Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த ஆவி எனது சகாயரா?

பரிசுத்த ஆவி எனது சகாயரா?

பரிசுத்த ஆவி எனது சகாயரா?

கடவுளுடைய பரிசுத்த ஆவியைப் பற்றியதில் பொது ஜனங்களுக்கு மட்டுமல்ல இறையியல் வல்லுனர்களுக்கும் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. எனினும் அப்படி குழப்பிக் கொள்வதற்கு அவசியமே இல்லை. பரிசுத்த ஆவியை பைபிள் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. சிலர் நினைப்பதுபோல் அது ஓர் ஆள் அல்ல; கடவுள் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தும் வல்லமை வாய்ந்த செயல்படும் சக்திதான் அது.​—சங்கீதம் 104:30; அப்போஸ்தலர் 2:​33; 4:​31; 2 பேதுரு 1:​21.

பரிசுத்த ஆவியின் மூலமாகவே கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன; எனவே அதற்கு இசைவாய் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கவனமாய் இருக்க வேண்டும். அத்துடன், தனிப்பட்ட விதத்தில் அது நமக்கு சகாயராய் இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சகாயர்​—⁠ஏன் தேவை?

தம் பூமிக்குரிய வாழ்க்கை முடிவடையப் போகிற தருணத்தில் இயேசு தம்முடைய சீஷருக்கு இவ்வாறு உறுதியளித்தார்: “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை [“சகாயரை,” NW] அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்” என்றும் சொன்னார்.​—⁠யோவான் 14:16, 17; 16:⁠7.

இயேசு, தம்முடைய சீஷர்களிடம் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைத்து இவ்வாறு கட்டளையிட்டார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல தேசத்தாரையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் பின்பற்றும்படி அவர்களுக்குப் போதியுங்கள்.” (மத்தேயு 28:19, 20, NW) இது ஓர் எளிய பொறுப்பல்ல; ஏனெனில் எதிர்ப்பின் மத்தியில் இது செய்யப்பட வேண்டியிருந்தது.​—மத்தேயு 10:22, 23.

வெளியிலிருந்து மட்டும் எதிர்ப்பு வரவில்லை, ஓரளவுக்கு சபைக்குள்ளிருந்தும் பிரிவினை என்ற வடிவில் அது தலைகாட்டியது. ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு சுமார் பொ.ச. 56-⁠ல் பவுல் இவ்வாறு எழுதினார்: “அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலக வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” (ரோமர் 16:​17, 18) அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் நிலைமை இன்னும் மோசமடைய இருந்தது. “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்” என பவுல் எச்சரித்தார்.​—⁠அப்போஸ்தலர் 20:29, 30.

இந்த இடையூறுகளை எதிர்த்து சமாளிக்க கடவுளுடைய உதவி தேவைப்பட்டது. இயேசு மூலம் அவர் அதை அளித்தார். எப்படியென்றால், அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று அவரைப் பின்பற்றிய ஏறக்குறைய 120 பேர் ‘பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள்.’​—அப்போஸ்தலர் 1:​15; 2:⁠4.

இயேசு அளிப்பதாக சொல்லியிருந்த உதவிதான் இந்தச் சந்தர்ப்பத்தில் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவி என்பதை சீஷர்கள் தெளிவாக புரிந்துகொண்டார்கள். இயேசு அளித்திருந்த அடையாளத்தை இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் நன்கு புரிந்துகொண்டனர்: ‘என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.’ (யோவான் 14:26) மேலும், அவர் அந்த ஆவியை, ‘உதவியாளனாகிய, சத்திய ஆவி’ என்றும் அழைத்தார்.​—யோவான் 15:⁠26.

இந்த ஆவி எந்த விதத்தில் சகாயர்?

இந்த ஆவி பல விதங்களில் சகாயராக செயல்பட இருந்தது. முதலாவதாக, இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தவற்றை அது அவர்களுக்கு மீண்டும் நினைப்பூட்டும் என அவர் உறுதியளித்திருந்தார். வெறுமனே அவருடைய வார்த்தைகளை அவர்களுக்கு நினைப்பூட்டுவதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்யும் என்பதையும் அவருடைய வார்த்தைகள் அர்த்தப்படுத்தின. அவர் கற்பித்திருந்தவற்றின் ஆழமான அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள இந்த ஆவி அவர்களுக்கு உதவ இருந்தது. (யோவான் 16:​12-​14) சொல்லப்போனால், சீஷர்கள் சத்தியத்தை இன்னும் நன்கு புரிந்துகொள்வதற்கு இந்த ஆவி அவர்களை வழிநடத்த இருந்தது. “நமக்கே கடவுள் தம்முடைய ஆவியின் மூலமாய் அவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார், அந்த ஆவி எல்லாவற்றையும், கடவுளின் ஆழமான காரியங்களையும் ஆராய்கிறது” என பின்னர் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 2:​10) இயேசுவைப் பின்பற்றிய அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் திருத்தமான அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன்பு அதற்கான ஆதாரங்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

இரண்டாவதாக, ஜெபத்தில் எதைக் கேட்பது, எப்படி கேட்பது என நிச்சயமில்லாதிருக்கையில், கடவுளுடைய ஆவி பரிந்து பேசும் அல்லது உதவும். “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.” (ரோமர் 8:⁠26) ஆகவே ஜெபிக்கும்படியும் அதுவும் அடிக்கடி ஜெபிக்கும்படியும் இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் போதித்தார்.

மூன்றாவதாக, இயேசுவின் சீஷர்கள் சத்தியத்தைக் குறித்து மற்றவர்களிடத்தில் பேசுகையில் கடவுளுடைய ஆவி அவர்களுக்கு உதவ இருந்தது. “அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” என இயேசு அவர்களை எச்சரித்திருந்தார்.​—⁠மத்தேயு 10:17-20.

மேலும், கிறிஸ்தவ சபையை அடையாளம் கண்டுகொள்ள பரிசுத்த ஆவி உதவும். அதன் அங்கத்தினர்கள் ஞானமாய் தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்கவும் அது உதவும். இந்த இரண்டு அம்சங்களில் பரிசுத்த ஆவி உதவும் விதத்தை இக்கட்டுரையில் விளக்கமாக சிந்திக்கையில் இன்று அது நமக்கு எந்த விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் கவனிப்போம்.

அடையாள சின்னமாக

கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தாராக யூதர்கள் நியாயப்பிரமாணத்தின்கீழ் பல நூற்றாண்டுகள் சேவித்து வந்தனர். அவர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்காமல் புறக்கணித்ததால், சீக்கிரத்தில் அவர்களும் புறக்கணிக்கப்படுவார்கள் என அவர் முன்னறிவித்தார்: “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே [யெகோவாவால்] ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 21:​42, 43) பொ.ச. 33-⁠ன் பெந்தெகொஸ்தே நாளில் கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்ட போது, கிறிஸ்துவைப் பின்பற்றினோர் ‘அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்கள்’ ஆயினர். அப்போதிருந்து இந்தச் சபை கடவுள் தொடர்பு கொள்ளும் வழியாக ஆனது. இச்சபைக்கே கடவுளுடைய அங்கீகாரம் இருப்பதை ஜனங்கள் அறிந்துகொள்வதற்கு தெளிவான அடையாளத்தை கடவுள் கொடுத்தார்.

பெந்தெகொஸ்தே நாளில் தங்களுக்குத் தெரியாத மொழிகளில் பேசுவதற்கு பரிசுத்த ஆவி சீஷர்களுக்கு உதவியது. அதைக் கண்டு ஆச்சரியமடைந்தவர்கள், “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என்று கேட்டனர். (அப்போஸ்தலர் 2:​7, 8) அப்போஸ்தலர்கள் அறியாத மொழிகளில் பேசியதையும், இன்னும் ‘அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்ததைக்’ கண்டு, உண்மையிலேயே கடவுளுடைய ஆவிதான் செயல்படுகிறது என்பதை ஏறக்குறைய மூவாயிரம் பேர் அறிந்துகொண்டனர்.​—அப்போஸ்தலர் 2:​41, 43.

மேலும், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் எனும் ‘ஆவியின் கனிகளை’ கிறிஸ்துவின் சீஷர்கள் வெளிக்காட்டியதால் கடவுளுடைய ஊழியர்கள் என தெளிவாய் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர். (கலாத்தியர் 5:​22, 23) சொல்லப்போனால், அன்பே உண்மை கிறிஸ்தவ சபையை ஒப்பற்ற விதத்தில் அடையாளம் காட்டியது. “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என இயேசு முன்னறிவித்தார்.​—யோவான் 13:34, 35.

ஆரம்ப கால கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அதன் உதவியினால் பயனடைந்தனர். முதல் நூற்றாண்டைப் போல், இன்று கடவுள் மரித்தோரை உயிர்த்தெழுப்புவதில்லை, அற்புதங்களை நடப்பிப்பதில்லை என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர்; எனவே அவர்கள், கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிக்காட்டுவதன்மூலம் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் என தங்களை அடையாளம் காட்டுகின்றனர்.​—1 கொரிந்தியர் 13:⁠8.

தனிப்பட்ட தீர்மானங்களில் சகாயரின் பங்கு

பரிசுத்த ஆவியால் உருவானதே பைபிள். ஆகவே, பைபிளின் அறிவுரைகளைக் கேட்கையில் பரிசுத்த ஆவியே நமக்கு அறிவுரை சொல்வதைப் போல் உள்ளது. (2 தீமோத்தேயு 3:​16, 17) சரியான தீர்மானங்களை செய்வதற்கும் அது நமக்கு உதவும். ஆனால் அப்படி உதவ நாம் அனுமதிக்கிறோமா?

ஒரு வேலையை அல்லது வாழ்க்கை தொழிலை நாம் தேர்ந்தெடுப்பதில் அது எப்படி உதவுகிறது? நம்முடைய எதிர்கால வேலையைப் பற்றிய யெகோவாவின் நோக்குநிலையைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவி நமக்கு உதவும். நம்முடைய வேலை பைபிள் நியமங்களுக்கு இசைவானதாய் இருக்க வேண்டும். அது, தேவராஜ்ய இலக்குகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது. அந்த வேலையால் கிடைக்கும் சம்பளமோ பிரபலமோ கௌரவமோ உண்மையில் அந்தளவு முக்கியமானதல்ல. வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து, கிறிஸ்தவ கடமைகளை சரிவர செய்வதற்கு தேவையான நேரத்தையும் வாய்ப்பையும் அளிப்பதே மிக முக்கியம்.

இருப்பினும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவது இயல்பானதும் சரியானதும்தான். (பிரசங்கி 2:24; 11:9) எனவே சமநிலையைக் காத்துக்கொள்ளும் கிறிஸ்தவர் ஒருவர், புத்துணர்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் பொழுதுபோக்கை நாடலாம். ஆனாலும் ‘மாம்சத்தின் கிரியைகளை’ வெளிக்காட்டும் பொழுதுபோக்கைத் தவிர்த்து ஆவியின் கனிகளை வெளிக்காட்டும் பொழுதுபோக்கை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே” என பவுல் விளக்குகிறார். “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்” எனவும் சொல்கிறார்.​—⁠கலாத்தியர் 5:​16-​26.

நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் இதுவே உண்மை. வெளித்தோற்றத்தையோ உடைமைகளையோ பார்த்தல்ல ஆனால், ஆன்மீக குணத்தைப் பார்த்து அவர்களைத் தேர்ந்தெடுப்பது ஞானமானது. ‘என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்’ என்று தாவீதைக் குறித்துக் கடவுள் சொன்னதிலிருந்தே அவர் கடவுளின் நண்பராக இருந்தது தெளிவாக தெரிந்தது. (அப்போஸ்தலர் 13:22) “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ [“யெகோவா,” NW] இருதயத்தைப் பார்க்கிறார்” என்ற நியமத்திற்கேற்ப வெளித்தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், கடவுள் தாவீதை இஸ்ரவேலின் அரசனாக தேர்ந்தெடுத்தார்.​—1 சாமுவேல் 16:⁠7.

வெளித்தோற்றத்தையோ உடைமைகளையோ பார்த்து பிறந்த ஆயிரக்கணக்கான நட்புகள் சுவடு தெரியாமல் போயிருக்கின்றன. நிலையற்ற ஐசுவரியத்தின்மீது கட்டப்பட்ட நட்புறவுகள் திடீரென நிலைகுலைந்து போகலாம். (நீதிமொழிகள் 14:20) யெகோவாவைச் சேவிக்க உதவும் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை நமக்கு புத்திமதி கூறுகிறது. அது, வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே கவனம் செலுத்த சொல்கிறது; ஏனெனில் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. (அப்போஸ்தலர் 20:35) நட்புக்கு நேரமும் நேசமும் முக்கியம்; நண்பர்களுக்கு கொடுக்க விரும்பும் மதிப்புமிக்க காரியங்களில் இவையும் அடங்கும்.

மணத்துணை தேடும் கிறிஸ்தவருக்கு ஆவியால் ஏவப்பட்ட புத்திமதியை பைபிள் அளிக்கிறது. ஒரு கருத்தில், ‘‘உருவத்தைப் பார்க்காதீர்கள், பாதங்களையே பாருங்கள்’’ என்று அது சொல்கிறது. பாதங்களையா? ஆம், பாதங்கள் சம்பந்தமாக பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: நற்செய்தியைப் பிரசங்கிக்கும் யெகோவாவின் ஊழியத்திற்கு அவை பயன்படுத்தப்படுவதனால் அவருடைய பார்வையில் அழகாக உள்ளனவா? சத்தியத்தின் செய்தியையும் சமாதான நற்செய்தியையும் பாதரட்சைகளாக அவை தரித்திருக்கின்றனவா? “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” என்பதாக வாசிக்கிறோம்.​—ஏசாயா 52:7; எபேசியர் 6:⁠15.

‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்வதால் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நமக்கு உதவி தேவை. (2 தீமோத்தேயு 3:1, NW) சகாயராகிய கடவுளுடைய பரிசுத்த ஆவி, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் ஊழியத்திற்கும் பெரும் ஆதரவை அளித்தது; தனிப்பட்ட விதத்திலும் சகாயராக நிரூபித்தது. பரிசுத்த ஆவியினால் உருவான கடவுளுடைய வார்த்தையைக் கருத்தூன்றி படிக்க வேண்டும்; பரிசுத்த ஆவியை நம் சகாயராய் ஆக்கிக்கொள்வதற்கு இதுவே முதல் முக்கிய வழி. அவ்வாறு ஆக்கிக் கொண்டிருக்கிறோமா?

[பக்கம் 23-ன் முழுபக்க படம்]