Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கு உண்மையிலேயே உங்கள் மீது அக்கறை இருக்கிறது

கடவுளுக்கு உண்மையிலேயே உங்கள் மீது அக்கறை இருக்கிறது

கடவுளுக்கு உண்மையிலேயே உங்கள் மீது அக்கறை இருக்கிறது

இக்கட்டான சூழ்நிலைமையில் நாம் தவிக்கும்போது கடவுளை நோக்கி கூப்பிடுவது இயல்பானதே. ஏனெனில், அவர் “பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.” (சங்கீதம் 147:5) எனவே நம்முடைய பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்குத் தேவையான உதவியை அவரால்தான் அளிக்க முடியும். அதோடு, அவர் சமுகத்தில் “உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்” எனவும் பைபிள் நம்மை அழைக்கிறது. (சங்கீதம் 62:8) அப்படியானால், கடவுள் தங்களுடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பதே இல்லை என்ற எண்ணம் ஏன் பலருக்கு உண்டாகிறது? அதனால் அவருக்கு அக்கறையே இல்லை என அர்த்தமாகுமா?

கடவுள் நம்முடைய பிரச்சினைகளில் தலையிட்டு சரிசெய்யாதது போல தோன்றுவதால் எடுத்த எடுப்பில் கடவுளை குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நீங்கள் சிறுபிள்ளையாக இருந்த சமயத்தை சற்று நினைத்துப் பாருங்கள். நீங்கள் அடம்பிடித்துக் கேட்டதையெல்லாம் பெற்றோர்கள் உங்களுக்கு வாங்கித் தராததால், உங்கள் மீது அவர்களுக்கு அன்பில்லை என நீங்கள் எப்பொழுதாவது குற்றம் சாட்டினீர்களா? அநேக பிள்ளைகள் அப்படித்தான் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் வளர்ந்து ஆளானபோதோ அன்பு காட்டுவதற்கு பல வழிகள் உள்ளன என்பதையும், கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது அன்பான காரியமாக இருந்திருக்காது என்பதையும் நீங்கள் உணர்ந்துகொண்டீர்கள்.

அது போலத்தான், யெகோவாவும் நாம் எதிர்பார்க்கிறபடி நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அவர் நம்மை புறக்கணிக்கிறார் என அர்த்தமாகாது. உண்மை என்னவென்றால், கடவுள் நம் அனைவர் மீதும் பல்வேறு வழிகளில் அக்கறை காட்டுகிறார்.

“அவருக்குள் நாம் பிழைக்கிறோம்”

முதலாவதாக, கடவுளால்தான் “நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” (அப்போஸ்தலர் 17:28) நமக்கு ஜீவனை கொடுத்திருப்பதால் அவர் உண்மையிலேயே நம் மீது அன்புடன் அக்கறை காட்டுகிறார்!

அதோடு, நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் யெகோவா நமக்குத் தந்திருக்கிறார். “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார்” என நாம் வாசிக்கிறோம். (சங்கீதம் 104:14) சொல்லப்போனால், வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதைக் காட்டிலும் அதிகமானதை படைப்பாளர் நமக்கு தந்திருக்கிறார். அவர் ‘வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்புகிறார்.’​—அப்போஸ்தலர் 14:⁠17.

என்றாலும், ‘நம் மீது கடவுளுக்கு அவ்வளவு அன்பிருந்தால், ஏன் நாம் துன்பப்பட அனுமதிக்கிறார்?’ என சிலர் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு பதில் உங்களுக்கு தெரியுமா?

கடவுள் காரணமா?

மனிதர் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்கள் எல்லாம் மனிதர்களே தங்கள் மீது வருவித்துக் கொண்டவை. உதாரணமாக, துணிகர செயல்கள் சிலவற்றில் ஈடுபடும்போது ஆபத்துக்கள் வரும் என்று எல்லாருக்கும் நன்றாக தெரியும். இருந்தாலும், ஆட்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகிறார்கள், மதுபானத்தையும் போதைப் பொருட்களையும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், புகையிலையை பயன்படுத்துகிறார்கள், ஆபத்தான விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள், கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டுகிறார்கள், இன்னும் இதுபோன்ற பல காரியங்களை செய்கிறார்கள். இத்தகைய மோசமான நடத்தையினால் துன்பம் வந்தால், யாரை குற்றம் சாட்ட வேண்டும்? கடவுளையா? அல்லது புத்தியில்லாமல் நடப்பவரையா? “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை கூறுகிறது.​—கலாத்தியர் 6:⁠7.

அதோடு, மனிதர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கிறார்கள். போரில் ஈடுபடப் போவதாக ஒரு நாடு அறிவிப்பு செய்யும்போது, அதனால் வரும் துன்பங்களுக்கு நிச்சயமாகவே கடவுளை குற்றம் சாட்ட முடியாது. குற்றவாளி ஒருவன் சக மனிதனை தாக்கும்போது, அதனால் ஏற்படும் காயத்திற்கோ மரணத்திற்கோ கடவுளை குற்றம்சாட்ட முடியுமா? நிச்சயமாகவே முடியாது! அடக்கி ஒடுக்கி, ஆட்டிப்படைக்கும் ஒரு சர்வாதிகாரியின் கையில் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகி படுகொலை செய்யப்படுகையில், நாம் கடவுளை குற்றம்சாட்டலாமா? அது நியாயமற்ற செயலாகும்.​—பிரசங்கி 8:⁠9.

ஆனால், பரம ஏழைகளாக அல்லது பசி பட்டினியில் வாடுகிற கோடானுகோடி மக்களைப் பற்றியென்ன? இதற்கு கடவுளை குற்றம் சாட்டலாமா? கூடாது. எல்லாரும் சாப்பிடுவதற்குப் போதுமானவற்றைவிட அதிகமான உணவை நமது பூமி உற்பத்தி செய்து கொட்டுகிறது. (சங்கீதம் 10:2, 3; 145:16) அபரிமிதமாக கடவுள் அள்ளித் தருவதை சமமாக பங்கீடு செய்யாததே பாரெங்கும் பசி பட்டினி பரவியிருப்பதற்குக் காரணம். மனிதனுடைய சுயநலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காணவிடாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

அடிப்படை காரணம்

ஆனால் ஒருவர் நோய்வாய்ப்படும்போதோ அல்லது முதுமையால் இறக்கும்போதோ யாரை குற்றம் சாட்டுவது? இதற்கும் கடவுளை குற்றம் சாட்ட முடியாது என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு ஆச்சரியமாக தொனிக்கிறதா? வயதாகி மரிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் மனிதரை கடவுள் படைக்கவில்லை.

முதல் மானிட ஜோடியாகிய ஆதாம் ஏவாளை யெகோவா தேவன் ஏதேன் தோட்டத்தில் குடிவைத்தபோது, பூமிக்குரிய பரதீஸில் என்றென்றும் வாழும் நம்பிக்கையை அவர்களுக்கு முன்வைத்தார். அதே சமயத்தில், ஆஸ்தியாக பெற்றதை நெஞ்சார நேசித்துப் போற்றுகிற மனிதர்களாலேயே இந்தப் பூமி நிரப்பப்பட வேண்டுமென கடவுள் விரும்பினார். ஆகவே, அவர்களுடைய எதிர்கால நம்பிக்கையின் மீது ஒரு நிபந்தனையை விதித்தார். ஆதாமும் ஏவாளும் தங்களுடைய அன்புள்ள படைப்பாளருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மாத்திரமே பரதீஸில் வாழ முடியும் என்பதே அந்த நிபந்தனை.​—ஆதியாகமம் 2:17; 3:2, 3, 17-23.

வருத்தகரமான விஷயம் என்னவென்றால், ஆதாமும் ஏவாளும் கலகம் செய்துவிட்டார்கள். பிசாசாகிய சாத்தானுடைய சொல்லை கேட்பதற்கு ஏவாள் தீர்மானித்தாள். சாத்தான் அவளிடம் பொய் சொன்னான், அதாவது நன்மையான ஒன்றை கடவுள் அவளுக்குக் கொடுக்காமல் வைத்திருக்கிறார் என்று சொன்னான். ஆகவே அவள் தன்னிச்சையுடன் செயல்பட ஆரம்பித்து, ‘நன்மை தீமை அறிந்து தேவனைப் போல் இருப்பதற்கு’ முயன்றாள். அவளுடைய கலகத்தனத்தில் ஆதாமும் சேர்ந்துகொண்டான்.​—ஆதியாகமம் 3:5, 6.

இப்படியாக அவர்கள் பாவம் செய்தபோது, என்றென்றும் வாழ தகுதியற்றவர்கள் என்பதை காண்பித்தார்கள். பாவத்தினால் வந்த பயங்கர விளைவை அனுபவித்தார்கள். அவர்களுடைய பலமும் சக்தியும் குறைந்து, கடைசியில் மடிந்தார்கள். (ஆதியாகமம் 5:5) என்றாலும், அவர்களுடைய கலகத்தனம் அதிபயங்கர விளைவுகளைக் கொண்டு வந்தது. ஆதாம் ஏவாளின் பாவத்தினால் ஏற்பட்ட விளைவுகளைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். “ஒரே மனுஷனாலே [ஆதாமாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 5:12) ஆம், ஆதாம் ஏவாளின் கலகத்தனத்தினால், சாவுக்கேதுவான வியாதியைப் போல பாவமும் மரணமும் மனிதகுலம் முழுவதற்கும் பரவியது.

கடவுளுக்கு அக்கறை இருக்கிறது என்பதற்கு பலமான அத்தாட்சி

அப்படியென்றால் கடவுளுடைய மானிட படைப்பு நிரந்தரமாக நாசமாகிவிட்டது என அர்த்தமாகுமா? இல்லை, கடவுளுக்கு நம் மீது அக்கறை இருக்கிறது என்பதற்கு பலமான அத்தாட்சியை இங்கு காண்கிறோம். தமது பங்கில் பெரும் தியாகத்தை செய்து, மனிதகுலத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்குத் தேவையான ஒன்றை கடவுள் கொடுத்தார். மீட்பதற்கான விலை இயேசுவின் பரிபூரண உயிர், அதை நமக்காக மனப்பூர்வமாய் கொடுத்தார். (ரோமர் 3:24) எனவே அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இத்தகைய தலைசிறந்த அன்பின் காரணமாக, என்றென்றும் வாழும் நம்பிக்கை நமக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. “ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று” என பவுல் ரோமருக்கு எழுதினார்.​—ரோமர் 5:⁠18.

கடவுளுடைய ஏற்ற காலத்தில், இந்தப் பூமியில் துன்பமோ மரணமோ இல்லாமல் போகும் என நாம் உறுதியாக நம்பலாம். அப்பொழுது, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்ட நிலைமைகளே இருக்கும்: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) ‘அப்படிப்பட்ட நிலைமை வரும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்’ என நீங்கள் கூறலாம். ஆனால், உண்மை என்னவென்றால், நீங்கள் உயிருடன் இருக்கக்கூடும். அதோடு, நீங்கள் மரித்தாலும்கூட மரணத்திலிருந்து கடவுளால் உங்களை உயிருடன் எழுப்ப முடியும். (யோவான் 5:28, 29) அதைச் செய்வதே கடவுள் நமக்காக கொண்டிருக்கும் நோக்கம், அது கண்டிப்பாக நிறைவேறும். ஆகவே, மனிதகுலத்தின் மீது கடவுளுக்கு அக்கறையே இல்லை என்று சொல்வது எந்தளவு உண்மைக்கு புறம்பாக இருக்கிறது!

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள்”

நீடித்த பலன் தரும் வகையில் மனித துயரங்களுக்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை கடவுள் ஏற்கெனவே ஏற்பாடு செய்துவிட்டார் என்பதை அறிவது ஆறுதலாக இருக்கிறது. ஆனால் தற்போதைய நிலைமையைப் பற்றியென்ன? அன்பானவரை மரணத்தில் இழந்தால் அல்லது நம்முடைய பிள்ளை நோய்வாய்ப்பட்டால் நாம் என்ன செய்யலாம்? வியாதியையும் மரணத்தையும் ஒழிப்பதற்குரிய கடவுளுடைய நேரம் இன்னும் வரவில்லை. அதை தீர்ப்பதற்கு நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டுமென பைபிள் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் கடவுள் நம்மை கைவிட்டுவிடவில்லை. “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என சீஷனாகிய யாக்கோபு கூறினார். (யாக்கோபு 4:8, NW) ஆம், தனிப்பட்ட விதமாக நாம் படைப்பாளருடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்வதற்கு அவர் நம்மை அழைக்கிறார், இத்தகைய உறவை வைத்திருப்பவர்கள் மிகவும் கடினமான சூழ்நிலைமைகளிலும்கூட அவருடைய ஆதரவை எப்பொழுதும் உணருவார்கள்.

நாம் எவ்வாறு கடவுளிடம் நெருங்கி வர முடியும்? சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாவீது ராஜா பின்வரும் இந்தக் கேள்வியைக் கேட்டார்: “கர்த்தாவே, . . . யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?” (சங்கீதம் 15:1) தொடர்ந்து அவரே இவ்வாறு சொல்லி தனது கேள்விக்குரிய பதிலை அளித்தார்: “உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும் . . . இருக்கிறான்.” (சங்கீதம் 15:2, 3) வேறு வார்த்தையில் சொன்னால், ஆதாமும் ஏவாளும் நிராகரித்த பாதையை பின்பற்றுகிறவர்களை யெகோவா வரவேற்கிறார். அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களிடம் அவர் நெருங்கி வருகிறார்.​—உபாகமம் 6:24, 25; 1 யோவான் 5:⁠3.

நாம் எவ்வாறு கடவுளுடைய சித்தத்தைச் செய்யலாம்? ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக நன்மையும் பிரியமுமாயிருக்கிறதை’ நாம் கற்றுக்கொண்டு அதன்படி செய்ய விரும்ப வேண்டும். (1 தீமோத்தேயு 2:3) இதற்காக கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (யோவான் 17:3; 2 தீமோத்தேயு 3:16, 17) மேலோட்டமாக பைபிளை வாசிப்பதைவிட இதில் நிறைய விஷயங்கள் உட்பட்டுள்ளன. பவுலின் பிரசங்கத்தைக் கேட்ட பெரோயாவில் வாழ்ந்த முதல் நூற்றாண்டு யூதர்களை நாம் பின்பற்ற வேண்டும். ‘அந்தப் பட்டணத்தார் மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்’ என அவர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம்.​—அப்போஸ்தலர் 17:⁠11.

அதைப் போலவே இன்றும், பைபிளை கவனமாக ஆராய்ச்சி செய்வது கடவுள் மீது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது, அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வதற்கும் நமக்கு உதவுகிறது. (எபிரெயர் 11:6) யெகோவா எவ்வாறு மனிதரை நடத்துகிறார்​—⁠குறுகிய கால நன்மைகளுக்கு மட்டுமல்ல நல்மனமுடையவர்களின் நீடித்தகால நன்மைக்கு​—⁠என்பதை துல்லியமாக புரிந்துகொள்ளவும் அது நமக்கு உதவுகிறது.

கடவுளுடன் நெருங்கிய உறவை அனுபவித்து மகிழும் கிறிஸ்தவர்கள் சிலர் சொல்வதை கவனியுங்கள். “நான் யெகோவாவை ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன், அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என 16 வயது டான்யெல் கூறுகிறாள். “உள்ளப்பூர்வமாக நேசிக்கிற அன்புள்ள பெற்றோர்களை எனக்கு கொடுத்திருக்கிறார், அவருடைய வார்த்தைக்கு இசைய வாழ அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.” உருகுவே நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர் இவ்வாறு எழுதுகிறார்: “என்னுடைய இருதயம் நன்றியுணர்வால் பொங்கி வழிகிறது, யெகோவாவின் அன்புள்ள தயவும் அவருடைய நட்பும் அவருக்கு நன்றி செலுத்த என்னைத் தூண்டுகிறது.” சிறுபிள்ளைகளையும்கூட கடவுள் தம்மிடம் வரவேற்கிறார். ஏழு வயது காப்ரியேல்லா சொல்கிறாள்: “இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும்விட கடவுளை நான் அதிகமாக நேசிக்கிறேன்! எனக்கென்று சொந்தமாக பைபிள் இருக்கிறது. கடவுளையும் அவருடைய குமாரனையும் பற்றி தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்.”

“எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்” என்று சங்கீதக்காரன் சொன்னதை இன்று லட்சோபலட்சம் பேர் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறார்கள். (சங்கீதம் 73:28) இப்பொழுது வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவி கிடைத்திருக்கிறது, பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழும் உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. (1 தீமோத்தேயு 4:8) ‘கடவுளிடம் நெருங்கி வருவதை’ உங்களுடைய இலக்காகவும் நீங்கள் ஏன் வைத்துக்கொள்ளக் கூடாது? உண்மையில், “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என பைபிள் உறுதியளிக்கிறது. (அப்போஸ்தலர் 17:27) ஆம், உண்மையிலேயே கடவுளுக்கு உங்கள் மீது அக்கறை இருக்கிறது!

[பக்கம் 5-ன் படங்கள்]

யெகோவாவுக்கு நம் மீது அக்கறை இருக்கிறது என்பதை அநேக வழிகளில் காணலாம்

[பக்கம் 7-ன் படம்]

சிறுபிள்ளைகளும்கூட கடவுளிடம் நெருங்கிவர முடியும்

[பக்கம் 7-ன் படங்கள்]

சகித்திருக்க யெகோவா நமக்கு இன்று உதவுகிறார். ஏற்ற காலத்தில், வியாதியையும் மரணத்தையும் நீக்கிவிடுவார்