Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எங்கே நிம்மதி?

எங்கே நிம்மதி?

எங்கே நிம்மதி?

முந்தின கட்டுரையில் குறிப்பிட்ட தோரூவின் காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய காலத்தைப் பொறுத்தமட்டில், எந்த வழியில் மன நிம்மதியை பெறலாம் என்ற ஆலோசனைகளுக்கு பஞ்சமே இல்லை. மனோவியல் மருத்துவர்கள், எழுத்தாளர்கள், ஆலோசகர்கள் என பலரும் மன நிம்மதிதரும் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகள் எல்லாம் தற்காலிக சாந்தியை அளிக்கலாம். ஆனால் நிரந்தர பரிகாரம் வேண்டும் என்றால், அதைவிட முக்கியமான ஒன்று தேவைப்படுகிறது. அதையே, முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அன்டோன்யு, மார்கோஸ், கர்ஸன், வானியா, மார்ஸிலோ—இவர்கள் வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு வித்தியாசப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. அவர்களுடைய விஷயத்தில் குறைந்தது மூன்று விஷயங்கள் பொதுவானவை. முதலாவது, அவர்கள் “நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாய்” இருந்தார்கள். (எபேசியர் 2:12) இரண்டாவது, அவர்கள் மன அமைதியை நாடினர். மூன்றாவது, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவர்கள் அனைவருமே மன அமைதி பெற்றனர். பைபிளை படிக்க, படிக்கத்தான் கடவுள் உண்மையில் தங்களுக்கு கரிசனை காட்டுபவர் என்பதை அறிந்தனர். பவுல் அத்தேனே பட்டணத்தில் உள்ளவர்களிடம் சொன்ன விதமாக, கடவுள் “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல.” (அப்போஸ்தலர் 17:27) மன சாந்தி அடைய இந்த வார்த்தைகளை மனப்பூர்வமாக நம்புவது மிக அவசியம்.

ஏன் மன அமைதி இல்லை?

இந்த உலகில் ஏன் நிம்மதி இல்லை என்பதற்கு பைபிள் இரண்டு அடிப்படை காரணங்களை அளிக்கிறது. முதல் காரணம் எரேமியா 10:23-ல் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” மனிதன் யாருடைய உதவியுமின்றி தானாகவே செயல்படுவதற்கு அவனுக்கு ஞானமும் இல்லை, முன்னறியும் திறனும் இல்லை; கடவுளுடைய உதவியால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். கடவுளுடைய உதவியை நாடாதவர்கள் நிலையான மன சமாதானத்தை ஒருபோதும் அடையப்போவதில்லை. மன அமைதி இல்லாமல் போனதற்கு இரண்டாவது காரணத்தை அப்போஸ்தலன் யோவானின் வார்த்தைகளில் காண்கிறோம்: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற[து]. (1 யோவான் 5:19) நிம்மதி கிடைக்க, கடவுளுடைய வழிநடத்துதல் இல்லாமல் மனிதன் என்ன முயற்சி எடுத்தாலும் அவையாவும் அந்த “பொல்லாங்கன்” சாத்தானால் சுக்குநூறாக்கப்படும். இவனை காண முடியாது என்றாலும் நிஜமானவன், சக்திபடைத்தவனும்கூட.

இந்த இரண்டு காரணங்களினால்தான்—அதாவது, பெரும்பான்மையர் கடவுளுடைய வழிநடத்துதலை நாடுவதில்லை என்பதாலும் சாத்தான் மிகவும் விறுவிறுப்புடன் செயல்படுகிறான் என்பதாலும்—முழு மனித சமுதாயமுமே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அப்போஸ்தலன் பவுல் இதை தெளிவாக விளக்கினார்: “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.” (ரோமர் 8:22) இதை யார்தான் மறுக்க முடியும்? பணக்கார நாடுகளிலும்சரி ஏழை நாடுகளிலும்சரி, குடும்ப பிரச்சினைகளும் குற்றச்செயலும் அநீதியும் ஒத்துப்போகாத குணங்களும் நிலையற்ற பொருளாதாரமும் ஜாதி, இன விரோதங்களும் அராஜகமும் வியாதியும் இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களும் மக்களின் மன அமைதியை சூறையாடுகின்றன.

நிம்மதி—எங்கே கண்டடைவது?

அன்டோன்யு, மாற்கோஸ், கர்ஸன், வானியா, மார்ஸிலோ போன்றோர் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைக் கற்றுக் கொண்டதால் தங்கள் வாழ்க்கை பாணியை மாற்றினர். அவர்கள் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், இந்த உலகச் சூழ்நிலை ஒருநாள் மாறப்போகிறது என்பதே. முடிவில் எல்லாம் சரியாகிவிடும் என வெறுமனே எதிர்பார்ப்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. மனித குலத்திற்காக கடவுள் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார் என்றும் அவருடைய சித்தத்தைச் செய்வோமானால் இப்போதும் அந்த நோக்கத்திலிருந்து நன்மையடையலாம் என்றும் உள்ளப்பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் நம்பிக்கை வைப்பதைக் குறிக்கிறது. அவர்கள் கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் கடைப்பிடித்ததால் தங்களை மாற்றிக்கொள்ள முடிந்தது. அவர்கள் நினைத்ததைவிட அதிகமான சந்தோஷத்தையும், மன சாந்தியையும் கண்டடைந்தார்கள்.

அன்டோன்யு போராட்டங்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவதை நிறுத்தி விட்டார். போராடி பெறும் சலுகைகள் அனைத்தும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். இந்த முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்றிருக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் தினமும் மனப்பாடமாக ஒப்பிக்கும் பரமண்டல ஜெபத்தில் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று சொல்லும் அந்த ராஜ்யம்தான் அது. (மத்தேயு 6:10அ) கடவுளுடைய ராஜ்யம் என்பது ஒரு பரலோக அரசாங்கம் என்றும் அந்த அரசாங்கம் மட்டுமே மனிதகுலத்திற்கு உண்மையான சமாதானத்தை அளிக்கும் என்றும் அன்டோன்யு கற்றுக்கொண்டார்.

பைபிள் தரும் நல்ல புத்திமதிகளை திருமண வாழ்க்கையில் கடைப்பிடிப்பது எப்படி என்பதை மாற்கோஸும் அறிந்துகொண்டார். அதன் காரணமாக, முன்பு அரசியல்வாதியாக இருந்த அவர் இப்போது தன் மனைவியுடன் ஐக்கியமாக வாழ்கிறார். அவரும்கூட கடவுளுடைய ராஜ்யம் விரைவில் கொண்டுவரப்போகும், பேராசையும் சுயநலமும் இல்லாத உலகத்தை எதிர்பார்த்து இருக்கிறார். “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற பரமண்டல ஜெபத்தினுடைய வரிகளின் ஆழமான கருத்தை அவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார். (மத்தேயு 6:10ஆ) கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படும்போது இதுவரை பார்த்திராத தரமான வாழ்க்கையை மனிதர் அனுபவித்து மகிழ்வார்கள்.

கர்ஸனைப் பற்றி என்ன சொல்லலாம்? அவன் ஊர்சுற்றித் திரிவதையும் திருடுவதையும் விட்டுவிட்டான். தெருப்பிள்ளையாக அலைந்து திரிந்த இந்தச் சிறுவன் இப்போது மற்றவர்கள் மன நிம்மதியுடன் வாழ்வதற்கு உதவுகிறான். இந்த அனுபவங்களெல்லாம் எதை காட்டுகின்றன? பைபிளை படித்து அதை வாழ்க்கையில் பொருத்தும்போது, ஒருவருடைய வாழ்க்கையை சிறப்பாக்க முடியும் என்பதையே.

தொல்லைமிகு உலகிலும் நிம்மதி

கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் முதுகெலும்பாக திகழ்ந்த சரித்திர புருஷர் இயேசு கிறிஸ்துவே. யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பவர்கள் இயேசுவைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். இயேசு பிறந்த அந்த இரவில் தேவதூதர்கள் இவ்வாறு துதித்துப் பாடினார்கள்: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக.” (லூக்கா 2:14) இயேசு வளர்ந்தபோது, ஜனங்களுடைய வாழ்க்கையை சீர்ப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார். சிறுமைப்படுத்தப்பட்ட, நோய்வாய்ப்பட்ட ஜனங்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு மிகுந்த இரக்கம் காட்டினார். தேவதூதர்கள் சொன்ன விதமாகவே அவர் தாழ்மையான ஜனங்களுக்கு மன சமாதானத்தை அளித்தார். தம்முடைய ஊழியத்தின் முடிவில் சீஷர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.”—யோவான் 14:27.

இயேசு மனிதருடைய நலனுக்காக பாடுபட்டவர் மட்டுமல்ல, உயிரையும் கொடுத்தவர். அவர் தம்மை ஒரு மேய்ப்பனுக்கும், தம்மைப் பணிவோடு பின்பற்றுகிறவர்களை ஆடுகளுக்கும் ஒப்பிட்டு இவ்வாறு கூறினார்: “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.” (யோவான் 10:10, 11) தனக்கு மிஞ்சியே தானம் என்ற மனநிலையுடைய இன்றைய தலைவர்களுக்கும் தம்முடைய ஆடுகளுக்காக ஜீவனையே கொடுத்த இயேசுவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!

இயேசு செய்தவற்றிலிருந்து நாம் எவ்வாறு நன்மையடையலாம்? இந்த வார்த்தைகள் நம் அனைவருக்கும் தெரிந்ததே: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இயேசுவில் விசுவாசம் வைக்க வேண்டுமென்றால் முதலில் அவரைப் பற்றியும் அவருடைய பிதாவாகிய யெகோவாவைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவு, யெகோவா தேவனுடன் நெருக்கமான உறவுக்கு வழிநடத்தும். அதன்மூலம் மனசாந்தியையும் அடையலாம்.

இயேசு கூறினார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.” (யோவான் 10:27, 28) என்னே ஆறுதலான வார்த்தைகள்! சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சொன்ன வார்த்தைகளாக இருந்தாலும், இன்றைக்கும் அந்த வார்த்தைகளுக்கு அதே மதிப்பு உள்ளது. இயேசு கிறிஸ்து இன்றும் உயிருடன் இருக்கிறார், கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் அரசராக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். பல வருடங்களுக்குமுன் அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில், நிம்மதிக்காக ஏங்கிக்கொண்டிருந்த தாழ்மையான ஜனங்களிடம் அக்கறை காட்டினார். இன்றும் அதேவிதமான அக்கறை காட்டுகிறார். அதோடு தம்முடைய ஆடுகளுக்கு இன்றும் மேய்ப்பராக இருந்து வருகிறார். நாம் அவரை பின்பற்றினோமானால் மன சமாதானத்தை அடைய அவர் நமக்கு உதவுவார். வன்முறை, போர், குற்றச்செயல் இல்லாத முற்றிலும் சமாதானம் நிறைந்த எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்க்கவும் உதவுவார்.

இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவா நமக்கு உதவுவார் என்பதை அறிந்துகொள்வதாலும் நம்புவதாலும் அநேக பலன்கள் உண்டு. வானியாவை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சிறுவயதிலேயே அவள் குடும்ப பாரத்தை சுமந்தாள். கடவுள் தன்னை மறந்துவிட்டாரோ என்றும்கூட நினைத்தாள். இப்போதோ, கடவுள் தன்னை கைவிடவில்லை என்பதை உணர்ந்திருக்கிறாள். அவள் சொல்கிறாள், “கடவுள் நிஜமாகவே இருக்கிறார், அவருக்கு நல்ல குணங்களும் உண்டு என்று தெரிந்துகொண்டேன். நம்மேல் அவருக்கு கொள்ளை அன்பு. அதனால்தான் நமக்காக உயிரை கொடுக்க தன் மகனையே பூமிக்கு அனுப்பினார். இதை தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம்.”

கடவுளோடு உண்மையிலேயே தனக்கு நெருங்கிய பந்தம் ஏற்பட்டிருப்பதாக மார்ஸிலோ சொல்கிறான். எப்போதும் ஜாலியாக இருக்க விரும்பிய அவன் கூறுவதாவது: “பொதுவாக இளைஞர்களுக்கு எதைச் செய்வது எதை செய்யக்கூடாது என தெரியாததால் அவர்கள் செய்வது வினையில்தான் முடிவடைகிறது. என்னைப்போல சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். கடவுளையும் அவருடைய குமாரனையும் பற்றிய சத்தியத்தை நான் கற்றுக்கொண்டது போலவே இன்னும் நிறைய பேர் கற்றுக்கொண்டு பயனடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.”

கவனமாக பைபிளை படித்த பிறகு, வானியாவும், மார்ஸிலோவும் கடவுள்மீது உறுதியான விசுவாசம் வைத்தார்கள். தங்களுடைய பிரச்சினைகளை கையாளுவதற்கு அவர் உதவ மனமுள்ளவராக இருக்கிறார் என்ற நம்பிக்கையும் பெற்றார்கள். இவர்களைப்போல நாமும் பைபிளை படித்து அதன்படி வாழ்ந்தோமானால் நம் இதயங்களிலும் நிம்மதி பொங்கி வழியும். அப்போது, அப்போஸ்தலனாகிய பவுலின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.

இன்று உண்மையான சமாதானம்

பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனை அடைவதற்கு சத்தியத்தின் மீது பசியார்வமுள்ள ஜனங்களை இயேசு கிறிஸ்து வழிநடத்துகிறார். தூய வணக்கத்திற்கு அவர் வழிநடத்துகையில் பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள அதே சமாதானத்தை அவர்களும் அனுபவித்து மகிழ்வார்கள்: “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.” (ஏசாயா 32:18) இது எதிர்காலத்தில் அனுபவிக்கப்போகும் சமாதானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டே. நாம் பைபிளில் வாசிக்கிறோம்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11, 29.

அப்படியானால் இன்றைய சூழ்நிலையில் நமக்கு மன நிம்மதி கிடைக்குமா? கண்டிப்பாக! அதுமட்டுமல்ல, வெகு விரைவில், கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு அவர்கள் இதுவரை பார்த்திராத சமாதானத்தை அளித்து கடவுள் ஆசீர்வதிப்பார். ஆகவே, சமாதானத்தை அருளும்படி நீங்கள் ஏன் அவரிடம் ஜெபிக்கக்கூடாது? நிம்மதியை குலைத்துப்போடும் அளவுக்கு உங்களுக்கு பிரச்சினை இருந்தால், அரசன் தாவீதைப் போலவே நீங்களும் இவ்வாறு ஜெபம் செய்யுங்கள்: “என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.” (சங்கீதம் 25:17, 18) அப்படிப்பட்ட ஜெபங்களை கடவுள் கேட்பார் என்பது உறுதி. உள்ளப்பூர்வமாக வாஞ்சிக்கும் அனைவருக்கும் அவர் தம்முடைய கையைத் திறந்து சமாதானத்தை அருளுகிறார். அவர் நமக்கு பாசத்துடன் உறுதியளிப்பதாவது: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.”—சங்கீதம் 145:18, 19.

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

மனிதன் யாருடைய உதவியுமின்றி தானாகவே செயல்படுவதற்கு அவனுக்கு ஞானமும் இல்லை, முன்னறியும் திறனும் இல்லை; கடவுளுடைய உதவியால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவு, யெகோவா தேவனுடன் நெருங்கிய உறவுக்கு வழிநடத்தும். அதன்மூலம் மனசாந்தி அடையலாம்

[பக்கம் 7-ன் படம்]

குடும்பத்தில் சமாதானம் தழைத்தோங்க பைபிள் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்