Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 50

சந்தோஷமான குடும்பம்​—⁠பகுதி 2

சந்தோஷமான குடும்பம்​—⁠பகுதி 2

பிள்ளைகள் யெகோவா தரும் சொத்து. பெற்றோர் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அதற்காக நல்ல அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறார். பிள்ளைகளுக்கும் அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறார். அவர்கள் அதன்படி நடக்கும்போது குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.

1. பெற்றோருக்கு யெகோவா என்ன அறிவுரை கொடுக்கிறார்?

பெற்றோர் பிள்ளைகளை நேசிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், அவர்களோடு முடிந்தளவுக்கு நிறைய நேரம் செலவிட வேண்டும், பைபிள் நியமங்களைக் கொண்டு பயிற்சி தர வேண்டும் என்றெல்லாம் யெகோவா விரும்புகிறார். (நீதிமொழிகள் 1:8) ‘அவர் தருகிற புத்திமதியின்படி [பிள்ளைகளை] வளர்த்துவர வேண்டும்’ என்று அப்பாக்களிடம் சொல்கிறார். (எபேசியர் 6:4-ஐ வாசியுங்கள்.) பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைக்காமல் யெகோவா சொல்கிறபடி அவர்களை வளர்க்கும்போது அவர் சந்தோஷப்படுவார்.

2. பிள்ளைகளுக்கு யெகோவா என்ன அறிவுரை கொடுக்கிறார்?

‘அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்’ என்று யெகோவா சொல்கிறார். (கொலோசெயர் 3:20-ஐ வாசியுங்கள்.) பிள்ளைகள் பெற்றோருக்கு மதிப்புக் கொடுத்து கீழ்ப்படியும்போது பெற்றோர் மட்டுமல்ல, யெகோவாவும் சந்தோஷப்படுவார். (நீதிமொழிகள் 23:22-25) இயேசு பரிபூரணமாக இருந்தாலும் தன் பெற்றோரின் குறைகளைப் பார்க்காமல் அவர்களுக்கு மதிப்புக் கொடுத்தார், கீழ்ப்படிந்து நடந்தார். பிள்ளைகளுக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.—லூக்கா 2:51, 52.

3. நீங்கள் எப்படிக் குடும்பமாக யெகோவாவிடம் நெருங்கிவரலாம்?

உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால், நீங்கள் யெகோவாவை நேசிக்கும் அளவுக்கு அவர்களும் அவரை நேசிக்க வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ‘[யெகோவாவின் வார்த்தைகளை] உங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும் . . . அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.’ (உபாகமம் 6:7) ‘மனதில் பதிய வைப்பது’ என்றால் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பது. பொதுவாக, பிள்ளைகள் ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதற்கு அதை நாம் திரும்பத் திரும்பச் சொல்வோம். இந்த வசனம், பிள்ளைகளிடம் யெகோவாவைப் பற்றிப் பேச நீங்கள் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டுமென்று சொல்கிறது. ஒவ்வொரு வாரமும் குடும்பமாகச் சேர்ந்து யெகோவாவை வழிபடுவதற்கு நேரம் ஒதுக்குவது நல்லது. உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையென்றாலும், பைபிளைப் படிக்க அப்படி நேரம் ஒதுக்குவது ரொம்ப நல்லது.

ஆராய்ந்து பார்க்கலாம்!

குடும்பம் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க என்னென்ன செய்யலாம்? பார்க்கலாம்.

4. அன்பாகச் சொல்லிக்கொடுங்கள்

நல்ல வழியில் நடக்க பிள்ளைகளைப் பழக்குவது அவ்வளவு சுலபம் கிடையாது. இதற்கு பைபிள் எப்படி உதவி செய்யும்? யாக்கோபு 1:19, 20-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பெற்றோர் பிள்ளைகளிடம் பேசும்போது எப்படி அன்பைக் காட்டலாம்?

  • நீங்கள் கோபமாக இருக்கும்போது உங்கள் பிள்ளைகளை ஏன் கண்டிக்கவே கூடாது? a

5. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்

பிள்ளைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பதற்கு, அவர்கள் ஒவ்வொருவரிடமும் செக்ஸ் பற்றிப் பேசுவது ரொம்ப முக்கியம். இது உங்களுக்குக் கூச்சமாக இருக்கலாம். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • செக்ஸ் பற்றிப் பிள்ளைகளிடம் பேசுவது ஏன் சில பெற்றோருக்குக் கஷ்டமாக இருக்கிறது?

  • சில பெற்றோர் செக்ஸ் பற்றிப் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லித்தந்திருக்கிறார்கள்?

பைபிளில் சொல்லியிருக்கிறபடியே, சாத்தானின் உலகம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. 2 தீமோத்தேயு 3:1, 13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • 13-வது வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற பொல்லாதவர்கள் சிலர் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். அதனால், உங்கள் பிள்ளைகளுக்கு செக்ஸ் பற்றிச் சொல்லித்தருவதும், மோசமான ஆட்கள் கையில் சிக்காமல் இருக்க சொல்லித்தருவதும் ஏன் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

உங்களுக்குத் தெரியுமா?

பிள்ளைகளுக்கு செக்ஸ் பற்றிச் சொல்லித்தரவும் அவர்களைப் பாதுகாக்கவும் உதவி செய்கிற நிறைய பிரசுரங்களைப் பெற்றோருக்காக யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். இதோ, சில:

6. பெற்றோருக்கு மரியாதை கொடுங்கள்

சின்னப் பிள்ளைகளும் டீனேஜ் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரிடம் பேசும் விதத்திலேயே அவர்களுக்கு மரியாதை காட்டலாம். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • அப்பா அம்மாவிடம் பிள்ளைகள் மரியாதையோடு பேசுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

  • அப்பா அம்மாவிடம் பேசும்போது பிள்ளைகள் எப்படி மரியாதை காட்டலாம்?

நீதிமொழிகள் 1:8-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பெற்றோர் ஏதாவது அறிவுரை கொடுக்கும்போது பிள்ளைகள் என்ன செய்யக் கூடாது?

7. குடும்பமாக யெகோவாவை வணங்குங்கள்

யெகோவாவின் சாட்சிகள் குடும்பமாகச் சேர்ந்து யெகோவாவை வழிபடுவதற்கு ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்குகிறார்கள். இந்தக் குடும்ப வழிபாட்டை எப்படியெல்லாம் நடத்துகிறார்கள்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • நாம் எப்படித் தவறாமல் குடும்ப வழிபாடு செய்யலாம்?

  • குடும்ப வழிபாடு பிரயோஜனமாக இருப்பதற்கும் சந்தோஷம் தருவதற்கும் பெற்றோர் என்ன செய்யலாம்?—இந்தப் பாடத்தின் ஆரம்பப் படத்தைப் பாருங்கள்.

  • குடும்பமாகச் சேர்ந்து படிப்பது உங்களுக்கு ஏன் சவாலாக இருக்கலாம்?

இஸ்ரவேலர்கள் யெகோவாவின் வார்த்தையைப் பற்றிக் குடும்பமாக அடிக்கடி பேச வேண்டுமென்று யெகோவா எதிர்பார்த்தார். உபாகமம் 6:6, 7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இந்த வசனங்களில் இருக்கும் நியமத்தை நீங்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?

குடும்ப வழிபாட்டுக்கு டிப்ஸ்:

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “பிள்ளைங்களால எல்லாம் பைபிள புரிஞ்சுக்கவே முடியாது.”

  • நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சுருக்கம்

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்கு மரியாதை காட்டவும் கீழ்ப்படியவும் வேண்டும். குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவை வழிபட வேண்டும். இதையெல்லாம் யெகோவா எதிர்பார்க்கிறார்.

ஞாபகம் வருகிறதா?

  • நல்ல வழியில் நடக்க பெற்றோர் எப்படிப் பிள்ளைகளைப் பழக்கலாம், அவர்களை எப்படிப் பாதுகாக்கலாம்?

  • பிள்ளைகள் எப்படிப் பெற்றோருக்கு மரியாதை கொடுக்கலாம்?

  • ஒவ்வொரு வாரமும் குடும்பமாகச் சேர்ந்து யெகோவாவை வழிபடுவதற்கு நேரம் ஒதுக்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

உங்கள் பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து ஆளாவதற்கு எதெல்லாம் உதவி செய்யும்?

“அரும்புகளுக்கு ஆறு பாடங்கள்” (விழித்தெழு! எண் 2 2019)

வயதான பெற்றோரைக் கவனிக்கிறவர்களுக்கு பைபிள் தரும் நல்ல ஆலோசனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

“வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)

பிள்ளைகளைச் சரியாக வளர்க்கத் தெரியாத ஒருவர் எப்படி ஒரு நல்ல அப்பாவாக மாறினார் என்று பாருங்கள்.

யெகோவா சொல்லிக்கொடுத்தபடி பிள்ளைகளை வளர்த்தோம் (5:58)

அப்பாக்கள் எப்படித் தங்கள் மகன்களின் பெஸ்ட் ஃபிரெண்டாக இருக்க முடியுமென்று தெரிந்துகொள்ளுங்கள்.

“அப்பாக்களே—உங்கள் மகனுடைய பெஸ்ட் ஃபிரெண்டாக முடியுமா?” (காவற்கோபுரம், ஏப்ரல் 1, 2012)

a பைபிளில் ‘கண்டிப்பது’ என்பது போதிப்பதையும் வழிகாட்டுவதையும் திருத்துவதையும் குறிக்கிறது. கண்டபடி திட்டுவதையோ அடித்துக் கொடுமைப்படுத்துவதையோ ஒருபோதும் குறிப்பதில்லை.—நீதிமொழிகள் 19:18.