Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 21

“அந்த நகரம், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’ என்ற பெயரால் அழைக்கப்படும்”

“அந்த நகரம், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’ என்ற பெயரால் அழைக்கப்படும்”

எசேக்கியேல் 48:35

முக்கியக் குறிப்பு: நகரம் மற்றும் காணிக்கையின் அர்த்தம்

1, 2. (அ) தேசத்தின் ஒரு பகுதியை என்ன விசேஷ நோக்கத்துக்காக ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது? (அட்டைப் படம்.) (ஆ) சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தரிசனம் என்ன நம்பிக்கையை அளித்தது?

எசேக்கியேல் தன்னுடைய கடைசித் தரிசனத்தில், தேசத்தின் ஒரு பகுதியை விசேஷ நோக்கத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறார். இந்தப் பகுதி, இஸ்ரவேலின் ஒரு கோத்திரத்துக்குக் கொடுப்பதற்காக அல்ல, யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதற்காகவே அர்ப்பணிக்கப்படுகிறது. ஆர்வமூட்டும் பெயரால் அழைக்கப்படுகிற ஒரு முக்கியமான நகரத்தைப் பற்றியும் எசேக்கியேல் தெரிந்துகொள்கிறார். இந்தத் தரிசனம், சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு வாக்குறுதியை அளிக்கிறது. அதாவது, தங்களுடைய அருமையான தாய்நாட்டுக்குத் திரும்பிப் போகும்போது யெகோவா தங்களோடு இருப்பார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

2 காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகிற பகுதியைப் பற்றி எசேக்கியேல் விளக்கமாகச் சொல்கிறார். யெகோவாவை உண்மையோடு வணங்குகிற நாம், இதிலிருந்து என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

நகரமும் பரிசுத்த காணிக்கையும்

3. அர்ப்பணிக்கும்படி யெகோவா சொன்ன இடத்தில் இருந்த ஐந்து பகுதிகள் யாவை? என்ன நோக்கத்துக்காக அவை ஒதுக்கி வைக்கப்பட்டன? (“ஒரு பகுதியை நீங்கள் கடவுளுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

3 இந்த விசேஷப் பகுதியின் அளவு, வடக்கிலிருந்து தெற்குவரை 25,000 முழமும் (13 கிலோமீட்டர்), கிழக்கிலிருந்து மேற்குவரை 25,000 முழமுமாக இருந்தது. இந்தச் சதுர நிலப்பரப்பு ‘மொத்தமும்’ காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டது. இது கிழக்கிலிருந்து மேற்காக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேல்பகுதி லேவியர்களுக்காகவும், நடுப்பகுதி ஆலயத்துக்காகவும் குருமார்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. இந்த இரண்டு பகுதிகளும் சேர்ந்ததுதான் “பரிசுத்த காணிக்கை.” “மீந்திருக்கும் பகுதி” நகரத்தின் “பொது உபயோகத்துக்காக” ஒதுக்கப்பட்டது.—எசே. 48:15, 20.

4. யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

4 யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையைப் பற்றிய இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? தேசத்தின் ஒரு பகுதியை விசேஷக் காணிக்கையாக முதலில் ஒதுக்கிய பிறகுதான் கோத்திரங்களுக்கான பகுதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் ஆன்மீக விஷயங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை யெகோவா சுட்டிக்காட்டினார். (எசே. 45:1) இந்த விசேஷப் பகுதி முதலாவதாக ஒதுக்கி வைக்கப்பட்டதிலிருந்து எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைச் சிறைபிடிக்கப்பட்ட மக்கள் நிச்சயம் புரிந்திருப்பார்கள். அவர்கள் யெகோவாவை வணங்குவதற்குத்தான் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டியிருந்தது. அதேபோல் இன்றும் ஆன்மீக விஷயங்களுக்கு, அதாவது பைபிளைப் படிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது, பிரசங்க வேலையில் ஈடுபடுவது போன்ற விஷயங்களுக்கு, நாம் முதலிடம் கொடுக்கிறோம். எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவின் மூலம் யெகோவா நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அவருக்குக் கீழ்ப்படிந்தால், ஆன்மீக விஷயங்களுக்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்போம்.

“அந்தப் பகுதியின் நடுவில் நகரம் இருக்கும்”

5, 6. (அ) நகரம் யாருக்குச் சொந்தமாக இருந்தது? (ஆ) நகரம் எதைக் குறிக்கவில்லை, ஏன்?

5 எசேக்கியேல் 48:15-ஐ வாசியுங்கள். “நகரம்” மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் முக்கியத்துவம் என்ன? (எசே. 48:16-18) “[அந்த நகரம்] இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் சொந்தமாக இருக்கும்” என்று தரிசனத்தில் எசேக்கியேலிடம் யெகோவா சொல்லியிருந்தார். (எசே. 45:6, 7) அப்படியானால், நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும், ‘யெகோவாவுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்க’ வேண்டிய “பரிசுத்த காணிக்கையின்” பாகமாக இருக்கவில்லை. (எசே. 48:9) இதை மனதில் வைத்து, நகரத்தைப் பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்களிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

6 அதற்கு முன், அந்த நகரம் எதைக் குறிக்கவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலாவதாக, இது திரும்பவும் கட்டப்பட்ட எருசலேம் நகரத்தைக் குறிக்கவில்லை. ஏனென்றால், அதில் ஆலயம் இருந்தது. ஆனால், தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த நகரத்தில் எந்த ஆலயமும் இருக்கவில்லை. இரண்டாவதாக, இஸ்ரவேல் தேசத்தில் இருந்த வேறு எந்த நகரத்தையும் இது குறிக்கவில்லை. ஏனென்றால், சிறையிருப்பிலிருந்து தாய்நாட்டுக்குத் திரும்பியவர்களும் சரி, அவர்களுடைய வம்சத்தில் வந்தவர்களும் சரி, தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்தது போன்ற நகரத்தைக் கட்டவே இல்லை. மூன்றாவதாக, இது ஒரு பரலோக நகரத்தையும் குறிக்கவில்லை. ஏனென்றால், இது தூய வணக்கத்துக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்படாமல், “பொது உபயோகத்துக்காக” ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது.—எசே. 42:20.

7. எசேக்கியேல் பார்த்த நகரம் எது? அந்த நகரம் எதைக் குறிப்பதாகத் தெரிகிறது? (ஆரம்பப் படம்.)

7 அப்படியானால், எசேக்கியேல் பார்த்த நகரம் எது? எந்தத் தரிசனத்தில் அவர் ஒரு தேசத்தைப் பார்த்தாரோ அதே தரிசனத்தில்தான் அந்த நகரத்தையும் அவர் பார்த்தார் என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். (எசே. 40:2; 45:1, 6) அந்தத் தேசம் ஒரு ஆன்மீகத் தேசத்தைக் குறிப்பதாக நாம் பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். அப்படியானால், அந்த நகரமும் ஒரு ஆன்மீக நகரத்தைத்தான் குறிக்க வேண்டும். பொதுவாக, “நகரம்” என்று எதைச் சொல்கிறோம்? மக்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழும், ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இடத்தை நகரம் என்று சொல்கிறோம். அதனால், எசேக்கியேல் பார்த்த, சதுர வடிவில் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட அந்த நகரம், ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது.

8. இந்த நிர்வாகம் எங்கு செயல்படுகிறது? ஏன் அப்படிச் சொல்கிறோம்?

8 இந்த நிர்வாகம் எங்கு செயல்படுகிறது? இது ஆன்மீகத் தேசத்தில் செயல்படுவதாக எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து நாம் தெரிந்துக்கொள்கிறோம். அப்படியானால், இந்த நிர்வாகம் இன்று கடவுளுடைய மக்கள் வாழ்கிற ஆன்மீகப் பூஞ்சோலையில் செயல்படுகிறது. இந்த நகரம், பொது உபயோகத்துக்கான நிலத்தில் இருப்பதிலிருந்து நாம் எதைத் தெரிந்துகொள்கிறோம்? இது, பரலோகத்தில் செயல்படுகிற நிர்வாகத்தை அல்ல, பூமியில் செயல்படுகிற நிர்வாகத்தைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறோம். ஆன்மீகப் பூஞ்சோலையில் வாழ்கிற எல்லாருடைய நன்மைக்காகவும் இது செயல்பட்டுவருகிறது.

9. (அ) இன்று பூமியில் நிர்வாகம் செய்யும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? (ஆ) ஆயிர வருஷ ஆட்சியின்போது இயேசு என்ன செய்வார்?

9 பூமியில் நிர்வாகம் செய்யும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? எசேக்கியேலின் தரிசனத்தில், அந்த நகரத்தை நிர்வாகம் செய்தவர் ‘தலைவர்’ என்று அழைக்கப்பட்டார். (எசே. 45:7) மக்களுக்கு அவர் ஒரு கண்காணியாக இருந்தார். ஆனால், அவர் ஒரு குருவாகவோ லேவியராகவோ இருக்கவில்லை. இந்தத் தலைவரைப் பற்றி யோசிக்கும்போது, கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படாத மூப்பர்கள்தான் நம் ஞாபகத்துக்கு வருகிறார்கள். அக்கறையுள்ள இந்த ஆன்மீக மேய்ப்பர்கள், ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்கள். (யோவா. 10:16) கிறிஸ்துவின் பரலோக அரசாங்கத்தின் கீழ் பூமியில் தாழ்மையுள்ள ஊழியர்களாக இவர்கள் சேவை செய்கிறார்கள். ஆயிர வருஷ ஆட்சியின்போது, தகுதியுள்ள மூப்பர்களை, அதாவது ‘அதிபதிகளை’ இயேசு தேர்ந்தெடுத்து அவர்களை “பூமியெங்கும்” நியமிப்பார். (சங். 45:16) பரலோக அரசாங்கத்தின் வழிநடத்துதலின்படி, ஆயிர வருஷ ஆட்சியின்போது கடவுளுடைய மக்களின் தேவைகளை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.

“யெகோவா அங்கே இருக்கிறார்”

10. அந்த நகரத்தின் பெயர் என்ன? அது என்ன உறுதியை அளிக்கிறது?

10 எசேக்கியேல் 48:35-ஐ வாசியுங்கள். “யெகோவா அங்கே இருக்கிறார்” என்பதுதான் அந்த நகரத்தின் பெயர். யெகோவாவின் பிரசன்னத்தை அங்கே உணர முடியும் என்று இந்தப் பெயர் உறுதியளிக்கிறது. ‘மீந்திருக்கும் பகுதியின்’ நடுவிலுள்ள இந்த நகரத்தை எசேக்கியேலுக்கு யெகோவா காட்டியது, ‘நான் திரும்பவும் உங்களோடு இருப்பேன்’ என்று சிறைபிடிக்கப்பட்ட மக்களிடம் அவர் சொல்வதுபோல் இருந்தது. இந்த வாக்குறுதி தெம்பூட்டுகிறது, இல்லையா?

11. நகரத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்திலிருந்தும் அதற்குக் கொடுக்கப்பட்ட அர்த்தமுள்ள பெயரிலிருந்தும் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

11 எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள இந்த விஷயங்களிலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? இந்த நகரத்தின் பெயர், தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களோடு யெகோவா இன்றும், என்றென்றும் இருப்பார் என்ற உறுதியை அளிக்கிறது. அர்த்தமுள்ள இந்தப் பெயர், ஒரு முக்கியமான உண்மையையும் வலியுறுத்துகிறது. இந்த நகரம், அதாவது நிர்வாகம், எந்தவொரு மனிதனுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்படவில்லை. யெகோவாவின் அன்பான, நியாயமான வழிகளைச் செயல்படுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, தங்கள் இஷ்டப்படி தேசத்தைப் பிரிப்பதற்கான அதிகாரத்தை நிர்வாகிகளுக்கு யெகோவா கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, தான் சொல்கிறபடி அவர்கள் பிரித்துக்கொடுக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். தன்னுடைய ஊழியர்கள் சாதாரண மக்களாக இருந்தாலும், அவர்களுக்குத் தான் கொடுத்திருக்கும் பங்குகளை, அதாவது நியமிப்புகளை, நிர்வாகிகள் மதிக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்.—எசே. 46:18; 48:29.

12. (அ) இந்த நகரத்தின் விசேஷ அம்சம் என்ன? இது எதைக் காட்டுகிறது? (ஆ) இந்தத் தரிசனம், கிறிஸ்தவக் கண்காணிகளுக்கு எந்த முக்கியமான விஷயத்தை ஞாபகப்படுத்துகிறது?

12 “யெகோவா அங்கே இருக்கிறார்” என்ற பெயருடைய நகரத்தின் மற்றொரு விசேஷ அம்சம் என்ன? பூர்வ காலங்களில், நகரங்களைப் பாதுகாப்பதற்காக சுற்றிலும் மதில்கள் இருந்தன. அவற்றில் சில நுழைவாசல்களே இருந்தன. ஆனால், இந்த நகரத்துக்கு 12 நுழைவாசல்கள் இருக்கின்றன! (எசே. 48:30-34) அதாவது, சதுர வடிவத்தில் இருக்கிற இந்த நகரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று மூன்று நுழைவாசல்கள் இருக்கின்றன. இத்தனை நுழைவாசல்கள் இருப்பது எதைக் காட்டுகிறது? இந்த நகரத்தின் நிர்வாகிகள் அன்பானவர்களாகவும் கடவுளுடைய ஊழியர்கள் எல்லாராலும் அணுக முடிந்தவர்களாகவும் இருப்பதைக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, இந்த நகரத்துக்கு 12 நுழைவாசல்கள் இருப்பது, “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும்” அங்கே போக அனுமதி இருப்பதைக் காட்டுகிறது. (எசே. 45:6) இத்தனை நுழைவாசல்கள் இருப்பது, கிறிஸ்தவக் கண்காணிகளுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை ஞாபகப்படுத்துகிறது. அவர்கள் நட்புடன் பழகுகிறவர்களாகவும், ஆன்மீகப் பூஞ்சோலையில் வாழ்கிற எல்லாராலும் அணுக முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார்.

கிறிஸ்தவக் கண்காணிகள் நட்புடன் பழகுகிறவர்களாகவும், அணுக முடிந்தவர்களாகவும் இருக்கிறார்கள் (பாரா 12)

கடவுளுடைய மக்கள் அவரை ‘வணங்குவதற்காகவும்’ ‘நகரத்துக்காகச் சேவை செய்வதற்காகவும்’ வருகிறார்கள்

13. பலவிதமான என்னென்ன வேலைகளை மக்கள் செய்வார்கள் என்று யெகோவா சொல்கிறார்?

13 தேசம் பங்கிடப்படுவதைப் பற்றிய இந்தத் தரிசனத்திலுள்ள இன்னும் சில விஷயங்களை எசேக்கியேல் பதிவு செய்கிறார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம். மக்கள் செய்ய வேண்டிய பலவிதமான வேலைகளைப் பற்றி யெகோவா குறிப்பிடுகிறார். ‘யெகோவாவின் சன்னிதியில் சேவை செய்கிற குருமார்கள்,’ பலிகளைச் செலுத்தி, அவருக்குச் சேவை செய்ய வேண்டும். ‘ஆலயத்தில் சேவை செய்கிற லேவியர்கள்,’ ‘ஆலய வேலைகளை மேற்பார்வை செய்து, . . . அங்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும்’ கவனித்துக்கொள்ள வேண்டும். (எசே. 44:14-16; 45:4, 5) வேலையாட்கள், நகரத்துக்குப் பக்கத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். இந்த வேலையாட்கள் யார்?

14. நகரத்துக்குப் பக்கத்தில் வேலை செய்கிற வேலையாட்கள் நமக்கு எதை ஞாபகப்படுத்துகிறார்கள்?

14 இந்த வேலையாட்கள், ‘இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களையும் சேர்ந்தவர்கள்.’ ‘நகரத்துக்காகச் சேவை செய்கிறவர்கள் சாப்பிடுவதற்காக’ இவர்கள் பயிர்களை விளைவிக்கிறார்கள். (எசே. 48:18, 19) இப்படி, நகரத்துக்காகச் சேவை செய்கிறவர்களை ஆதரிக்கிறார்கள். இதேபோன்ற வாய்ப்பு இன்று நமக்கும் இருக்கிறதா? ஆன்மீகப் பூஞ்சோலையில் வாழ்கிற எல்லாருக்குமே ஒரு விசேஷ வாய்ப்பு இருக்கிறது. கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அதோடு, முன்நின்று வழிநடத்துவதற்காக யெகோவா நியமித்த ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்த சகோதரர்களுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். (வெளி. 7:9, 10) உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின் வழிநடத்துதலுக்கு மனப்பூர்வமாக ஒத்துழைப்பதுதான், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கான முக்கிய வழி.

15, 16. (அ) எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இன்னொரு விஷயம் என்ன? (ஆ) என்னென்ன வேலைகளைச் செய்வதற்கான வாய்ப்பு நமக்கு இருக்கிறது?

15 நம்முடைய ஊழியத்துக்கு உதவும் இன்னொரு விஷயத்தை எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அது என்ன? லேவி கோத்திரத்தைத் தவிர மற்ற 12 கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு இடங்களில் சுறுசுறுப்பாக வேலை செய்வதாக யெகோவா குறிப்பிடுகிறார். அதாவது, ஆலயத்தின் பிரகாரத்திலும் நகரத்தின் மேய்ச்சல் நிலங்களிலும் அவர்கள் வேலை செய்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆலயத்தின் பிரகாரத்தில், எல்லா கோத்திரத்தாரும் யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தி, அவரை ‘வணங்குகிறார்கள்.’ (எசே. 46:9, 24) நகரத்தைச் சுற்றியிருக்கிற நிலத்தில், அவர்கள் பயிர்செய்து, நகரத்துக்காகச் சேவை செய்கிறவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இந்த வேலையாட்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 இதேபோன்ற வேலைகளைச் செய்கிற வாய்ப்பு, இன்று திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கிறது. அவர்கள், “புகழ்ச்சிப் பலியை” செலுத்துவதன் மூலம் யெகோவாவை “அவருடைய ஆலயத்தில்” வணங்குகிறார்கள். (எபி. 13:15; வெளி. 7:9-15) பிரசங்க வேலையின் மூலமும், கிறிஸ்தவக் கூட்டங்களில் பதில்கள் சொல்லி, பாட்டுப் பாடி தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டுவதன் மூலமும் புகழ்ச்சி பலியைச் செலுத்துகிறார்கள். இந்த விதத்தில் யெகோவாவை வணங்குவதை தங்களுடைய மிக முக்கியமான கடமையாக அவர்கள் நினைக்கிறார்கள். (1 நா. 16:29) இதைத் தவிர, இன்னும் பல வழிகளிலும் கடவுளுடைய மக்கள் அவருடைய அமைப்புக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றங்களையும் கிளை அலுவலகங்களையும் கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது போன்ற வேலைகளுக்கும் யெகோவாவுடைய அமைப்பில் நடக்கிற மற்ற பல வேலைகளுக்கும் நிறைய பேர் உதவுகிறார்கள். மற்றவர்கள், நன்கொடை கொடுப்பதன் மூலம் இந்த வேலைகளை ஆதரிக்கிறார்கள். நிலத்தை பயிர்செய்த வேலையாட்களைப் போல இவர்களும் “கடவுளுடைய மகிமைக்காகவே” எல்லாவற்றையும் செய்கிறார்கள். (1 கொ. 10:31) அவர்கள் தங்களுடைய வேலைகளை ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் செய்கிறார்கள். ஏனென்றால், “இப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் மிகவும் விரும்புகிறார்” என்று அவர்களுக்குத் தெரியும். (எபி. 13:16) இந்த வாய்ப்புகளை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?

நகரத்தின் நுழைவாசல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கிற பலவிதமான வேலைகளைப் பற்றிய எசேக்கியேலின் பதிவிலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (பாராக்கள் 14-16)

“புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்”

17. (அ) எசேக்கியேலின் தரிசனம் எப்படிப் பெரியளவில் நிறைவேறும்? (ஆ) ஆயிர வருஷ ஆட்சியில், பூமியில் செயல்படும் நிர்வாகத்தால் யார் பயன் அடைவார்கள்?

17 காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிலத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனம் பெரியளவில் நிறைவேறுமா? நிச்சயமாக! இதைக் கொஞ்சம் கவனியுங்கள்: “பரிசுத்த காணிக்கை” என்று அழைக்கப்பட்ட பகுதியில்தான் “யெகோவாவின் ஆலயம்” இருந்தது. இந்தப் பகுதி, தேசத்தின் நடுவில் இருந்ததை எசேக்கியேல் பார்த்தார். (எசே. 48:10) அப்படியென்றால், அர்மகெதோனுக்குப் பிறகு நாம் பூமியில் எங்கு வாழ்ந்தாலும் சரி, யெகோவா நம்மோடு தங்கியிருப்பார் என்ற வாக்குறுதியை இது அளிக்கிறது. (வெளி. 21:3) தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த நகரத்தை, அதாவது நிர்வாகத்தைப் போலவே ஆயிர வருஷ ஆட்சியிலும் ஒரு நிர்வாகம் செயல்படும். அதாவது, கடவுளுடைய மக்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக பூமியில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். ‘புதிய பூமியில்,’ அதாவது புதிய மனித சமுதாயத்தில் வாழ்கிற எல்லாருக்கும் அவர்கள் அன்பான ஆலோசனையையும் வழிநடத்துதலையும் கொடுப்பார்கள்.—2 பே. 3:13.

18. (அ) அந்த நிர்வாகம், கடவுளுடைய ஆட்சியோடு ஒன்றிணைந்து செயல்படும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? (ஆ) அந்த நகரத்தின் பெயர் நமக்கு என்ன நம்பிக்கையைத் தருகிறது?

18 அந்த நகரம், அதாவது அந்த நிர்வாகம், கடவுளுடைய ஆட்சியோடு ஒன்றிணைந்து செயல்படும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேரைக் கொண்ட புதிய எருசலேமில் 12 நுழைவாசல்கள் இருப்பதாக பைபிள் சொல்கிறது. (வெளி. 21:2, 12, 21-27) இந்தப் பரலோக நகரத்தைப் போலவே, 12 நுழைவாசல்களைக் கொண்ட பூமிக்குரிய நகரமும் இருப்பதை பைபிளிலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். பரலோகத்தில் கடவுளுடைய அரசாங்கம் எடுக்கிற எல்லா தீர்மானங்களுக்கும் ஏற்றபடி பூமிக்குரிய நிர்வாகம் செயல்படும் என்பதையும், அவற்றைக் கவனமாக நிறைவேற்றும் என்பதையும் இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஆம், “யெகோவா அங்கே இருக்கிறார்” என்ற பெயரால் அழைக்கப்படுகிற நகரம் நம் எல்லாருக்கும் ஒரு அருமையான நம்பிக்கையை அளிக்கிறது. பூஞ்சோலையில் தூய வணக்கம் நிலைத்திருக்கும், அது என்றென்றைக்கும் தழைக்கும் என்ற நம்பிக்கையை அது நமக்குத் தருகிறது. எவ்வளவு அருமையான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது!