Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 19அ

யெகோவாவிடமிருந்து வருகிற ஆசீர்வாதங்களைத் தரும் ஆறுகள்

யெகோவாவிடமிருந்து வருகிற ஆசீர்வாதங்களைத் தரும் ஆறுகள்

யெகோவாவிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களைக் குறிப்பதற்கு “ஆறு,” “தண்ணீர்” ஆகிய வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது. சில பைபிள் பதிவுகளை இப்போது பார்க்கலாம். அவற்றை வாசிக்கும்போது, யெகோவா நம்மை எப்படி ஆசீர்வதிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வோம். அது நமக்கு ரொம்பவே உற்சாகமாக இருக்கும். எப்படி என்று பார்க்கலாம்.

யோவேல் 3:18 யெகோவாவின் ஆலயத்திலிருந்து ஒரு நீரூற்று புறப்படுவதாக இந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. வறண்ட ‘சித்தீம் பள்ளத்தாக்குக்கு’ அது பாய்ந்தோடுகிறது. யோவேலும் எசேக்கியேலும் பார்த்த ஆறு, பலன் தராத ஒரு இடத்தை வளமான இடமாக மாற்றுகிறது. இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களிலும், அந்த ஆறு யெகோவாவின் வீட்டிலிருந்து, அதாவது ஆலயத்திலிருந்து, புறப்படுகிறது.

சகரியா 14:8 “வாழ்வு தரும் தண்ணீர்” எருசலேம் நகரத்திலிருந்து புறப்பட்டு வருவதை சகரியா தீர்க்கதரிசி பார்க்கிறார். அதில் ஒருபாதி கிழக்குக் கடலில், அதாவது சவக் கடலில், கலக்கிறது. மறுபாதி மேற்குக் கடலில், அதாவது மத்தியதரைக் கடலில், கலக்கிறது. எருசலேம், ‘மகா ராஜாவின் நகரமாக,’ அதாவது யெகோவா தேவனின் நகரமாக, இருந்தது. (மத். 5:35) அந்த நகரத்தைப் பற்றி சகரியா குறிப்பிட்டது, எதிர்காலத்தில் முழு பூமியையும் யெகோவா ஆட்சி செய்வார் என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள தண்ணீர், பூஞ்சோலை பூமியில் வாழப்போகிற உண்மையுள்ள மக்கள் அடங்கிய இரண்டு தொகுதிகளை யெகோவா ஆசீர்வதிப்பதைக் குறிக்கிறது. மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கிற மக்களையும், உயிர்த்தெழுந்து வருகிற மக்களையும் யெகோவா ஆசீர்வதிப்பதைக் குறிக்கிறது.

வெளிப்படுத்துதல் 22:1, 2 எசேக்கியேல் பார்த்ததைப் போன்ற ஒரு ஆற்றை அப்போஸ்தலன் யோவானும் ஒரு தரிசனத்தில் பார்க்கிறார். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால், இந்த ஆறு யெகோவாவின் ஆலயத்திலிருந்து புறப்படாமல் அவருடைய சிம்மாசனத்திலிருந்து புறப்படுகிறது. சகரியாவின் தரிசனத்தைப் போல இந்தத் தரிசனமும் ஆயிர வருஷ ஆட்சியால் வரும் ஆசீர்வாதங்களை வலியுறுத்துவதாகத் தெரிகிறது.

இந்தச் சிறிய வித்தியாசத்தைத் தவிர யெகோவாவின் ஆட்சியால் கிடைக்கும் ஆசீர்வாதங்களுக்கும், தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆறு அடையாளப்படுத்திய ஆசீர்வாதங்களுக்கும் வேறெந்த வித்தியாசமும் இல்லை. இந்த ஆசீர்வாதங்கள் எல்லாமே யெகோவாவிடமிருந்து வருகின்றன; அவை உண்மையுள்ள மக்கள் எல்லாருக்கும் கிடைக்கின்றன.

சங்கீதம் 46:4 இந்த ஒரே வசனத்தில் வணக்கத்தையும் ஆட்சியையும் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். ஒரு ஆறு “கடவுளுடைய நகரத்துக்கு” சந்தோஷம் தருகிறது. இந்த நகரம், அரசாங்கத்தையும் ஆட்சியையும் குறிக்கிறது. ‘உன்னதமான கடவுளுடைய மகத்தான பரிசுத்த கூடாரத்துக்கும்’ இது மகிழ்ச்சி தருகிறது. இந்தக் கூடாரம் தூய வணக்கத்தைக் குறிக்கிறது.

இந்த எல்லா பதிவுகளையும் வாசிக்கும்போது, உண்மையுள்ள மக்களை யெகோவா இரண்டு வழிகளில் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கை கிடைக்கிறது. (1) கடவுளுடைய ஆட்சியிலிருந்தும் (2) தூய வணக்கத்துக்காக அவர் செய்திருக்கும் ஏற்பாட்டிலிருந்தும் நாம் என்றென்றைக்கும் நன்மை அடைவோம். அதனால், யெகோவா தேவனிடமிருந்தும் அவருடைய மகனிடமிருந்தும் “வாழ்வு தரும் தண்ணீரை” பெற்றுக்கொள்ள, அதாவது முடிவில்லாத வாழ்வை பெறுவதற்கு அவர்கள் செய்திருக்கும் அன்பான ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ள, நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.—யோவா. 4:10; எரே. 2:13.