Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 21

நல்ல செய்தி சொல்லப்படுகிறது

நல்ல செய்தி சொல்லப்படுகிறது

நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் யெகோவாவின் ஆட்சி சீக்கிரத்தில் தீர்த்துவைக்கும். இந்த சந்தோஷமான செய்தியை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும், இல்லையா? அதைத்தான் இயேசுவும் விரும்பினார். அதனால்தான், அதை எல்லாருக்கும் சொல்லும்படி தன் சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 28:19, 20) யெகோவாவின் சாட்சிகள் எப்படி அவர் சொன்னபடி செய்கிறார்கள்?

1. மத்தேயு 24:14-ல் சொல்லப்பட்டது இன்று எப்படி நடக்கிறது?

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) இந்த முக்கியமான வேலையை யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாகச் செய்கிறார்கள். உலகம் முழுவதும் 1000-க்கும் அதிகமான மொழிகளில் நல்ல செய்தியைச் சொல்கிறார்கள்! இந்தப் பிரமாண்டமான வேலையைச் செய்ய எந்தளவு முயற்சியும் ஒழுங்கமைப்பும் தேவைப்படும்! யெகோவாவின் உதவி இல்லாமல் இதைச் செய்யவே முடியாது!

2. நல்ல செய்தியைச் சொல்ல நாங்கள் என்னென்ன முயற்சி எடுக்கிறோம்?

ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போலவே நாங்களும் ‘வீடு வீடாக’ போய் மக்களிடம் நல்ல செய்தியைச் சொல்கிறோம். (அப்போஸ்தலர் 5:42) இப்படி ஒழுங்கான முறையில் ஊழியம் செய்வதால் ஒவ்வொரு வருஷமும் கோடிக்கணக்கான மக்களிடம் பிரசங்கிக்க முடிகிறது. சிலசமயம் மக்களை வீடுகளில் பார்க்க முடியாது என்பதால், பொது இடங்களிலும் ஊழியம் செய்கிறோம். யெகோவாவைப் பற்றியும் அவர் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதைப் பற்றியும் சொல்வதற்கு எப்போதுமே வாய்ப்புகளைத் தேடுகிறோம், மக்கள் எங்கிருந்தாலும் சரி!

3. நல்ல செய்தியைச் சொல்ல வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே இந்தப் பொறுப்பு இருக்கிறது. இந்தப் பொறுப்பை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. இது மக்களுடைய உயிரைக் காப்பாற்றும் வேலை என்பதால், அதைச் செய்ய எங்களால் முடிந்த எல்லா முயற்சியும் எடுக்கிறோம். (1 தீமோத்தேயு 4:16-ஐ வாசியுங்கள்.) இதற்கு நாங்கள் சம்பளம் வாங்குவதில்லை. “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 10:7, 8) நாங்கள் சொல்லும் செய்தியைச் சிலர் கேட்காவிட்டாலும், இந்த வேலையைத் தொடர்ந்து செய்கிறோம். ஏனென்றால், இது எங்கள் வழிபாட்டின் ஒரு பாகம். அதோடு, யெகோவாவின் மனதையும் இது சந்தோஷப்படுத்துகிறது.

ஆராய்ந்து பார்க்கலாம்!

உலகம் முழுவதும் பிரசங்கிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் என்ன முயற்சிகள் எடுக்கிறார்கள்? அவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்கிறார்? பார்க்கலாம்.

4. உலகெங்கும் சொல்ல உழைக்கிறோம்

பூமியின் மூலைமுடுக்கெல்லாம் பிரசங்கிப்பதற்கு நாங்கள் விசேஷ முயற்சி எடுக்கிறோம். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • ஊழியம் செய்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் எடுக்கிற எந்த முயற்சி உங்கள் மனதைத் தொடுகிறது?

மத்தேயு 22:39-ஐயும் ரோமர் 10:13-15-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஊழியம் செய்யும்போது மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறோம் என்று எப்படிச் சொல்லலாம்?

  • நல்ல செய்தியைச் சொல்கிறவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?—வசனம் 15-ஐப் பாருங்கள்.

5. கடவுளோடு வேலை செய்கிறோம்

ஊழிய வேலையை யெகோவாதான் வழிநடத்துகிறார் என்பதை நிறைய அனுபவங்கள் காட்டுகின்றன. உதாரணத்துக்கு, நியுசிலாந்தில் பவுல் என்ற யெகோவாவின் சாட்சி, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தார். அன்று காலையில்தான், யாராவது தன்னை சந்தித்து உண்மைகளைச் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று அந்தப் பெண் கடவுளிடம் வேண்டியிருந்தார், அதுவும் யெகோவா என்ற பெயரைச் சொல்லி வேண்டியிருந்தார். “மூணே மணிநேரத்துல நான் அவங்க வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்தேன்” என்று பவுல் சொல்கிறார்.

1 கொரிந்தியர் 3:9-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவாதான் ஊழிய வேலையை வழிநடத்துகிறார் என்பதை நியுசிலாந்தில் நடந்ததைப் போன்ற அனுபவங்கள் எப்படிக் காட்டுகின்றன?

அப்போஸ்தலர் 1:8-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஊழியம் செய்ய நமக்கு ஏன் யெகோவாவின் உதவி தேவை?

உங்களுக்குத் தெரியுமா?

எங்களுடைய வாரநாள் கூட்டத்தில், ஊழியம் செய்ய பயிற்சி கொடுக்கப்படுகிறது. அந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், அந்தப் பயிற்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

6. கடவுளுக்குக் கீழ்ப்படிந்து ஊழியம் செய்கிறோம்

இயேசுவின் சீஷர்கள் செய்த பிரசங்க வேலையை எதிரிகள் தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள். ஆனால், சீஷர்கள் சட்டப்பூர்வமாக வழக்காடி, பிரசங்கிக்க தங்களுக்கு உரிமை இருப்பதை நிரூபித்தார்கள். (பிலிப்பியர் 1:7) யெகோவாவின் சாட்சிகளும் அதைத்தான் செய்கிறார்கள். a

அப்போஸ்தலர் 5:27-42-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பிரசங்கிப்பதை நாங்கள் ஏன் நிறுத்த மாட்டோம்?—வசனங்கள் 29, 38, 39-ஐப் பாருங்கள்.

யாராவது இப்படிக் கேட்கலாம்: “யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடு வீடா போறாங்க?”

  • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

எல்லா தேசத்து மக்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்ல வேண்டுமென்று இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். இந்த வேலையைச் செய்ய யெகோவா தன்னுடைய மக்களுக்கு உதவி செய்கிறார்.

ஞாபகம் வருகிறதா?

  • நல்ல செய்தி எப்படி உலகம் முழுவதும் சொல்லப்படுகிறது?

  • நாம் ஊழியம் செய்யும்போது மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறோம் என்று எப்படிச் சொல்லலாம்?

  • பிரசங்க வேலை செய்வது சந்தோஷம் தரும் என்று நினைக்கிறீர்களா? ஏன்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படிப் பிரசங்கிக்கிறார்கள் என்று பாருங்கள்.

பாரிஸ் பெருநகரில் விசேஷ பொது ஊழியம் (5:11)

அகதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி உதவி செய்திருக்கிறார்கள்?

அடைக்கலம் தேடி வந்தவர்களின் ஆன்மீக தாகம் தணிக்கப்பட்டது (5:59)

முழுநேர ஊழியம் எவ்வளவு சந்தோஷம் தரும் என்று ஒரு பெண் சொல்வதை நீங்களே கேட்டுப் பாருங்கள்.

இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததில் ரொம்ப சந்தோஷம் (6:29)

சுதந்தரமாக ஊழியம் செய்ய உதவியிருக்கும் சில முக்கியமான வழக்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

“நல்ல செய்தியை அறிவிப்பவர்கள் வழக்குத் தொடுக்கிறார்கள்” (கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, அதிகாரம் 13)

a பிரசங்க வேலையைக் கடவுள்தான் செய்யச் சொல்லியிருக்கிறார். அதனால், எந்தவொரு மனித அதிகாரியிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் யெகோவாவின் சாட்சிகளுக்கு இல்லை.