Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோல்

மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோல்

மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோல்

“மன்னிப்பு கேட்பது வலிமைமிக்கது. வன்முறையின்றி சச்சரவுகளை தீர்க்கிறது, தேசங்களுக்கிடையே ஏற்படும் பிரிவினைகளை சரிசெய்கிறது, குடிமக்கள் படும் கஷ்டங்களை அரசாங்கங்கள் ஒத்துக்கொள்ள வைக்கிறது, உறவுகளை மீண்டும் ஸ்திரப்படுத்துகிறது.” விற்பனையில் முதலிடத்தில் நிற்கும் ஒரு நூலின் ஆசிரியரும் சமுக கலாச்சார அடிப்படையிலான மொழி ஆராய்ச்சியாளருமான டெப்ரா டானன் இப்படித்தான் எழுதினார், இவர் வாஷிங்டன், டி.சி.-யிலுள்ள ஜியார்ஜ்டவுன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்தவர்.

உள்ளப்பூர்வமாக மன்னிப்பு கோருவது இற்றுப்போன உறவுகளை சரிப்படுத்துவதற்கு பெரும்பாலும் சிறந்த வழி என்பதை பைபிள் உறுதிப்படுத்துகிறது. உதாரணமாக, கெட்ட குமாரனைப் பற்றி இயேசு சொன்ன நீதிக் கதையில், அந்த மகன் வீடு திரும்பி இருதயப்பூர்வமாக மன்னிப்பு கோரியபோது, அந்தத் தகப்பன் அவனை பாசத்தோடு வீட்டில் சேர்த்துக்கொள்ள தயாராயிருந்தார். (லூக்கா 15:17-24) ஆம், கர்வத்தை மூட்டைகட்டி எறிந்துவிட்டு, தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்பை நாட வேண்டும்; இதைச் செய்ய முடியாதளவுக்கு கர்வம் பிடித்தவர்களாக ஒருபோதும் இருக்கக்கூடாது. உள்ளப்பூர்வமான மனத்தாழ்மையை காட்டுகிறவர்களுக்கு மன்னிப்பு கோருவது மிகவும் கஷ்டமான விஷயமல்ல.

மன்னிப்பு கேட்பது எவ்வளவு வலிமை வாய்ந்தது

மன்னிப்பு கேட்பது எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதற்கு பூர்வ இஸ்ரவேலில் வாழ்ந்த ஞானமுள்ள பெண்ணாகிய அபிகாயில் சிறந்த உதாரணமாக திகழ்கிறாள்; ஆனால் அவள் மன்னிப்பு கேட்டது தன்னுடைய கணவன் செய்த தவறுக்காக. பின்னர் இஸ்ரவேலின் அரசராக ஆன தாவீதும் அவருடைய ஆட்களும் வனாந்தரத்தில் இருந்தபோது அபிகாயிலின் கணவன் நாபாலுடைய மந்தையை காத்து வந்தனர். என்றபோதிலும், தாவீதின் ஆட்கள் நாபாலிடம் அப்பமும் தண்ணீரும் கேட்டபோது அவர்களை மிக இழிவாகப் பேசி வெறுங்கையோடு அனுப்பிவிட்டான். கோபத்தில் கொதித்தெழுந்த தாவீது, நாபாலுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் விரோதமாக சுமார் 400 ஆட்களோடு படை திரண்டு வந்துகொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட அபிகாயில் தாவீதை சந்திக்க கிளம்பினாள். அவள் தாவீதைப் பார்த்தபோது, அவருடைய பாதத்தில் முகங்குப்புற விழுந்து பணிந்தாள். பிறகு இவ்வாறு கூறினாள்: “என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும் பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேச வேண்டும்.” பின்பு அபிகாயில் அந்தச் சூழ்நிலையை தாவீதுக்கு விவரித்து உணவையும் பானத்தையும் அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதற்கு அவர், “நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக் கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன்” என்று சொன்னார்.​—1 சாமுவேல் 25:2-35.

அபிகாயில் மனத்தாழ்மையைக் காட்டியதாலும் தன் கணவனின் காட்டுத்தனமான நடத்தைக்காக மன்னிப்பு கேட்டதாலும் அவளுடைய குடும்பத்தாரின் உயிர் தப்பியது. தான் இரத்தம் சிந்த வராதபடிக்கு தடை பண்ணினதற்காக தாவீது அவளுக்கு நன்றியும் தெரிவித்தார். தாவீதையும் அவருடைய ஆட்களையும் தரக்குறைவாக நடத்தியது அபிகாயில் அல்ல, இருந்தாலும் அவள் தன் குடும்பத்திற்காக அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு தாவீதுடன் சமாதானம் பண்ணினாள்.

எப்பொழுது மன்னிப்பு கேட்பது என்பதை அறிந்திருந்ததற்கு மற்றொரு உதாரணம் அப்போஸ்தலன் பவுல். ஒருசமயம் யூத நியாய சங்கத்தில் அவர் தன் சார்பாக வாதாட வேண்டியிருந்தது. பவுலின் ஒழிவுமறைவற்ற பேச்சைக் கேட்டு மிகுந்த கோபமடைந்த பிரதான ஆசாரியனாகிய அனனியா, பவுலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் அவரை வாயில் அடிக்கும்படி கட்டளையிட்டார். அதற்கு பவுல், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா” என்றார். பிரதான ஆசாரியனை திட்டியதாக பார்வையாளர்கள் பவுல்மீது குற்றம் சாட்டியபோது, அவர் உடனடியாக தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, “சகோதரரே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று கூறினார்.​—அப்போஸ்தலர் 23:1-5.

பவுல் சொன்னது​—⁠அதாவது நியாயம் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டவரே வன்முறையை பிரயோகிக்க நாடியதை கண்டித்தது​—⁠சரிதான். இருந்தாலும், மற்றவர்கள் அவமரியாதையாக கருதக்கூடிய ஒரு முறையில் பிரதான ஆசாரியரைப் பார்த்து அறியாமல் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். * பவுல் இப்படி மன்னிப்பு கேட்டுக்கொண்டது அவர் தொடர்ந்து சொல்லவிருந்ததை நியாய சங்கம் செவிகொடுத்துக் கேட்பதற்கு வழிவகுத்தது. நீதிமன்ற அங்கத்தினர்களின் மத்தியில் நிலவிய கருத்துவேறுபாட்டைப் பற்றி பவுல் அறிந்திருந்ததால், உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் நிமித்தம் தான் நியாயம் விசாரிக்கப்படுவதாக அவர்களிடம் கூறினார். அதனால் பெரும் பிரிவினை ஏற்பட்டது, பரிசேயர்கள் பவுலின் பக்கம் சேர்ந்துகொண்டனர்.​—அப்போஸ்தலர் 23:6-10.

இந்த இரண்டு பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம். இரண்டு எடுத்துக்காட்டுகளிலும், நடந்த தவறுக்காக மனம் வருந்துவதை தயங்காமல் வெளிப்படுத்தியது கூடுதலான பேச்சுத் தொடர்பிற்கு வழியை திறந்தது. ஆகவே மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு நமக்கு உதவுகிறது. ஆம், நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு ஏற்பட்ட பாதிப்பிற்காக மன்னிப்பு கேட்பது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்புகளை திறக்கலாம்.

‘ஆனால் நான் எந்தத் தப்பும் செய்யவில்லையே’

நாம் ஏதாவது சொன்னதோ செய்ததோ யாரையாவது புண்படுத்தியிருப்பதை அறியும்போது, அந்த நபர் நியாயமற்றவராக அல்லது அதிக உணர்ச்சிவயப்படுகிறவராக இருப்பதாக நாம் நினைக்கலாம். என்றபோதிலும், இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”​—மத்தேயு 5:23, 24.

உதாரணமாக, நீங்கள் அவருக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டதாக ஒரு சகோதரர் உணரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவருக்கு விரோதமாக நீங்கள் தீங்கு செய்துவிட்டதாக நினைத்தாலும் சரி நினைக்காவிட்டாலும் சரி, நீங்கள் போய் ‘உங்கள் சகோதரனோடே ஒப்புரவாக’ வேண்டும் என இயேசு கூறுகிறார். கிரேக்க வார்த்தையின்படி, இங்கே இயேசு பயன்படுத்திய வார்த்தை ‘பரஸ்பர பகைமைக்குப் பிறகு வெளிக்காட்டப்படும் பரஸ்பர விட்டுக்கொடுத்தலை குறிக்கிறது.’ (உவைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி ஆஃப் ஓல்டு அண்டு நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ்) சொல்லப்போனால், இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவும்போது இருவர் பக்கத்திலும் ஓரளவு தவறு இருக்கலாம், ஏனென்றால் இருவருமே அபூரணர், தவறு செய்யும் இயல்புடையவர்கள். பொதுவாக இதற்கு பரஸ்பர விட்டுக்கொடுத்தல் தேவை.

யார் சரி யார் தவறு என்பதல்ல, ஆனால் சமரசமாவதற்கு யார் முதற்படியெடுப்பார் என்பதே கேள்வி. பண விவகாரங்கள் போன்றவற்றில் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் நிலவிய சமயங்களில் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சக ஊழியர்களை உலகப்பிரகாரமான நீதிமன்றங்கள் வரை இழுத்துச் சென்றதை கவனித்த அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு திருத்தினார்: “நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறதில்லை?” (1 கொரிந்தியர் 6:7) தங்களுடைய தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை உலகப்பிரகாரமான நீதிமன்றங்களில் முறையிடுவதை தடுப்பதற்காக பவுல் இதைச் சொன்னாலும், அதிலுள்ள நியமம் தெளிவாக இருக்கிறது: யார் செய்தது சரி யார் செய்தது தவறு என நிரூபிப்பதைவிட சக விசுவாசிகள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்வதே மிக முக்கியம். இந்த நியமத்தை மனதில் வைத்திருப்பது யாருக்காவது விரோதமாக நாம் தவறு செய்துவிட்டதாக அவர் நினைக்கையில் அவரிடம் போய் மன்னிப்பு கேட்பதை சுலபமாக்குகிறது.

மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது அவசியம்

ஆனால் சிலர் மன்னிப்பு கேட்பதற்குரிய வார்த்தைகளை மிதமீறி பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ஜப்பானில் மன்னிப்பு கேட்பதற்கு பயன்படுத்தப்படும் சூமிமாசென் என்ற வார்த்தை ஆயிரக்கணக்கான தடவை காதில் வந்து விழுகிறது. நன்றி தெரிவிப்பதற்கும்கூட இதைப் பயன்படுத்தலாம்; யாராவது ஏதாவது தயவு காண்பிக்கையில் அதற்கு பதில் செய்ய முடியாதபோது ஏற்படும் தர்மசங்கடமான நிலைமையை அது மறைமுகமாக குறிப்பிட்டுக் காட்டும். இந்த வார்த்தை பல்வேறு சூழ்நிலைகளுக்குப் பொருந்துவதால் தொட்டதற்கெல்லாம் பயன்படுத்தப்படுவதாக சிலர் நினைக்கலாம்; உண்மையிலேயே மனப்பூர்வமாகத்தான் சொல்லப்படுகிறதா என்றும்கூட சிலர் யோசிக்கலாம். பல்வேறு வகையில் மன்னிப்பு கேட்பது பிற கலாச்சாரங்களிலும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதாக தோன்றலாம்.

எந்த மொழியிலும், மன்னிப்பு கேட்கையில் மனப்பூர்வமாக கேட்பது முக்கியம். வார்த்தைகளும் தொனியும் உள்ளப்பூர்வமாக மனம் வருந்துவதை வெளிப்படுத்த வேண்டும். ‘உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்’ என இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தில் தமது சீஷர்களுக்கு கற்பித்தார். (மத்தேயு 5:37) நீங்கள் மன்னிப்பு கேட்டால், உண்மையிலேயே மன்னிப்பு கேளுங்கள்! இதை இவ்வாறு விளக்கலாம்: ஒருவர் ஏர்போர்ட் கவுண்ட்டரில் நின்றுகொண்டிருந்த சமயத்தில் பக்கத்திலுள்ள ஒரு பெண்ணின் மீது பெட்டி இடித்துவிட்டபோது மன்னிப்பு கேட்டார். சில நிமிடம் கழித்து, ‘க்யூ’ நகர்ந்தபோது, அந்தப் பெட்டி மறுபடியும் அந்தப் பெண்ணின் மீது இடித்துவிட்டது. மீண்டும் அந்த நபர் மரியாதையோடு மன்னிப்பு கேட்டார். இதே மாதிரி இன்னொரு தடவையும் ஏற்பட்டபோது, அவர் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டிருந்தால், அந்தப் பெட்டி மறுபடியும் அந்தப் பெண்ணின் மீது இடிக்காதவாறு கவனமாய் இருந்திருக்க வேண்டும் என அந்தப் பெண்ணுடன் பயணித்த ஒருவர் பெட்டியை வைத்திருந்தவரிடம் சொன்னார். ஆம், மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதோடு அந்தத் தவறு மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நாம் செய்த எந்தத் தவறையும் ஒத்துக்கொண்டு, மன்னிப்பு கேட்டு, ஏற்பட்ட நஷ்டத்தை முடிந்தவரை ஈடுசெய்ய முயலும்போதுதான் மனப்பூர்வமாக வருந்துகிறோமென அர்த்தம். பாதிக்கப்பட்டவர் தன் பங்கில், தவறு செய்தவரை மன்னிக்க தயாராக இருக்க வேண்டும். (மத்தேயு 18:21, 22; மாற்கு 11:25; எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13) இரு தரப்பினருமே அபூரணராக இருப்பதால், சமரசம் எப்பொழுதுமே சுலபமாக இருக்காது. இருந்தாலும், மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு வழிவகுக்கும் வலிமை படைத்தது.

மன்னிப்பு கேட்பது எப்பொழுது பொருத்தமற்றது

மன வருத்தத்தைத் தெரிவிப்பது ஆறுதலான உணர்ச்சிகளை ஏற்படுத்தி சமாதானத்திற்கு பங்களிக்கிறபோதிலும், ஞானமுள்ள ஒருவர் பொருத்தமற்ற சமயத்தில் அதைச் செய்வதைத் தவிர்க்கிறார். உதாரணமாக, பிரச்சினை கடவுளுக்கு உத்தமத்தை காத்துக்கொள்வதைப் பற்றியது என வைத்துக்கொள்ளுங்கள். இயேசு பூமியில் வாழ்ந்தபோது, “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:8) ஆனால் தாம் படும் வேதனையை தணிப்பதற்கு தமது நம்பிக்கைகளுக்காக மன்னிப்பு கேட்கவில்லை. “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்” என்று பிரதான ஆசாரியன் கட்டளையிட்டபோது, இயேசு மன்னிப்பு கேட்கவில்லை. கோழையாக நடுங்கிக்கொண்டு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, இயேசு தைரியத்தோடு இவ்வாறு பதிலளித்தார்: “நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 26:63, 64) பிதாவாகிய யெகோவா தேவனுக்குரிய தம் உத்தமத்தை விட்டுக்கொடுத்து பிரதான ஆசாரியரோடு சமாதானத்தை காத்துக்கொள்ளும் எண்ணம் இயேசுவுக்கு ஒருபோதும் எழவில்லை.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறார்கள். ஆனால் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்காகவும் தங்களுடைய சகோதரர்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்காகவும் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.​—மத்தேயு 28:19, 20; ரோமர் 13:5-7.

சமாதானத்திற்கு தடையே இல்லை

நம்முடைய முற்பிதாவாகிய ஆதாமிடமிருந்து அபூரணத்தையும் பாவத்தையும் சுதந்தரித்திருப்பதால் இன்று நாம் தவறு செய்கிறோம். (ரோமர் 5:12; 1 யோவான் 1:10) ஆதாம் பாவத்திற்குள்ளானது படைப்பாளருக்கு விரோதமாக செய்த கலகத்தின் விளைவாகும். ஆனால் ஆதியில் ஆதாமும் ஏவாளும் பரிபூரணராயும் பாவமற்றவர்களாயும் இருந்தார்கள், இதே பரிபூரண நிலைமைக்கு மனிதர்களை மீண்டும் கொண்டு வரப் போவதாக கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். பாவத்தையும் அதன் அனைத்து பாதிப்புகளையும் அவர் அடியோடு அழித்து விடுவார்.​—1 கொரிந்தியர் 15:56, 57.

அப்பொழுது எப்படியிருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! நாவை பயன்படுத்துவது சம்பந்தமாக இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு அறிவுரை கொடுத்தபோது இவ்வாறு கூறினார்: “ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.” (யாக்கோபு 3:2) பரிபூரண மனிதன் தன் நாவை கட்டுப்படுத்த முடியுமாதலால் அதை தவறாக பயன்படுத்துவதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவன் ‘தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடிக்கிக் கொள்ளக்கூடியவனாயிருக்கிறான்.’ நாம் பரிபூரணராகும்போது எவ்வளவு அருமையாயிருக்கும்! தனி நபர்களுக்கிடையே சமாதானமாயிருப்பதற்கு எந்த முட்டுக்கட்டைகளும் இருக்காது. ஆனால் அதுவரை, செய்த தவறுக்காக மனப்பூர்வமாக தகுந்த விதத்தில் மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோலாய் அமையும்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 8 பவுலின் கண் பார்வை மங்கியிருந்ததால் அந்த பிரதான ஆசாரியரை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருந்திருக்கலாம்.

[பக்கம் 5-ன் படக்குறிப்பு]

பவுலின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

[பக்கம் 7-ன் படக்குறிப்பு]

எல்லாரும் பரிபூரணராக இருக்கும்போது, சமாதானத்திற்கு தடைகளே இருக்காது