Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 16

“நெற்றியில் அடையாளம் போடு”

“நெற்றியில் அடையாளம் போடு”

எசேக்கியேல் 9:4

முக்கியக் குறிப்பு: எசேக்கியேலின் காலத்தில் இருந்த உண்மையுள்ளவர்கள் தப்பிப்பிழைப்பதற்காக அடையாளம் போடப்பட்ட விதமும், இன்று அடையாளம் போடப்படும் விதமும்

1-3. (அ) எசேக்கியேல் ஏன் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்? எருசலேமின் அழிவுக்கான காரணத்தைப் பற்றி அவர் என்ன தெரிந்துகொள்கிறார்? (ஆ) என்னென்ன கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்துகொள்ளப்போகிறோம்?

எசேக்கியேல் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்! சற்று முன்புதான், விசுவாசதுரோக யூதர்கள் எருசலேம் ஆலயத்தில் அருவருப்பான காரியங்களைச் செய்வதை அவர் ஒரு தரிசனத்தில் பார்த்திருக்கிறார். * இஸ்ரவேலில் தூய வணக்கத்துக்கான முக்கிய இடமாக இருந்த ஆலயத்தையே அந்தக் கலகக்காரர்கள் அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, யூதா தேசம் முழுவதும் வன்முறையால் நிறைந்திருக்கிறது. சரிசெய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. தான் தேர்ந்தெடுத்த மக்கள் செய்வதைப் பார்த்து யெகோவா ரொம்பவே வேதனைப்படுகிறார். அதனால் எசேக்கியேலிடம், “நான் கோபத்தில் கொதித்தெழுவேன்” என்று சொல்கிறார்.—எசே. 8:17, 18.

2 எருசலேமும், ஒரு காலத்தில் பரிசுத்தமாக இருந்த அதன் ஆலயமும் யெகோவாவின் கோபத்தினால் அழியப் போவதை நினைத்து எசேக்கியேல் நிச்சயம் கவலைப்பட்டிருப்பார். அவர் ஒருவேளை, ‘எருசலேமில் இருக்கிற உண்மையுள்ள மக்களுக்கு என்ன ஆகும்? அவர்கள் காப்பாற்றப்படுவார்களா? ஒருவேளை காப்பாற்றப்படுவதாக இருந்தால் அது எப்படி நடக்கும்?’ என்றெல்லாம் யோசித்திருக்கலாம். பதிலுக்காக அவர் ரொம்பக் காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எருசலேமுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பைப் பற்றிக் கேட்ட உடனேயே, அந்தத் தண்டனையைக் கொடுக்கப்போகிறவர்களை, ஒருவர் சத்தமாகக் கூப்பிடுவதை எசேக்கியேல் கேட்கிறார். (எசே. 9:1) அந்தத் தரிசனத்தை அவர் தொடர்ந்து பார்க்கும்போது, மக்கள் எல்லாருமே அழிக்கப்பட மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்கிறார். உண்மையுள்ளவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டது அவருக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!

3 இந்தப் பொல்லாத உலகத்தின் அழிவும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அந்த அழிவிலிருந்து யார் தப்பிப்பிழைப்பார்கள் என்ற கேள்வி நம் மனதிலும் வரலாம். அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்: (1) தரிசனத்தில் அடுத்ததாக எசேக்கியேல் எதைப் பார்த்தார்? (2) அவருடைய காலத்தில் அது எப்படி நிறைவேறியது? (3) நம் காலத்தில் அது எப்படி நிறைவேறும்?

“தண்டனை கொடுக்கப்போகிறவர்கள் . . . வரட்டும்”

4. தரிசனத்தில் அடுத்ததாக எசேக்கியேல் எதைப் பார்த்தார், எதைக் கேட்டார் என்பதை விவரியுங்கள்.

4 தரிசனத்தில் அடுத்ததாக எசேக்கியேல் எதைப் பார்த்தார், எதைக் கேட்டார்? (எசேக்கியேல் 9:1-11-ஐ வாசியுங்கள்.) “வடக்கே பார்த்தபடி இருந்த உயர்ந்த நுழைவாசலின் திசையிலிருந்து” ஏழு ஆண்கள் வந்தார்கள். ஒருவேளை கடவுளுக்கு எரிச்சல் மூட்டுகிற சிலை இருந்த இடத்துக்குப் பக்கத்திலிருந்து அல்லது பெண்கள் தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருந்த இடத்துக்குப் பக்கத்திலிருந்து, அவர்கள் வந்திருக்கலாம். (எசே. 8:3, 14) அந்த ஏழு ஆண்களும் ஆலயத்தின் உட்பிரகாரத்துக்குள் நுழைந்து செம்புப் பலிபீடத்துக்குப் பக்கத்தில் வந்து நின்றார்கள். அவர்கள் பலி செலுத்துவதற்காக அங்கு வரவில்லை. ஏனென்றால், அப்போதெல்லாம் யெகோவா பலிகளை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவர்களில் ஆறு பேர், ‘அடித்து நொறுக்குவதற்கான ஆயுதத்தை’ கையில் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். ஏழாவது நபர் ரொம்பவே வித்தியாசமானவராக இருந்தார். அவர் நாரிழை உடையை உடுத்தியிருந்தார். அவர் ஆயுதத்துக்குப் பதிலாக “செயலாளருடைய மைப் பெட்டியை” வைத்திருந்தார்.

5, 6. அடையாளம் போடப்பட்டவர்களுக்கு என்ன ஆனது? (ஆரம்பப் படம்.)

5 மைப் பெட்டியை வைத்திருந்தவருக்கு என்ன முக்கியமான வேலை கொடுக்கப்பட்டது? யெகோவாவிடமிருந்து நேரடியான இந்த நியமிப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது: “எருசலேம் நகரமெங்கும் போ. அங்கே நடக்கிற எல்லா அருவருப்புகளையும் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக் குமுறுகிற ஆட்களின் நெற்றியில் அடையாளம் போடு.” அதைக் கேட்டதும் பூர்வ காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் பெற்றோர் செய்த ஒரு விஷயம் எசேக்கியேலுக்கு ஞாபகம் வந்திருக்கும். அழிவிலிருந்து தங்களுடைய மூத்த மகன்களைக் காப்பாற்ற வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களிலும் அவற்றின் மேற்சட்டத்திலும் இரத்தத்தால் அவர்கள் அடையாளம் போட்டார்கள். (யாத். 12:7, 22, 23) எசேக்கியேலின் தரிசனத்தில் மைப் பெட்டியை வைத்திருந்தவரும் இதே நோக்கத்துக்காகத்தான், அதாவது எருசலேமின் அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான், அவர்களுடைய நெற்றியில் அடையாளம் போட்டாரா?

6 எதன் அடிப்படையில் அடையாளம் போடப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். எருசலேமில் ‘நடக்கிற எல்லா அருவருப்புகளையும் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக் குமுறுகிற ஆட்களின் நெற்றியில்’ அந்த அடையாளத்தைப் போட வேண்டியிருந்தது. இதிலிருந்து, அடையாளம் போடப்பட்டவர்களைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? அவர்கள், ஆலயத்தில் நடக்கிற சிலை வழிபாட்டை நினைத்து மட்டுமல்ல, எருசலேம் முழுவதிலும் நடக்கிற வன்முறை, ஒழுக்கக்கேடு, ஊழல் ஆகியவற்றை நினைத்து ரொம்பவே வேதனைப்பட்டார்கள் என்று தெரிகிறது. (எசே. 22:9-12) அதோடு, அவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை மறைக்கவில்லை என்றும் தெரிகிறது. நல்மனமுள்ள அந்த மக்கள், தேசத்தில் நடந்த விஷயங்கள்மீது தங்களுக்கு இருந்த வெறுப்பையும், தூய வணக்கத்தின் மீது தங்களுக்கு இருந்த பக்தியையும் தங்களுடைய சொல்லிலும் செயலிலும் காட்டினார்கள். அப்படிப்பட்டவர்கள்மீது யெகோவா இரக்கப்பட்டு அவர்களைக் காப்பாற்றுவார்.

7, 8. நொறுக்குவதற்கான ஆயுதங்களை வைத்திருந்த ஆண்களுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது? கடைசியில் என்ன நடந்தது?

7 நொறுக்குவதற்கான ஆயுதத்தை வைத்திருந்த ஆறு ஆண்களுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது? மைப் பெட்டியை வைத்திருப்பவர் தன்னுடைய வேலையை முடித்த பிறகு, நெற்றியில் அடையாளம் போடப்பட்டவர்களைத் தவிர மற்ற எல்லாரையும் கொன்றுபோடும்படி அவர்களிடம் யெகோவா சொல்வதை எசேக்கியேல் கேட்டார். “என்னுடைய ஆலயத்திலிருந்து ஆரம்பியுங்கள்” என்று யெகோவா சொன்னார். (எசே. 9:6) அவர்கள் தங்களுடைய வேலையை எருசலேம் ஆலயத்திலிருந்தே தொடங்க வேண்டியிருந்தது. ஏனென்றால், அது யெகோவாவின் பார்வையில் பரிசுத்தமானதாக இருக்கவில்லை. “ஆலயத்துக்குமுன் நின்றுகொண்டிருந்த பெரியோர்களை,” அதாவது இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்களான 70 பேரை, அவர்கள் முதலில் கொன்றுபோட வேண்டியிருந்தது. ஏனென்றால், அவர்கள் ஆலயத்தில் பொய் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.—எசே. 8:11, 12; 9:6.

8 கடைசியில் என்ன நடந்தது? மைப் பெட்டியை வைத்திருந்தவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு, “நீங்கள் சொன்னபடியே செய்து முடித்துவிட்டேன்” என்று யெகோவாவிடம் சொல்வதை தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்தார். (எசே. 9:11) இதை வாசிக்கும்போது நாம் இப்படி யோசிக்கலாம்: ‘எருசலேம் மக்களுக்குக் கடைசியில் என்ன ஆனது? உண்மையுள்ளவர்கள் யாராவது அழிவிலிருந்து தப்பித்தார்களா?’

எசேக்கியேலின் காலத்தில் இந்தத் தரிசனம் எப்படி நிறைவேறியது?

9, 10. எருசலேமின் அழிவைத் தப்பிப்பிழைத்த உண்மையுள்ள சிலர் யார்? அவர்களைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்?

9 2 நாளாகமம் 36:17-20-ஐ வாசியுங்கள். கி.மு. 607-ல், எருசலேமையும் அதன் ஆலயத்தையும் பாபிலோனியப் படை அழித்தபோது எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. பாபிலோனியர்கள் ‘யெகோவாவின் கையில் ஒரு கிண்ணத்தைப் போல’ இருந்தார்கள். அதாவது, உண்மையில்லாமல் போன எருசலேம் மக்களைத் தண்டிப்பதற்கு யெகோவா பயன்படுத்திய கருவிகளாக இருந்தார்கள். (எரே. 51:7) அந்த மக்கள் எல்லாருமே அழிக்கப்பட்டார்களா? இல்லை. எசேக்கியேலின் தரிசனம் முன்னறிவித்தபடி, சிலரை பாபிலோனியர்கள் அழிக்கவில்லை.—ஆதி. 18:22-33; 2 பே. 2:9.

10 ரேகாபியர்கள், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக், தீர்க்கதரிசியான எரேமியா, அவருடைய செயலாளரான பாருக் போன்ற உண்மையுள்ள நிறைய பேர் தப்பிப்பிழைத்தார்கள். (எரே. 35:1-19; 39:15-18; 45:1-5) எசேக்கியேலின் தரிசனத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, இவர்கள் ‘எருசலேமில் நடந்துகொண்டிருந்த எல்லா அருவருப்புகளையும் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக் குமுறிக்கொண்டிருந்தார்கள்’ என்ற முடிவுக்கு வரலாம். (எசே. 9:4) அழிவு வருவதற்கு முன்பே, கெட்ட காரியங்களை அவர்கள் மனதார ஒதுக்கித்தள்ளியதையும், தூய வணக்கத்தின் மீது அவர்களுக்கு இருந்த பக்தியையும் அவர்கள் நிச்சயம் செயலில் காட்டியிருப்பார்கள். அதனால்தான் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

11. செயலாளரின் மைப் பெட்டியை வைத்திருந்தவரும், நொறுக்குவதற்கான ஆயுதங்களை வைத்திருந்த ஆறு ஆண்களும் யாருக்கு அடையாளமாக இருந்தார்கள்?

11 அவர்களுக்கு நிஜமாகவே தப்பிப்பிழைப்பதற்கான அடையாளம் போடப்பட்டதா? எசேக்கியேலோ வேறொரு தீர்க்கதரிசியோ எருசலேம் நகரமெங்கும் போய் உண்மையுள்ள ஆட்களின் நெற்றியில் அடையாளம் போட்டதாக எந்தப் பதிவும் இல்லை. அப்படியானால், தேவதூதர்கள் செய்துகொண்டிருந்த வேலையைப் பற்றித்தான் இந்தத் தரிசனம் சொல்கிறது. அதனால்தான், மனிதர்களால் அதைப் பார்க்க முடியவில்லை. செயலாளரின் மைப் பெட்டியை வைத்திருந்தவரும், நொறுக்குவதற்கான ஆயுதங்களை வைத்திருந்த ஆறு ஆண்களும் யெகோவாவின் உண்மையுள்ள தேவதூதர்களுக்கு அடையாளமாக இருந்தார்கள். யெகோவாவின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். (சங். 103:20, 21) உண்மையில்லாமல் போன எருசலேம் மக்களைத் தண்டிக்க தேவதூதர்களை யெகோவா பயன்படுத்தினார் என்பதில் சந்தேகமில்லை. தேவதூதர்கள் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றியபோது கண்மூடித்தனமாக எல்லாரையும் அழிக்கவில்லை. சிலரைக் காப்பாற்றினார்கள். இது, காப்பாற்றப்பட்டவர்களின் நெற்றியில் அடையாளம் போடப்பட்டதுபோல் இருந்தது.

எசேக்கியேலின் தரிசனம் நம் காலத்தில் எப்படி நிறைவேறும்?

12, 13. (அ) எருசலேம்மீது யெகோவா ஏன் தன்னுடைய கோபத்தைக் காட்டினார்? நம் நாளிலும் அதேபோல் செய்வார் என்று ஏன் எதிர்பார்க்கலாம்? (ஆ) கிறிஸ்தவமண்டலம், உண்மையில்லாமல் போன எருசலேமுக்கு அடையாளமாக இருக்கிறதா? விளக்குங்கள். (“எருசலேம் கிறிஸ்தவமண்டலத்துக்கு அடையாளமாக இருக்கிறதா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

12 கடவுள் கொடுக்கப்போகும் வரலாறு காணாத ஒரு நியாயத்தீர்ப்பை நம் நாளில் பார்க்கப்போகிறோம். “அப்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை” என்று இயேசு சொன்னார். (மத். 24:21) இந்த முக்கியமான சம்பவத்துக்காக நாம் காத்துக்கொண்டிருக்கும்போது, நம் மனதில் சில கேள்விகள் வரலாம். வரப்போகும் அழிவில் எல்லாருமே அழிக்கப்படுவார்களா, அல்லது சிலர் காப்பாற்றப்படுவார்களா? தூய வணக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் தப்பிப்பிழைப்பதற்காக ஏதாவது ஒரு விதத்தில் அடையாளம் போடப்படுவார்களா? வேறு வார்த்தையில் சொன்னால், மைப் பெட்டியை வைத்திருப்பவரைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்துக்கு நம் காலத்தில் ஒரு நிறைவேற்றம் இருக்கிறதா? இந்த மூன்று கேள்விகளுக்கும், ஆம் என்பதே பதில். ஏன் அந்த முடிவுக்கு வருகிறோம்? பதிலைக் கண்டுபிடிக்க எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள விஷயங்களை மறுபடியும் பார்ப்போம்.

13 பூர்வ எருசலேம்மீது யெகோவா ஏன் தன்னுடைய கோபத்தைக் காட்டினார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மறுபடியும் எசேக்கியேல் 9:8, 9-ஐப் பாருங்கள். (வாசியுங்கள்.) எருசலேமுக்கு வரவிருந்த அழிவில், ‘இஸ்ரவேலில் மீதியாயிருக்கிற எல்லாரும்’ அழிக்கப்படுவார்களோ என்று எசேக்கியேல் பயந்தார். அப்போது, அந்தத் தண்டனைத் தீர்ப்பைக் கொடுப்பதற்கான நான்கு காரணங்களை யெகோவா குறிப்பிட்டார். முதலாவதாக, அந்தத் தேசத்தார் ‘மகா பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தார்கள்.’ * இரண்டாவதாக, யூதா தேசமெங்கும் ‘இரத்தம் ஓடியது.’ மூன்றாவதாக, யூதாவின் தலைநகரமாக இருந்த எருசலேம் முழுவதும் ‘ஊழல் நடந்தது.’ நான்காவதாக, மக்கள் தாங்கள் செய்த கெட்ட காரியங்களை ‘யெகோவா பார்ப்பதில்லை’ என்று நினைத்துக்கொண்டு அதையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள். இந்த வார்த்தைகள், கடவுளுக்கு உண்மையில்லாமல் ஒழுக்கக்கேட்டிலும், வன்முறையிலும், ஊழலிலும் ஈடுபடுகிற இன்றைய உலகத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது, இல்லையா? யெகோவா, “மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.” அதனால், அவர் தன்னுடைய நீதியான கோபத்தினால் எசேக்கியேலின் காலத்தில் செய்தது போல நம் நாளிலும் செய்வார். (யாக். 1:17; மல். 3:6) அப்படியானால், நொறுக்குவதற்கான ஆயுதங்களை வைத்திருந்த ஆறு ஆண்களுக்கும் மைப் பெட்டியை வைத்திருந்த நபருக்கும் நம் நாளில் செய்ய வேண்டிய ஒரு வேலை நிச்சயம் இருக்கும்.

நொறுக்குவதற்கான ஆயுதத்தை வைத்திருக்கிற ஆறு ஆண்களும் சீக்கிரத்தில் தங்களுடைய வேலையை ஆரம்பிப்பார்கள் (பாராக்கள் 12, 13)

14, 15. அழிவைக் கொண்டுவருவதற்கு முன் மக்களை யெகோவா எச்சரிக்கிறார் என்பதற்கு என்ன உதாரணங்கள் இருக்கின்றன?

14 இன்று, எசேக்கியேலின் தரிசனம் எப்படி நிறைவேறுகிறது? கடந்த காலத்தில் அது எப்படி நிறைவேறியது என்பதைத் தெரிந்துகொண்டால், இன்றும் எதிர்காலத்திலும் அது எப்படி நிறைவேறும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். எசேக்கியேல் பார்த்த தரிசனத்தின் எந்த அம்சங்கள் இதுவரை நிறைவேறியிருக்கின்றன என்றும் எதிர்காலத்தில் எந்த அம்சங்கள் நிறைவேறும் என்றும் இப்போது பார்க்கலாம்.

15 அழிவைக் கொண்டுவருவதற்கு முன் யெகோவா மக்களை எச்சரிக்கிறார். இந்தப் புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, எசேக்கியேலை ‘இஸ்ரவேல் ஜனங்களுக்குக் காவல்காரனாக’ யெகோவா நியமித்தார். (எசே. 3:17-19) வரவிருந்த அழிவைப் பற்றி கி.மு. 613-லிருந்து இஸ்ரவேலர்களுக்கு எசேக்கியேல் தெளிவான எச்சரிப்பைக் கொடுத்தார். எருசலேமின் அழிவைப் பற்றி ஏசாயா, எரேமியா போன்ற மற்ற தீர்க்கதரிசிகளும் எச்சரிப்பு கொடுத்தார்கள். (ஏசா. 39:6, 7; எரே. 25:8, 9, 11) நம் நாளில், கிறிஸ்து மூலம் பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சிறிய தொகுதியை இந்த வேலைக்கு யெகோவா பயன்படுத்துகிறார். இவர்கள், தூய வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு, அதாவது வீட்டாருக்கு, ஆன்மீக உணவைக் கொடுப்பதோடு சீக்கிரத்தில் வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிப்பும் கொடுக்கிறார்கள்.—மத். 24:45.

16. யெகோவாவின் மக்களாகிய நாம், தப்பிப்பிழைக்கப் போகிறவர்களுக்கு அடையாளம் போடுகிறோமா? விளக்குங்கள்.

16 யெகோவாவின் மக்கள், தப்பிப்பிழைக்கப் போகிறவர்களுக்கு அடையாளம் போடுவதில்லை. எருசலேம் நகரமெங்கும் போய் தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தை மற்றவர்கள்மீது போடும்படி எசேக்கியேலிடம் சொல்லப்படவில்லை என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதேபோல், இன்றும் தப்பிப்பிழைப்பதற்குத் தகுதியுள்ளவர்கள்மீது அடையாளம் போடும்படி யெகோவாவின் மக்களிடம் சொல்லப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, வீட்டாரான நம்மிடம் பிரசங்கிப்பதற்கான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலையை நாம் முக்கியமானதாக நினைக்கிறோம். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை மற்றவர்களுக்கு ஆர்வத்தோடு பிரசங்கிக்கிறோம். அதோடு, இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு மிகவும் நெருங்கிவிட்டது என்ற எச்சரிப்பின் செய்தியையும் மும்முரமாக அறிவிக்கிறோம். (மத். 24:14; 28:18-20) இந்த விதத்தில், தூய வணக்கத்தில் ஈடுபட நல்மனமுள்ள மக்களுக்கு நாம் உதவுகிறோம்.—1 தீ. 4:16.

17. தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள தனிநபர்கள் ஒவ்வொருவரும் இப்போதே என்ன செய்ய வேண்டும்?

17 வரப்போகும் அழிவிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய விசுவாசத்தை இப்போதே செயலில் காட்டுவது முக்கியம். நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி, கி.மு. 607-ல் எருசலேமின் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள், அக்கிரமத்தின் மீது தங்களுக்கு இருந்த வெறுப்பையும், தூய வணக்கத்தின் மீது தங்களுக்கு இருந்த பக்தியையும் ஏற்கெனவே செயலில் காட்டியிருந்தார்கள். நம் காலத்துக்கும் இது பொருந்துகிறது. அழிவு வருவதற்கு முன்பே, தனிநபர்கள் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் நடக்கிற அக்கிரமங்களைப் பார்த்து ‘பெருமூச்சுவிட்டுக் குமுற’ வேண்டும், அதாவது மனதில் ரொம்பவே வேதனைப்பட வேண்டும். அதோடு, தூய வணக்கத்தின் மீது தங்களுக்கு இருக்கும் பக்தியை சொல்லிலும் செயலிலும் வெளிப்படையாகக் காட்ட வேண்டும். எப்படி? இன்று சொல்லப்பட்டு வருகிற நல்ல செய்தியை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; கிறிஸ்துவின் சுபாவத்தைக் காட்ட ஆரம்பிக்க வேண்டும்; யெகோவாவுக்கு தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்; கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையோடு ஆதரவு கொடுக்க வேண்டும். (எசே. 9:4; மத். 25:34-40; எபே. 4:22-24; 1 பே. 3:21) இதையெல்லாம் இப்போதே செய்கிறவர்கள் மட்டும்தான், அதாவது மிகுந்த உபத்திரவத்துக்கு முன்பே தூய வணக்கத்தாராக இருப்பவர்கள் மட்டும்தான், தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் பெறுவார்கள்.

18. (அ) தப்பிப்பிழைக்கத் தகுதியுள்ளவர்களுக்கு இயேசு கிறிஸ்து எப்படி அடையாளம் போடுவார், எப்போது அதைச் செய்வார்? (ஆ) பரலோக நம்பிக்கையுள்ள உண்மையுள்ளவர்கள் அடையாளத்தைப் பெற வேண்டுமா? விளக்குங்கள்.

18 தகுதியுள்ளவர்களுக்கு இயேசு அடையாளம் போடுவார். எசேக்கியேலின் காலத்தில், கடவுளுக்கு உண்மையாக இருந்த மக்களுக்கு அடையாளம் போடும் வேலையில் தேவதூதர்களுக்கு ஒரு பங்கு இருந்தது. நவீன கால நிறைவேற்றத்தில், செயலாளரின் மைப் பெட்டியை வைத்திருப்பவர் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறார். அவர் எல்லா தேசத்தாரையும் நியாயந்தீர்க்க “தன்னுடைய மகிமையில்” வருவார். (மத். 25:31-33) மிகுந்த உபத்திரவத்தின்போது, அதாவது பொய் மதத்தின் அழிவுக்குப் பிறகு, இந்த வருகை இருக்கும். * அந்த முக்கியமான காலக்கட்டத்தில், அதாவது அர்மகெதோன் போருக்குச் சற்று முன்பு, மக்களை செம்மறியாடுகளாக அல்லது வெள்ளாடுகளாக இயேசு நியாயந்தீர்ப்பார். ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்த மக்கள் செம்மறியாடுகளாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள், அதாவது அடையாளம் போடப்படுவார்கள். இது, அவர்கள் “நிரந்தரமான வாழ்வைப் பெறுவார்கள்” என்பதைக் குறிக்கிறது. (வெளி. 7:9-14; மத். 25:34-40, 46) பரலோக நம்பிக்கையுள்ள உண்மையுள்ளவர்களுக்கு என்ன நடக்கும்? அர்மகெதோனிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தை அவர்கள் பெற வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இறப்பதற்கு முன்பு அல்லது மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பு, தங்களுடைய கடைசி முத்திரையைப் பெறுவார்கள். அதன் பிறகு, அர்மகெதோனுக்கு முன் ஒரு கட்டத்தில், அவர்கள் பரலோகத்துக்கு எழுப்பப்படுவார்கள்.—வெளி. 7:1-3.

19. இந்த உலகத்தின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் இயேசுவோடு யாரெல்லாம் சேர்ந்துகொள்வார்கள்? (“பெருமூச்சுவிட்டுக் குமுறுவதும், அடையாளம் போடுவதும், நொறுக்குவதும்—எப்போது, எப்படி?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

19 பரலோக ராஜாவான இயேசு கிறிஸ்துவும், அவருடைய பரலோகப் படைவீரர்களும் இந்த உலகத்தின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்கள். எசேக்கியேலின் தரிசனத்தில், நொறுக்குவதற்கான ஆயுதங்களை வைத்திருந்த ஆறு ஆண்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழிக்கும் வேலையை எப்போது ஆரம்பித்தார்கள்? நாரிழை உடையை உடுத்தியிருந்தவர் அடையாளம் போடும் வேலையை முடித்த பிறகுதான் அதை ஆரம்பித்தார்கள். (எசே. 9:4-7) அதேபோல், வரவிருக்கும் அழிவும்கூட, எல்லா தேசத்தாரையும் இயேசு நியாயந்தீர்த்து, செம்மறியாடுகளைப் போன்றவர்களுக்கு தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் போட்ட பிறகுதான் ஆரம்பமாகும். அர்மகெதோன் போரின்போது, இந்தப் பொல்லாத உலகத்துக்கு எதிராக இயேசு தன்னுடைய பரலோகப் படையோடு வருவார். பரிசுத்தமான தேவதூதர்களும், இயேசுவோடு ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேரும் சேர்ந்ததுதான் அந்தப் படை. அவர்கள் இந்தப் பொல்லாத உலகத்தைத் துடைத்தழிப்பார்கள். ஆனால், தூய வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களை அவர்கள் காப்பாற்றி நீதியான புதிய உலகத்துக்கு வழிநடத்துவார்கள்.—வெளி. 16:14-16; 19:11-21.

20. செயலாளரின் மைப் பெட்டியை வைத்திருப்பவரைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து ஆறுதலான என்ன விஷயங்களை நாம் கற்றுக்கொண்டோம்?

20 செயலாளரின் மைப் பெட்டியை வைத்திருப்பவரைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து, ஆறுதலான விஷயங்களைக் கற்றுக்கொண்டதற்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! பொல்லாதவர்களோடு சேர்த்து நல்லவர்களையும் யெகோவா அழிக்க மாட்டார் என்று நாம் முழுமையாக நம்பலாம். (சங். 97:10) வரப்போகும் அழிவிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் இப்போதே என்ன செய்ய வேண்டுமென்று நமக்குத் தெரியும். யெகோவாவை வணங்கும் மக்களாகிய நாம், சாத்தானுடைய உலகத்தில் நடக்கிற அக்கிரமங்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டுக் குமுறுகிற மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்வதில் முடிந்தவரை முழுமையாக ஈடுபட தீர்மானமாக இருக்கிறோம். வரப்போகும் அழிவைப் பற்றி எச்சரிப்பதிலும் முழுமையாக ஈடுபட நாம் தீர்மானமாக இருக்கிறோம். அப்படிச் செய்வதன் மூலம், ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையுள்ளவர்கள்’ நம்மோடு சேர்ந்து தூய வணக்கத்தில் ஈடுபட நாம் உதவுகிறோம். (அப். 13:48) இப்படித் தூய வணக்கத்தில் ஈடுபடுகிறவர்கள்தான் தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் பெற்று கடவுளுடைய நீதியான புதிய உலகத்தில் வாழ தகுதிபெறுவார்கள்.

^ பாரா. 1 ஆலயத்தில் நடக்கிற அருவருப்பான காரியங்கள் சம்பந்தமான எசேக்கியேலின் தரிசனத்தைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 5-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

^ பாரா. 13 ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் சொல்கிறபடி, ‘அக்கிரமங்கள்’ என்பதற்கான எபிரெய பெயர்ச்சொல் “இழிவு” என்ற அர்த்தத்தையும் தரலாம். மற்றொரு ஆராய்ச்சிப் புத்தகம் இந்த வார்த்தைக்கு இப்படி அர்த்தம் தருகிறது: “இது கடவுளுக்கு விரோதமான செயலைக் குறிக்கும் வார்த்தை. கடவுளுக்கு விரோதமாக செய்யப்பட்ட குற்றத்தை அல்லது அநீதியைக் குறிப்பதற்கே இந்த வார்த்தை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.”

^ பாரா. 18 மகா பாபிலோன் அழிக்கப்படும்போது, பொய் மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் அழிந்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அந்தச் சமயத்தில், குருமார்கள் சிலர் பொய் மதத்தை விட்டுவிட்டு, அதனோடு தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இருந்ததே இல்லை என்று சொல்லிக்கொள்வார்கள்.—சக. 13:3-6.