Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 51

யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி பேசுவது எப்படி?

யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி பேசுவது எப்படி?

யெகோவா நமக்குக் கொடுத்த அற்புதமான பரிசுதான் பேசும் திறன். அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று அவர் கவனிக்கிறார்! (யாக்கோபு 1:26-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், அவருக்குப் பிடித்த மாதிரி எப்படிப் பேசலாம்?

1. பேசும் திறன் என்ற பரிசை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

“எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:11) யாருக்காவது உற்சாகம் தேவைப்படுகிறதா? நீங்கள் எப்படி உதவலாம்? அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். உதாரணமாக, அவர்களை உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள். உற்சாகம் தரும் ஒரு வசனத்தைக்கூட அவர்களுக்குக் காட்டலாம். அப்படிப்பட்ட நிறைய வசனங்கள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் சொல்லும் விதமும்கூட அவர்களுடைய மனதைத் தொடும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால், எப்போதுமே அன்பாகவும் சாந்தமாகவும் பேசுங்கள்.​—நீதிமொழிகள் 15:1.

2. நாம் எப்படியெல்லாம் பேசக் கூடாது?

“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:29-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், நாம் அசிங்கமான வார்த்தைகளையோ மற்றவர்களைப் புண்படுத்தும் கடுமையான வார்த்தைகளையோ பேசக் கூடாது. மற்றவர்களைப் பற்றிக் கிசுகிசுப்பதையும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதையும்கூட நாம் தவிர்க்க வேண்டும்.​—நீதிமொழிகள் 16:28-ஐ வாசியுங்கள்.

3. மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேச எது உதவும்?

பொதுவாக, நம் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை அல்லது எண்ணங்களைப் பற்றித்தான் பேசுவோம். (லூக்கா 6:45) அதனால், ‘நீதியான, சுத்தமான, விரும்பத்தக்க, பாராட்டுக்குரிய’ விஷயங்களை மட்டுமே யோசிப்பதற்கு நம் மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். (பிலிப்பியர் 4:8) அதற்கு, பொழுதுபோக்கையும் நண்பர்களையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். (நீதிமொழிகள் 13:20) அதோடு, மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென்றால், பேசுவதற்குமுன் யோசிக்க வேண்டும். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களுடைய மனதை எப்படிப் பாதிக்கும் என்று யோசியுங்கள். “யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும். ஆனால், ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்.”​—நீதிமொழிகள் 12:18.

ஆராய்ந்து பார்க்கலாம்!

யெகோவாவுக்குப் பிடித்த விதமாகவும் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் எப்படிப் பேசலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

4. நாக்கைக் கட்டுப்படுத்துங்கள்

நாம் எல்லாருமே சிலசமயம் எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை நினைத்து வருத்தப்படுகிறோம். (யாக்கோபு 3:2) கலாத்தியர் 5:22, 23-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த வசனம் சொல்கிற எந்தக் குணங்களுக்காக நீங்கள் ஜெபம் செய்யலாம்? இந்தக் குணங்கள் உங்களுக்கு எப்படி உதவும்?

1 கொரிந்தியர் 15:33-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்களும் பொழுதுபோக்கும் நீங்கள் பேசும் விதத்தை எப்படிப் பாதிக்கலாம்?

பிரசங்கி 3:1, 7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • எந்தச் சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது அல்லது சரியான நேரம் வரும்வரை காத்திருந்து பேசுவது ஞானமாக இருக்கும்?

5. மற்றவர்களைப் பற்றி நல்ல விதமாகப் பேசுங்கள்

நாம் எப்படி மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்தாத விதத்தில் பேசலாம்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வீடியோவில் வந்த சகோதரர், மற்றவர்களைப் பற்றிப் பேசும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஏன் நினைத்தார்?

  • அதை மாற்றிக்கொள்ள என்ன செய்தார்?

பிரசங்கி 7:16-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • ஒருவரைப் பற்றித் தப்பாகப் பேசத் தோணும்போது நாம் எதை நினைத்துப்பார்க்க வேண்டும்?

பிரசங்கி 7:21, 22-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யாராவது உங்களைப் பற்றித் தப்பாகப் பேசும்போது கோபப்படாமல் இருக்க இந்த வசனங்கள் உங்களுக்கு எப்படி உதவும்?

6. குடும்பத்தாரிடம் அன்பாகப் பேசுங்கள்

குடும்பத்தாரிடம் அன்பாகவும் சாந்தமாகவும் நாம் பேச வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • குடும்பத்தில் இருப்பவர்களிடம் அன்பாகப் பேச உங்களுக்கு எது உதவும்?

எபேசியர் 4:31, 32-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • எப்படிப் பேசினால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்?

யெகோவா தன் மகன் இயேசுவைப் பற்றி எப்படி உணர்ந்தார் என்பதை வெளிப்படையாகச் சொன்னார். மத்தேயு 17:5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • உங்கள் குடும்பத்தாரிடம் பேசும்போது நீங்கள் எப்படி யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

மற்றவர்களைப் பாராட்ட வாய்ப்புகளைத் தேடுங்கள்

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “என் மனசுல பட்டத நான் அப்படியே சொல்லிடுவேன். மத்தவங்க அத தப்பா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்?”

  • அவர்கள் சொல்வதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? ஏன்?

சுருக்கம்

வார்த்தைகளுக்கு வலிமை இருக்கிறது. அதனால், நாம் என்ன சொல்கிறோம், எப்போது சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம் என்றெல்லாம் நன்றாக யோசிக்க வேண்டும்.

ஞாபகம் வருகிறதா?

  • பேசும் திறனை மற்றவர்களுக்குப் பிரயோஜனமான விதத்தில் நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

  • நீங்கள் எப்படியெல்லாம் பேசக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?

  • எப்போதுமே மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற விதமாகவும் அன்பாகவும் பேச எது நமக்கு உதவி செய்யும்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேச எது நமக்கு உதவும் என்று பாருங்கள்.

ஞானமுள்ளவர்கள் காயத்துக்கு மருந்து போடுவது போல் பேசுவார்கள் (8:09)

கெட்ட வார்த்தைகளைப் பேசாமல் இருக்க உங்களுக்கு எது உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“கெட்ட வார்த்தை பேசுவது அவ்வளவு பெரிய தப்பா?” (ஆன்லைன் கட்டுரை)

மற்றவர்களைப் பற்றிக் கிசுகிசுக்கும் பழக்கத்தில் சிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம் என்று பாருங்கள்.

கிசுகிசுப்பதை நிறுத்துவது எப்படி? (2:36)

கெட்ட வார்த்தைகள் பேசும் பழக்கத்தை விடுவதற்கு யெகோவா எப்படி ஒருவருக்கு உதவி செய்தார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்” (காவற்கோபுரம், அக்டோபர் 1, 2013)