Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 8

“ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்”

“ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்”

எசேக்கியேல் 34:23

முக்கியக் குறிப்பு: மேசியாவைப் பற்றிய நான்கு தீர்க்கதரிசனங்களும் அவற்றின் நிறைவேற்றமும்

1-3. எசேக்கியேல் ஏன் மிகவும் வேதனைப்படுகிறார், எதை எழுதும்படி அவரிடம் கடவுள் சொல்கிறார்?

எசேக்கியேல் சிறைபிடிக்கப்பட்டு ஆறாவது வருஷம் அது. * தன்னுடைய தாய்நாடான யூதாவைவிட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் அவர் இருக்கிறார். யூதாவில் நடக்கிற மோசமான ஆட்சியை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறார். தன்னுடைய வாழ்நாள் காலத்தில் சில ராஜாக்களின் ஆட்சியை எசேக்கியேல் பார்த்திருக்கிறார்.

2 நல்ல ராஜாவான யோசியாவுடைய ஆட்சிக் காலத்தின் மத்திபத்தில் எசேக்கியேல் பிறந்தார். யூதாவில் சிலை வழிபாட்டை அழித்து, தூய வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவதற்கு யோசியா எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி எசேக்கியேல் கேள்விப்பட்டபோது ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார். (2 நா. 34:1-8) ஆனால், யோசியாவின் நடவடிக்கைகள் நிரந்தரமான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. ஏனென்றால், அவருக்குப் பிறகு ஆட்சி செய்த ராஜாக்களில் பெரும்பாலோர் சிலை வழிபாட்டில் ஈடுபட்டார்கள். அப்படிப்பட்ட கெட்ட ராஜாக்களின் ஆட்சியால், ஆன்மீக மற்றும் ஒழுக்க விஷயங்களில் தேசம் ரொம்பவே சீர்கெட்டுப்போனது. இந்த நிலைமை அப்படியேதான் இருக்குமா? இல்லை, நிச்சயம் மாறும்!

3 எசேக்கியேலிடம் ஒரு தீர்க்கதரிசனத்தை எழுதும்படி யெகோவா சொல்கிறார். எதிர்கால ராஜாவும் மேய்ப்பருமான மேசியாவைப் பற்றி எசேக்கியேல் பதிவு செய்த தீர்க்கதரிசனங்களில் அதுதான் முதல் தீர்க்கதரிசனம். அந்த மேசியா தூய வணக்கத்தை நிரந்தரமாக நிலைநாட்டி, யெகோவாவின் ஆடுகளை அன்போடு கவனித்துக்கொள்வார். நாம் அந்தத் தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றையும் கவனமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், நமக்குக் கிடைக்கப்போகும் முடிவில்லாத வாழ்க்கைக்கும், அந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. மேசியாவைப் பற்றி எசேக்கியேல் பதிவு செய்த நான்கு தீர்க்கதரிசனங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

‘கிளையின் கொழுந்து . . . கம்பீரமான தேவதாரு மரமாக வளருகிறது’

4. எசேக்கியேல் எதைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைச் சொல்கிறார், அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொல்வதற்கு முன் எதைச் சொல்லும்படி எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார்?

4 சுமார் கி.மு. 612-ல் மேசியாவைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்தை எசேக்கியேலுக்கு யெகோவா சொன்னார். அது மேசியாவின் ஆட்சியைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் விளக்கியது. அதைச் சொல்வதற்கு முன், சிறைபிடிக்கப்பட்டு தன்னோடு இருந்தவர்களிடம் தீர்க்கதரிசன அர்த்தமுள்ள ஒரு புதிரைச் சொல்லும்படி யெகோவா எசேக்கியேலிடம் சொன்னார். யூதாவின் ஆட்சியாளர்கள் உண்மையில்லாமல் நடந்துகொண்டதை அது விளக்கியது. அதோடு, நீதியாக ஆட்சி செய்ய ஒரு மேசியானிய ராஜா தேவை என்பதையும் காட்டியது.—எசே. 17:1, 2.

5. அந்தப் புதிரின் சுருக்கம் என்ன?

5 எசேக்கியேல் 17:3-10-ஐ வாசியுங்கள். அந்தப் புதிரின் சுருக்கம் இதுதான்: ஒரு “பெரிய கழுகு” தேவதாரு மரத்தின் உச்சியிலிருந்து ஒரு தளிரை எடுத்துக்கொண்டு “வியாபாரிகளின் தேசத்துக்கு” போய் அங்கே அதை நட்டு வைக்கிறது. பிறகு, “தேசத்திலிருந்த விதைகளில் ஒன்றை எடுத்து,” ‘ஆற்றோரமாக’ இருந்த ஒரு வளமான நிலத்தில் அதை விதைக்கிறது. அது கிளைகள்விட்டு “ஒரு திராட்சைக் கொடியாக” ஆகிறது. பிறகு, இன்னொரு “பெரிய கழுகு” வருகிறது. அந்தத் திராட்சைக் கொடி, “அந்தக் கழுகின் பக்கமாக ஆசையோடு வேர்விட” ஆரம்பிக்கிறது. தண்ணீர் அதிகமாக இருக்கும் வேறொரு இடத்துக்கு அந்தக் கழுகு அதைக் கொண்டுபோகும் என்று நினைத்து அப்படிச் செய்கிறது. ஆனால், யெகோவாவுக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால், அதன் வேர்கள் பிடுங்கப்படும் என்றும், அது ‘அடியோடு காய்ந்துபோகும்’ என்றும் அவர் சொல்கிறார்.

முதல் பெரிய கழுகு, பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை அடையாளப்படுத்தியது (பாரா 6)

6. அந்தப் புதிரின் அர்த்தத்தை விளக்குங்கள்.

6 அந்தப் புதிரின் அர்த்தம் என்ன? (எசேக்கியேல் 17:11-15-ஐ வாசியுங்கள்.) கி.மு. 617-ல் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் (முதலில் வந்த “பெரிய கழுகு”) எருசலேமை முற்றுகையிட்டான். அவன், யூதாவின் ராஜாவான யோயாக்கீனை (‘நுனிக்கிளையின் தளிரை’) அவருடைய சிம்மாசனத்திலிருந்து நீக்கி, பாபிலோனுக்கு (“வியாபாரிகளின் தேசத்துக்கு”) கொண்டுபோனான். பிறகு, சிதேக்கியாவை (“தேசத்திலிருந்த விதைகளில் ஒன்றை”) அந்தச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தான். சிதேக்கியா தனக்கு உண்மையோடு நடந்துகொள்ள வேண்டுமென்று நேபுகாத்நேச்சார் விரும்பினான். அதனால், யூதாவின் இந்தப் புதிய ராஜாவிடமிருந்து கடவுளுடைய பெயரில் உறுதிமொழி வாங்கினான். (2 நா. 36:13) ஆனால், சிதேக்கியா அந்த உறுதிமொழியை மீறினார். பாபிலோன் ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்து, ராணுவ உதவிக்காக எகிப்து ராஜாவை (இரண்டாவதாக வந்த ‘பெரிய கழுகை’) நாடினார். ஆனால், எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. சிதேக்கியா இப்படி உறுதிமொழியை மீறி உண்மையில்லாமல் நடந்துகொண்டதால், யெகோவா அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்தார். (எசே. 17:16-21) கடைசியில், ராஜ பதவியிலிருந்து சிதேக்கியா நீக்கப்பட்டு பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டுபோகப்பட்டார். பிறகு, அங்கிருந்த சிறையில் இறந்துபோனார்.—எரே. 52:6-11.

7. தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்ட புதிரிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

7 தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்ட இந்தப் புதிரிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? முதலாவதாக, தூய வணக்கத்தாரான நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். “நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்” என்று இயேசு சொன்னார். (மத். 5:37) உண்மையைச் சொல்வதற்காக நாம் கடவுளுக்கு முன் சத்தியம் செய்ய வேண்டியிருந்தால், உதாரணத்துக்கு நீதிமன்றத்தில் சத்தியம் செய்ய வேண்டியிருந்தால், அதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவதாக, நாம் யார்மீது நம்பிக்கை வைக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், “அதிகாரிகளை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது.—சங். 146:3.

8-10. மேசியானிய ராஜாவைப் பற்றி யெகோவா என்ன தீர்க்கதரிசனம் சொன்னார்? அந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (“மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம்—கம்பீரமான தேவதாரு மரம்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

8 ஆனால், நம்பகமான ஒரு ஆட்சியாளர் இருக்கிறார். அவர்மீது நாம் முழு நம்பிக்கை வைக்கலாம். வேறொரு இடத்தில் நடப்பட்ட தளிரைப் பற்றிய புதிரைச் சொன்ன பிறகு, எதிர்கால மேசியானிய ராஜாவைப் பற்றிய ஒரு புதிரை யெகோவா சொல்கிறார்.

9 தீர்க்கதரிசனம்: (எசேக்கியேல் 17:22-24-ஐ வாசியுங்கள்.) இந்த முறை பெரிய கழுகுகள் அல்ல, யெகோவாவே செயல்படுவார். அவர், ‘உயரமான தேவதாரு மர உச்சியிலுள்ள கிளையின் கொழுந்தைக் கிள்ளி, மாபெரும் மலைமேல் நட்டு வைப்பார்.’ அது கிளைகள்விட்டு, “கம்பீரமான தேவதாரு மரமாக வளரும்.” அதன்கீழ் “எல்லா விதமான பறவைகளும் வாழும்.” அப்போது, யெகோவாதான் அதைக் கம்பீரமான மரமாக வளரச் செய்தார் என்பதை “காட்டிலுள்ள மரங்களெல்லாம் தெரிந்துகொள்ளும்.”

10 தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்: தாவீதின் ராஜ வம்சத்தில் வந்த (‘உயரமான தேவதாரு மரம்’) தன்னுடைய மகனான இயேசு கிறிஸ்துவைப் பரலோக சீயோன் மலையில் (“மாபெரும் மலைமேல்”) யெகோவா நட்டு வைத்தார். (சங். 2:6; எரே. 23:5; வெளி. 14:1) தன்னுடைய மகனை அவருடைய எதிரிகள் ‘மிக அற்பமான மனிதனாக’ நினைத்தாலும், “அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தை” கொடுத்து அவரை யெகோவா உயர்த்தினார். (தானி. 4:17; லூக். 1:32, 33) மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து முழு பூமியையும் ஆட்சி செய்வார். தன்னுடைய குடிமக்கள் எல்லாருக்கும் ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குவார். ஆம், அவர்தான் நாம் நம்பிக்கை வைப்பதற்குத் தகுதியான ராஜா. அவருடைய ஆட்சியின் கீழ், கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் எல்லாரும் ‘பாதுகாப்பாக வாழ்வார்கள். ஆபத்தை நினைத்துப் பயப்படாமல் நிம்மதியாக இருப்பார்கள்.’—நீதி. 1:33.

11. ‘கிளையின் கொழுந்து’ “கம்பீரமான தேவதாரு மரமாக” ஆவதைப் பற்றிய தீர்க்கதரிசனத்திலிருந்து என்ன முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?

11 இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்: ‘கிளையின் கொழுந்து’ “கம்பீரமான தேவதாரு மரமாக” ஆவதைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனம், நாம் யார்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற மிக முக்கியமான கேள்விக்குப் பதிலைத் தருகிறது. மனித அரசாங்கங்கள்மீதும் அவற்றின் படை பலத்தின்மீதும் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம். உண்மையான பாதுகாப்பைப் பெறுவதற்கு மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்துமீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். திறமையுள்ள அந்த ராஜாவின் கீழ் செயல்படும் பரலோக அரசாங்கம்தான் மனிதர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.—வெளி. 11:15.

“உரிமைக்காரர்”

12. தாவீதோடு தான் செய்த ஒப்பந்தத்தை முறித்துவிடவில்லை என்பதை யெகோவா எப்படித் தெளிவாகக் காட்டினார்?

12 இரண்டு கழுகுகளைப் பற்றித் தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்ட புதிரிலிருந்து, எசேக்கியேல் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார். அதாவது, தாவீதின் ராஜ வம்சத்தில் வந்த சிதேக்கியா ராஜா உண்மையில்லாமல் போனதால், அவர் ராஜ பதவியிலிருந்து நீக்கப்பட்டு பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டுபோகப்படுவார் என்பதைப் புரிந்துகொண்டார். எசேக்கியேல் ஒருவேளை இப்படி யோசித்திருக்கலாம்: ‘தாவீதின் வம்சத்தில் வருபவர்கள்தான் என்றென்றைக்கும் ராஜாக்களாக இருப்பார்கள் என்று தாவீதோடு கடவுள் செய்த ஒப்பந்தம் என்ன ஆகும்?’ (2 சா. 7:12, 16) அவர் அப்படி யோசித்திருந்தால், பதிலுக்காக அவர் ரொம்பக் காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சுமார் கி.மு. 611-ல், சிதேக்கியா இன்னும் யூதாவின் ராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருந்த சமயத்தில் யெகோவாவின் செய்தி எசேக்கியேலுக்குக் கிடைத்தது. (எசே. 20:2) எசேக்கியேல், சிறையிருப்பில் இருந்த ஏழாவது வருஷம் அது. அந்த வருஷத்தில், மேசியாவைப் பற்றிய இன்னொரு தீர்க்கதரிசனத்தை எசேக்கியேலுக்கு யெகோவா சொன்னார். தாவீதோடு செய்த ஒப்பந்தத்தைக் கடவுள் முறித்துவிடவில்லை என்பதை அந்தத் தீர்க்கதரிசனம் தெளிவாகக் காட்டியது. தாவீதின் வாரிசான மேசியானிய ராஜாவுக்குத்தான் ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதை அது தெளிவாகக் காட்டியது.

13, 14. எசேக்கியேல் 21:25-27-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தின் சுருக்கம் என்ன, அந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?

13 தீர்க்கதரிசனம்: (எசேக்கியேல் 21:25-27-ஐ வாசியுங்கள்.) ‘இஸ்ரவேலின் பொல்லாத தலைவனுக்கு’ கிடைக்கப்போகும் தண்டனையைப் பற்றி எசேக்கியேல் மூலமாக யெகோவா திட்டவட்டமாகச் சொன்னார். அந்தப் பொல்லாதத் தலைவனிடமிருந்து ‘தலைப்பாகையும்’ ‘கிரீடமும்’ (இவை ராஜ அதிகாரத்துக்கான அடையாளங்கள்) எடுக்கப்படும் என்று யெகோவா சொன்னார். பிறகு, ‘தாழ்ந்தவர்களாக’ கருதப்பட்டவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்றும், ‘உயர்ந்தவர்களாக’ கருதப்பட்டவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார். அப்படி உயர்த்தப்பட்டவர்கள், “உரிமைக்காரர் வரும்வரை” ஆட்சி செய்வார்கள். அவர் வந்த பிறகு, அவருக்கு யெகோவா அந்த அரசாங்கத்தைக் கொடுப்பார்.

14 தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்: கி.மு. 607-ல், யூதா ராஜ்யத்தின் தலைநகராக இருந்த எருசலேமை பாபிலோனியர்கள் அழித்து, சிதேக்கியா ராஜாவைக் கைதியாகக் கொண்டுபோனார்கள். அப்போது, ‘உயர்ந்திருந்த’ யூதா ராஜ்யம் தாழ்த்தப்பட்டது. அதற்குப் பிறகு, தாவீதின் ராஜ வம்சத்தில் வந்த யாருமே எருசலேமில் ஆட்சி செய்யவில்லை. அந்தக் காலப்பகுதியில், ‘தாழ்ந்தவர்களான’ மற்ற தேசத்தின் ஆட்சியாளர்கள் உயர்த்தப்பட்டார்கள். முழு பூமியும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் விடப்பட்டது. ஆனால், கொஞ்சக் காலத்துக்குத்தான் அப்படி விடப்பட்டது. 1914-ல் இயேசு கிறிஸ்துவை யெகோவா ராஜாவாக்கியபோது, “மற்ற தேசத்தாருக்கு குறிக்கப்பட்ட காலங்கள்” முடிவுக்கு வந்தன. (லூக். 21:24) இயேசு, தாவீது ராஜாவின் வம்சத்தில் வந்திருந்ததால் மேசியானிய அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் “உரிமை” அவருக்குத்தான் இருந்தது. * (ஆதி. 49:10) தாவீதின் வம்சத்தில் வரும் ஒருவர்தான் என்றென்றைக்கும் ஆட்சி செய்வார் என்று தாவீதுக்கு யெகோவா வாக்கு கொடுத்திருந்தார். இயேசு ராஜாவாக ஆனபோது அது நிறைவேறியது.—லூக். 1:32, 33.

கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக ஆகும் உரிமை இயேசுவுக்கு இருக்கிறது (பாரா 15)

15. ராஜாவான இயேசு கிறிஸ்துமீது நாம் ஏன் முழு நம்பிக்கை வைக்கலாம்?

15 இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்: ராஜாவான இயேசு கிறிஸ்துமீது நாம் முழு நம்பிக்கை வைக்க முடியும். ஏனென்றால், அவர் இந்த உலகத்தின் ஆட்சியாளர்களைப் போன்றவர் அல்ல. அவர்கள் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அல்லது அவர்களே ஆட்சியைப் பறித்துக்கொள்கிறார்கள். ஆனால், இயேசுவை யெகோவாவே தேர்ந்தெடுத்து உரிமைக்காரரான அவருக்கு ‘ராஜ்யத்தைக் கொடுத்தார்.’ (தானி. 7:13, 14) யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ராஜா நம்முடைய முழு நம்பிக்கையையும் பெறத் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

“என் ஊழியனாகிய தாவீது . . . அவர்களை மேய்ப்பான்”

16. தன்னுடைய ஆடுகளைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார், எசேக்கியேலின் காலத்திலிருந்த ‘இஸ்ரவேலின் மேய்ப்பர்கள்’ மக்களை எப்படி நடத்தினார்கள்?

16 மிகப் பெரிய மேய்ப்பரான யெகோவா, பூமியிலுள்ள அவருடைய ஆடுகள்மீது, அதாவது அவருடைய வணக்கத்தார்மீது ரொம்ப அக்கறையாக இருக்கிறார். (சங். 100:3) தன்னுடைய ஆடுகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை, தான் நியமித்த மேய்ப்பர்களிடம் யெகோவா ஒப்படைக்கும்போது, அந்த மேய்ப்பர்கள் தன்னுடைய ஆடுகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அவர் கூர்ந்து கவனிக்கிறார். அப்படியானால், எசேக்கியேலின் காலத்திலிருந்த ‘இஸ்ரவேலின் மேய்ப்பர்களை’ பற்றி யெகோவா எப்படி உணர்ந்திருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்தத் தலைவர்கள், மக்களை “கொடூரமாகவும் காட்டுத்தனமாகவும்” அடக்கி ஆண்டார்கள். அதனால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள், நிறைய பேர் தூய வணக்கத்தைவிட்டு விலகினார்கள்.—எசே. 34:1-6.

17. யெகோவா தன்னுடைய ஆடுகளை எப்படிக் காப்பாற்றினார்?

17 அப்போது யெகோவா என்ன செய்தார்? இஸ்ரவேலின் அந்தக் கொடூரமான ஆட்சியாளர்களிடம், ‘என்னுடைய ஆடுகளுக்காக உங்களைத் தண்டிப்பேன்’ என்று சொன்னார். அதேசமயத்தில், “என்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவேன்” என்ற வாக்கையும் கொடுத்தார். (எசே. 34:10) யெகோவா எப்போதுமே கொடுத்த வாக்கை நிறைவேற்றும் கடவுள். (யோசு. 21:45) கி.மு. 607-ல் படையெடுத்து வந்த பாபிலோனியர்களைப் பயன்படுத்தி, சுயநலம் பிடித்த அந்த மேய்ப்பர்களை ஆட்சியிலிருந்து நீக்குவதன் மூலம் அவர் தன்னுடைய ஆடுகளைக் காப்பாற்றினார். 70 வருஷங்களுக்குப் பிறகு, உண்மை வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவதற்காக, தன்னுடைய வணக்கத்தாரை பாபிலோனிலிருந்து விடுதலை செய்து, அவர்களுடைய தாய்நாட்டுக்குக் கொண்டுவந்தார். ஆனாலும், யெகோவாவின் இந்த ஆடுகள் ஆபத்தான சூழ்நிலையில்தான் இருந்தார்கள். ஏனென்றால், மற்ற தேசத்தாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவர்கள் இருந்தார்கள். “மற்ற தேசத்தாருக்கு குறிக்கப்பட்ட காலங்கள்” பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தன.—லூக். 21:24.

18, 19. கி.மு. 606-ல், எசேக்கியேல் என்ன தீர்க்கதரிசனத்தைச் சொன்னார்? (ஆரம்பப் படம்.)

18 எருசலேம் அழிக்கப்பட்டு சுமார் ஒரு வருஷத்துக்குப் பிறகு கி.மு. 606-லேயே, எசேக்கியேலுக்கு யெகோவா ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொன்னார். அதாவது, பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையாவதற்குப் பல வருஷங்களுக்கு முன்பே அதைச் சொன்னார். மிகப் பெரிய மேய்ப்பரான யெகோவா தன் ஆடுகள்மேல் அக்கறை வைத்திருப்பதையும் அவர்கள் என்றென்றும் வாழ ஆசைப்படுவதையும் அது காட்டியது. யெகோவாவின் ஆடுகளை மேசியானிய ராஜா எப்படி மேய்ப்பார் என்பதை அது விளக்கியது.

19 தீர்க்கதரிசனம்: (எசேக்கியேல் 34:22-24-ஐ வாசியுங்கள்.) “ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்” என்று கடவுள் சொன்னார். அவரை, “என் ஊழியனாகிய தாவீது” என்று அவர் அழைத்தார். இந்த வசனங்களில் ‘ஒரு மேய்ப்பன்’ என்றும், ‘ஊழியன்’ என்றும் ஒருமையில் சொல்லப்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது? இந்த மேசியானிய ராஜா மட்டும்தான் தாவீதின் ஒரே அரச வாரிசாக என்றென்றும் நிலைத்திருப்பார் என்று காட்டுகிறது. அவர் தாவீதின் அரச பரம்பரையை மீண்டும் ஆரம்பித்து வைக்க மாட்டார். மேய்ப்பராகவும் ராஜாவாகவும் இருக்கிற அவர், கடவுளுடைய ஆடுகளுக்கு உணவளிப்பார். அதோடு, “அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்.” அவர்களோடு யெகோவா ‘சமாதான ஒப்பந்தம் செய்வார்.’ அவர்கள்மீது, ‘ஆசீர்வாதங்களை மழை போலக் கொட்டுவார்.’ அதனால், அவர்கள் பாதுகாப்பாக, சீரும்சிறப்புமாக, செழுமையாக வாழ்வார்கள். அதோடு, அவர்கள் மத்தியில் சமாதானம் இருக்கும், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மத்தியில்கூட சமாதானம் இருக்கும்.—எசே. 34:25-28.

20, 21. (அ) “என் ஊழியனாகிய தாவீது” என்று சொல்லப்பட்டிருப்பவரைப் பற்றிய தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (ஆ) “சமாதான ஒப்பந்தம்” பற்றி எசேக்கியேல் சொன்னது எதிர்காலத்தில் எப்படி நிறைவேறும்?

20 தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்: தாவீதின் வம்சத்தில் வந்த உரிமைக்காரரான இயேசுவைத்தான் “என் ஊழியனாகிய தாவீது” என்று கடவுள் தீர்க்கதரிசனமாகக் குறிப்பிட்டார். (சங். 89:35, 36) இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒரு ‘நல்ல மேய்ப்பராக’ இருந்தார்; ‘ஆடுகளுக்காக தன் உயிரையே கொடுத்தார்.’ (யோவா. 10:14, 15) இப்போது பரலோகத்திலிருந்து தன் ஆடுகளைக் கவனித்து வருகிறார். (எபி. 13:20) கடவுள் 1914-ல் இயேசுவை ராஜாவாக நியமித்து, பூமியிலுள்ள தன்னுடைய ஆடுகளை மேய்க்கும் பொறுப்பையும் அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பையும் அவருக்குத் கொடுத்தார். அதன் பிறகு 1919-ல், அந்தப் புதிய ராஜா தன்னுடைய “வீட்டாருக்கு,” அதாவது கடவுளுடைய உண்மை வணக்கத்தாரான பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கும் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களுக்கும், உணவு கொடுப்பதற்காக ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமித்தார். (மத். 24:45-47) கிறிஸ்துவின் மேற்பார்வையின் கீழ், இந்த உண்மையுள்ள அடிமை கடவுளுடைய ஆடுகளுக்கு ஆன்மீக உணவை ஏராளமாகக் கொடுத்துவருகிறது. ஆன்மீகப் பூஞ்சோலையில் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இந்த உணவு அவர்களுக்கு உதவுகிறது. இந்த ஆன்மீகப் பூஞ்சோலை தொடர்ந்து நீடித்திருக்கும்.

21 “சமாதான ஒப்பந்தம்” மற்றும் ‘ஆசீர்வாதங்களை மழை போலக் கொட்டுவது’ பற்றி எசேக்கியேல் சொன்ன வார்த்தைகள் எதிர்காலத்தில் எப்படி நிறைவேறும்? வரப்போகும் புதிய உலகில், தூய வணக்கத்தார், ‘சமாதான ஒப்பந்தத்தால்’ வரும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பார்கள். போர், குற்றச்செயல், பஞ்சம், நோய், கொடிய மிருகங்கள் ஆகியவற்றை நினைத்து அவர்கள் ஒருபோதும் பயப்பட வேண்டியிருக்காது. (ஏசா. 11:6-9; 35:5, 6; 65:21-23) கடவுளுடைய மக்கள் அங்கே “பத்திரமாகக் குடியிருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.” (எசே. 34:28) அப்படிப்பட்ட பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பை நினைத்து நீங்கள் சிலிர்த்துப்போகிறீர்கள், இல்லையா?

இயேசு ஒரு மேய்ப்பராக இருப்பதால், கடவுளுடைய ஆடுகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதைப் பரலோகத்திலிருந்து கவனிக்கிறார் (பாரா 22)

22. இயேசு தன்னுடைய ஆடுகளைப் பற்றி எப்படி உணருகிறார், மேய்ப்பர்களான மூப்பர்கள் எப்படி அவரைப் போலவே ஆடுகள்மேல் அக்கறை காட்டலாம்?

22 இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்: தன்னுடைய தகப்பனைப் போல இயேசுவும் ஆடுகள்மேல் ரொம்ப அக்கறை காட்டுகிறார். மேய்ப்பராகவும் ராஜாவாகவும் இருக்கிற அவர், தன்னுடைய தகப்பனின் ஆடுகளுக்கு ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கும்படியும், அவர்கள் ஆன்மீகப் பூஞ்சோலையில் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படியும் பார்த்துக்கொள்கிறார். இப்படிப்பட்ட ஒரு ராஜா நம்மைக் கவனித்துக்கொள்வது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! ஆடுகள்மீது இயேசுவுக்கு இருக்கிற அதே அக்கறை, மேய்ப்பர்களான மூப்பர்களுக்கும் இருக்க வேண்டும். அவர்கள் கடவுளுடைய மந்தையை “மனப்பூர்வமாகவும்,” “ஆர்வமாகவும்” மேய்த்து வர வேண்டும். அதோடு, “மந்தைக்கு முன்மாதிரிகளாக” இருக்க வேண்டும். (1 பே. 5:2, 3) ஒரு மூப்பர், யெகோவாவின் ஆடுகளை மோசமாக நடத்துவதைப் பற்றி யோசித்துக்கூட பார்க்க மாட்டார். எசேக்கியேலின் காலத்தில், இஸ்ரவேலில் இருந்த கொடூரமான மேய்ப்பர்களைப் பற்றி யெகோவா சொன்னதை யோசித்துப் பாருங்கள். “என்னுடைய ஆடுகளுக்காக அவர்களைத் தண்டிப்பேன்” என்று அவர் சொன்னார். (எசே. 34:10) மிகப் பெரிய மேய்ப்பரான யெகோவா தன்னுடைய ஆடுகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதைக் கூர்ந்து கவனிக்கிறார். அவருடைய மகனும் அப்படியே செய்கிறார்.

“என் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுடைய தலைவனாக இருப்பான்”

23. இஸ்ரவேல் மக்களை ஒன்றுசேர்ப்பது சம்பந்தமாக யெகோவா என்ன வாக்குக் கொடுத்தார், அதை அவர் எப்படி நிறைவேற்றினார்?

23 தன்னை வணங்குகிறவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்தில், கடவுள் தன்னுடைய மக்களைக் கூட்டிச்சேர்க்கப்போவதாக வாக்குக் கொடுத்தார். இரண்டு ‘கோல்களை’ சேர்த்துப் பிடித்து ‘ஒரே கோலாக்குவது’ போல, இரண்டு கோத்திர ராஜ்யமான யூதாவையும் பத்துக் கோத்திர ராஜ்யமான இஸ்ரவேலையும் ஒன்றுசேர்த்து ஒரே தேசமாக ஆக்கப்போவதாக அவர் வாக்குக் கொடுத்தார். (எசே. 37:15-23) அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, கி.மு. 537-ல் அந்த ஒன்றுபட்ட மக்களை வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் கடவுள் கூட்டிச்சேர்த்தார். * அவர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமை, என்றென்றும் நிலைத்திருக்கப் போகும் மகத்தான ஒற்றுமைக்கு அடையாளமாக இருந்தது. இஸ்ரவேலர்களை ஒன்றுசேர்ப்பதாக வாக்குக் கொடுத்த பிறகு, எசேக்கியேலிடம் யெகோவா ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொன்னார். எதிர்காலத்தில் ஆட்சி செய்யப்போகும் ராஜா பூமியெங்குமுள்ள உண்மை வணக்கத்தாரை எப்படிக் கூட்டிச்சேர்ப்பார் என்றும், அவர்களை எப்படி என்றென்றும் ஒற்றுமையாக வாழ வைப்பார் என்றும் அதில் சொன்னார்.

24. மேசியானிய ஆட்சியாளரை யெகோவா எப்படியெல்லாம் அழைக்கிறார், அந்த ராஜாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?

24 தீர்க்கதரிசனம்: (எசேக்கியேல் 37:24-28-ஐ வாசியுங்கள்.) இந்தத் தீர்க்கதரிசனத்தில், மேசியானிய ஆட்சியாளரை மறுபடியும் “என் ஊழியனாகிய தாவீது,” “ஒரே மேய்ப்பன்,” மற்றும் ‘தலைவன்’ என்று யெகோவா குறிப்பிடுகிறார். அதோடு, இப்போது அவரை “ராஜா” என்றும் குறிப்பிடுகிறார். (எசே. 37:22) வாக்குக் கொடுக்கப்பட்ட இந்த ராஜாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்? அவருடைய ஆட்சி நிலையானதாக இருக்கும். “என்றென்றும்” என குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை, அவருடைய ஆட்சியில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களுக்கு முடிவே இருக்காது என்பதைக் காட்டுகிறது. * அவருடைய ஆட்சியில் ஒற்றுமை இருக்கும். உண்மையுள்ள குடிமக்கள் தங்களுடைய ‘ஒரே ராஜாவின்’ கீழ் ஒரே “நீதித்தீர்ப்புகளின்படி” நடப்பார்கள்; அவர்கள் ஒன்றுசேர்ந்து ‘அந்தத் தேசத்தில் வாழ்வார்கள்.’ அந்த ராஜாவின் ஆட்சி, அவருடைய குடிமக்களை யெகோவாவிடம் நெருங்கிப்போக வைக்கும். அந்தக் குடிமக்களோடு யெகோவா “சமாதான ஒப்பந்தம்” செய்வார். யெகோவா அவர்களுடைய கடவுளாக இருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். அவருடைய ஆலயம், அவர்களின் “நடுவில் என்றென்றும் இருக்கும்.”

25. மேசியானிய ராஜாவைப் பற்றிய தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?

25 தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்: 1919-ல், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்களுடைய ‘ஒரே மேய்ப்பனும்’ மேசியானிய ராஜாவுமான இயேசு கிறிஸ்துவின் கீழ் ஒன்றுசேர்க்கப்பட்டார்கள். பிற்பாடு, “எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த” “திரள் கூட்டமான மக்கள்” பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு ஒன்றுசேர்க்கப்பட்டார்கள். (வெளி. 7:9) இந்த இரண்டு தொகுதியினரும் சேர்ந்து ‘ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாக’ ஆகிறார்கள். (யோவா. 10:16) அவர்களுக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, அவர்கள் யெகோவாவின் நீதித்தீர்ப்புகளின்படி, அதாவது அவருடைய சட்டங்களின்படி, நடக்கிறார்கள். அதனால், உலகம் முழுவதும் அவர்கள் எல்லாரும் ஒன்றுபட்ட சகோதர சகோதரிகளாக ஆன்மீகப் பூஞ்சோலையில் ஒன்றுசேர்ந்து வாழ்கிறார்கள். அவர்களை யெகோவா சமாதானமாக வாழ வைக்கிறார். அதோடு, அவருடைய ஆலயம், அதாவது தூய வணக்கம், அவர்கள் மத்தியில் இருக்கிறது. இன்றும், என்றென்றும் யெகோவாதான் அவர்களுடைய கடவுள். அவருடைய வணக்கத்தாராக இருப்பதை நினைத்து அவர்கள் எப்போதும் பெருமைப்படுகிறார்கள்.

26. ஆன்மீகப் பூஞ்சோலையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க நீங்கள் என்ன செய்யலாம்?

26 இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்: உலகம் முழுவதிலும் சகோதர சகோதரிகளாக ஒன்றுபட்டிருக்கிற நாம், ஒற்றுமையோடு யெகோவாவுக்குத் தூய வணக்கத்தைச் செலுத்துகிறோம். இது நமக்குக் கிடைத்த அருமையான பாக்கியம்! அதோடு, இந்த ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அதனால், நாம் எல்லாருமே நம்முடைய நம்பிக்கையிலும் செயலிலும் ஒன்றுபட்டிருக்க நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டும். (1 கொ. 1:10) அதற்காக, நாம் ஒரே விதமான ஆன்மீக உணவை ஆர்வத்தோடு எடுத்துக்கொள்கிறோம்... ஒரே விதமான பைபிள் நெறிமுறைகளின்படி வாழ்கிறோம்... ஒரே விதமான வேலையைச் செய்கிறோம், அதாவது பிரசங்கித்து, சீஷராக்கும் மிக முக்கியமான வேலையைச் செய்கிறோம். இதையெல்லாம் செய்தாலும், அன்புதான் நம் ஒற்றுமைக்கு முக்கியமான காரணம். அனுதாபம் காட்டுவது, கருணை காட்டுவது, மன்னிப்பது என பல வழிகளில் அந்த அன்பை வெளிக்காட்ட நாம் முயற்சி செய்யும்போது, நாம் ஒற்றுமையைக் கட்டிக்காக்கிறோம் என்று அர்த்தம். “எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்” என்று பைபிள் சொல்கிறது.—கொலோ. 3:12-14; 1 கொ. 13:4-7.

உலகம் முழுவதும் ஒரே குடும்பம்போல் இருக்கிற தன்னுடைய அன்பான வணக்கத்தாரை யெகோவா ஆசீர்வதிக்கிறார் (பாரா 26)

27. (அ) மேசியாவைக் குறித்து எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? (ஆ) அடுத்த அதிகாரங்களில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

27 எசேக்கியேல் புத்தகத்தில் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! அந்தத் தீர்க்கதரிசனங்களை வாசித்து, ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, நம் அருமை ராஜாவான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். அவர் நம் நம்பிக்கையைப் பெறத் தகுதியானவர்... ஆட்சி செய்வதற்கான உரிமையைப் பெற்றவர்... நம்மை மென்மையாக மேய்த்து வருகிறவர்... நம்மை என்றென்றைக்கும் ஒற்றுமையாக வாழ வைப்பவர்... என்பதைத் தெரிந்துகொள்கிறோம். நாம் மேசியானிய ராஜாவின் குடிமக்களாக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! மேசியாவைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனங்களிலிருந்து, தூய வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமான சில விஷயங்களை மட்டுமே தெரிந்துகொண்டோம். இன்னும் நிறைய விஷயங்களை எசேக்கியேல் புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம். இயேசுவின் மூலமாகத்தான் யெகோவா தன்னுடைய மக்களை ஒன்றுசேர்த்து அவர்கள் மத்தியில் தூய வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுகிறார். (எசே. 20:41) இந்தப் புத்தகத்தின் அடுத்துவரும் அதிகாரங்களில், அந்தத் தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிய சிலிர்ப்பூட்டும் விஷயத்தையும், எசேக்கியேல் புத்தகம் அதை எப்படிப் படிப்படியாக விளக்குகிறது என்பதையும் பார்ப்போம்.

^ பாரா. 1 யூதாவிலிருந்து முதல்முறையாக பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டவர்களின் சிறையிருப்புக் காலம் கி.மு. 617-ல் ஆரம்பமானது. அப்படியானால், ஆறாவது வருஷம் கி.மு. 612-ல் ஆரம்பமானது.

^ பாரா. 14 இயேசு, தாவீதின் வம்சத்தில் வந்தார் என்பதற்கான தெளிவான அத்தாட்சி, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட சுவிசேஷப் புத்தகங்களில் காணப்படுகிறது.—மத். 1:1-16; லூக். 3:23-31.

^ பாரா. 23 இரண்டு கோல்களைப் பற்றிய எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தைப் பற்றியும், அது எப்படி நிறைவேறியது என்பதைப் பற்றியும் இந்தப் புத்தகத்தின் 12-ஆம் அதிகாரத்தில் பார்ப்போம்.

^ பாரா. 24 “என்றென்றும்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையைப் பற்றி ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “இந்த வார்த்தை நீண்ட காலத்தைக் குறிப்பதோடு, நிரந்தரமானது, நீடித்தது, மாற்ற முடியாதது போன்ற அர்த்தங்களையும் தருகிறது.”