Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 10இ

திரும்பவும் எழுந்து நிற்க உதவி

திரும்பவும் எழுந்து நிற்க உதவி

எசேக்கியேல் 37:1-14-லுள்ள மனதைத் தொடும் தரிசனத்தில், நம்முடைய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான ஒரு பாடம் இருக்கிறது. அதை ஆழமாக யோசித்துப் பார்த்தால் நம்மால் பலம் பெற முடியும். அந்தப் பாடம் என்ன?

சில சமயங்களில், பிரச்சினைகளும் கஷ்டங்களும் மாறி மாறி தாக்கும்போது, என்ன செய்வதென்றே தெரியாமல் நாம் திணறுகிறோம். அதனால், தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வதே நமக்குக் கஷ்டமாகிவிடுகிறது. அப்படிப்பட்ட சமயங்களில், திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமான எசேக்கியேலின் தரிசனத்திலுள்ள தத்ரூபமான காட்சிகளை மனக்கண்ணால் பார்ப்பது நம்மைப் பலப்படுத்தும். எப்படி? காய்ந்துபோன எலும்புகளுக்கு உயிர் கொடுக்குமளவுக்குச் சக்தி படைத்த கடவுளால் நம்மையும் பலப்படுத்த முடியும்; ஆம், நமக்கு எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தை அவரால் தர முடியும் என்ற பாடத்தை இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம்.சங்கீதம் 18:29-ஐ வாசியுங்கள்; பிலி. 4:13.

யெகோவாவுக்குச் சக்தி இருப்பதோடு தன்னுடைய மக்களின் சார்பாக தன்னுடைய பலத்தைப் பயன்படுத்த விருப்பமும் இருக்கிறது. இதை, எசேக்கியேலின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசியான மோசே சொன்னார். “பழங்காலத்திலிருந்தே கடவுள் உன் கோட்டை. அவருடைய கைகள் என்றென்றும் உன்னைத் தாங்குகின்றன” என்று மோசே எழுதினார். (உபா. 33:27) ஆம், கஷ்ட காலத்தில், நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்தால், அவர் தன்னுடைய அரவணைக்கும் கைகளால் மென்மையாகத் தூக்கி, திரும்பவும் எழுந்து நிற்க நமக்கு உதவுவார்.—எசே. 37:10.