Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

அன்புள்ள சகோதர சகோதரிகளே:

கடவுள்மீதும் மக்கள்மீதும் நமக்கு அன்பு இருக்கிறது. அந்த அன்புதான், ‘புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி . . . ஞானஸ்நானம் கொடுக்க’ நம்மைத் தூண்டுகிறது. (மத். 28:19, 20; மாற். 12:28-31) சுயநலமில்லாத அன்பு சக்திவாய்ந்தது. அந்த அன்பு, “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை” இருக்கிறவர்களுடைய மனதைத் தொடும்.—அப். 13:48.

முன்பெல்லாம், மனப்பாடம் செய்து பேசுவதற்கும், பிரசுரங்களைக் கொடுப்பதற்கும்தான் முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால் இப்போது, மக்களோடு நன்றாகக் கலந்துபேச விரும்புகிறோம். அதற்கு நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் பற்றிப் பேசுவதன் மூலம் அவர்கள்மேல் அன்பு காட்ட விரும்புகிறோம். அதனால், அவர்கள் எதை நினைத்து கவலைப்படுகிறார்கள், அவர்களுக்கு எது பிடிக்கும் என்றெல்லாம் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ற மாதிரி பேச வேண்டும். அப்படிச் செய்ய இந்தப் புத்தகம் உதவும். எப்படி?

இந்த புத்தகத்தில் மனப்பாடம் செய்து பேசுவதற்கான விஷயங்கள் இருக்காது. ஏனென்றால், மக்கள்மேல் அன்பு காட்டுவதும் அவர்களை சீஷராக்குவதும்தான் நம் குறிக்கோள். அதற்கு நாம் வளர்க்க வேண்டிய 12 குணங்களைப் பற்றி இந்த புத்தகத்தில் பார்ப்போம். இதில் மொத்தம் 12 பாடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திலும் ஒரு பைபிள் பதிவு இருக்கும். அதில், இயேசுவோ முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர் ஒருவரோ ஊழியத்தில் காட்டிய குறிப்பிட்ட ஒரு குணத்தைப் பற்றி இருக்கும். 12 குணங்களுமே ஊழியத்துக்குத் தேவைதான். ஆனாலும், உரையாடலை ஆரம்பிக்கவோ, மறுசந்திப்புகள் செய்யவோ, பைபிள் படிப்புகள் நடத்தவோ குறிப்பாக எந்தெந்த குணம் உதவும் என்று பார்ப்போம்.

ஒவ்வொரு பாடத்தையும் படிக்கும்போது, அதில் இருக்கும் குணத்தை ஊழியத்தில் நீங்கள் எப்படிக் காட்டலாம் என்று கவனமாக யோசித்துப் பாருங்கள். யெகோவாமீதும் மக்கள்மீதும் உங்களுக்கு இருக்கும் அன்பை இன்னும் அதிகமாக்க முயற்சி செய்யுங்கள். எந்தவொரு குறிப்பிட்ட உத்தியையும்விட, இந்த அன்புதான் சீஷராக்க வேண்டுமென்ற குறிக்கோளை அடைய உங்களுக்கு உதவும்.

உங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்வது எங்களுக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்! (செப். 3:9) மக்கள்மேல் நீங்கள் தொடர்ந்து அன்பு காட்டுவதற்காகவும் அவர்களை சீஷராக்குவதற்காகவும் யெகோவா உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்கட்டும்!

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு