Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 18

உண்மைக் கிறிஸ்தவர்கள் யார்?

உண்மைக் கிறிஸ்தவர்கள் யார்?

இன்று கோடிக்கணக்கான ஆட்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரேவிதமான நம்பிக்கைகள் கிடையாது. பைபிள் சொல்லும் தராதரங்களின்படி அவர்கள் வாழ்வதும் கிடையாது. அப்படியென்றால், உண்மையான கிறிஸ்தவர்களை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது?

1. கிறிஸ்தவர்கள் யார்?

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்தான், அதாவது அவரைப் பின்பற்றி நடக்கிறவர்கள்தான், கிறிஸ்தவர்கள். (அப்போஸ்தலர் 11:26-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் நிஜமான சீஷர்கள் யார்? “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:31) அப்படியென்றால், உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்போதுமே இயேசு சொன்னபடிதான் செய்வார்கள். அதோடு, பைபிளில் இருப்பதைத்தான் சொல்லித்தருவார்கள். ஏனென்றால், இயேசுவும் எப்போதுமே கடவுளுடைய வார்த்தையில் இருப்பதைத்தான் சொல்லித்தந்தார்.—லூக்கா 24:27-ஐ வாசியுங்கள்.

2. உண்மையான கிறிஸ்தவர்கள் எப்படி அன்பு காட்டுவார்கள்?

“நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 15:12) சீஷர்கள்மேல் அன்பு வைத்திருப்பதை இயேசு எப்படிக் காட்டினார்? அவர்களோடு நேரம் செலவழித்தார், அவர்களை உற்சாகப்படுத்தினார், அவர்களுக்கு உதவிகள் செய்தார், அவர்களுக்காகத் தன் உயிரையேகூடக் கொடுத்தார்! (1 யோவான் 3:16) அதேபோல், உண்மைக் கிறிஸ்தவர்கள் அன்பைப் பற்றி வெறுமனே பேசிக்கொண்டு இல்லாமல், அதைச் சொல்லிலும் செயலிலும் காட்டுவார்கள்.

3. உண்மையான கிறிஸ்தவர்கள் என்ன முக்கியமான வேலை செய்வார்கள்?

‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கும்’ வேலையை இயேசு தன் சீஷர்களுக்குக் கொடுத்தார். (லூக்கா 9:2) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தாங்கள் ஒன்றுகூடிவந்த இடங்களில் மட்டுமல்லாமல், பொது இடங்களிலும் கடவுளைப் பற்றி மக்களிடம் பேசினார்கள். வீடு வீடாகப் போயும் பேசினார்கள். (அப்போஸ்தலர் 5:42-ஐயும் 17:17-ஐயும் வாசியுங்கள்.) இன்றும் உண்மைக் கிறிஸ்தவர்கள், எங்கெல்லாம் மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய்க் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள். மற்றவர்கள்மேல் அன்பு வைத்திருப்பதால், பைபிளில் இருக்கும் செய்தியைச் சொல்லி நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுக்கிறார்கள். அதற்காகத் தங்கள் நேரத்தையும் சக்தியையும் சந்தோஷமாக செலவழிக்கிறார்கள்.—மாற்கு 12:31.

ஆராய்ந்து பார்க்கலாம்!

இயேசு சொல்வதுபோல் நடக்கிற உண்மையான கிறிஸ்தவர்களுக்கும் அப்படி நடக்காத மற்ற கிறிஸ்தவர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

4. பைபிளைத்தான் நம்புவார்கள்

முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் பைபிளை மதித்தார்கள்

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற எல்லாருமே பைபிளில் இருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில்லை. வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • இயேசு கற்றுக்கொடுத்த உண்மைகளை சர்ச்சுகள் எப்படிச் சொல்லிக்கொடுக்காமல் போய்விட்டன?

பைபிளில் இருக்கும் உண்மைகளை இயேசு கற்றுக்கொடுத்தார். யோவான் 18:37-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசு சொன்னதை வைத்து, “சத்தியத்தின் பக்கம் இருக்கிற” கிறிஸ்தவர்களை நாம் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

5. பைபிள் சொல்வதை எல்லாருக்கும் சொல்வார்கள்

முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் எல்லாரிடமும் பிரசங்கித்தார்கள்

இயேசு பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு தன் சீஷர்களுக்குக் கொடுத்த வேலை இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. மத்தேயு 28:19, 20-ஐயும் அப்போஸ்தலர் 1:8-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசு கொடுத்த வேலை எந்தளவுக்கு நடக்கும்?

6. சொல்லிக்கொடுப்பதுபோல் நடந்துகொள்வார்கள்

டாம் என்பவர் உண்மையான கிறிஸ்தவர்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நம்பினார். ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வீடியோவில் நாம் பார்த்த டாமுக்கு ஏன் மதங்கள்மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது?

  • அவர் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாக ஏன் நம்புகிறார்?

இயேசுவைப் பின்பற்றுவதாகச் சொல்கிறவர்கள் அதைச் செயலிலும் காட்ட வேண்டும். மத்தேயு 7:21-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசுவைப் பொறுத்தவரை, நாம் என்ன சொல்கிறோம் என்பது முக்கியமா, என்ன செய்கிறோம் என்பது முக்கியமா?

7. ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவார்கள்

முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினார்கள்

கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிரை உண்மையிலேயே பணயம் வைக்கிறார்களா? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • யோஹான்சனுக்காகத் தன்னுடைய உயிரையே கொடுக்க லாயிட் ஏன் தயாராக இருந்தார்?

  • அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவராக நடந்துகொண்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

யோவான் 13:34, 35-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • வேறொரு இனத்தையோ நாட்டையோ சேர்ந்த மக்களை இயேசுவின் சீஷர்கள் (அதாவது, உண்மையான கிறிஸ்தவர்கள்) எப்படி நடத்துவார்கள்?

  • போர் நடக்கும் சமயத்திலும் அவர்கள் எப்படி ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவார்கள்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கிறிஸ்தவங்களுக்குள்ள எத்தனையோ பிரிவு இருக்கு, இதுல யாரு உண்மையானவங்கனு எப்படி கண்டுபிடிக்கிறது?”

  • உண்மையான கிறிஸ்தவர்கள் யார் என்று காட்டுவதற்கு நீங்கள் எந்த வசனத்தைப் பயன்படுத்துவீர்கள்?

சுருக்கம்

உண்மையான கிறிஸ்தவர்கள் பைபிள் சொல்வதுபோல் நடந்துகொள்வார்கள், உயிரையே கொடுக்கும் அளவுக்கு மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவார்கள், பைபிளில் இருக்கும் உண்மைகளை எல்லாரிடமும் சொல்வார்கள்.

ஞாபகம் வருகிறதா?

  • எதில் இருக்கும் விஷயங்களை மட்டும்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் நம்புவார்கள்?

  • எந்தக் குணத்தை வைத்து அவர்களைக் கண்டுபிடிக்க முடியும்?

  • அவர்கள் என்ன வேலை செய்வார்கள்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

இயேசு கிறிஸ்துவையும் அவருடைய போதனைகளையும் பின்பற்றி நடக்கிற ஒரு தொகுதியைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள்—நாங்கள் யார்? (1:24)

ஒரு கன்னியாஸ்திரீ எப்படி உண்மையான கிறிஸ்தவர்களைக் கண்டுபிடித்தார்?

“ஒவ்வொரு கேள்விக்கும் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள்!” (காவற்கோபுரம், ஜூலை 1, 2014)

பேரழிவு சமயத்தில் உண்மையான கிறிஸ்தவர்கள் எப்படி ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுகிறார்கள் என்று பாருங்கள்.

பேரழிவினால் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு உதவி—சில காட்சிகள் (3:57)

இயேசு தன் சீஷர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று சொன்னார். அன்றும் இன்றும் உண்மையான கிறிஸ்தவர்கள் அதேபோல் நடந்துகொள்கிறார்கள். எப்படி?

“உண்மைக் கிறிஸ்தவர்களுடைய அடையாளங்கள் என்ன?” (ஆன்லைன் கட்டுரை)