Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முழுநேர சேவையில் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்

முழுநேர சேவையில் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்

வாழ்க்கை சரிதை

முழுநேர சேவையில் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்

ஸ்டான்லி இ. ரேனால்ட்ஸ் கூறியபடி

நான் 1910-ல், லண்டனில் பிறந்தேன். முதல் உலகப் போருக்குப் பின் என் பெற்றோர், வில்ட்ஷயரில் உள்ள வெஸ்ட்பரி லே என்றழைக்கப்பட்ட சிறிய கிராமத்திற்கு இடம் மாறிச் சென்றார்கள். சின்ன வயதிலேயே நான், ‘கடவுள் யார்?’ என்று அடிக்கடி சிந்திப்பேன். என் கேள்விக்கு சரியான பதிலை ஒருவராலும் எனக்குச் சொல்ல முடியவில்லை. எங்களுடைய சிறிய ஊரில் கடவுளை வணங்குவதற்கென்று மூன்று சர்ச்சுகள் தேவையா என்பது என் மனதில் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1935-ல், என் தம்பி டிக்கும் நானும் இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையோரத்தில் இருக்கும் வேமௌத்துக்கு சைக்கிளில் சென்றோம். விடுமுறையை அனுபவித்து களிப்பதற்காக அங்கு போனோம். பெய்த பலத்த மழையின் தாளத்தைக் கேட்டுக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் எங்கள் கூடாரத்தில் உட்கார்ந்திருந்தோம். அப்போது வயதான ஒருவர் அங்கு வந்து பைபிளை படித்து புரிந்துகொள்ள உதவும் மூன்று புத்தகங்களை கொடுத்துவிட்டு போனார். அவை ஹார்ப் ஆஃப் காட், லைட் I, லைட் II ஆகியவை. பொழுதை போக்க ஏதோ கிடைத்ததே என சந்தோஷத்தோடு அவற்றை வாங்கினேன். வாசித்தபோதோ உண்மையில் மனதை கவர்ந்தன. ஆனால் அவை எங்கள் இருவரின் வாழ்க்கையையும் முற்றிலுமாக மாற்றும் என்று அப்போது நான் சிறிதும் அறியவில்லை.

நான் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, எங்கள் கிராமத்தில் வாழ்ந்த கேட் பார்சன்ஸ், அதே வகையான பைபிள் புத்தகங்களை கொடுத்து வருவதாக என் அம்மா என்னிடம் சொன்னார்கள். அவரை எல்லாருக்கும் தெரியும். ஏனெனில், அவர் வயதானவராக இருந்தபோதிலும், ஒரு சிறிய மோட்டார் சைக்கிளில் சென்று, பரவலாக குடியிருந்த ஜனங்களைச் சந்தித்தார். நான் அவரைக் காணச் சென்றேன். அப்போது கிரியேஷன், ரிச்சஸ் என்ற புத்தகங்களையும், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் மற்ற பிரசுரங்களையும் மகிழ்ச்சியுடன் எனக்குத் தந்தார். தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரெனவும் என்னிடம் சொன்னார்.

என் பைபிளையும் அந்தப் புத்தகங்களையும் நான் வாசித்த பின்பு, யெகோவாவே உண்மையான கடவுள் என்று அறிந்தேன், அவரையே வணங்கவும் விரும்பினேன். ஆகையால், நான் சர்ச்சை விட்டு விலகுவதாக எங்கள் சர்ச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு, ஜான் மற்றும் ஆலிஸ் மூடியின் வீட்டில் நடத்தப்பட்ட பைபிள் படிப்புகளுக்குச் செல்லத் தொடங்கினேன். அவர்கள் எங்களுக்கு மிக அருகிலிருந்த பட்டணமாகிய வெஸ்ட்பரியில் வாழ்ந்தார்கள். அந்தக் கூட்டங்களில் ஏழுபேர் மாத்திரமே இருந்தோம். கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் கேட் பார்ஸன்ஸ் என்ற சகோதரர் ஹார்மோனியம் வாசிப்பார், நாங்கள் உரத்தக் குரலில் பாடுவோம்.

தொடக்க நாட்கள்

முக்கியமான காலத்தில் வாழ்ந்துவந்ததை உணர்ந்தேன். மத்தேயு 24:14-ல் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்வதற்கு ஆவலாயிருந்தேன். ஆகையால் புகைப்பிடிப்பதை விட்டொழித்தேன், ஊழியத்திற்காக ப்ரீஃப்கேஸ் ஒன்றையும் வாங்கினேன். பின்பு, மகா தேவனாகிய யெகோவாவுக்கு என்னையே ஒப்புக்கொடுத்தேன்.

1936, ஆகஸ்ட் மாதத்தில் த உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடென்ட் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபார்ட், “அர்மகெதோன்” என்ற தலைப்பில் பேச்சு கொடுப்பதற்காக ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவுக்கு வந்தார். கிளாஸ்கோ ஏறக்குறைய 600 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோதிலும், எப்படியாவது அந்த மாநாட்டிற்கு போய், முழுக்காட்டுதலும் பெறவேண்டும் என தீர்மானமாயிருந்தேன். என்னிடம் போதிய பணம் இல்லை. ஆகவே என் சைக்கிளை, ஸ்காட்லாந்தின் எல்லைப்புறத்திலிருந்த பட்டணமாகிய கார்லிஸிலுக்கு ரயிலில் ஏற்றிச் சென்றேன். பிறகு அங்கிருந்து 160 கிலோமீட்டர் வடக்கே சைக்கிளிலேயே பிரயாணம் செய்தேன். வீட்டுக்குத் திரும்பிச் செல்கையிலும் பேரளவான தூரம் சைக்கிளிலேயே சென்றேன். அதன் காரணமாக உடல் களைத்திருந்தாலும், உள்ளம் ஆவிக்குரிய பலத்தினால் பூரிப்படைந்திருந்தது.

அந்தச் சமயத்திலிருந்து, அருகிலிருந்த கிராமங்களிலுள்ள ஜனங்களுடன் என் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள சைக்கிளிலேயே சென்றேன். அந்நாட்களில், ஒவ்வொருவரிடமும் சாட்சிதரும் கார்டு இருந்தது. இதில், வீட்டுக்காரர்கள் வாசிப்பதற்கான பைபிள் செய்தி இருந்தது. அதோடு, சொஸைட்டியின் பிரெஸிடென்ட்டால் கொடுக்கப்பட்ட பைபிள் பேச்சுகளின் ரெக்கார்டுகளை போட்டு காட்டுவதற்காக ஒலிப்பதிவு பெட்டிகளையும் பயன்படுத்தினோம். அதுமட்டுமா, பத்திரிகைகளை கொண்டு செல்வதற்கு ஒரு பையையும் நாங்கள் எப்போதும் வைத்திருந்தோம். a அது, யெகோவாவின் சாட்சிகள் என்று எங்களை அடையாளம் காட்டினது.

போர் காலத்தில் பயனியர் ஊழியம் செய்தல்

என் சகோதரன் 1940-ல் முழுக்காட்டப்பட்டான். இரண்டாம் உலகப் போர் 1939-ல் தொடங்கியிருந்தது, முழுநேர பிரசங்கிகளுக்கு அதிக தேவை இருப்பதை நாங்கள் இருவரும் கண்டோம். ஆகையால், எங்கள் பயனியர் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து கொடுத்தோம். நாங்கள் இருவரும் ஒன்றாக ப்ரிஸ்டல் பயனியர் வீட்டுக்கு நியமிக்கப்பட்டபோது நன்றியுள்ளோராக இருந்தோம். அங்கு ஊழியம் செய்து வந்த ஈடித் பூல், பெர்ட் ஃபார்மர், டாம் மற்றும் டாரத்தி பிரிட்ஜெஸ், பெர்னார்ட் ஹௌட்டனோடும், மற்ற பயனியர்களோடும் சேர்ந்து கொண்டோம். இவர்களுடைய விசுவாசத்தை நெடுங்காலமாக வியந்து போற்றினோம்.

“யெகோவாவின் சாட்சிகள்” என்று தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்ட ஒரு சிறிய வேன் எங்களை ஏற்றிச் செல்வதற்காக விரைவில் வந்தது. அதை ஓட்டினவர் ஸ்டான்லி ஜோன்ஸ்; இவர் பின்னால் சீனாவில் மிஷனரியாகி, அங்கு அவருடைய பிரசங்க நடவடிக்கையின் காரணமாக, தன்னந்தனிமை சிறை தண்டனையை ஏழு ஆண்டுகள் அனுபவித்தார்.

போர் மும்முரமாகி வருகையில், இரவு நன்றாக தூங்கினோம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. எங்கள் பயனியர் வீட்டைச் சுற்றி குண்டுகள் விழுந்தன. தீ பிடித்துக்கொள்ளாதபடி நாங்கள் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஒரு நாள் சாயங்காலம், 200 சாட்சிகள் வந்திருந்த ஓர் அருமையான அசெம்பிளிக்குப் பிறகு ப்ரிஸ்டலின் மையப்பகுதியிலிருந்து எங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும்வழியில், விமானத்தைத் தாக்கும் வெடிகுண்டுகளிலிருந்து சரமாரியாக சிதறிய உலோகத் துண்டுகளுக்கு தப்பித்து வீட்டிற்குள் பத்திரமாக நுழைந்தோம்.

அடுத்த நாள் காலையில் டிக்கும் நானும், நாங்கள் விட்டு வந்திருந்த சில பொருட்களைக் கொண்டுவருவதற்காக பட்டணத்திற்குத் திரும்பிச் சென்றோம். ப்ரிஸ்டல் சின்னாபின்னமாக கிடந்ததைக் கண்ட நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அந்த நகரத்தின் மையப்பகுதி முழுவதும் வெடி குண்டால் சிதறுண்டு எரிந்துபோயிருந்தது. ராஜ்ய மன்றம் இருந்த பார்க் தெருவில் வெறும் புகைதான் மிச்சமிருந்தது. எனினும், சாட்சிகளுக்கு காயங்களோ உயிருக்கு ஆபத்தோ ஏற்படவில்லை. சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பைபிள் பிரசுரங்களை எல்லாம் ராஜ்ய மன்றத்திலிருந்து நாங்கள் ஏற்கெனவே எடுத்து, சபையோரின் வீடுகளில் வைத்திருந்தோம். இந்த இரண்டு காரியங்களுக்காகவும் யெகோவாவுக்கு நன்றி செலுத்தினோம்.

எதிர்பாராத சுதந்திரம்

நான் ப்ரிஸ்டல் சபையில் நடத்தும் கண்காணியாக சேவித்தேன். இராணுவ சேவைக்கு வரும்படி கட்டளையிட்ட கடிதத்தை நான் பெற்ற சமயத்திற்குள், அங்குள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்திருந்தது. நடுநிலை வகித்ததன் காரணமாக சாட்சிகள் பலர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். பிரசங்கிப்பதற்கான என்னுடைய சுதந்திரத்தையும் அவ்வாறே இழந்துவிடுவேன் என எதிர்பார்த்தேன். என் வழக்கு, உள்ளூர் பிரிஸ்டல் தீர்ப்பு மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அங்கு, முன்னாள் சிறை அதிகாரியாயிருந்த சகோதரர் அன்த்தொனி பக் என் சார்பாக வழக்காடினார். அவர் அதிக தைரியமுள்ள மனிதர், பைபிள் சத்தியத்தை உறுதியாக கடைப்பிடிப்பவர். அவர் சிறந்த முறையில் வாதாடியதன் காரணமாக எனக்கு இராணுவ சேவையிலிருந்து முழுமையான விலக்களிக்கப்பட்டது! இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் முழுநேர ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் இந்த விலக்கு கிடைத்தது!

எனக்குச் சுதந்திரம் கிடைத்ததில் அளவில்லா ஆனந்தமடைந்தேன். இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி இன்னும் அதிகமாக பிரசங்கிப்பு வேலையில் பங்குபெற தீர்மானித்தேன். ஒருநாள், லண்டன் கிளை அலுவலகக் கண்காணியான ஆல்பர்ட் ஷ்ரோடருடன் பேசுவதற்காக அங்கு வரும்படி ஓர் அழைப்பை பெற்றேன். என்ன சொல்லப்போகிறாரோ என யோசித்தேன். சகோதரர்களுக்கு உதவிசெய்து உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு சபையைச் சந்திக்கும் பயணக் கண்காணியாக சேவிக்க யாக்‍ஷயருக்குச் செல்லும்படி சொல்லப்பட்டபோது என் ஆச்சரியத்தைக் கற்பனைசெய்து பாருங்கள். அத்தகைய ஊழிய நியமிப்புக்கு நான் தகுதியற்றவனாக உணர்ந்தேன், ஆனால் எனக்கு இராணுவ சேவையிலிருந்து விடுவிப்பு கிடைத்திருந்தது. ஆகவே போவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ஆகையால் யெகோவாவின் வழிநடத்துதலை நான் ஏற்று, மனப்பூர்வமாய்ச் சென்றேன்.

ஹட்டர்ஸ்ஃபீல்டில் நடந்த ஓர் அசெம்பிளியில் ஆல்பர்ட் ஷ்ரோடர் சகோதரர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். ஏப்ரல் 1941-ல், என் புதிய ஊழிய நியமிப்பை ஆரம்பித்தேன். அந்த அருமையான சகோதரர்களுடன் அறிமுகமாவது எத்தகைய மகிழ்ச்சியாயிருந்தது! அவர்களுடைய அன்பையும் தயவையும் கண்ட நான், தம்மிடம் முழு பக்தியுடைய, ஒருவரையொருவர் நேசிக்கிற ஒரு ஜனத்தை யெகோவா உடையவராக இருக்கிறார் என்பதை இன்னும் அதிகமாக மதித்துணர ஆரம்பித்தேன்.—யோவான் 13:35.

மேலுமான ஊழிய சிலாக்கியங்கள்

1941-ல், லெஸ்டரிலுள்ள டி மான்ட்ஃபர்ட் மன்றத்தில், மறக்க முடியாத ஐந்து நாள் தேசிய மாநாடு நடத்தப்பட்டது. ரேஷன் முறையில் குறைவான உணவே வழங்கப்பட்டபோதிலும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தவர்களின் உச்ச எண்ணிக்கை 12,000. ஆனால் அச்சமயத்தில் அந்த நாட்டில் 11,000-த்திற்கும் சற்று அதிகமான சாட்சிகள் மாத்திரமே இருந்தார்கள். சொஸைட்டியின் பிரெஸிடென்ட் கொடுத்த பேச்சுகள் அடங்கிய ரெக்கார்டுகள் இயக்கப்பட்டன, பிள்ளைகள் என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த மாநாடு இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நடத்தப்பட்டதால் பிரிட்டனில் இருந்த யெகோவாவின் ஜனங்களுடைய தேவராஜ்ய சரித்திரத்தில் நிச்சயமாகவே ஒரு முன்னேற்ற கட்டமாக இருந்தது.

இந்த மாநாட்டுக்குப் பிறகு, லண்டன் பெத்தேல் குடும்பத்துடன் சேவை செய்யும்படியான அழைப்பைப் பெற்றேன். அங்கு, ஷிப்பிங் டிப்பார்ட்மெண்ட்டிலும், பேக்கிங் டிப்பார்ட்மெண்ட்டிலும், பின்பு சர்வீஸ் டெஸ்கிலும் வேலை செய்தேன்.

லண்டன்மீது இரவும் பகலும் விமானத் தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அதோடு அங்கு வேலை செய்த பொறுப்புள்ள சகோதரர்களை அதிகாரிகள் இடைவிடாமல் சோதனை செய்தனர். இது போன்ற பிரச்சினைகளை அந்த பெத்தேல் குடும்பம் சகிக்கவேண்டியிருந்தது. ப்ரைஸ் ஹ்யூக்ஸ், ஈவார்ட் சிட்டி, ஃப்ரான்க் ப்ளாட் ஆகியோர் தங்கள் நடுநிலை வகிப்பின் காரணமாக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்கள். முடிவில் ஆல்பர்ட் ஷ்ரோடர் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்த நெருக்கடிகளின் மத்தியிலும், சபைகளும், ராஜ்ய வேலைகளும் தொடர்ந்து நன்றாக கவனிக்கப்பட்டு வந்தன.

கிலியடுக்கு செல்லுதல்

1945-ல் போர் முடிவடைந்தபோது, உவாட்ச்டவர் பைபிள் பள்ளியாகிய கிலியடில் மிஷனரி பயிற்றுவிப்புக்காக மனு செய்தேன். 1946-ல் நடக்கவிருந்த எட்டாவது வகுப்புக்கு நான் ஏற்கப்பட்டேன். டோனி ஆட்வுட், ஸ்டான்லி ஜோன்ஸ், ஹெரால்ட் கிங், டான் ரென்டல், ஸ்டான்லி உட்பர்ன் ஆகியோர் உட்பட நாங்கள் பலர், ஃபோவேயின் கார்னிஷ் மீன்பிடிக்கும் துறைமுகத்திலிருந்து கப்பலில் போக சொஸைட்டி ஏற்பாடு செய்தது. உள்ளூர் சாட்சி ஒருவர், சீனா களிமண் கொண்டுசென்ற ஒரு சிறிய கார்கோ கப்பலில் நாங்கள் செல்வதற்காக முன்கூட்டியே ரிசர்வ் செய்திருந்தார். நாங்கள் இருந்த கப்பல் தளம் மிக நெருக்கமாகவும் எப்போதும் தண்ணீர் நிரம்பியதாகவும் இருந்தது. நாங்கள் இறங்க வேண்டிய துறைமுகமாகிய ஃபிலடெல்ஃபியாவுக்கு வந்து சேர்ந்தபோதுதான் எங்களுக்கே நிம்மதியே கிடைத்தது!

வட நியூ யார்க்கின் சௌத் லான்ஸிங்கில், கிலியட் மிக அழகியதாக அமைந்திருந்தது. அங்கு நான் பெற்ற பயிற்றுவிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. எங்கள் வகுப்பில் இருந்த மாணவர்கள் 18 தேசங்களிலிருந்து வந்திருந்தார்கள். வெளி நாடுகளிலிருந்து வந்த ஊழியர்களில் இத்தனை பேரை சொஸைட்டி பள்ளியில் சேர்த்துக்கொண்டது இதுவே முதல் முறை. நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களானோம். பின்லாந்திலிருந்து வந்திருந்த கால்லீ சலவேராவும் நானும் ஒரே அறையில் தங்கினோம். அவரது தோழமையை நான் மிகவும் அனுபவித்து மகிழ்ந்தேன்.

காலம் விரைவில் கடந்தது. அந்த ஐந்து மாதங்களின் முடிவில், எங்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கவும், எங்கள் ஊழிய நியமிப்பு இடங்களை எங்களுக்குச் சொல்லவும் சொஸைட்டியின் பிரெஸிடென்ட் நேதன் ஹெச். நார், புரூக்லின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்தார். அந்நாட்களில், பட்டமளிப்பு நடக்கும் வரையில் மாணாக்கர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களை அறியாதிருந்தார்கள். நான் லண்டன் பெத்தேலில் என் வேலையைத் தொடர அங்கு செல்லும்படி நியமிக்கப்பட்டேன்.

மீண்டும் லண்டனில்

போருக்குப் பிற்பட்ட ஆண்டுகள் பிரிட்டனில் கடுமையானவையாக இருந்தன. உணவு, காகிதம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பல கிடைப்பது கடினமாகவே இருந்தது. ஆனால் நாங்கள் ஒருவாறு சமாளித்துக்கொண்டோம், யெகோவாவின் ராஜ்ய வேலைகள் முன்னேறின. பெத்தேலில் வேலை செய்ததோடுகூட, மாவட்ட மற்றும் வட்டார அஸெம்பிளிகளிலும் சேவை செய்து, அநேக சபைகளையும் சந்தித்து வந்தேன். அதோடு அயர்லாந்திலுள்ள சில சபைகளையும் சந்தித்தேன். எரிக் ஃப்ராஸ்ட்டையும் ஐரோப்பாவிலிருந்து வந்த மற்ற சகோதர சகோதரிகளையும் சந்தித்தேன். நாசி கான்சன்ட்ரேஷன் முகாம்களின் பயங்கரங்களை சகித்திருந்த சாட்சிகளின் உத்தமத்தைப் பற்றி அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டதும் எனக்கு கிடைத்த ஒரு சிலாக்கியம். பெத்தேல் சேவை நிச்சயமாகவே ஓர் ஆசீர்வாதம்.

லண்டனுக்கு வடக்கில் இருந்த பட்டணமாகிய வாட்ஃபர்ட்டில் விசேஷித்த பயனியராக இருந்த ஜோன் வெப்பை நான் பத்து ஆண்டுகளாக அறிந்திருந்தேன். 1952-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். முழுநேர ஊழியத்தில் தொடர்ந்திருக்கும்படி நாங்கள் இருவருமே விரும்பினோம். பெத்தேலை விட்டு வந்த பின்பு, வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டபோது நாங்கள் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எங்களுக்குக் குறிக்கப்பட்ட முதல் வட்டாரம், இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை ஓரமான சசெக்ஸிலும் ஹாம்ப்ஷயரிலும் இருந்தது. அந்நாட்களில் வட்டார ஊழியம் எளிதாக இல்லை. நாங்கள் பெரும்பாலும் பஸ்ஸிலும், சைக்கிளிலும், கால்நடையாகவும் பயணப்பட்டோம். பல சபைகள், நாட்டுப்புற பிராந்தியங்களில் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. இந்தப் பெரிய பிராந்தியங்களுக்குச் செல்வது கடினமாக இருந்தது. ஆனால், சாட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டிருந்தது.

1958-ல் நியூ யார்க் நகரில்

1957-ல் பெத்தேலிலிருந்து மற்றொரு அழைப்பு வந்தது: “நியூ யார்க் நகரிலுள்ள யாங்கி ஸ்டேடியத்திலும் போலோ கிரௌண்டிஸிலும் 1958-ல் நடக்கப்போகும் சர்வதேச அஸெம்பிளிக்கான பயண ஏற்பாடுகளில் உதவிசெய்ய பெத்தேலுக்கு வர உங்களுக்கு விருப்பமா?” சீக்கிரத்திலேயே ஜோனும் நானும், சொஸைட்டி வாடகைக்கு அமர்த்தின விமானங்களிலும் கப்பல்களிலும் பயணப்படுவதற்கு அனுமதி கேட்கும் சகோதரர்களின் வேண்டுகோள்களைக் கையாளுவதில் மும்முரமாய் ஈடுபட்டோம். தேவ சித்தம் என்ற அந்த பிரசித்திப் பெற்ற சர்வதேச மாநாட்டிற்கு 2,53,922 பேர் வந்திருந்தனர். இந்த மாநாட்டில் 7,136 பேர் யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை, தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினார்கள். இது, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள சரித்திர புகழ்பெற்ற பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.—அப்போஸ்தலர் 2:41.

சகோதரர் நார் காட்டிய அன்பை ஜோனும் நானும் மறக்கவே மாட்டோம். அவர் எங்களை அசெம்பிளிக்கு அழைத்தார். நியூ யார்க் நகரத்திற்கு 123 நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகளைக் கவனிப்பதற்கு உதவிசெய்ய அழைத்தார். அந்த சேவை எங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் மனநிறைவையும் தந்தது.

முழுநேர சேவையின் ஆசீர்வாதங்கள்

நாங்கள் திரும்பிவந்த பிறகு, உடல்நல பிரச்சினைகள் தலைதூக்கும் வரை பயண ஊழியத்தில் தொடர்ந்திருந்தோம். ஜோன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள், எனக்கு இலேசாக ஸ்ட்ரோக் ஏற்பட்டது. ஆனால் பிற்பாடு நாங்கள் விசேஷித்த பயனியர்களாகவும் தற்காலிகமாக வட்டார ஊழியத்தில் சேவிக்கும் சிலாக்கியமும் பெற்றோம். கடைசியில் நாங்கள் பிரிஸ்டலுக்குத் திரும்பிச் சென்று, அங்கு முழுநேர ஊழியத்தில் தொடர்ந்து இருந்துவருகிறோம். என் சகோதரன் டிக், அருகில் தன் குடும்பத்துடன் வசிக்கிறான். நாங்கள் அடிக்கடி கடந்தகால அனுபவங்களை நினைவுபடுத்திக்கொள்வோம்.

1971-ல் என் கண் பார்வை மிகவும் மோசமாகிவிட்டது. அப்போதிருந்து, வாசிப்பது எனக்கு அதிகக் கடினமாகிவிட்டது. ஆகையால், பைபிள் பிரசுரங்களின் காஸட்டுகளை யெகோவா அளித்திருக்கும் அருமையான ஏற்பாடாகக் காண்கிறேன். ஜோனும் நானும் இன்னும் பைபிள் படிப்புகள் நடத்துகிறோம். இந்த ஆண்டுகளினூடே, ஏழு பேர் அடங்கிய ஒரு குடும்பம் உட்பட 40 நபர்களுக்கு சத்தியத்தின் அறிவை பெற உதவும் சிலாக்கியம் பெற்றோம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தபோது, முழுநேர ஊழியத்தை ஏற்று அதில் நிலைத்திருக்க வேண்டுமென்பதே எங்கள் ஆவலாக இருந்தது. மகா உன்னதராகிய யெகோவாவை இந்நாள் வரை சேவிப்பதற்கு கிடைத்த பலத்திற்காக நாங்கள் எவ்வளவாய் நன்றியுள்ளோராக இருக்கிறோம். அவர் எங்களுக்குச் செய்திருக்கும் நன்மைக்காகவும் சந்தோஷமான திருமண வாழ்வுக்காகவும் நன்றிசெலுத்த ஒரே வழி அவரை சேவிப்பதே!

[அடிக்குறிப்புகள்]

a துணியால் ஆன ஒரு தோள் பை. த உவாட்ச்டவர், கான்சொலேஷன் (பின்னால், அவேக்!) ஆகியவற்றின் பிரதிகளை எடுத்துச் செல்வதற்காகவே தயாரிக்கப்பட்டது.

[பக்கம் 25-ன் படம்]

என் சகோதரன் டிக்குடன் (இடப்பக்கம் கடைசி; டிக் நின்றுகொண்டிருக்கிறான்) மற்ற பயனியர்கள் பிரிஸ்டல் பயனியர் வீட்டு முன்புறம்

[பக்கம் 25-ன் படம்]

1940-ல் பிரிஸ்டல் பயனியர் வீடு

[பக்கம் 26-ன் படங்கள்]

ஸ்டான்லி, ஜோன் ரேனால்ட்ஸ் அன்று (1952 ஜனவரி 12 திருமண நாளில்) இன்று