Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ராஜ்யம் சாதிக்கப் போகிறவை

கடவுளுடைய ராஜ்யம் சாதிக்கப் போகிறவை

“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”​—மத்தேயு 6:​10.

1. கடவுளுடைய ராஜ்யம் வரவிருப்பது எதை அர்த்தப்படுத்தும்?

 கடவுளுடைய ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றினோருக்கு இயேசு கற்பித்தார்; அந்த ராஜ்யம் வருகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுளிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்படுகிற மனித ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளிலும் கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படவில்லை எனலாம். (சங்கீதம் 147:19, 20) ஆனால், ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, கடவுளுடைய சித்தம் எல்லா இடங்களிலும் நிறைவேறவிருந்தது. இப்போதோ, வியக்கத்தக்க மாற்றம் விரைவில் வரவிருக்கிறது; மனித ஆட்சிக்குப் பதிலாக கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ஆட்சி ஆரம்பிக்கவிருக்கிறது.

2. மனித ஆட்சி முடிந்து கடவுளுடைய ஆட்சி ஆரம்பிப்பதை எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?

2 இந்த மாற்றத்தைக் குறித்துக் காட்டும் காலப்பகுதியை, “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்” என இயேசு அழைத்தார். (மத்தேயு 24:21) அது எவ்வளவு காலம் நீடிக்கும் என பைபிள் சொல்வதில்லை; ஆனால், அப்போது சம்பவிக்க இருக்கும் பெரும் இக்கட்டுகள் இதுவரை உலகம் கண்டிராதளவு படுமோசமானவையாய் இருக்கும். அந்த மிகுந்த உபத்திரவத்தின் தொடக்கத்தில் பூமியிலுள்ள பெரும்பாலோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நிகழும். பொய் மதங்கள் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்படுவதே அந்தச் சம்பவம்! எனினும் இது யெகோவாவின் சாட்சிகளுக்கு எந்த விதத்திலும் அதிர்ச்சி அளிக்காது. ஏனெனில் அதைத்தான் அவர்கள் வெகுகாலமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 17:​1; 15-​17; 18:​1-​24) கடவுளுடைய ராஜ்யம் சாத்தானிய உலகம் முழுவதையும் அர்மகெதோனில் அழிக்கையில் இந்த மிகுந்த உபத்திரவம் முடிவடையும்.​—தானியேல் 2:​44; வெளிப்படுத்துதல் 16:14, 16.

3. கீழ்ப்படியாதவர்களின் முடிவை எரேமியா எவ்வாறு விவரிக்கிறார்?

3 “தேவனை அறியாதவர்களுக்கும்,” கிறிஸ்துவின் கரங்களிலுள்ள கடவுளுடைய பரலோக ராஜ்யத்தைப் பற்றிய “சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்” இது எதை அர்த்தப்படுத்தும்? (2 தெசலோனிக்கேயர் 1:​6-9) “இதோ, ஜாதிஜாதிக்குத் தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும். அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்” என பைபிள் தீர்க்கதரிசனம் நமக்கு சொல்கிறது.​—⁠எரேமியா 25:32, 33.

அக்கிரமத்திற்கு முடிவு

4. இந்தப் பொல்லாத நிலைமைக்கு முடிவைக் கொண்டுவருவதில் யெகோவா ஏன் நியாயமுள்ளவர்?

4 ஆயிரக்கணக்கான ஆண்டுகள் யெகோவா தேவன் அக்கிரமத்தை சகித்து வந்திருக்கிறார். இது, மனித ஆட்சி படுமோசமானது என்பதை நேர்மை மனமுள்ளவர்கள் புரிந்துகொள்வதற்கு போதுமான காலத்தை அனுமதித்திருக்கிறது. உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே 15 கோடிக்கும் அதிகமானோர் போர்கள், புரட்சிகள், சமுதாய கலகங்கள் ஆகியவற்றில் படுகொலை செய்யப்பட்டதாக சொல்கிறது ஓர் அறிக்கை. முக்கியமாய், இரண்டாம் உலகப் போரின்போது, மனிதனின் கொடூரம் கோரமுகம் காட்டியது. அப்போது ஏறக்குறைய 5 கோடி மக்கள் கொல்லப்பட்டனர்; இவர்களில் அநேகர் நாசி சித்திரவதை முகாம்களில் கோர மரணத்திற்கு ஆளாயினர். பைபிள் முன்னறிவித்தபடியே நம் நாட்களில், ‘பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மேன்மேலும் கேடுள்ளவர்களாகியிருக்கிறார்கள்.’ (2 தீமோத்தேயு 3:​1-5, 13) இன்று, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, ஊழல், கடவுளுடைய தராதரங்களை அவமதித்தல் ஆகியவற்றிற்குப் பஞ்சமேயில்லை. ஆகையால், இந்தப் பொல்லாத நிலைமைகளுக்கு முடிவைக் கொண்டுவருவதில் யெகோவா முற்றிலும் நியாயமுள்ளவரே.

5, 6. பூர்வ கானானில் நிகழ்ந்த அக்கிரமத்தை விவரியுங்கள்.

5 ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்பு கானானில் நிலவிய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் வேறுபாடு இல்லை. “கர்த்தர் [“யெகோவா,” NW] வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே” என பைபிள் சொல்லுகிறது. (உபாகமம் 12:31) “அந்த ஜாதிகளுடைய துன்மார்க்கத்தினிமித்தம் உன் கடவுளாகிய யெகோவா அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்” என இஸ்ரவேலரிடம் யெகோவா தெரிவித்தார். (உபாகமம் 9:5, தி.மொ.) பைபிள் சரித்திராசிரியர் ஹென்ரி எச். ஹாலி குறிப்பிட்டதாவது: “பாகால், அஸ்தரோத், இன்னும் அநேக கானானிய தெய்வங்களின் வணக்கத்தில் கட்டுப்பாடற்ற காம வெறியாட்டங்கள் உட்பட்டிருந்தன; அந்த ஆலயங்கள் தீயசெயல்களின் பிறப்பிடமாக விளங்கின.”

6 எல்லை கடந்த அவர்களுடைய துன்மார்க்கத்தை ஹாலி சுட்டிக்காட்டினார். அத்தகைய ஓரிடத்தில், “பாகாலுக்குப் பலிசெலுத்தப்பட்ட பிள்ளைகளுடைய எஞ்சிய உடல் பாகங்கள் அடங்கிய எக்கச்சக்கமான ஜாடிகளை” தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அவர் சொன்னதாவது: “அந்த பகுதி முழுவதுமே பச்சிளங்குழந்தைகளின் ‘கல்லறையாய்’ இருந்தது. . . . கானானியர், மத சடங்காக தங்கள் தெய்வங்களின் முன்னிலையில் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டனர்; பின்பு, அதே தெய்வங்களுக்கு தங்கள் தலைப்பிள்ளைகளை பலி கொடுப்பதாக சொல்லி கொலையும் செய்தனர்; இதுதான் அவர்கள் வணக்கமுறை. இந்த கானான் தேசம் முழுவதும் ஒருவிதத்தில் சோதோம் கொமோராவை ஒத்திருந்ததாகவே தோன்றுகிறது. . . . படுமோசமான ஒழுக்கக்கேடும் மிருகத்தனமான நடத்தையுமிக்க நாகரிகத்தைத் தொடர்ந்து விட்டுவைப்பது சரிதானா? . . . கானானிய நகரங்களின் இடிபாடுகளைத் தோண்டும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், கடவுள் ஏன் வெகு காலத்துக்கு முன்னரே இதை அழிக்காமல் விட்டு வைத்தார் என எண்ணி ஆச்சரியப்படுகின்றனர்.”

பூமியை சுதந்தரித்தல்

7, 8. கடவுள் எவ்வாறு இந்தப் பூமியைச் சுத்தம் செய்வார்?

7 கானானைக் கடவுள் சுத்தப்படுத்தியதைப் போலவே சீக்கிரத்தில் இந்த முழு பூமியையும் சுத்தப்படுத்தி, தம்முடைய சித்தத்தைச் செய்வோருக்கு அதைக் கொடுப்பார். “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.” (நீதிமொழிகள் 2:​21, 22) “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்று சங்கீதக்காரன் சொல்கிறார். (சங்கீதம் 37:10, 11) மேலும், “அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் . . . ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு” சாத்தானும் செயல்படாதபடி செய்யப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:​1-3) ஆம், “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”​—1 யோவான் 2:​17.

8 பூமியில் என்றென்றும் வாழ விரும்புவோருக்கு காத்திருக்கும் அற்புத நம்பிக்கையைக் குறித்து ரத்தின சுருக்கமாக இயேசு சொன்னதாவது: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” (மத்தேயு 5:5) இதை சொல்கையில் ஒருவேளை சங்கீதம் 37:29 அவர் மனதிற்கு வந்திருக்கலாம். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என அது முன்னறிவித்தது. (சங்கீதம் 37:29) நேர்மை மனம் படைத்தோர் நித்தியத்திற்கும் பரதீஸான பூமியில் வாழ்வதே யெகோவாவின் நோக்கம் என்பதை இயேசு அறிந்திருந்தார். “நான் பூமியையும் மனுஷரையும் பூமியின்மேலுள்ள மிருகங்களையும் என் மகா வல்லமையினாலும் . . . படைத்தேன்; சரியானவன் என எனக்குத் தோன்றுகிறவனுக்கு அதைக் கொடுக்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.​—⁠எரேமியா 27:5, தி.மொ.

அதிசயமான புதிய உலகம்

9. எப்படிப்பட்ட உலகிற்கு கடவுளுடைய ராஜ்யம் வழிநடத்தும்?

9 அர்மகெதோனுக்குப் பின்பு, கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் “நீதி வாசமாயிருக்கும்” அருமையான ‘புதிய பூமி’ உருவாகும். (2 பேதுரு 3:​13) அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்போருக்கு, கொடுமையும் பொல்லாப்பும் இல்லாத உலகில் வாழ்வது என்னே பெரும் நிம்மதி! அதிசயமான ஆசீர்வாதங்களுடனும், நித்திய வாழ்க்கையின் எதிர்பார்ப்புடனும், பரலோக அரசாங்கத்தின் மேற்பார்வையிலிருக்கும் நீதியுள்ள புதிய உலகிற்குள் பிரவேசித்திருப்பதில் அவர்கள் எவ்வளவாய் மகிழுவர்!​—வெளிப்படுத்துதல் 7:​9-​17.

10. கடவுளுடைய ஆட்சியில் மோசமான என்ன காரியங்கள் இனி இராது?

10 போர், குற்றச்செயல், பசி, ஏன் மூர்க்க மிருகங்களும்கூட கோரமுகம் காட்டி ஜனங்களை இனி பயமுறுத்த மாட்டா. “நான் அவர்களோடு [என் ஜனத்தாரோடு] சமாதான உடன்படிக்கை செய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; . . . வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்.” “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”​—எசேக்கியேல் 34:25-​28; மீகா 4:​3, 4.

11. உடல் சுகவீனங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நாம் ஏன் நம்பலாம்?

11 நோய், துயரம், மரணமுங்கூட நீக்கப்படும். “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.” (ஏசாயா 33:24) “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின. . . . இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.” (வெளிப்படுத்துதல் 21:​4, 5) இயேசு பூமியில் இருக்கையில், கடவுள் தந்த வல்லமையால் இவற்றையெல்லாம் செய்ய தமக்குத் திறமையிருப்பதை வெளிக்காட்டினார். பரிசுத்த ஆவியின் உதவியால் இயேசு, தேசமெங்கும் சென்று சப்பாணிகளையும் நோயுற்றோரையும் சுகப்படுத்தினார்.​—மத்தேயு 15:30, 31.

12. மரித்தோருக்கு என்ன நம்பிக்கை உள்ளது?

12 இன்னும் அநேக அற்புதங்களை இயேசு செய்தார். இறந்தோரை உயிரோடு எழுப்பினார். இதைக் கண்ட தாழ்மை மனமுள்ளோர் என்ன செய்தனர்? 12 வயதுள்ள சிறுமியை அவர் உயிர்த்தெழுப்பினபோது, அவளுடைய பெற்றோர் “மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.” (மாற்கு 5:​42) பூமியில் ராஜ்ய ஆட்சியின்கீழ் இயேசு என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம். அப்போது ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்.’ (அப்போஸ்தலர் 24:15) இறந்தவர்கள் அணி அணியாக திரும்பவும் உயிரடைந்து, தங்கள் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவர்களுடன் மீண்டும் இணைகையில் ஏற்படும் ஆனந்தத்தை சற்று கற்பனைசெய்து பாருங்கள்! சந்தேகமில்லாமல், அந்த அரசாங்கத்தின் மேற்பார்வையில் பிரமாண்டமான கல்வி புகட்டும் வேலை நடைபெறும்; எனவே, “சமுத்திரத்திலே தண்ணீர் நிறைந்திருப்பதுபோல் பூமியிலே யெகோவாவை அறிகிற அறிவு நிறைந்திருக்கும்.”​—ஏசாயா 11:⁠9, தி.மொ.

யெகோவாவின் அரசதிகாரம் நிரூபிக்கப்படும்

13. ஆட்சி செய்வதற்கான கடவுளின் உரிமை எவ்வாறு நிரூபித்துக் காட்டப்படும்?

13 அந்த அரசாங்கத்தின் ஆட்சியில் ஆயிர ஆண்டுகள் முடிவதற்குள், மனித குடும்பம் மனதிலும் உடலிலும் மீண்டும் பரிபூரண நிலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும். பூமி உலகளாவிய ஏதேன் தோட்டமாக, பரதீஸாக காட்சியளிக்கும். சமாதானமும், சந்தோஷமும், பாதுகாப்பும், அன்புமுள்ள மனித சமுதாயமும் நிஜமாகும். இது போன்ற நிலைமையை அதுவரை யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள். கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மனிதனின் துயர் மிகுந்த ஆட்சிக்கும், இந்த ஆயிரம் ஆண்டுகளில் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் அற்புதமான ஆட்சிக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள எத்தகைய வேறுபாடு! கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமான அவருடைய ஆளுகை, ஒவ்வொரு அம்சத்திலும் ஒப்பற்ற விதத்தில் மேம்பட்டதாய் நிரூபிக்கும்! கடவுளுடைய அரசதிகாரம், அதாவது அவருடைய ஆளும் உரிமை மொத்தத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கும்.

14. ஆயிர ஆண்டுகள் முடிவடைகையில் கலகக்காரர்களுக்கு என்ன சம்பவிக்கும்?

14 அந்த ஆயிர ஆண்டுகளின் முடிவில், தாங்கள் யாரை சேவிக்க விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க பரிபூரண மனிதர்களை யெகோவா அனுமதிப்பார். ‘சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாக்கப்படுவான்’ என்று பைபிள் காட்டுகிறது. அப்போது அவன் மனிதரைத் தவறாக வழிநடத்த மறுபடியும் முயலுவான். அவர்களில் சிலர் கடவுளை விட்டு விலகி சுதந்திரமாக வாழ்வதை தெரிந்துகொள்வார்கள். ‘இடுக்கண் மறுபடியும் உண்டாவதைத் தவிர்ப்பதற்கு,’ சாத்தான், அவனுடைய பேய்கள், தம்முடைய அரசாட்சிக்கு எதிராக கலகம் செய்வோர் ஆகிய அனைவரையும் யெகோவா முற்றிலும் அழித்துப்போடுவார். அந்தச் சமயத்தில் நித்திய அழிவை அடைந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றோ அவர்களுடைய தவறான போக்கிற்கு அபூரணத் தன்மையே காரணம் என்றோ எவரும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் யெகோவாவின் நீதியுள்ள ஆட்சிக்கு எதிராக வேண்டுமென்றே கலகம் செய்ய தெரிந்துகொண்ட பரிபூரண ஆதாம் ஏவாளைப்போல் இருப்பார்கள்.​—வெளிப்படுத்துதல் 20:​7-​10; நாகூம் 1:⁠9.

15. உண்மை தவறாதவர்கள் யெகோவாவுடன் எப்படிப்பட்ட உறவை அனுபவித்து மகிழ்வர்?

15 மறுபட்சத்தில், அநேகமாய் பெருந்திரளானோர் யெகோவாவின் அரசதிகாரத்தின் கீழிருப்பதை தெரிந்துகொள்வர். எல்லா கலகக்காரர்களும் முற்றிலும் அழிக்கப்பட்ட பின்பு, உண்மை தவறாமையின் கடைசி பரீட்சையில் வெற்றி பெற்றவர்களாய் நீதிமான்கள் யெகோவாவின் முன் நிற்பர். இந்த உண்மை தவறாதவர்களை யெகோவா அப்போது தம் குமாரராகவும் குமாரத்திகளாகவும் ஏற்றுக்கொள்வார். எனவே, கலகம் செய்வதற்கு முன்பு ஆதாமும் ஏவாளும் கடவுளுடன் அனுபவித்து மகிழ்ந்த அருமையான உறவை இப்போது இவர்களும் அனுபவிப்பர். அப்போது ரோமர் 8:21 நிறைவேறும்: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” தீர்க்கதரிசியாகிய ஏசாயா முன்னறிவிக்கிறார்: “அவர் [கடவுள்] மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, . . . நீக்கிவிடுவார்.”​—ஏசாயா 25:⁠8.

நித்திய வாழ்வின் நம்பிக்கை

16. நித்திய வாழ்க்கை எனும் பரிசை எதிர்பார்ப்பது ஏன் சரியானதே?

16 உண்மையுள்ளோருக்கு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது! ஆன்மீக, பொருளாதார ரீதியில் கடவுள் அவர்களை அபரிமிதமாக ஆசீர்வதிக்கவிருப்பதை அறிவது அவர்களுக்கு ஆனந்தமே! “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்” என சங்கீதக்காரன் சரியாகவே சொன்னார். (சங்கீதம் 145:16) யெகோவா, பூமிக்குரிய பரதீஸில் வாழப்போகும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளும்படி தம்மீது விசுவாசம் வைக்கும் மக்களை ஊக்குவிக்கிறார். யெகோவாவின் அரசதிகாரம் சம்பந்தப்பட்ட விவாதம் அதிமுக்கியமானதே; இருந்தாலும், பலனை எதிர்பார்க்காமல் தம்மைச் சேவிக்கும்படி ஜனங்களிடம் அவர் கேட்பதில்லை. பைபிள் முழுவதிலும், கடவுளுக்கு உண்மை தவறாமையும் நித்திய வாழ்க்கையின் நம்பிக்கையும் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்திருக்கின்றன; இவையே ஒரு கிறிஸ்தவன் கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கையின் இரண்டு அம்சங்கள். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”​—எபிரெயர் 11:⁠6.

17. நம் நம்பிக்கையினால் நம்மை காத்துக்கொள்வது சரியானதே என்பதை இயேசு எவ்வாறு காட்டினார்?

17 “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு சொன்னார். (யோவான் 17:3) கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் அறிந்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். கள்வன் ஒருவன் இயேசுவிடம், அவருடைய ராஜ்யத்தில் தன்னை நினைவுகூரும்படி கேட்டபோது, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று இயேசு சொன்னது இதற்கு ஓர் உதாரணம். (லூக்கா 23:43) அவர், பலன் கிடைக்காவிட்டாலும் நம்பிக்கையுடன் இருக்கும்படி அவனிடம் சொல்லவில்லை. ஏனெனில், தம்முடைய ஊழியர்கள் இந்த உலகில் பல்வேறு சோதனைகளை சந்திக்கையில் அவற்றை தாங்கிக்கொள்ள பரதீஸிய பூமியில் நித்திய வாழ்க்கை எனும் நம்பிக்கை இருக்க வேண்டுமென யெகோவா விரும்புவது இயேசுவுக்குத் தெரியும். எனவே, பலனை எதிர்பார்த்திருப்பது கிறிஸ்தவராக நிலைத்திருக்க பெரிதும் உதவும்.

ராஜ்யத்தின் எதிர்காலம்

18, 19. ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில் ராஜாவுக்கும் ராஜ்யத்திற்கும் என்ன சம்பவிக்கும்?

18 பூமியையும் அதின் குடிகளையும் பரிபூரண நிலைக்குக் கொண்டுவருவதற்கும் தம்முடன் ஒப்புரவாவதற்கும் யெகோவா பயன்படுத்தின துணை அரசாங்கமே ராஜ்யம் என்பதால், அந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு அரசராகிய இயேசு கிறிஸ்துவும் அரசரும் ஆசாரியருமான 1,44,000 பேரும் என்ன செய்வர்? “அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்ய வேண்டியது.”​—⁠1 கொரிந்தியர் 15:24, 25.

19 கிறிஸ்து ராஜ்யத்தைக் கடவுளிடம் ஒப்படைத்துவிடுவதாகவும் அதே சமயத்தில் அது என்றும் நிலைத்திருப்பதாகவும் சொல்லப்படும் வசனங்களை எப்படி புரிந்துகொள்வது? ராஜ்யத்தின் சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதே அதன் அர்த்தம் என புரிந்துகொள்ளலாம். கடவுளுடைய அரசதிகாரத்தை நியாயமாய் நிரூபிப்பதில் கிறிஸ்து வகித்த பாகத்திற்காக அவர் நித்தியத்திற்கும் கௌரவிக்கப்படுவார். அப்போது பாவமும் மரணமும் முற்றிலும் நீக்கப்பட்டு, மனிதகுலமும் மீட்கப்பட்டிருக்கும்; ஆகவே, மீட்பராக அவர் ஆற்றிய சேவை முடிவடையும். ராஜ்யத்தின் ஆயிர ஆண்டு ஆட்சியும் முழுமையாக நடந்தேறியிருக்கும். எனவே, யெகோவாவுக்கும் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கும் இடையில் துணை அரசாங்கம் இனிமேலும் தேவையில்லை. இவ்வாறு, “தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பார்.”​—1 கொரிந்தியர் 15:⁠28.

20. கிறிஸ்துவும் 1,44,000 பேரும் எதிர்காலத்தில் என்ன பொறுப்பை வகிப்பர் என்பதை நாம் எவ்வாறு கண்டறியலாம்?

20 ஆயிர ஆண்டு ஆட்சிக்குப் பின்பு, கிறிஸ்துவும் அவரோடு ஆளுபவர்களும் என்ன பொறுப்பு வகிப்பர்? இதைக் குறித்து பைபிள் எதுவும் சொல்கிறதில்லை. எனினும், தம்முடைய சிருஷ்டிப்பு முழுவதன்மீதும் பற்பல பொறுப்புகளை அவர்கள் வகிக்கும்படி யெகோவா செய்வார் என்று நாம் உறுதியாய் இருக்கலாம். நாம், யெகோவாவின் அரசதிகாரத்தை ஆதரித்து நித்திய ஜீவனை பரிசாக பெறுவோமாக! அப்போது அரசருக்கும், அவரோடு உடன் அரசரும் ஆசாரியருமாய் இருப்பவர்களுக்கும், வியப்பூட்டும் பிரபஞ்சம் முழுவதற்குமான யெகோவாவின் நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய நாம் உயிரோடிருப்போமே!

[கேள்விகள்]