Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 24

தேவதூதர்கள் யார்?

தேவதூதர்கள் யார்?

பரலோகத்தில் யெகோவாவின் குடும்பத்தில் இருப்பவர்கள்தான் தேவதூதர்கள். அவர்களை “கடவுளுடைய மகன்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 38:7, அடிக்குறிப்பு) அவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். பைபிள் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது? அவர்கள் நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியுமா? எல்லா தேவதூதர்களுமே கடவுளுடைய குடும்பத்தில் இருக்கிறார்களா?

1. தேவதூதர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

பூமியைப் படைப்பதற்கு முன்பே யெகோவா தேவதூதர்களைப் பரலோகத்தில் படைத்தார். யெகோவாவைப் போலவே அவர்களையும் நம்மால் பார்க்க முடியாது. (எபிரெயர் 1:14) அவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தனித்தனி சுபாவமும் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 5:11) அவர்கள் ‘[யெகோவா] சொல்வதைக் கேட்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார்கள்.’ (சங்கீதம் 103:20) பழங்காலத்தில் யெகோவா தன் மக்களுக்குச் செய்திகளைச் சொல்லவும், உதவிகள் செய்யவும், அவர்களைக் காப்பாற்றவும் சிலசமயம் தேவதூதர்களை அனுப்பினார். இன்று, கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களைக் கண்டுபிடிக்க தேவதூதர்கள் நமக்கு உதவுகிறார்கள்.

2. சாத்தானும் அவனுடைய தூதர்களும் யார்?

யெகோவாவை எதிர்த்த முதல் தேவதூதன்தான் “சாத்தான்.” அவன் ‘உலகம் முழுவதையும் ஏமாற்றிவருகிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9) அவன் எல்லாரையும் ஆள நினைத்ததால் ஆதாம் ஏவாளையும், பிறகு மற்ற தேவதூதர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போன கெட்ட தூதர்கள்தான் பேய்கள். அவர்கள் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டார்கள், சீக்கிரத்தில் அழிக்கப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 12:9, 12-ஐ வாசியுங்கள்.

3. சாத்தானும் பேய்களும் மக்களை எப்படி ஏமாற்றுகின்றன?

கடவுளுடைய எதிரிகளான சாத்தானும் பேய்களும், ஆவியுலகத் தொடர்பு மூலமாக மக்களை ஏமாற்றுகின்றன. நேரடியாகவோ மறைமுகமாகவோ பேய்களோடு தொடர்புகொள்ளும் பழக்கம்தான் ஆவியுலகத் தொடர்பு. ஜோசியம், ஜாதகம், குறி கேட்பது, மந்திரவாதம், பில்லிசூனியம் எல்லாமே இதில் அடங்கும். சில மருத்துவ சிகிச்சைகளும் இதில் அடங்கும். பேய்கள் இறந்தவர்களைப் போலப் பேசியும் மக்களை ஏமாற்றுகின்றன. அவை நமக்குத் தீமை செய்வதிலேயே குறியாக இருப்பதால்தான், ‘ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் நீங்கள் போகக் கூடாது. குறிசொல்கிறவர்களிடம் குறி கேட்கக் கூடாது’ என்று யெகோவா எச்சரிக்கிறார்.—லேவியராகமம் 19:31.

ஆராய்ந்து பார்க்கலாம்!

தேவதூதர்கள் என்ன நன்மைகள் செய்கிறார்கள்? ஆவியுலகத் தொடர்பில் இருக்கும் ஆபத்துகள் என்ன? சாத்தானிடமும் பேய்களிடமும் நாம் எப்படி சிக்காமல் இருக்கலாம்? பார்க்கலாம்.

4. மக்கள் யெகோவாவைத் தெரிந்துகொள்ள தேவதூதர்கள் உதவுகிறார்கள்

கடவுளுடைய தூதர்கள் நேரடியாக மக்களிடம் பிரசங்கிப்பதில்லை. ஆனால், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களைக் கண்டுபிடிக்கக் கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவி செய்கிறார்கள். வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பிரசங்கிப்பதற்குத் தேவதூதர்களின் உதவி நமக்கு ஏன் தேவை?

  • கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்களிடம் தேவதூதர்கள் உங்களை வழிநடத்துவார்கள் என்பதைப் படிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? ஏன்?

5. ஆவியுலகத் தொடர்பை விட்டொழியுங்கள்

சாத்தானும் பேய்களும் யெகோவாவின் எதிரிகள், நமக்கும் எதிரிகள்தான். லூக்கா 9:38-42-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பேய்கள் மக்களை என்ன செய்கின்றன?

நாம் பேய்களுக்கு இடம் கொடுத்து வீண் வம்பை விலைக்கு வாங்கக் கூடாது. உபாகமம் 18:10-12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பேய்கள் என்னென்ன விதங்களில் நம்மை சிக்கவைக்க முயற்சி செய்கின்றன? பேய்களோடு தொடர்புகொள்ளும் என்னென்ன பழக்கங்கள் உங்கள் பகுதியில் இருக்கின்றன?

  • ஆவியுலகத் தொடர்பை நாம் விட்டொழிக்க வேண்டுமென்று யெகோவா சொல்வது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? ஏன்?

வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • பலேசாவுடைய குழந்தையின் கையில் கட்டப்பட்ட தாயத்து ஆபத்தானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன்?

  • பேய்களுடைய பிடியிலிருந்து தப்பிப்பதற்கு பலேசா என்ன செய்ய வேண்டியிருந்தது?

உண்மையான கிறிஸ்தவர்கள் எப்போதுமே பேய்களுக்கு இடம் கொடுத்ததில்லை. அப்போஸ்தலர் 19:19-ஐயும் 1 கொரிந்தியர் 10:21-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் அதை ஏன் உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும்?

6. சாத்தானையும் பேய்களையும் நீங்கள் ஜெயிக்க முடியும்

பேய்களுடைய தலைவன் சாத்தான். ஆனால், நல்ல தூதர்களுடைய தலைவர் மிகாவேல், அதாவது இயேசு. மிகாவேலுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது? வெளிப்படுத்துதல் 12:7-9-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யாருக்கு அதிக சக்தி இருக்கிறது? மிகாவேலுக்கும் அவருடைய தூதர்களுக்குமா, சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்குமா?

  • இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் சாத்தானையும் பேய்களையும் நினைத்துப் பயப்பட வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சாத்தானையும் பேய்களையும் நீங்கள் ஜெயிக்க முடியும். யாக்கோபு 4:7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • சாத்தானும் பேய்களும் விரிக்கிற வலையில் நீங்கள் எப்படி விழாமல் இருக்கலாம்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “சும்மா ஒரு த்ரில்லுக்காகத்தான் பேய்ப் படம் பார்க்குறோம், ஒரு ஜாலிக்குத்தான் பேய் விளையாட்டு விளையாடுறோம்.”

  • இப்படி நினைப்பது ஏன் ஆபத்தானது?

சுருக்கம்

நல்ல தூதர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். சாத்தானும் அவனுடைய பேய்களும் யெகோவாவின் எதிரிகள். அவை ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றன.

ஞாபகம் வருகிறதா?

  • யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள தேவதூதர்கள் எப்படி மக்களுக்கு உதவுகிறார்கள்?

  • சாத்தானும் பேய்களும் யார்?

  • நீங்கள் ஏன் ஆவியுலகத் தொடர்பை அடியோடு தவிர்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

இயேசுதான் தேவதூதர்களின் தலைவரான மிகாவேல். இதற்கு என்ன அத்தாட்சிகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“தலைமைத் தூதராகிய மிகாவேல் யார்?” (ஆன்லைன் கட்டுரை)

பிசாசு வெறுமனே நமக்குள் இருக்கும் ஒரு கெட்ட குணம் கிடையாது. ஏன் அப்படிச் சொல்லலாம் என்று படித்துப் பாருங்கள்.

“பிசாசு இருப்பது நிஜமா?” (ஆன்லைன் கட்டுரை)

ஒரு பெண் எப்படிப் பேய்களுடைய பிடியிலிருந்து விடுபட்டார் என்று பாருங்கள்.

“அவள் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டடைந்தாள்” (காவற்கோபுரம், ஜூலை 1, 1993)

மக்களை ஏமாற்ற சாத்தான் எப்படி ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்துகிறான் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“மாயமந்திரமும் பில்லிசூனியமும்—உண்மை என்ன?” (ஆன்லைன் கட்டுரை)