் சமயத்தில் யெகோவா தன்னுடைய மகனிடம் பேசி, அவர் எதிர்ப்படப்போகும் விஷயங்களுக்காக அவரைத் தயார்படுத்தியிருப்பார்.

2 இயேசு இப்போது பசியால் வாடிப்போய் இருக்கிறார். இந்தச் சமயத்தில் சாத்தான் அவரிடம் வருகிறான். அடுத்து நடந்த சம்பவம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரியப்படுத்துகிறது. அந்த விஷயத்துக்கும், தூய வணக்கத்தை நேசிக்கிற நம் ஒவ்வொருவருக்கும் சம்பந்தம் இருக்கிறது.

“நீ கடவுளுடைய மகனாக இருந்தால் . . .”

3, 4. (அ) முதல் இரண்டு சோதனைகளின்போது என்ன வார்த்தைகளைச் சொல்லி சாத்தான் பேச ஆரம்பித்தான், இயேசுவின் மனதில் என்ன சந்தேகத்தை விதைக்க அவன் முயற்சி செய்தான்? (ஆ) அதேபோன்ற தந்திரங்களை சாத்தான் இன்று எப்படிப் பயன்படுத்துகிறான்?

3 மத்தேயு 4:1-7-ஐ வாசியுங்கள். முதல் இரண்டு முறை இயேசுவைச் சோதித்தபோது, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால்” என்ற வார்த்தைகளைச் சொல்லி சாத்தான் தந்திரமாகப் பேச ஆரம்பித்தான். இயேசுதான் கடவுளுடைய மகன் என்பதில் சாத்தானுக்குச் சந்தேகம் இருந்ததா? இல்லவே இல்லை. கடவுளுடைய தயவை இழந்த அந்த தேவதூதனுக்கு இயேசுதான் கடவுளுடைய முதல் படைப்பு என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. (கொலோ. 1:15) அதோடு, இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று யெகோவா பரலோகத்திலிருந்து சொன்னதுகூட சாத்தானுக்குத் தெரிந்திருக்கும். (மத். 3:17) இயேசுவின் மனதில், தன்னுடைய அப்பா நம்பகமானவரா, தன்மீது அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்ற சந்தேகத்தை விதைப்பதற்காக அவன் தந்திரமாக அப்படிச் சொல்லியிருக்கலாம். முதல் சோதனையின்போது, கற்களை ரொட்டிகளாக்கும்படி சாத்தான் சொன்னான். இதன் மூலம், ‘நீ கடவுளுடைய மகன் என்றால், உன் அப்பா ஏன் இந்த வனாந்தரத்தில் உனக்கு சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை?’ என்று மறைமுகமாகக் கேட்டான். இரண்டாவது சோதனையின்போது, அவன் ஆலயத்தின் உயரமான இடத்திலிருந்து இயேசுவைக் கீழே குதிக்கச் சொன்னான். இதன் மூலம், ‘நீ கடவுளுடைய மகன் என்றால், உன் அப்பா உன்னைக் காப்பாற்றுவார் என்று நிஜமாகவே நம்புகிறாயா?’ என்று மறைமுகமாகக் கேட்டான்.

4 இதுபோன்ற தந்திரங்களையே சாத்தான் இன்றும் பயன்படுத்துகிறான். (2 கொ. 2:11) கடவுளை உண்மையோடு வணங்குகிறவர்கள் துவண்டுபோகும்வரை அல்லது சோர்ந்துபோகும்வரை அந்தச் சோதனைக்காரன் காத்திருக்கிறான். அதன் பிறகு, அவன் தாக்குகிறான். பெரும்பாலும் தந்திரமான வழிகளில் தாக்குகிறான். (2 கொ. 11:14) யெகோவா நம்மீது ஒருபோதும் அன்பு காட்ட மாட்டார் என்றும், நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் நம்மை நம்ப வைப்பதற்கு அவன் முயற்சி செய்கிறான். அதோடு, யெகோவா நம்பகமானவர் கிடையாது என்றும், பைபிளிலுள்ள அவருடைய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற மாட்டார் என்றும் நம்மை நம்ப வைப்பதற்கு அவன் முயற்சி செய்கிறான். ஆனால், அவையெல்லாம் படு பயங்கரமான பொய்கள். (யோவா. 8:44) அந்தப் பொய்களை நாம் எப்படி ஒதுக்கித்தள்ளலாம்?

5. முதல் இரண்டு சோதனைகளுக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார்?

5 முதல் இரண்டு சோதனைகளுக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார் என்பதைக் கவனியுங்கள். தன் அப்பாவுக்கு தன்மீது அன்பு இருக்கிறது என்பதில் இயேசுவுக்குத் துளிகூட சந்தேகம் இருக்கவில்லை. தன் அப்பாவை அவர் முழுமையாக நம்பினார். அதனால், அவர் கொஞ்சம்கூட தயங்காமல், வேத வசனங்களிலிருந்து மேற்கோள் காட்டி சாத்தானுக்குப் பதிலடி கொடுத்தார். அந்தச் சமயத்தில், யெகோவா என்ற பெயர் இருக்கிற வசனங்களை இயேசு மேற்கோள் காட்டியது பொருத்தமாக இருந்தது. (உபா. 6:16; 8:3) தன்னுடைய அப்பாவின் பெயரைப் பயன்படுத்தியதன் மூலம் அவர்மீது தனக்கு நம்பிக்கை இருந்ததை கடவுளுடைய மகன் காட்டினார். யெகோவா தன்னுடைய வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவார் என்று அவருடைய தனிச்சிறப்பு வாய்ந்த பெயர் உறுதியளிக்கிறது. *

6, 7. சாத்தானின் தந்திரமான தாக்குதல்களை நாம் எப்படி எதிர்க்கலாம்?

6 யெகோவாவின் வார்த்தையை நாம் படிக்க வேண்டும். அவருடைய பெயரின் அர்த்தத்தை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது, சாத்தானுடைய தந்திரமான தாக்குதல்களை நம்மால் எதிர்க்க முடியும். துவண்டுபோனவர்கள் உட்பட, தன்னை வணங்குகிறவர்கள் எல்லார்மீதும், யெகோவாவுக்கு அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளும்போது, சாத்தானுடைய பொய்களை நம்மால் ஒதுக்கித்தள்ள முடியும். அதாவது, யெகோவா ஒருபோதும் நம்மை நேசிப்பதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை என்ற பொய்யை ஒதுக்கித்தள்ள முடியும். (சங். 34:18; 1 பே. 5:8) அதோடு, யெகோவா தன்னுடைய பெயரின் அர்த்தத்துக்கு ஏற்றபடி எப்போதும் நடந்துகொள்கிறார் என்பதை நாம் மனதில் வைத்தால், அவரை ஒருபோதும் சந்தேகப்பட மாட்டோம். அவர் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதை முழுமையாக நம்புவோம்.—நீதி. 3:5, 6.

7 அப்படியானால், சாத்தானுடைய முக்கிய லட்சியம் என்ன? நம்மிடமிருந்து அவன் எதை எதிர்பார்க்கிறான்? இயேசுவுக்கு சாத்தான் கொடுத்த மூன்றாவது சோதனையிலிருந்து அதை நம்மால் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

“ஒரேவொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால் . . .”

8. சாத்தான் உண்மையிலேயே என்ன எதிர்பார்க்கிறான் என்பதை மூன்றாவது சோதனை எப்படிக் காட்டியது?

8 மத்தேயு 4:8-11-ஐ வாசியுங்கள். சாத்தான் மூன்றாவது முறை இயேசுவைச் சோதித்தபோது மறைமுகமாக எதையும் சொல்லாமல், அவரிடம் அவன் எதை எதிர்பார்த்தான் என்பதை நேரடியாகச் சொன்னான். அவன் இயேசுவுக்கு (ஒருவேளை ஒரு தரிசனத்தில்) “இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும்” காட்டினான். ஆனால், அட்டூழியங்களும் ஊழல்களும் இல்லாத ராஜ்யங்களாக அவற்றைக் காட்டினான். பிறகு அவன் இயேசுவிடம், “நீ ஒரேவொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான். * ஆம், வணக்கத்தைத்தான் அவன் முக்கியமாக எதிர்பார்த்தான்! இயேசு தன்னுடைய அப்பாவை வணங்குவதை விட்டுவிட்டு தன்னைக் கடவுளாக வணங்க வேண்டுமென்று சாத்தான் விரும்பினான். உலகத்தின் ராஜ்யங்களைப் பெறுவதற்கு, சுலபமாகத் தெரியும் ஒரு வழியை இயேசுவுக்கு சாத்தான் காட்டினான். முள் கிரீடம், சாட்டையடி, சித்திரவதைக் கம்பம் என எந்த வேதனையையும் அனுபவிக்காமலேயே எல்லா ராஜ்யங்களின் அதிகாரத்தையும், செல்வத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லாமல் சொன்னான். அதை அவனால் கொடுக்க முடியும். ஏனென்றால், இந்த உலகத்தின் அரசாங்கங்கள் எல்லாம் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அதை இயேசுவும் மறுக்கவில்லை! (யோவா. 12:31; 1 யோ. 5:19) தன்னுடைய அப்பாவுக்குக் கொடுக்க வேண்டிய தூய வணக்கத்திலிருந்து இயேசுவை விலக்க, சாத்தான் எதை வேண்டுமானாலும் கொடுத்திருப்பான்.

9. (அ) உண்மை வணக்கத்தாரிடமிருந்து சாத்தான் எதை எதிர்பார்க்கிறான்? நம்மைச் சோதிக்க அவன் எப்படி முயற்சி செய்கிறான்? (ஆ) நம் வணக்கத்தில் என்ன விஷயங்கள் உட்பட்டிருக்கின்றன? (“வணக்கம் என்றால் என்ன?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

9 இன்றும்கூட நம்முடைய வணக்கத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் சாத்தான் விரும்புகிறான். அவன், ‘இந்த உலகத்தின் கடவுளாக’ இருப்பதால், மகா பாபிலோனின் பாகமான மதங்கள் செலுத்துகிற வணக்கம் எல்லாம் அவனுக்கே போய்ச் சேருகிறது. (2 கொ. 4:4) கோடிக்கணக்கான பொய் வணக்கத்தார் தன் பக்கம் இருப்பது போதாதென்று, உண்மை வணக்கத்தாரையும் தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறான். அதற்காக, கடவுளுடைய விருப்பத்துக்கு எதிராக நடக்கும்படி அவர்களைத் தூண்டுகிறான். கிறிஸ்தவர்களாகிய நாம், ‘நீதிக்காகக் கஷ்டப்படுவதற்கு’ பதிலாக, அவனுடைய உலகத்தில் செல்வத்தையும் பதவியையும் அடைய முயற்சி செய்யும்படித் தூண்டுகிறான். (1 பே. 3:14) தூய வணக்கத்தை விட்டுவிட்டு தன்னுடைய உலகத்தோடு சேர்ந்துகொள்ளும்படி சாத்தான் நமக்கு ஆசைகாட்டுகிறான். அந்த ஆசை வலையில் நாம் சிக்கிவிட்டால், நாம் அவனுக்கு முன் விழுந்து அவனை வணங்குவது போல், அவனைக் கடவுளாக ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடும்! இப்படிப்பட்ட சோதனையில் சிக்காமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

10. மூன்றாவது சோதனைக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார், ஏன்?

10 மூன்றாவது முறை சாத்தான் சோதித்தபோது இயேசு என்ன சொன்னார் என்று பாருங்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருந்ததால், “அப்பாலே போ சாத்தானே!” என்று சொல்லி அந்தச் சோதனைக்காரனுக்குப் பதிலடி கொடுத்தார். முதல் இரண்டு சோதனைகளின்போது செய்தது போல, இந்த முறையும் கடவுளுடைய பெயர் இருக்கிற ஒரு வசனத்தை இயேசு குறிப்பிட்டார். “‘உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்ற வசனத்தை உபாகமப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டினார். (மத். 4:10; உபா. 6:13) இதன் மூலம், கொஞ்சக் காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கும் பெரிய பதவியையும், எந்தப் பாடுகளும் இல்லாத சொகுசான வாழ்க்கையையும் ஒதுக்கித்தள்ளினார். வணக்கத்தைப் பெறுவதற்கான தகுதி தன்னுடைய அப்பாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அதோடு, சாத்தானை ‘ஒரேவொரு தடவை வணங்கினால்கூட’ அது அவனுக்கு அடிபணிவதுபோல் இருக்கும் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. அந்தப் பொல்லாத சோதனைக்காரனைத் தன்னுடைய கடவுளாக ஆக்கிவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியோடு இருந்தார். அவன் சொன்னதை அவர் செய்ய மறுத்துவிட்டதால், அவன் “அவரைவிட்டுப் போனான்.” *

“அப்பாலே போ சாத்தானே!” (பாரா 10)

11. சாத்தானையும் அவனுடைய சோதனைகளையும் நாம் எப்படி எதிர்க்கலாம்?

11 சாத்தானையும் அவனுடைய பொல்லாத உலகத்திலிருந்து வரும் சோதனைகளையும் நம்மாலும் எதிர்க்க முடியும். ஏனென்றால், இயேசுவைப் போலவே நமக்கும் தீர்மானம் எடுக்கிற சுதந்திரம் இருக்கிறது. அதை யெகோவா நமக்கு ஒரு பரிசாகத் தந்திருக்கிறார். அதனால், யாராலுமே, சக்தி படைத்த பொல்லாத தூதனாகிய அந்தச் சோதனைக்காரனால்கூட, தூய வணக்கத்தை விட்டுவிடும்படி நம்மை வற்புறுத்த முடியாது. நாம் ‘விசுவாசத்தில் உறுதியாக இருந்து, சாத்தானை எதிர்த்து நின்றால்’... கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிரூபித்தால்... அது “அப்பாலே போ சாத்தானே!” என்று அவனிடம் சொல்வதுபோல் இருக்கும். (1 பே. 5:9) சாத்தானை இயேசு உறுதியோடு எதிர்த்தபோதுதான் அவன் அவரைவிட்டுப் போனான் என்பதை நினைவில் வையுங்கள். அதனால்தான் பைபிள், “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று உறுதியாகச் சொல்கிறது.—யாக். 4:7.

சாத்தானுடைய உலகத்திலிருந்து வரும் சோதனைகளை எதிர்க்க நாம் தீர்மானிக்கலாம் (பாராக்கள் 11, 19)

தூய வணக்கத்தின் எதிரி

12. சாத்தான், தூய வணக்கத்தின் எதிரி என்பதை ஏதேனில் எப்படிக் காட்டினான்?

12 மூன்றாவது சோதனையின் மூலம், தூய வணக்கத்தின் முதல் எதிரி தான்தான் என்பதை சாத்தான் நிரூபித்துவிட்டான். ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் ஏதேன் தோட்டத்தில்தான், தூய வணக்கத்தின் மீது தனக்கு இருந்த வெறுப்பை முதன்முறையாக அவன் காட்டினான். ஏதேனில் அவன் ஏவாளைத் தந்திரமாக ஏமாற்றி, அவள் மூலமாக ஆதாமையும் யெகோவாவின் கட்டளையை மீறும்படிச் செய்தான். அப்படிச் செய்ததன் மூலம், அவர்களை தன்னுடைய தலைமையின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் சாத்தான் கொண்டுவந்தான். (ஆதியாகமம் 3:1-5-ஐ வாசியுங்கள்; 2 கொ. 11:3; வெளி. 12:9) தங்களை உண்மையிலேயே ஏமாற்றியது யார் என்று அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், அவன் அவர்களுடைய கடவுளாகவும், அவர்கள் அவனுடைய வணக்கத்தாராகவும் ஆனார்கள். அதுமட்டுமல்ல, ஏதேனில் கலகத்தைத் தூண்டிவிட்டதன் மூலம் யெகோவாவின் பேரரசாட்சிக்கு எதிராக, அதாவது ஆட்சி செய்யும் உரிமைக்கு எதிராக, சவால்விட்டதோடு தூய வணக்கத்தைக் கறைபடுத்தவும் ஆரம்பித்தான். எப்படி?

13. பேரரசாட்சி பற்றிய சவாலில் தூய வணக்கம் எப்படி உட்பட்டிருக்கிறது?

13 பேரரசாட்சிக்கு எதிரான சவாலில் தூய வணக்கமும் உட்பட்டிருக்கிறது. உன்னதப் பேரரசரான யெகோவாதான் ‘எல்லாவற்றையும் படைத்தவர்.’ அதனால், தூய வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள அவர்தான் தகுதியானவர். (வெளி. 4:11) அவர் ஆதாமையும் ஏவாளையும் பரிபூரணமாகப் படைத்து, ஏதேன் தோட்டத்தில் குடிவைத்தார். அவர்கள் பிள்ளைகளைப் பெற்று பரிபூரண மனிதர்களால் இந்தப் பூமியை நிரப்ப வேண்டும் என்பதும் அவர்கள் எல்லாருமே தூய உள்ளத்தோடு தனக்கு தூய வணக்கத்தைச் செலுத்த வேண்டும் என்பதும் அவருடைய நோக்கமாக இருந்தது. (ஆதி. 1:28) சாத்தான், உன்னதப் பேரரசராகிய யெகோவாவுக்கு மட்டுமே சொந்தமான வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டான். அதனால்தான், யெகோவாவின் உன்னத பேரரசாட்சிக்கு எதிராகச் சவால்விட்டான்.—யாக். 1:14, 15.

14. தூய வணக்கத்துக்கு எதிரான தாக்குதலில் சாத்தான் வெற்றி அடைந்தானா? விளக்குங்கள்.

14 தூய வணக்கத்தைத் தாக்குவதில் சாத்தானுக்கு வெற்றி கிடைத்ததா? ஆதாமையும் ஏவாளையும் அவனால் கடவுளிடமிருந்து விலக்க முடிந்தது. அப்போதிலிருந்து, உண்மை வணக்கத்துக்கு எதிராக அவன் போர் செய்துகொண்டிருக்கிறான். எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரை யெகோவாவிடமிருந்து விலக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறான். அதற்காக, பூர்வ காலத்தில் வாழ்ந்த யெகோவாவின் வணக்கத்தாரை அவன் பலமுறை சோதித்திருக்கிறான். முதல் நூற்றாண்டில், சபைக்குள் விசுவாசதுரோகத்தைத் தூண்டிவிட்டான். அதனால், கிறிஸ்தவ சபையின் தூய்மை கெட்டுவிட்டது. காலப்போக்கில், தூய வணக்கமே இல்லாததுபோல் தெரிந்தது. (மத். 13:24-30, 36-43; அப். 20:29, 30) இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உண்மை வணக்கத்தார் ஆன்மீக விதத்தில் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனுக்கு அடிமைகளாக ஆனார்கள். அவர்கள் ரொம்பக் காலத்துக்கு அப்படி அடிமைகளாக இருந்தார்கள். ஆனால், தூய வணக்கம் சம்பந்தமான கடவுளுடைய நோக்கத்தை முறியடிப்பதில் சாத்தான் வெற்றி அடையவில்லை. கடவுள், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. (ஏசா. 46:10; 55:8-11) ஏனென்றால், அவருடைய பெயர் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் எப்போதும் தன்னுடைய பெயரின் அர்த்தத்துக்கு ஏற்றபடி செயல்படுகிறார். யெகோவா தன்னுடைய நோக்கத்தைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார்!

தூய வணக்கத்தின் மாபெரும் ஆதரவாளர்

15. ஏதேன் தோட்டத்தில் கலகம் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றவும் யெகோவா என்ன ஏற்பாடு செய்தார்?

15 ஏதேன் தோட்டத்தில் கலகம் செய்தவர்கள்மீது யெகோவா நடவடிக்கை எடுத்ததோடு, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாட்டையும் உடனடியாகச் செய்தார். (ஆதியாகமம் 3:14-19-ஐ வாசியுங்கள்.) ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருந்தபோதே, கலகம் செய்த அந்த மூன்று பேருக்கு எதிராகவும் யெகோவா தீர்ப்பு சொன்னார். முதலில் சாத்தானும், அடுத்ததாக ஏவாளும், கடைசியில் ஆதாமும் பாவம் செய்தார்கள். அந்த வரிசைப்படியே யெகோவா அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கினார். பார்க்க முடியாத உருவத்தில் இருந்த கலகக்காரனான சாத்தானிடம், ஒரு “சந்ததி” வரப்போவதைப் பற்றி யெகோவா முன்னறிவித்தார். அந்த “சந்ததி” ஏதேன் தோட்டத்தில் ஏற்பட்ட கலகத்தின் பாதிப்புகளைச் சரிசெய்யும் என்றும் சொன்னார். வாக்குக் கொடுக்கப்பட்ட அந்த “சந்ததிக்கு,” தூய வணக்கம் சம்பந்தமாக யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஒரு முக்கிய பங்கு இருக்கும்.

16. ஏதேன் தோட்டத்தில் ஏற்பட்ட கலகத்துக்குப் பிறகும் தன்னுடைய நோக்கத்தை யெகோவா எப்படித் தொடர்ந்து நிறைவேற்றினார்?

16 ஏதேன் தோட்டத்தில் ஏற்பட்ட கலகத்துக்குப் பிறகும் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா தொடர்ந்து உழைத்து வந்திருக்கிறார். பாவ இயல்புள்ள மனிதர்கள் அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவரை வணங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அடுத்த அதிகாரத்தில் இதைப் பற்றிக் கூடுதலாகப் பார்ப்போம். (எபி. 11:4–12:1) தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனங்களைப் பதிவு செய்யும்படி ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்ற பல தீர்க்கதரிசிகளை அவர் தூண்டியிருக்கிறார். தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதுதான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான செய்தி. அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாம், கடவுள் வாக்குக் கொடுத்த ‘சந்ததியின்’ முக்கிய பாகமான இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேறும். (கலா. 3:16) இயேசுதான் தூய வணக்கத்தின் மாபெரும் ஆதரவாளர். மூன்றாவது முறை சாத்தானால் சோதிக்கப்பட்டபோது அவர் கொடுத்த பதிலிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. ஆம், தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதற்கு இயேசுவைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்தார். (2 கொ. 1:20; வெளி. 19:10) அவர், கடவுளுடைய மக்களை ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து தூய வணக்கத்தை மறுபடியும் நிலைநாட்டுவார்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

17. தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் நம் மனதை ஏன் தொடுகின்றன?

17 தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களை ஆராய்வது சுவாரஸ்யமாக இருக்கும். அது நம் விசுவாசத்தையும் பலப்படுத்தும். அந்தத் தீர்க்கதரிசனங்களை நாம் ரொம்ப முக்கியமானவையாக நினைக்கிறோம். ஏனென்றால், பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாரும் உன்னதப் பேரரசராகிய யெகோவாவை ஒற்றுமையாக வணங்கும் காலத்துக்காக நாம் காத்திருக்கிறோம். அந்தத் தீர்க்கதரிசனங்கள் நமக்கு நம்பிக்கையையும் தருகின்றன. ஏனென்றால், நம் மனதைத் தொடும் அருமையான பைபிள் வாக்குறுதிகளில் சில வாக்குறுதிகள் அவற்றில் அடங்கியிருக்கின்றன. இறந்துபோன நம் அன்பானவர்கள் மறுபடியும் உயிரோடு வருவது... இந்த முழு பூமியும் பூஞ்சோலையாக மாறுவது... பூரண ஆரோக்கியத்தோடு நாம் என்றென்றும் வாழ்வது... போன்ற யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்க்க நாம் எல்லாருமே ஆவலாக இருக்கிறோம், இல்லையா?—ஏசா. 33:24; 35:5, 6; வெளி. 20:12, 13; 21:3, 4.

18. இந்தப் புத்தகத்தில் நாம் எதைப் பற்றி பார்ப்போம்?

18 எசேக்கியேல் புத்தகத்திலுள்ள சிலிர்க்க வைக்கும் தீர்க்கதரிசனங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் பார்ப்போம். அதிலுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள், தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள் மற்ற தீர்க்கதரிசனங்களோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன? கிறிஸ்து மூலமாக அவை எப்படி நிறைவேறப்போகின்றன? அவற்றுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தப் புத்தகத்தில் பார்ப்போம்.—“எசேக்கியேல் புத்தகம்—ஒரு பார்வை” என்ற பெட்டியைப் பாருங்கள்.

19. உங்களுடைய தீர்மானம் என்ன, ஏன்?

19 கி.பி. 29-ஆம் வருஷம் யூதேயா வனாந்தரத்தில், இயேசுவைத் தூய வணக்கத்திலிருந்து விலக்க சாத்தான் எடுத்த முயற்சி படு தோல்வி அடைந்தது. நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? தூய வணக்கத்திலிருந்து நம்மைத் திசைதிருப்ப சாத்தான் முன்பைவிட இப்போது படு தீவிரமாக இருக்கிறான். (வெளி. 12:12, 17) இந்தப் பொல்லாத சோதனைக்காரனை எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தில் நாம் உறுதியாக இருக்க இந்தப் புத்தகம் உதவும். “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்” என்ற வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் என்பதை நம் சொல்லும் செயலும் காட்ட வேண்டும். அப்போதுதான் யெகோவாவுடைய மாபெரும் நோக்கம் நிறைவேறுவதைப் பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். ஆம், பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாரும் ஒற்றுமையாக, யெகோவாவுக்கு மட்டுமே சொந்தமான தூய வணக்கத்தை தூய உள்ளத்தோடு செலுத்துவார்கள்.

^ பாரா. 5 “ஆகும்படி செய்கிறவர்” என்பது யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்று சிலர் புரிந்துகொள்கிறார்கள். யெகோவா, படைப்பாளராகவும் தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றுபவராகவும் இருப்பதால் இந்த அர்த்தம் அவருக்கு நன்றாகவே பொருந்துகிறது.

^ பாரா. 8 சாத்தானுடைய வார்த்தைகளைப் பற்றி ஒரு பைபிள் ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “மனிதகுலத்துக்கு வந்த முதல் சோதனையில், ஆதாமும் ஏவாளும் தோல்வி அடைந்தார்கள். . . . அந்தச் சமயத்திலிருந்து, கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதா, அல்லது சாத்தானுடைய விருப்பத்தைச் செய்வதா என்ற கேள்வி எழும்பியிருக்கிறது. கடவுளை வணங்குவதா அல்லது சாத்தானை வணங்குவதா என்பது இதில் உட்பட்டுள்ளது. சாத்தான், ஒரே [உண்மையான] கடவுளுக்குப் பதிலாகத் தன்னைக் கடவுளென சொல்லிப் பெருமை அடிக்கிறான்.”

^ பாரா. 10 இயேசுவுக்கு வந்த சோதனைகளைப் பற்றி லூக்காவும் மத்தேயுவும் வெவ்வேறு வரிசையில் எழுதியிருக்கிறார்கள். மத்தேயு, அவற்றைக் கால வரிசைப்படி எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அதற்கான மூன்று காரணங்களைக் கவனியுங்கள். (1) இரண்டாவது சோதனையை, “பின்பு” என்ற வார்த்தைகளோடு மத்தேயு ஆரம்பிக்கிறார். இதிலிருந்து அவர் கால வரிசைப்படி எழுதியிருக்கிறார் என்பது தெரிகிறது. (2) மறைமுகமான முதல் இரண்டு சோதனைகளுக்குப் பிறகுதான் இயேசுவை சாத்தான் நேரடியாகச் சோதித்திருக்க வேண்டும். முதல் இரண்டு முறையும், “நீ கடவுளுடைய மகனாக இருந்தால்” என்று சொல்லி மறைமுகமாக இயேசுவைச் சோதித்தான். ஆனால், மூன்றாவது முறை, பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளையை மீறும்படி நேரடியாகச் சோதித்தான். (யாத். 20:2, 3) (3) “அப்பாலே போ சாத்தானே!” என்ற வார்த்தைகளைக் கடைசி முறை, அதாவது மூன்றாவது முறை, சோதிக்கப்பட்ட பிறகுதான் இயேசு சொல்லியிருக்க வேண்டும்.—மத். 4:5, 10, 11.