Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 2

அவர்களுடைய காணிக்கைகளை ‘கடவுள் ஏற்றுக்கொண்டார்’

அவர்களுடைய காணிக்கைகளை ‘கடவுள் ஏற்றுக்கொண்டார்’

எபிரெயர் 11:4

முக்கியக் குறிப்பு: தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றிய பதிவு

1-3. (அ) நாம் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்? (ஆ) தூய வணக்கத்தில் உட்பட்டுள்ள என்ன நான்கு முக்கியமான அம்சங்களைச் சிந்திப்போம்? (ஆரம்பப் படம்.)

ஆபேல் தன்னுடைய ஆடுகளைக் குட்டியிலிருந்தே பாசமாக வளர்த்திருக்கிறார். இப்போது அவை ஒவ்வொன்றையும் கவனமாகப் பார்க்கிறார். அவற்றிலிருந்து சில ஆடுகளைத் தேர்ந்தெடுக்கிறார். யெகோவாவுக்குக் காணிக்கையாக அவற்றைப் பலி கொடுக்கிறார். பாவ இயல்புள்ள இந்த மனிதன் தன்னை வணங்குவதற்காகச் செலுத்திய பலியை யெகோவா ஏற்றுக்கொள்வாரா?

2 ‘அவருடைய காணிக்கைகளைக் கடவுள் ஏற்றுக்கொண்டார்’ என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் எழுதினார். ஆனால், காயீனுடைய காணிக்கையை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. (எபிரெயர் 11:4-ஐ வாசியுங்கள்.) இந்த விஷயம் நம் மனதில் சில கேள்விகளை எழுப்புகிறது. கடவுள் ஏன் காயீனுடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஆபேலுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்? காயீன், ஆபேல் மற்றும் எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களுடைய உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொண்டால் தூய வணக்கத்தில் உட்பட்டுள்ள விஷயங்களை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

3 ஆபேலின் காலத்திலிருந்து எசேக்கியேலின் காலம்வரை நடந்த சில சம்பவங்களை நாம் இப்போது சிந்திப்போம். நம் வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் பின்வரும் நான்கு முக்கிய விஷயங்களை அந்தச் சம்பவங்களில் கவனியுங்கள்: (1) வணக்கத்தைப் பெறுபவர் யெகோவாவாக இருக்க வேண்டும், (2) வணக்கத்தின் தரம் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும், (3) கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அந்த வணக்கம் இருக்க வேண்டும், (4) வணக்கத்தைச் செலுத்துபவருடைய உள்நோக்கம் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

காயீனின் வணக்கம் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?

4, 5. யெகோவாவுக்குத்தான் காணிக்கையைக் கொடுக்க வேண்டும் என்று எதை வைத்து காயீன் முடிவு செய்தான்?

4 ஆதியாகமம் 4:2-5-ஐ வாசியுங்கள். தன்னுடைய காணிக்கையைப் பெறுபவர் யெகோவா என்பது காயீனுக்கு நன்றாகத் தெரியும். யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள காயீனுக்கு நிறைய நேரமும் வாய்ப்புகளும் இருந்தன. அவனும் அவனுடைய தம்பி ஆபேலும் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தியபோது, அவர்களுக்குக் கிட்டத்தட்ட 100 வயது இருந்திருக்கலாம். * இரண்டு பேரும் சின்ன வயதிலிருந்தே ஏதேன் தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். ஒருவேளை அந்தச் செழிப்பான இடத்தை அவர்கள் தூரத்திலிருந்து பார்த்திருப்பார்கள். அந்தத் தோட்டத்துக்குள் யாரும் நுழைந்துவிடாதபடி அதைக் காவல் காத்துக்கொண்டிருந்த கேருபீன்களையும் கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள். (ஆதி. 3:24) எல்லா உயிரினங்களையும் யெகோவாதான் படைத்தார் என்பதையும் மனிதர்களை என்ன நோக்கத்தோடு படைத்தார் என்பதையும் அவர்களுடைய அப்பா-அம்மா நிச்சயம் அவர்களிடம் சொல்லியிருப்பார்கள். மனிதர்கள் வயதாகி படிப்படியாக சாக வேண்டும் என்பது கடவுளின் ஆரம்ப நோக்கம் கிடையாது என்றும் சொல்லியிருப்பார்கள். (ஆதி. 1:24-28) இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டதால் கடவுளுக்குக் காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு காயீன் வந்திருக்கலாம்.

5 கடவுளுக்குக் காணிக்கை கொடுக்க வேறு என்ன விஷயங்கள் காயீனைத் தூண்டியிருக்கலாம்? பாவம் செய்யும்படி ஏவாளைத் தூண்டிய ‘பாம்பின்’ தலையை நசுக்க ஒரு “சந்ததி” தோன்றும் என்று யெகோவா முன்னறிவித்திருந்தார். (ஆதி. 3:4-6, 14, 15) காயீன், முதல் மகனாக இருந்ததால் தான்தான் அந்த “சந்ததி” என்று நினைத்திருக்கலாம். (ஆதி. 4:1) அதோடு, அந்தச் சமயத்தில் பாவ இயல்புள்ள மனிதர்களிடம் பேசுவதை யெகோவா அடியோடு நிறுத்திவிடவில்லை. உதாரணத்துக்கு, ஆதாம் பாவம் செய்த பிறகும் ஒரு தேவதூதர் மூலம் கடவுள் அவனிடம் பேசினார். (ஆதி. 3:8-10) அதுமட்டுமல்ல, காயீன் தன்னுடைய காணிக்கையைக் கொடுத்த பிறகுகூட யெகோவா அவனிடம் பேசினார். (ஆதி. 4:6) அப்படியானால், வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள யெகோவாதான் தகுதியானவர் என்பது காயீனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

6, 7. காயீன் கொடுத்த காணிக்கையின் தரத்திலோ அதை அவன் கொடுத்த விதத்திலோ ஏதாவது குறை இருந்ததா? விளக்குங்கள்.

6 அப்படியென்றால், யெகோவா ஏன் காயீனுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை? ஒருவேளை, அவன் கொடுத்த காணிக்கையின் தரம் குறைவாக இருந்திருக்குமா? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. “நிலத்தில் விளைந்த சில பொருள்களை” கொண்டுவந்தான் என்று மட்டுமே பைபிள் சொல்கிறது. இப்படிப்பட்ட காணிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாக பிற்பாடு மோசேக்குக் கொடுத்த திருச்சட்டத்தில் யெகோவா குறிப்பிட்டிருந்தார். (எண். 15:8, 9) காயீனும் ஆபேலும் வாழ்ந்த காலத்தைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அப்போதெல்லாம் மனிதர்கள் காய்கறிகளையும் பழங்களையும் மட்டும்தான் சாப்பிட்டார்கள். (ஆதி. 1:29) கடவுளுக்குக் காணிக்கையாக தான் கொண்டுவந்த பொருள்களை விளைய வைக்க காயீன் கஷ்டப்பட்டு உழைத்திருப்பான். ஏனென்றால், பூமியைக் கடவுள் சபித்திருந்தார். (ஆதி. 3:17-19) உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள்களை, அதுவும் பாடுபட்டு விளைய வைத்த உணவுப் பொருள்களை, அவன் காணிக்கையாகக் கொடுத்தான். அப்படியிருந்தும், காயீனுடைய காணிக்கையை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை.

7 அப்படியென்றால், அவன் காணிக்கை கொடுத்த விதத்தில் ஏதாவது குறை இருந்திருக்குமா? யெகோவாவுக்குப் பிடிக்காத விதத்தில் காயீன் காணிக்கையைக் கொடுத்தானா? அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவனுடைய காணிக்கையை யெகோவா நிராகரித்தபோது, அது கொடுக்கப்பட்ட விதம் தவறென்று அவர் சொல்லவில்லை. சொல்லப்போனால், காயீனும் ஆபேலும் காணிக்கையைக் கொடுத்த விதத்தைப் பற்றி பைபிள் எதுவுமே சொல்வதில்லை. அப்படியென்றால், காயீனிடம் என்ன குறை இருந்திருக்கும்?

காயீனுடைய உள்நோக்கம் சுத்தமானதாக இருக்கவில்லை (பாராக்கள் 8, 9)

8, 9. (அ) காயீனையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏன் நிராகரித்தார்? (ஆ) காயீனையும் ஆபேலையும் பற்றிய பைபிள் பதிவிலிருந்து என்ன முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்கிறீர்கள்?

8 கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எபிரெயர்களுக்கு பவுல் சொன்ன வார்த்தைகளிலிருந்து இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளலாம். காயீனின் உள்நோக்கம் சுத்தமானதாக இருக்கவில்லை என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. அவனுக்கு விசுவாசம் இருக்கவில்லை. (எபி. 11:4; 1 யோ. 3:11, 12) அதனால்தான், காணிக்கையை மட்டுமல்ல, காயீனையே யெகோவா நிராகரித்துவிட்டார். (ஆதி. 4:5-8) யெகோவா பாசமுள்ள ஒரு அப்பாவாக இருப்பதால், தன்னுடைய மகனை அன்பாகத் திருத்த முயற்சி செய்தார். ஆனால், யெகோவாவுடைய உதவிக்கரத்தை காயீன் உதறித்தள்ளினான். காயீனின் இதயம் “பகை, சண்டை சச்சரவு, பொறாமை” ஆகியவற்றால் நிறைந்திருந்தது. (கலா. 5:19, 20) அவனுடைய இதயம் பொல்லாததாக இருந்ததால், வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற மூன்று அம்சங்களில் அவன் சரியாக இருந்தும்கூட எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. அப்படியென்றால், நம்முடைய வணக்கம் தூய்மையானதாக இருப்பதற்கு பக்திக்குரிய செயல்களைச் செய்தால் மட்டும் போதாது என்பதை இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

9 காயீனைப் பற்றிய பல விஷயங்களை பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். யெகோவா அவனிடம் பேசிய விஷயங்கள்... அதற்கு அவன் சொன்ன பதில்கள்... அவனுடைய வாரிசுகளின் பெயர்கள்... அவர்கள் செய்த சில விஷயங்கள்... பற்றியெல்லாம் அதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். (ஆதி. 4:17-24) ஆனால், ஆபேலுக்குப் பிள்ளைகள் இருந்ததாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. அவர் சொன்ன எதுவுமே பைபிளில் பதிவு செய்யப்படவில்லை. அப்படியிருந்தும், ஆபேலின் செயல்கள் நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தருகின்றன. எப்படி?

தூய வணக்கத்துக்கு ஆபேல் வைத்த முன்மாதிரி

10. தூய வணக்கத்துக்கு ஆபேல் எப்படிச் சிறந்த முன்மாதிரி வைத்தார்?

10 யெகோவா மட்டுமே வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர் என்பது ஆபேலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால்தான், அவர் யெகோவாவுக்குப் பலி செலுத்தினார். அவர் கொடுத்த பலியின் தரம் மிகச் சிறந்ததாக இருந்தது. ஆம், பலி கொடுப்பதற்காக தன்னுடைய ஆடுகளின் ‘முதல் குட்டிகள்’ சிலவற்றை அவர் தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு பலிபீடத்தில் பலி கொடுத்தாரா இல்லையா என்று பைபிள் சொல்வதில்லை. ஆனாலும், அவர் பலி கொடுத்த விதம் கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. எல்லாவற்றையும்விட, அவர் எப்படிப்பட்ட உள்நோக்கத்தோடு அதைக் கொடுத்தார் என்பதுதான் அந்தப் பலியை இன்னும் விசேஷமானதாக ஆக்கியது. ஆபேல் வைத்த முன்மாதிரி, சுமார் 6,000 வருஷங்களுக்குப் பிறகும் நமக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தருகிறது. யெகோவாமீது இருந்த விசுவாசமும் அவருடைய நீதிநெறிகள்மீது இருந்த அன்பும்தான் அந்தப் பலியைக் கொடுக்க ஆபேலைத் தூண்டியது. அது நமக்கு எப்படித் தெரியும்?

தூய வணக்கத்தின் நான்கு முக்கிய அம்சங்களையும் ஆபேல் நிறைவேற்றினார் (பாரா 10)

11. ஆபேலை நீதிமான் என்று இயேசு ஏன் குறிப்பிட்டார்?

11 முதலில், ஆபேலைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த இயேசு என்ன சொன்னார் என்பதைப் பார்க்கலாம். ஆபேல் பூமியில் வாழ்ந்த காலத்தில் இயேசு பரலோகத்தில் இருந்தார். ஆதாமுக்குப் பிறந்த இந்த மகன்மீது இயேசுவுக்கு அதிக அக்கறை இருந்தது. (நீதி. 8:22, 30, 31; யோவா. 8:58; கொலோ. 1:15, 16) ஆபேல் செய்ததையெல்லாம் இயேசு கண்ணாரப் பார்த்திருந்தார். அதை வைத்துதான் அவரை நீதிமான் என்று இயேசு சொன்னார். (மத். 23:35) நீதிமானாக இருக்கும் ஒருவர், எது சரி, எது தவறு என்பதற்கான நெறிமுறையை ஏற்படுத்தும் உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வார். அதோடு, அந்த நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வதைத் தன்னுடைய சொல்லிலும் செயலிலும் காட்டுவார். (லூக்கா 1:5, 6-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) நீதிமான் என்ற பெயரெடுப்பதற்குக் காலம் எடுக்கும். அப்படியென்றால், யெகோவாவுக்குத் தன்னுடைய காணிக்கையைக் கொடுப்பதற்கு முன்பே ஆபேல் கடவுளுடைய நீதிநெறிகளின்படி வாழ்ந்து, அவரிடம் நல்ல பெயர் எடுத்திருக்க வேண்டும். அப்படி வாழ்வது அவருக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். அவருடைய அண்ணன் காயீன் அவருக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்திருக்க மாட்டான். ஏனென்றால், காயீனுடைய இதயம் பொல்லாததாக ஆகியிருந்தது. (1 யோ. 3:12) அவருடைய அம்மா, கடவுள் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போயிருந்தாள். அவருடைய அப்பா, நல்லது கெட்டதை தானே தீர்மானித்துக்கொள்ள விரும்பியதால் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்திருந்தார். (ஆதி. 2:16, 17; 3:6) அப்படியென்றால், தன்னுடைய குடும்பத்தாரைப் போல இல்லாமல் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆபேலுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்!

12. காயீனுக்கும் ஆபேலுக்கும் இடையிலுள்ள ஒரு முக்கியமான வித்தியாசம் என்ன?

12 அடுத்ததாக, விசுவாசத்துக்கும் நீதிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பவுல் சொல்வதைக் கவனியுங்கள்: “விசுவாசத்தால்தான் ஆபேல், காயீனுடைய பலியைவிட உயர்ந்த பலியைக் கடவுளுக்குக் கொடுத்தார். அதனால் அவர் நீதிமான் என்று நற்சாட்சி பெற்றார்.” (எபி. 11:4) காயீனைப் போல் இல்லாமல், ஆபேல் வாழ்நாள் முழுவதும் யெகோவாமீது முழுமையான விசுவாசம் வைத்திருந்தார். யெகோவா எதிர்பார்க்கிற விஷயங்களும், அவர் செய்கிற விஷயங்களும் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும் என்று மனதார நம்பினார். இப்படிப்பட்ட விசுவாசம்தான் பலி கொடுக்க ஆபேலைத் தூண்டியிருக்கும் என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன.

13. ஆபேலின் உதாரணம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது?

13 நம்முடைய உள்நோக்கம் தூய்மையாக இருந்தால்தான் நம்முடைய வணக்கமும் தூய்மையாக இருக்கும் என்பதை ஆபேலின் உதாரணம் காட்டுகிறது. அப்படியென்றால், யெகோவாமீது நாம் முழு விசுவாசம் வைக்க வேண்டும்; அவருடைய நீதிநெறிகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு, ஒருமுறை கடவுளுக்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதாது. நம்முடைய வாழ்க்கை முழுவதும், எல்லா விஷயங்களிலும் உண்மையாக இருக்க வேண்டும்.

ஆபேலின் முன்மாதிரியைப் பின்பற்றிய முன்னோர்கள்

14. நோவா, ஆபிரகாம், மற்றும் யாக்கோபு கொடுத்த பலிகளை யெகோவா ஏன் ஏற்றுக்கொண்டார்?

14 யெகோவாவுக்குத் தூய வணக்கத்தைச் செலுத்திய பாவ இயல்புள்ள மனிதர்களில் முதல் நபர் ஆபேல். அவருக்குப் பிறகு யெகோவாவுக்குத் தூய வணக்கத்தைச் செலுத்திய நோவா, ஆபிரகாம், யாக்கோபு போன்ற மற்ற நபர்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். (எபிரெயர் 11:7, 8, 17-21-ஐ வாசியுங்கள்.) அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யெகோவாவுக்குப் பலி செலுத்தியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பலிகளை யெகோவாவும் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவர்கள் ஒவ்வொருவரும் பலிகளைச் செலுத்தியதோடு, தூய வணக்கத்தில் உட்பட்டுள்ள நான்கு முக்கியமான அம்சங்களையும் நிறைவேற்றினார்கள். அவர்களுடைய உதாரணங்களைப் பார்க்கலாம்.

நோவா செலுத்திய பலிகள் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரியப்படுத்தின (பாராக்கள் 15, 16)

15, 16. தூய வணக்கத்தின் நான்கு முக்கிய அம்சங்களை நோவா எப்படி நிறைவேற்றினார்?

15 ஆதாம் இறந்து 126 வருஷங்களுக்குப் பிறகு நோவா பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்பே பூமி பொய் வணக்கத்தால் சீர்கெட்டுப்போய் இருந்தது. * (ஆதி. 6:11) பெருவெள்ளம் வருவதற்கு முன் பூமியில் வாழ்ந்தவர்களில் நோவாவின் குடும்பத்தார் மட்டுமே யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவரை வணங்கினார்கள். (2 பே. 2:5) பெருவெள்ளத்திலிருந்து தப்பிப்பிழைத்த பிறகு, நோவா ஒரு பலிபீடத்தைக் கட்டி யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த ஆசைப்பட்டார். ஒரு பலிபீடம் கட்டப்பட்டதைப் பற்றி பைபிள் இங்குதான் முதல் தடவையாகச் சொல்கிறது. உள்ளப்பூர்வமான இந்தச் செயலின் மூலம், நோவா தன்னுடைய குடும்பத்தாருக்கும், அவர் மூலமாக வரவிருந்த மனிதகுலத்துக்கும் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரியப்படுத்தினார். யெகோவா மட்டுமே வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர் என்ற விஷயத்தைத் தெரியப்படுத்தினார். பலி கொடுப்பதற்காக “சுத்தமான மிருகங்கள் சிலவற்றையும் சுத்தமான பறவைகள் சிலவற்றையும்” நோவா தேர்ந்தெடுத்தார். (ஆதி. 8:20) அவர் கொடுத்த பலிகளின் தரம் மிகச் சிறந்ததாக இருந்தது. ஏனென்றால், அவை சுத்தமானவை என்று யெகோவாவே சொல்லியிருந்தார்.—ஆதி. 7:2.

16 நோவா, தான் கட்டிய பலிபீடத்தின்மீது அவற்றைத் தகன பலியாகச் செலுத்தினார். அவர் இப்படிப் பலி செலுத்திய விதம் கடவுள் ஏற்றுக்கொள்ளும் முறையில் இருந்ததா? ஆம், இருந்தது. நோவா செலுத்திய பலியின் வாசனை யெகோவாவுக்குப் பிடித்திருந்தது என்றும், அதற்குப் பிறகு நோவாவையும் அவருடைய மகன்களையும் யெகோவா ஆசீர்வதித்தார் என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதி. 8:21; 9:1) ஆனாலும், நோவா கொடுத்த பலியை யெகோவா ஏற்றுக்கொண்டதற்கு முக்கியக் காரணம், அதைச் சரியான உள்நோக்கத்தோடு அவர் கொடுத்ததுதான். யெகோவாமீது நோவா முழுமையான விசுவாசம் வைத்திருந்ததையும், யெகோவா எதிர்பார்க்கிற விஷயங்களும், அவர் செய்கிற விஷயங்களும் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும் என்று மனதார நம்பியதையும் அவர் செலுத்திய பலிகள் காட்டின. நோவா எப்போதுமே கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அதோடு, அவருடைய நெறிமுறைகளை அப்படியே பின்பற்றினார். அதனால்தான், “அவர் உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்” என்று பைபிள் சொல்கிறது. இப்படி நடந்ததால், நீதிமான் என்ற பெயரையும் சம்பாதித்தார்.—ஆதி. 6:9; எசே. 14:14; எபி. 11:7.

17, 18. தூய வணக்கத்தின் நான்கு முக்கிய அம்சங்களை ஆபிரகாம் எப்படி நிறைவேற்றினார்?

17 ஆபிரகாம் ஊர் நகரத்தில் வாழ்ந்தார். அவரைச் சுற்றியிருந்த மக்கள் பொய்க் கடவுள்களை வணங்கினார்கள். சந்திர தெய்வமாகிய நன்னாவைக் கௌரவிக்கும் பிரமாண்டமான ஒரு கோயில் அந்த நகரத்தில் இருந்தது. * ஆபிரகாமின் அப்பாகூட ஒருகாலத்தில் பொய்க் கடவுள்களை வணங்கினார். (யோசு. 24:2) ஆனாலும், ஆபிரகாம் யெகோவாவை வணங்கினார். உண்மைக் கடவுளான யெகோவாவைப் பற்றி தன்னுடைய மூதாதையான சேமிடமிருந்து அவர் தெரிந்திருக்கலாம். நோவாவின் மகன்களில் ஒருவர்தான் சேம். சேம் வாழ்ந்த காலத்திலேயே ஆபிரகாம் பிறந்துவிட்டார். ஆபிரகாம் பிறந்து சுமார் 150 வருஷங்களுக்குப் பிறகுதான் சேம் இறந்தார்.

18 தன்னுடைய வாழ்நாளில், ஆபிரகாம் நிறைய தடவை பலி செலுத்தியிருக்கிறார். அவை எல்லாவற்றையும், வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவரான யெகோவாவுக்கு மட்டுமே செலுத்தினார். (ஆதி. 12:8; 13:18; 15:8-10) யெகோவாவுக்கு மிகவும் தரமான பலியைச் செலுத்த ஆபிரகாம் தயாராக இருந்தாரா? அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தன் அன்பு மகன் ஈசாக்கைப் பலிகொடுக்க அவர் முன்வந்ததிலிருந்து அது தெளிவாகத் தெரிந்தது. ஆபிரகாம் தன்னுடைய மகனை எந்த விதத்தில் பலி கொடுக்க வேண்டுமென்று யெகோவா விவரமாகச் சொன்னார். (ஆதி. 22:1, 2) யெகோவா சொன்னபடியே செய்ய ஆபிரகாம் தயாராக இருந்தார். அவர் தன்னுடைய மகனைக் கொல்லாதபடி யெகோவாதான் அவரைத் தடுத்தார். (ஆதி. 22:9-12) தன்னை வணங்குவதற்காக ஆபிரகாம் செலுத்திய எல்லா பலிகளையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவர் சுத்தமான உள்நோக்கத்தோடு அவற்றைச் செலுத்தினார். “யெகோவாமேல் ஆபிரகாம் விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்று பவுல் எழுதினார்.—ரோ. 4:3.

யாக்கோபு தன் குடும்பத்துக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தார் (பாராக்கள் 19, 20)

19, 20. தூய வணக்கத்தின் நான்கு முக்கிய அம்சங்களை யாக்கோபு எப்படி நிறைவேற்றினார்?

19 ஆபிரகாமுக்கும் அவருடைய வருங்கால சந்ததிக்கும் யெகோவா கொடுப்பதாகச் சொன்ன கானான் தேசத்தில்தான் யாக்கோபு அதிக காலம் வாழ்ந்தார். (ஆதி. 17:1, 8) அங்கிருந்த மக்கள் பொய் வணக்கத்தில் ரொம்பவே மூழ்கிப்போயிருந்ததால், “அந்தத் தேசத்தின் ஜனங்கள் துரத்தியடிக்கப்படுவார்கள்” என்று யெகோவா சொன்னார். (லேவி. 18:24, 25) யாக்கோபுக்கு 77 வயது இருந்தபோது அவர் கானான் தேசத்தைவிட்டு போனார். பிறகு, திருமணம் செய்துகொண்டு, ஒரு பெரிய குடும்பத்தோடு கானானுக்கே திரும்பி வந்தார். (ஆதி. 28:1, 2; 33:18) ஆனால், அவருடைய குடும்பத்தாரில் சிலர் பொய் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இருந்தாலும், பெத்தேலுக்குப் போய் ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி யெகோவா சொன்னபோது யாக்கோபு உடனடியாகச் செயல்பட்டார். அவர் முதலில் தன் குடும்பத்தாரிடம், “நீங்கள் வைத்திருக்கிற பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள். உங்களைச் சுத்தமாக்குங்கள்” என்று சொன்னார். பிறகு, யெகோவா சொன்ன ஒவ்வொன்றையும் அப்படியே செய்தார்.—ஆதி. 35:1-7.

20 கடவுள் வாக்குக் கொடுத்திருந்த தேசத்தில் யாக்கோபு நிறைய பலிபீடங்களைக் கட்டினார். வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவரான யெகோவாவுக்குத்தான் அவர் பலிகளைச் செலுத்தினார். (ஆதி. 35:14; 46:1) அவர் செலுத்திய பலிகளின் தரம், அவர் யெகோவாவை வணங்கிய விதம், கடவுளை வணங்கியதற்கான உள்நோக்கம் எல்லாமே சரியாக இருந்ததால் அவரை ‘குற்றமற்றவர்’ என்று பைபிள் சொல்கிறது. இந்த வார்த்தை, கடவுள் ஏற்றுக்கொள்ளும் நபர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஆதி. 25:27, அடிக்குறிப்பு) வாழ்நாள் முழுவதும் யாக்கோபு குற்றமற்றவராக இருந்ததால், தன் மூலம் வரவிருந்த இஸ்ரவேல் தேசத்துக்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.—ஆதி. 35:9-12.

21. நம் முன்னோர்கள் வைத்த முன்மாதிரியிலிருந்து தூய வணக்கத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

21 நம் முன்னோர்களுடைய உதாரணங்களிலிருந்து தூய வணக்கத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இன்று, நம்மைச் சுற்றியிருக்கிற மக்களும், ஒருவேளை நம் குடும்பத்தாரும், யெகோவாவுக்கு மட்டுமே சேர வேண்டிய முழுமையான பக்தியைச் செலுத்தாதபடி நம்மைத் திசைதிருப்பலாம். அப்படிப்பட்ட சவால்களைச் சமாளிக்க, யெகோவாமீது உறுதியான விசுவாசத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, அவருடைய நீதிநெறிகள்தான் மிகச் சிறந்தவை என்பதை உறுதியாக நம்ப வேண்டும். யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், நம்முடைய நேரம், சக்தி, பணம், பொருள், திறமைகள் எல்லாவற்றையும் அவருடைய சேவைக்காகப் பயன்படுத்துவதன் மூலமும் நம்முடைய விசுவாசத்தைக் காட்டலாம். (மத். 22:37-40; 1 கொ. 10:31) யெகோவாவை மிகச் சிறந்த விதத்திலும்... அவர் விரும்பும் விதத்திலும்... தூய உள்நோக்கத்தோடும்... வணங்கும்போது அவர் நம்மை நீதிமான்களாகக் கருதுகிறார். இதைத் தெரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது!யாக்கோபு 2:18-24-ஐ வாசியுங்கள்.

தூய வணக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேசம்

22-24. பலியைப் பெற்றுக்கொள்ளும் நபர், பலியின் தரம், அது செலுத்தப்பட்ட விதம் ஆகியவை முக்கியம் என்பதை திருச்சட்டம் எப்படி வலியுறுத்திக் காட்டியது?

22 யாக்கோபின் வம்சத்தாருக்கு யெகோவா திருச்சட்டத்தைக் கொடுத்திருந்தார். அவர்களிடமிருந்து யெகோவா எதை எதிர்பார்த்தார் என்பதைத் திருச்சட்டம் தெளிவாகக் காட்டியது. அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் அவருடைய “விசேஷ சொத்தாக,” “பரிசுத்த ஜனமாக” ஆவார்கள். (யாத். 19:5, 6) அந்தத் திருச்சட்டம், தூய வணக்கத்தின் நான்கு முக்கிய அம்சங்களை எப்படி வலியுறுத்திக் காட்டியது என்பதைக் கவனியுங்கள்.

23 இஸ்ரவேலர்களின் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர் யார் என்பதை யெகோவா தெளிவாக அடையாளம் காட்டினார். “என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது” என்று யெகோவா சொன்னார். (யாத். 20:3-5) அவர்கள் கொடுத்த பலிகளின் தரம் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். உதாரணத்துக்கு, எந்தக் குறையும் இல்லாத மிருகங்களைத்தான் அவர்கள் பலி கொடுக்க வேண்டும் என்று சொன்னார். (லேவி. 1:3; உபா. 15:21; மல்கியா 1:6-8-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) மக்கள் யெகோவாவுக்குக் கொடுத்த காணிக்கைகளிலிருந்து லேவியர்கள் பயனடைந்தார்கள். ஆனால், தங்கள் பங்குக்கு அவர்களும் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். தங்களுக்குக் கிடைத்த “காணிக்கைகளில் மிகச் சிறந்ததை” அவர்கள் யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. (எண். 18:29) கடவுளை எந்த விதத்தில் வணங்க வேண்டும் என்பதைப் பற்றிய திட்டவட்டமான ஆலோசனைகள் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டன. யெகோவாவுக்கு எவற்றைப் பலிசெலுத்த வேண்டும்... அவற்றை எங்கே செலுத்த வேண்டும்... எப்படிச் செலுத்த வேண்டும்... என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லப்பட்டன. மொத்தத்தில், அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியப்படுத்துவதற்காக 600-க்கும் அதிகமான சட்டங்கள் கொடுக்கப்பட்டன. “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைப்படி நடப்பதற்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அவருடைய வழியைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பக் கூடாது” என்று அவர்களிடம் சொல்லப்பட்டது.—உபா. 5:32.

24 இஸ்ரவேலர்கள் எங்கே பலி செலுத்த வேண்டுமென்பது முக்கியமானதாக இருந்ததா? ஆம், முக்கியமானதாக இருந்தது. ஒரு வழிபாட்டுக் கூடாரத்தைக் கட்டும்படி அவர்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்தார். அது தூய வணக்கத்துக்கான முக்கிய இடமாக ஆனது. (யாத். 40:1-3, 29, 34) அந்தச் சமயத்தில், தங்களுடைய காணிக்கைகளையும் பலிகளையும் யெகோவா ஏற்றுக்கொள்வதற்கு இஸ்ரவேலர்கள் அவற்றை வழிபாட்டுக் கூடாரத்தில் செலுத்த வேண்டியிருந்தது. *உபா. 12:17, 18.

25. பலிகளை கடவுள் ஏற்றுக்கொள்வதற்கு எது ரொம்ப முக்கியமானதாக இருந்தது? விளக்குங்கள்.

25 எல்லாவற்றையும்விட, ஒரு இஸ்ரவேலர் எப்படிப்பட்ட உள்நோக்கத்தோடு காணிக்கைகளையும் பலிகளையும் கொடுத்தார் என்பதுதான் மிக முக்கியமானதாக இருந்தது. யெகோவாமீதும் அவருடைய நெறிமுறைகள்மீதும் இருக்கும் உள்ளப்பூர்வமான அன்பினால் தூண்டப்பட்டு அதை அவர் கொடுக்க வேண்டியிருந்தது. (உபாகமம் 6:4-6-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலர்கள் ஏதோ கடமைக்காக தூய வணக்கத்தில் ஈடுபட்டபோது, அவர்களுடைய பலிகளை யெகோவா நிராகரித்தார். (ஏசா. 1:10-13) பக்திமான்களைப் போல வெளிவேஷம் போட்டு தன்னை ஏமாற்ற முடியாது என்பதை ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா தெரியப்படுத்தினார். “இந்த ஜனங்கள் . . . உதட்டளவில் என்னைப் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது” என்று சொன்னார்.—ஏசா. 29:13.

ஆலயத்தில் செலுத்தப்பட்ட வணக்கம்

26. ஆரம்பத்தில், தூய வணக்கத்தைச் செலுத்துவதில் சாலொமோன் கட்டிய ஆலயத்துக்கு என்ன பங்கு இருந்தது?

26 கடவுள் வாக்குக் கொடுத்த தேசத்தில் இஸ்ரவேலர்கள் குடியேறி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சாலொமோன் ராஜா ஒரு ஆலயத்தைக் கட்டினார். அது தூய வணக்கத்தின் மையமாக இருந்தது; வழிபாட்டுக் கூடாரத்தைவிட மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. (1 ரா. 7:51; 2 நா. 3:1, 6, 7) ஆரம்பத்தில், வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவரான யெகோவாவுக்கு மட்டுமே அந்த ஆலயத்தில் பலிகள் செலுத்தப்பட்டன. சாலொமோனும் அவருடைய மக்களும் அங்கே ஏராளமான பலிகளைச் செலுத்தினார்கள். அவற்றின் தரமும் அவை செலுத்தப்பட்ட விதமும் திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைப்படி இருந்தன. (1 ரா. 8:63) அந்த ஆலயத்தில் செலுத்தப்பட்ட வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், அந்த ஆலயத்தைக் கட்டுவதற்காக ஆன செலவோ அங்கே செலுத்தப்பட்ட ஏராளமான பலிகளோ அல்ல. அவற்றைச் செலுத்தியவர்களின் உள்நோக்கம்தான். ஆலயம் அர்ப்பணிக்கப்பட்ட சமயத்தில் இதை வலியுறுத்தி சாலொமோன் இப்படிச் சொன்னார்: “நீங்கள் இன்றுபோல் என்றும் யெகோவாவுடைய விதிமுறைகளின்படி நடப்பதற்காகவும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்காகவும் நம்முடைய கடவுளுக்கு உங்களுடைய இதயத்தை முழுவதுமாக அர்ப்பணித்துவிடுங்கள்.”—1 ரா. 8:57-61.

27. இஸ்ரவேல் ராஜாக்களும் மக்களும் என்ன செய்தார்கள்? யெகோவா என்ன நடவடிக்கை எடுத்தார்?

27 வருத்தமான விஷயம் என்னவென்றால், சாலொமோன் ராஜா கொடுத்த அந்த ஞானமான ஆலோசனையின்படி இஸ்ரவேலர்கள் தொடர்ந்து நடக்கவில்லை. தூய வணக்கத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றையோ சிலவற்றையோ நிறைவேற்ற அவர்கள் தவறிவிட்டார்கள். இஸ்ரவேல் ராஜாக்களும் அவர்களுடைய மக்களும், தங்களுடைய இதயம் கறைபட்டுப்போக அனுமதித்துவிட்டார்கள். யெகோவாமீது இருந்த விசுவாசத்தை இழந்து, அவருடைய நீதிநெறிகளைப் பின்பற்றுவதையும் விட்டுவிட்டார்கள். ஆனால், அவர்களைத் திருத்துவதற்கும் அவர்களுடைய செயல்களின் விளைவுகளைப் பற்றி எச்சரிப்பதற்கும் யெகோவா அன்போடு அவர்களிடம் தீர்க்கதரிசிகளைத் திரும்பத் திரும்ப அனுப்பினார். (எரே. 7:13-15, 23-26) அந்தத் தீர்க்கதரிசிகளில், விசுவாசமுள்ள எசேக்கியேலும் ஒரு முக்கியமான நபராக இருந்தார். தூய வணக்கம் கறைபட்டுப்போன காலத்தில் அவர் வாழ்ந்தார்.

தூய வணக்கம் கறைபட்டிருப்பதை எசேக்கியேல் பார்க்கிறார்

28, 29. எசேக்கியேலைப் பற்றி நாம் என்ன தெரிந்துவைத்திருக்கிறோம்? (“எசேக்கியேல்—வாழ்வும் காலமும்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

28 சாலொமோன் கட்டிய ஆலயத்தில் செலுத்தப்பட்ட வணக்கமுறையைப் பற்றி எசேக்கியேலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவருடைய அப்பா ஒரு குருவாக இருந்தார். ஆலயத்தில் சேவை செய்வதற்கான அவருடைய முறை வந்தபோது அவர் அங்கே சேவை செய்திருப்பார். (எசே. 1:3) எசேக்கியேல் சின்ன வயதில் சந்தோஷமாக இருந்திருப்பார். யெகோவாவைப் பற்றியும் திருச்சட்டத்தைப் பற்றியும் எசேக்கியேலின் அப்பா கண்டிப்பாக அவருக்குக் கற்றுக்கொடுத்திருப்பார். ஏறக்குறைய எசேக்கியேல் பிறந்த சமயத்தில்தான் ஆலயத்தில் ‘திருச்சட்ட புத்தகம்’ கண்டுபிடிக்கப்பட்டது. * அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த நல்ல ராஜாவான யோசியாவுக்கு, திருச்சட்ட புத்தகத்திலுள்ள விஷயங்கள் வாசித்துக்காட்டப்பட்டன. அவர் கேட்ட விஷயங்கள் அவருடைய மனதைத் தூண்டியதால், தூய வணக்கத்தில் மக்களை வைராக்கியமாக ஈடுபட வைப்பதற்கு அவர் இன்னும் மும்முரமாக முயற்சி செய்தார்.—2 ரா. 22:8-13.

எசேக்கியேலுக்கு யெகோவாவை பற்றியும் திருச்சட்டத்தை பற்றியும் அவருடைய அப்பா கண்டிப்பாகக் கற்றுக்கொடுத்திருப்பார் (பாரா 28)

29 தனக்கு முன் வாழ்ந்த விசுவாசமுள்ள மனிதர்களைப் போல எசேக்கியேலும், தூய வணக்கத்தில் உட்பட்டுள்ள நான்கு அம்சங்களையும் நிறைவேற்றினார். அவர் யெகோவாவை மட்டுமே முழுமையாகச் சேவித்தார். யெகோவாவுக்கு எப்போதுமே மிகச் சிறந்ததைக் கொடுத்தார். யெகோவா தன்னிடம் எதிர்பார்த்த விஷயங்களைக் கீழ்ப்படிதலோடும், அவருக்குப் பிரியமான விதத்திலும் செய்தார். இந்த விஷயங்களையெல்லாம் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். அவருக்கு உள்ளப்பூர்வமான விசுவாசம் இருந்ததால்தான் இப்படியெல்லாம் செய்தார். அவருடைய காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான ஆட்களுக்கு அப்படிப்பட்ட விசுவாசம் இருக்கவில்லை. ஆனால், எசேக்கியேல் சின்ன வயதிலிருந்தே எரேமியா சொன்ன தீர்க்கதரிசனங்களைக் கேட்டு வளர்ந்தார். எரேமியா, கி.மு. 647-லிருந்து தீர்க்கதரிசியாகச் சேவை செய்தார். யெகோவா கொண்டுவரவிருந்த தண்டனைத் தீர்ப்பைப் பற்றிய செய்தியை அவர் பக்திவைராக்கியத்தோடு மக்களுக்குச் சொன்னார்.

30. (அ) எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்கள் எதைக் காட்டுகின்றன? (ஆ) தீர்க்கதரிசனம் என்றால் என்ன? எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? (“எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ளுதல்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

30 கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு எசேக்கியேல் எழுதிய பதிவிலிருந்து, கடவுளுடைய மக்கள் எந்தளவுக்கு அவரைவிட்டு விலகிப்போயிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. (எசேக்கியேல் 8:6-ஐ வாசியுங்கள்.) யூதா தேசத்தில் இருந்த மக்களுக்கு யெகோவா தண்டனை கொடுக்க ஆரம்பித்தபோது, அவர்களில் சிலர் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள். அவர்களில் எசேக்கியேலும் ஒருவர். (2 ரா. 24:11-17) ஆனால், எசேக்கியேல் ஏதோ தவறு செய்ததால் கைதியாகக் கொண்டுபோகப்படவில்லை. பாபிலோனில் கைதிகளாக இருந்த மக்கள் மத்தியில் ஒரு வேலையைச் செய்வதற்காக யெகோவா அவரைக் கைதியாகப் போக அனுமதித்தார். எசேக்கியேல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரமிக்க வைக்கும் காட்சிகளும் தீர்க்கதரிசனங்களும் எருசலேமில் தூய வணக்கம் எப்படித் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்பதை விவரிக்கின்றன. அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் யெகோவாவை நேசிக்கும் எல்லாருக்காகவும் தூய வணக்கம் எப்படி முழு அளவில் நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டுகின்றன.

31. எதைச் செய்ய இந்தப் புத்தகம் நமக்கு உதவும்?

31 இந்தப் புத்தகத்தில் வரும் பகுதிகளில் பின்வரும் விஷயங்களைச் சிந்திப்போம். யெகோவா குடியிருக்கிற பரலோகத்தின் ஒரு காட்சியைப் பார்ப்போம்; தூய வணக்கம் எப்படி முழுமையாகக் கறைபட்டுப்போனது என்பதைத் தெரிந்துகொள்வோம்; யெகோவா தன்னுடைய மக்களை எப்படித் திரும்பவும் அவர்களுடைய சொந்த நாட்டில் குடிவைத்தார்... அவர்களை எப்படிப் பாதுகாத்தார்... என்பதைப் பற்றியும் மனிதர்கள் எல்லாருமே யெகோவாவை வணங்கப்போகும் காலத்தைப் பற்றியும் பார்ப்போம். எசேக்கியேல் பார்த்த முதல் தரிசனத்தைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் சிந்திப்போம். யெகோவாவையும் அவருடைய அமைப்பின் பரலோக பாகத்தையும் கற்பனை செய்து பார்ப்பதற்கு அது உதவும். தூய வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள ஏன் யெகோவா மட்டுமே தகுதியானவர் என்பதையும் இது வலியுறுத்திக் காட்டும்.

^ பாரா. 4 ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கொஞ்சக் காலத்தில் ஆபேல் பிறந்திருக்கலாம். (ஆதி. 4:1, 2) ஆபேல், கொலை செய்யப்பட்ட பிறகு சேத் பிறந்தார். “[ஆபேலுக்கு] பதிலாக” அவரைக் கடவுள் கொடுத்தார் என்று ஆதியாகமம் 4:25 சொல்கிறது. அப்போது ஆதாமுக்கு 130 வயது. (ஆதி. 5:3) அதனால், ஆபேலை காயீன் கொலை செய்தபோது ஆபேலுக்கு 100 வயது இருந்திருக்கலாம்.

^ பாரா. 15 ஆதாமின் பேரனான ஏனோசின் காலத்தில் “ஜனங்கள் யெகோவாவின் பெயரைக் களங்கப்படுத்த ஆரம்பித்தார்கள்” என்று ஆதியாகமம் 4:26 சொல்கிறது. ஒருவேளை, யெகோவாவின் பெயரைச் சிலைகளுக்கு வைப்பதன் மூலம் அப்படிக் களங்கப்படுத்தியிருக்கலாம்.

^ பாரா. 17 நன்னா என்ற ஆண் தெய்வத்துக்கு, சின் என்ற பெயரும் இருந்தது. ஊர் நகரத்திலிருந்த மக்கள் பல கடவுள்களை வணங்கியிருந்தாலும், அங்குள்ள கோயில்களும் பலிபீடங்களும் முக்கியமாக நன்னா தெய்வத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.

^ பாரா. 24 புனிதமான ஒப்பந்தப் பெட்டி வழிபாட்டுக் கூடாரத்திலிருந்து எடுக்கப்பட்ட பிறகு, மற்ற இடங்களிலும் பலிகள் செலுத்தப்பட்டன. அவற்றையும் யெகோவா ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.—1 சா. 4:3, 11; 7:7-9; 10:8; 11:14, 15; 16:4, 5; 1 நா. 21:26-30.

^ பாரா. 28 கி.மு. 613-ல் எசேக்கியேல் ஒரு தீர்க்கதரிசியாக சேவை செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு 30 வயது இருந்திருக்கலாம். அப்படியானால், அவர் கி.மு. 643-ல் பிறந்திருக்கலாம். (எசே. 1:1) யோசியா, கி.மு. 659-ல் ராஜாவாக ஆனார். கிட்டத்தட்ட அவருடைய ஆட்சியின் 18-ஆம் வருஷத்தில், அதாவது சுமார் கி.மு. 642-641-க்கு இடைப்பட்ட ஒரு சமயத்தில், திருச்சட்ட புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. அது மூலப்பிரதியாக இருந்திருக்கலாம்.