Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 37

வேலையும் பணமும்

வேலையும் பணமும்

நீங்கள் என்றைக்காவது வேலையையோ பணத்தையோ நினைத்து ரொம்பக் கவலைப்பட்டிருக்கிறீர்களா? வருமானத்தையும் பார்த்துக்கொண்டு ஆன்மீக விஷயங்களையும் செய்வது ஒருவேளை நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நமக்குத் தேவையான நல்ல ஆலோசனைகளை பைபிள் தருகிறது.

1. வேலையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

நாம் சந்தோஷமாக வேலை செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். “கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 2:24) யெகோவா ஓயாமல் வேலை செய்கிறவர். அவரைப் போலவே நாமும் கடினமாக உழைக்கும்போது அவருடைய மனதை சந்தோஷப்படுத்த முடியும், நமக்கும் திருப்தியாக இருக்கும்.

வேலை முக்கியம்தான். ஆனால், யெகோவாவைவிட அது முக்கியம் என்று நாம் நினைக்கவே கூடாது. (யோவான் 6:27) நம் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கும்போது, நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் கொடுப்பார்.

2. பணம் எந்தளவு முக்கியம்?

‘பணம் பாதுகாப்பு தரும்’ என்று பைபிள் சொன்னாலும், பணம் மட்டுமே நமக்கு சந்தோஷத்தைத் தந்துவிடாது என்றும் எச்சரிக்கிறது. (பிரசங்கி 7:12) அதனால், நாம் பண ஆசையைத் தவிர்க்க வேண்டும், ‘உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருக்க’ வேண்டும். (எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.) அப்போது, ஆசைப்படுவதெல்லாம் கிடைக்கவில்லையே என்று நினைத்து விரக்தியடைய மாட்டோம். தேவையில்லாத கடனிலும் சிக்க மாட்டோம். (நீதிமொழிகள் 22:7) அதுமட்டுமல்ல, சூதாட்டத்திலும் திடீர் பணக்காரராகும் திட்டங்களிலும் மாட்டிக்கொள்ள மாட்டோம்.

3. பணத்தை எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தலாம்?

யெகோவா தாராள குணமுள்ளவர். நாமும் அவரைப் போலவே ‘தாராளமாகக் கொடுக்க’ வேண்டும், ‘நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள’ வேண்டும். (1 தீமோத்தேயு 6:18) உதாரணத்துக்கு, சபையின் செலவுகளுக்காக நம்மால் முடிந்த நன்கொடையைக் கொடுக்கலாம். அதோடு, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு, முக்கியமாக நம் சபையில் இருப்பவர்களுக்கு, பண உதவி செய்யலாம். அப்போது, பணத்தை நல்ல விதத்தில் பயன்படுத்த முடியும். நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை அல்ல, எப்படிப்பட்ட மனதோடு கொடுக்கிறோம் என்பதைத்தான் யெகோவா பார்க்கிறார். நாம் மனதார கொடுக்கும்போது நாமும் சந்தோஷப்படுவோம், யெகோவாவும் சந்தோஷப்படுவார்.—அப்போஸ்தலர் 20:35-ஐ வாசியுங்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

வேலையையும் பணத்தையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்து திருப்தியோடு இருந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்க்கலாம்.

4. யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் வேலை செய்யுங்கள்

யெகோவாவிடம் நமக்கு நல்ல நட்பு இருந்தால் அவர் எதிர்பார்ப்பது போல் வேலை செய்வோம். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • ஜேசனுடைய அனுபவத்தில் உங்கள் மனதைத் தொட்ட விஷயம் எது?

  • அவர் எப்படித் தன் வேலையை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார்?

கொலோசெயர் 3:23, 24-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • சரியான மனநிலையோடு நாம் வேலை செய்வது ஏன் முக்கியம்?

வேலை முக்கியம்தான். ஆனால், யெகோவாவைவிட அது முக்கியம் என்று நாம் நினைக்கவே கூடாது

5. போதும் என்ற மனமே பலன் தரும்

நிறைய பேர் பணத்தைக் குவிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். ஆனால், பைபிள் என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். 1 தீமோத்தேயு 6:6-8-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பைபிள் என்ன ஆலோசனை தருகிறது?

நம்மிடம் பணம் ரொம்பக் குறைவாக இருந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வசதி இல்லையென்றாலும் இந்தக் குடும்பங்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது?

ஒருவேளை வசதி இருந்தும் இன்னும் பணம் சேர்க்க ஆசைப்படுகிறோமா? அது ரொம்ப ஆபத்தானது! இதைப் புரிந்துகொள்ள இயேசு ஒரு கதையைச் சொன்னார். லூக்கா 12:15-21-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசு சொன்ன கதையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?—வசனம் 15-ஐப் பாருங்கள்.

நீதிமொழிகள் 10:22-ஐயும் 1 தீமோத்தேயு 6:10-ஐயும் படித்துவிட்டு ஒப்பிட்டுப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • எது ரொம்ப முக்கியம்—யெகோவாவோடு நட்பு வைத்திருப்பதா, நிறைய பணம் வைத்திருப்பதா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

  • பணத்தைத் தேடியே ஓடிக்கொண்டிருந்தால் என்ன பிரச்சினைகள் வரும்?

6. யெகோவா நமக்குத் தேவையானதைக் கொடுப்பார்

வேலை அல்லது பணம் சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போது, யெகோவாமேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சோதனை வரலாம். அதை எப்படி சமாளிக்கலாம் என்று தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள். பிறகு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வீடியோவில் நாம் பார்த்த சகோதரருக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தன?

  • அந்தப் பிரச்சினைகளை சமாளிக்க அவர் என்ன செய்தார்?

மத்தேயு 6:25-34-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • தனக்கு முதலிடம் தருபவர்களுக்கு என்ன செய்வதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “என் குடும்பத்த காப்பாத்தறதுக்கே படாத பாடுபட வேண்டியிருக்கு. அதனால வாராவாரம் கூட்டத்துல கலந்துக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு.”

  • யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுப்பதுதான் முக்கியம் என்பதை எந்த வசனத்திலிருந்து நீங்கள் புரிந்துகொண்டீர்கள்?

சுருக்கம்

வேலையும் பணமும் தேவைதான், ஆனால் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கு அவை ஒருநாளும் தடையாக இருக்கக் கூடாது.

ஞாபகம் வருகிறதா?

  • வேலையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க எது உங்களுக்கு உதவும்?

  • போதும் என்ற மனம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

  • யெகோவா தன் மக்களைக் கவனித்துக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அந்த நம்பிக்கையை எப்படிக் காட்டுவீர்கள்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

பணம் வைத்திருப்பதே தவறு என்று பைபிள் சொல்கிறதா?

“பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?” (ஆன்லைன் கட்டுரை)

கடவுள் சந்தோஷப்படும் விதத்தில் நாம் எப்படி மற்றவர்களுக்குக் கொடுத்து உதவலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)

சூதாடுவதையும் திருடுவதையும் நிறுத்த ஒருவருக்கு எது உதவி செய்தது என்று பாருங்கள்.

“குதிரைப்பந்தயம் என்றால் எனக்கு அப்படியொரு வெறி” (காவற்கோபுரம், ஏப்ரல் 1, 2012)