Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 53

பொழுதுபோக்கு—கடவுளுக்குப் பிரியமானதைத் தேர்ந்தெடுங்கள்

பொழுதுபோக்கு—கடவுளுக்குப் பிரியமானதைத் தேர்ந்தெடுங்கள்

யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்.” (1 தீமோத்தேயு 1:11) வாழ்க்கையை நாம் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். வேலையை முடித்துவிட்டுக் கொஞ்ச நேரம் நாம் ஓய்வெடுப்பதை அவர் விரும்புகிறார். சந்தோஷமும் மனநிறைவும் கிடைக்கிற விதத்திலும், யெகோவாவுக்குப் பிரியமான விதத்திலும் ஓய்வுநேரத்தை நாம் எப்படி செலவழிக்கலாம் என்று இந்தப் பாடத்தில் பார்ப்போம்.

1. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் எதை யோசித்துப் பார்க்க வேண்டும்?

ஓய்வுநேரத்தில் உங்களுக்கு என்ன செய்ய பிடிக்கும்? சிலர் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து புத்தகம் படிக்க, இசையைக் கேட்க, சினிமா பார்க்க, அல்லது இன்டர்நெட்டை அலச விரும்புகிறார்கள். மற்றவர்கள் நண்பர்களோடு சேர்ந்து வெளியில் போகவோ, விளையாடவோ, நீச்சல் அடிக்கவோ விரும்புகிறார்கள். நாம் என்ன பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, அது ‘நம் எஜமானுக்கு . . . பிரியமானதா’ என்று நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (எபேசியர் 5:10) இது ரொம்ப முக்கியம். ஏனென்றால், யெகோவா வெறுக்கும் வன்முறை, ஒழுக்கக்கேடு, அல்லது பேய்த்தனமான விஷயங்கள்தான் இன்று நிறைய பொழுதுபோக்குகளில் இருக்கின்றன. (சங்கீதம் 11:5-ஐ வாசியுங்கள்.) பொழுதுபோக்கை சரியாகத் தேர்ந்தெடுக்க எது நமக்கு உதவும்?

யெகோவாவை நேசிக்கிறவர்கள் நம் நண்பர்களாக இருந்தால், நம்மால் சரியாக யோசிக்க முடியும், நல்ல பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்கவும் முடியும். பாடம் 48-ல் நாம் பார்த்தபடி, “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.” ஆனால், கடவுளுடைய நீதிநெறிகளை நேசிக்காதவர்களோடு அதிகமாகப் பழகினால் நாம் ‘நாசமடைவோம்.’—நீதிமொழிகள் 13:20.

2. பொழுதுபோக்கிலேயே மூழ்கிவிடாமல் இருப்பது ஏன் முக்கியம்?

நல்ல பொழுதுபோக்காக இருந்தாலும்கூட, அதில் ரொம்ப நேரம் செலவிடாமல் இருப்பது அவசியம். இல்லையென்றால், முக்கியமான வேலைகளைச் செய்ய நேரமே இல்லாமல் போய்விடும். ‘[நம்] நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்த’ வேண்டுமென்று பைபிள் சொல்கிறது.—எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

நல்ல பொழுதுபோக்கை எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

3. கெட்ட பொழுதுபோக்கை ஒதுக்கிவிடுங்கள்

நாம் ஏன் பொழுதுபோக்கைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • இன்று இருக்கும் நிறைய பொழுதுபோக்குகள் அன்று ரோமில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சிகளைப் போல் எப்படி இருக்கின்றன?

  • வீடியோவில் வந்த டேனி பொழுதுபோக்கைப் பற்றி என்ன கற்றுக்கொண்டான்?

ரோமர் 12:9-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இந்த வசனம் எப்படி உங்களுக்கு உதவும்?

யெகோவா வெறுக்கும் சில விஷயங்கள் என்ன? நீதிமொழிகள் 6:16, 17-ஐயும் கலாத்தியர் 5:19-21-ஐயும் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தையும் படித்த பிறகு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் என்னென்ன விஷயங்களை இன்று இருக்கும் பொழுதுபோக்குகளில் பார்க்கிறோம்?

 நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க…

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

  • யெகோவா வெறுக்கும் விஷயம் ஏதாவது இதில் இருக்கிறதா?

  • முக்கியமான வேலைகளுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தை இது உறிஞ்சிவிடுமா?

  • யெகோவாவை நேசிக்காதவர்களோடு நெருக்கமாக அல்லது அடிக்கடி பழகுவதுபோல் ஆகிவிடுமா?

ஆபத்திலிருந்து தூரமாகத் தள்ளியிருப்பதுதான் நல்லது. அதேபோல், ஒரு பொழுதுபோக்கில் ஆபத்து இருப்பதுபோல் தெரிந்தால் அதைவிட்டு நாம் தூரமாகத் தள்ளியிருக்க வேண்டும்

4. நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்

வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • வீடியோவில் வந்த சகோதரர் கெட்ட விஷயங்கள் எதையும் பார்க்கவில்லைதான். ஆனாலும், அவருக்கு எது பிரச்சினையாக இருந்தது?

பிலிப்பியர் 1:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பொழுதுபோக்குக்காக எவ்வளவு நேரம் செலவிடுவது என்பதை முடிவு செய்ய இந்த வசனம் எப்படி உதவும்?

5. நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுங்கள்

சில பொழுதுபோக்குகளைத்தான் யெகோவா வெறுக்கிறார். அவர் வெறுக்காத எத்தனையோ பொழுதுபோக்குகள் இருக்கின்றன. பிரசங்கி 8:15-ஐயும் பிலிப்பியர் 4:8-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நல்ல பொழுதுபோக்குகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

நீங்கள் நல்ல பொழுதுபோக்குகளை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “வன்முறை, ஒழுக்கக்கேடு மாதிரியான விஷயங்கள நாம செஞ்சாதானே தப்பு, அத பாக்கறதுல என்ன பிரச்சினை?”

  • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

நாம் நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்து அதை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.

ஞாபகம் வருகிறதா?

  • எப்படிப்பட்ட பொழுதுபோக்குகளைக் கிறிஸ்தவர்கள் ஒதுக்கிவிட வேண்டும்?

  • பொழுதுபோக்குக்காக எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

  • யெகோவாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு யாருடையது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் பாடல்களையும் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்கிறார்களா?” (ஆன்லைன் கட்டுரை)

பொழுதுபோக்கு சம்பந்தமாக நீங்கள் எப்படி சரியான தீர்மானங்களை எடுக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“பயனுள்ள பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?” (காவற்கோபுரம், அக்டோபர் 15, 2011)

“மற்ற இனத்தவரை வெறுப்பதைக்கூட நான் விட்டுவிட்டேன்” என்ற அனுபவத்தில், ஒருவர் தன்னுடைய பொழுதுபோக்கை ஏன் மாற்றிக்கொண்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” (ஆன்லைன் கட்டுரை)

பேய்க் கதைகள் பார்க்கும் விஷயத்தில் ஒரு அம்மா எப்படி நல்ல முடிவை எடுக்கிறார் என்று பாருங்கள்.

பேய்த்தனமான பொழுதுபோக்குகள் வேண்டாம்! (2:02)