Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 42

கல்யாணம் செய்வதும் செய்யாமல் இருப்பதும்—பைபிளின் கருத்து

கல்யாணம் செய்வதும் செய்யாமல் இருப்பதும்—பைபிளின் கருத்து

சில கலாச்சாரங்களில், கல்யாணம் செய்தால்தான் சந்தோஷம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். உண்மையில், கல்யாணமான எல்லாருமே சந்தோஷமாக இருப்பதும் இல்லை, கல்யாணமாகாத எல்லாருமே சோகத்தில் இருப்பதும் இல்லை. கல்யாணம் செய்வதும் சரி, செய்யாமல் இருப்பதும் சரி, பைபிளின்படி இரண்டுமே ஒரு வரம்!

1. கல்யாணம் செய்யாமல் இருப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன?

‘திருமணம் செய்வது நல்லதுதான், ஆனால் திருமணம் செய்யாமல் இருப்பது அதைவிட நல்லது.’ (1 கொரிந்தியர் 7:32, 33, 38-ஐ வாசியுங்கள்.) அது எப்படி? கல்யாணமாகாத நபர்களுக்குத் துணையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இருக்காது. அதனால், அதிக சுதந்திரம் இருக்கும். உதாரணத்துக்கு, சிலரால் புதுப் புது வழிகளில் சேவை செய்ய முடிகிறது. ஒருவேளை, வேறொரு இடத்துக்குப் போய் ஊழியம் செய்ய முடிகிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, யெகோவாவிடம் நெருங்கிப்போக அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது.

2. சட்டப்படி கல்யாணம் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன?

கல்யாணம் செய்வதாலும் நன்மைகள் கிடைக்கின்றன. “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது. (பிரசங்கி 4:9) குறிப்பாக, பைபிள் அறிவுரைகள்படி நடக்கிறவர்களின் விஷயத்தில் இது ரொம்பவே உண்மை. சட்டப்படி கல்யாணம் செய்கிறவர்கள் தங்கள் பந்தத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் அன்பும் பாசமும் மரியாதையும் காட்டுகிறார்கள். அதனால், கல்யாணமாகாமல் சேர்ந்து வாழ்கிறவர்களைவிட ரொம்பப் பாதுகாப்பாக உணருகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் அப்படி உணருகிறார்கள்.

3. கல்யாணத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?

ஆதாமுக்கு யெகோவா மனைவியைக் கொடுத்தபோது, ‘மனிதன் தன் அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்’ என்று சொன்னார். (ஆதியாகமம் 2:24) தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும், காலமெல்லாம் சேர்ந்து வாழவும் வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மணத்துணை துரோகம் செய்தால் மட்டும்தான் விவாகரத்தை அவர் அனுமதிக்கிறார். அதேசமயத்தில், விவாகரத்து செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமையைத் தவறு செய்யாத துணைக்கு அவர் தந்திருக்கிறார். a (மத்தேயு 19:9) ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் கிறிஸ்தவர்களுக்கு அவர் தந்திருக்கும் சட்டம்.—1 தீமோத்தேயு 3:2.

ஆராய்ந்து பார்க்கலாம்!

நீங்கள் கல்யாணமானவரோ இல்லையோ, எப்படி சந்தோஷமாக வாழலாம்? யெகோவாவின் மனதை எப்படி சந்தோஷப்படுத்தலாம்? பார்க்கலாம்.

4. கல்யாணமாகாமல் இருக்கும் வரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

கல்யாணமாகாமல் இருப்பது ஒரு வரம் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:11, 12) மத்தேயு 4:23-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கல்யாணமாகாமல் இருக்கும் வரத்தை யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்ய இயேசு எப்படிப் பயன்படுத்தினார்?

இயேசுவைப் போலவே கிறிஸ்தவர்களும், கல்யாணமாகாமல் இருக்கும் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு சந்தோஷமாக இருக்க முடியும். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • கல்யாணமாகாமல் இருக்கும் சூழ்நிலையை என்னென்ன விதங்களில் கிறிஸ்தவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?

உங்களுக்குத் தெரியுமா?

கல்யாண வயதைப் பற்றி பைபிள் சொல்வதில்லை. ஆனால், “இளமை மலரும் பருவத்தை” கடக்கும்வரை காத்திருப்பது நல்லது என்று சொல்கிறது; அந்தப் பருவத்தில் பாலியல் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும் என்பதால் சரியாக யோசித்து முடிவெடுப்பது கஷ்டம்.—1 கொரிந்தியர் 7:36.

5. மணத்துணையைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்

துணையைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியமான ஒரு முடிவு. மத்தேயு 19:4-6, 9-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கிறிஸ்தவர் தன் துணையை ஏன் அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கக் கூடாது?

துணையாக வரப்போகிறவரிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள பைபிள் உங்களுக்கு உதவும். முக்கியமாக யெகோவாவை நேசிப்பவரையே துணையாகத் தேர்ந்தெடுங்கள். b 1 கொரிந்தியர் 7:39-ஐயும் 2 கொரிந்தியர் 6:14-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நாம் ஏன் யெகோவாவை வணங்கும் ஒருவரை மட்டுமே கல்யாணம் செய்ய வேண்டும்?

  • யெகோவாவை நேசிக்காதவரைக் கல்யாணம் செய்தால் யெகோவா என்ன நினைப்பார்?

பொருத்தமில்லாத இரண்டு விலங்குகளை ஒரே நுகத்தில் பூட்டினால் இரண்டுமே கஷ்டப்படும். அதேபோல், ஒரு கிறிஸ்தவர் யெகோவாவை வணங்காதவரைக் கல்யாணம் செய்தால் நிறைய பிரச்சினைகள் வரும்

6. யெகோவாவைப் போல் நீங்களும் திருமணத்துக்கு மதிப்புக் கொடுங்கள்

இஸ்ரவேலில் இருந்த சில ஆண்கள் சுயநலத்துக்காகத் தங்கள் மனைவியை விவாகரத்து செய்தார்கள். மல்கியா 2:13, 14, 16-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • அநியாயமாக விவாகரத்து செய்வதை யெகோவா ஏன் வெறுக்கிறார்?

மணத்துணைக்குத் துரோகம் செய்வதும் விவாகரத்து செய்வதும், தவறு செய்யாத துணையையும் பிள்ளைகளையும் பாதிக்கும்

வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • உங்கள் துணை யெகோவாவை வணங்காதவராக இருந்தாலும், அவரோடு சந்தோஷமாக வாழ்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

7. யெகோவாவின் சட்டங்களைக் கடைப்பிடியுங்கள்

கல்யாண விஷயத்தில் யெகோவா தந்திருக்கும் சட்டங்களைக் கடைப்பிடிக்க ஒருவர் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கலாம். c ஆனால், அப்படி முயற்சி செய்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். வீடியோவைப் பாருங்கள்.

எபிரெயர் 13:4-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கல்யாண விஷயத்தில் யெகோவா தந்த சட்டங்கள் உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? ஏன்?

கிறிஸ்தவர்களின் திருமணம் அல்லது விவாகரத்து சட்டப்படி செல்லுபடியாக வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். தீத்து 3:1-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகுமா? அது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?

யாராவது இப்படிக் கேட்கலாம்: “கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழ்றதுல என்ன தப்பு?”

  • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

கல்யாணம் செய்வதும் சரி, செய்யாமல் இருப்பதும் சரி, இரண்டுமே யெகோவா தந்திருக்கும் வரம்தான். யெகோவா சொல்கிறபடி நடந்தால் இரண்டுமே சந்தோஷத்தையும் மனநிறைவையும் தரும்.

ஞாபகம் வருகிறதா?

  • கல்யாணமாகாத ஒருவர் தன்னுடைய சூழ்நிலையை எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?

  • யெகோவாவை வணங்கும் ஒருவரைத்தான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று பைபிள் ஏன் சொல்கிறது?

  • என்ன காரணத்துக்காக மட்டும்தான் விவாகரத்து செய்ய முடியும் என்று பைபிள் சொல்கிறது?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

“நம் எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன?

“வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” (காவற்கோபுரம், ஜூலை 1, 2004)

டேட்டிங் சம்பந்தமாகவும் திருமணம் சம்பந்தமாகவும் சரியான முடிவெடுக்க உங்களுக்கு உதவும் இரண்டு சின்னச் சின்ன வீடியோக்களைப் பாருங்கள்.

கல்யாணத்திற்கு தயாராகுதல் (11:53)

யெகோவா கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களை நினைத்துப் பார்க்கும்போது தான் விட்டுக்கொடுத்த விஷயங்கள் ஒன்றுமே இல்லை என்று ஒரு சகோதரர் நினைக்கிறார். ஏன் என்று பாருங்கள்.

அவளும் சத்தியத்தை ஏத்துக்குவானு நினைச்சேன் (1:56)

விவாகரத்தைப் பற்றியோ பிரிந்துபோவதைப் பற்றியோ முடிவு செய்வதற்குமுன் ஒருவர் என்னென்ன விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்?

“கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்தை மதியுங்கள்” (காவற்கோபுரம், டிசம்பர் 2018)

a துரோகம் நடக்காத சூழ்நிலையில் பிரிந்து வாழலாமா என்பதைப் பற்றி பின்குறிப்பு 4-ல் பாருங்கள்.

b சில கலாச்சாரங்களில், பெற்றோர்தான் பிள்ளைகளுக்காகத் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிள்ளைகள்மேல் உண்மையிலேயே அன்பு வைத்திருக்கும் பெற்றோர், யெகோவாவை நேசிப்பவரைத்தான் முக்கியமாகத் தேர்ந்தெடுப்பார்கள். பணத்தையோ அந்தஸ்தையோ பெரிதாக நினைக்க மாட்டார்கள்.

c நீங்கள் கல்யாணம் செய்யாமல் ஒருவரோடு சேர்ந்து வாழ்ந்துவந்தால், அவரைக் கல்யாணம் செய்வதா அல்லது பிரிந்துபோவதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.