Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

2 கொரிந்தியர் 6:14-ல், ‘அவிசுவாசிகள்’ என பவுல் யாரை குறிப்பிடுகிறார்?

“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளோடு பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என 2 கொரிந்தியர் 6:14-ல் வாசிக்கிறோம். இந்த வசனத்தின் சூழலை கவனிக்கையில், கிறிஸ்தவ சபையின் பாகமல்லாதவர்களைப் பற்றியே பவுல் பேசுகிறார் என தெளிவாக தெரிந்துகொள்ளலாம். ‘அவிசுவாசி’ அல்லது ‘அவிசுவாசிகள்’ என பவுல் குறிப்பிட்டிருக்கும் மற்ற பைபிள் வசனங்களும் இந்த அர்த்தத்தையே ஆதரிக்கின்றன.

உதாரணமாக, “அவிசுவாசிகளுக்கு முன்பாக” நீதிமன்றங்களுக்கு செல்வதைப் பற்றி கிறிஸ்தவர்களை பவுல் வன்மையாக கண்டிக்கிறார். (1 கொரிந்தியர் 6:6) இங்கே, கொரிந்து நீதித் துறையில் நீதிபதிகளாக சேவித்தவர்களே அவிசுவாசிகள். தனது இரண்டாவது கடிதத்தில், சாத்தான் ‘அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கியிருக்கிறான்’ என பவுல் கூறுகிறார். அப்படிப்பட்ட அவிசுவாசிகளின் கண்கள் நற்செய்தியை காணாதபடி ‘முக்காடிடப்பட்டுள்ளன.’ யெகோவாவுக்கு சேவை செய்ய எவ்வித ஆர்வத்தையும் இந்த அவிசுவாசிகள் காட்டவில்லை. ஏனெனில் ‘கர்த்தரிடத்தில் திரும்பும்போது, முக்காடு எடுபட்டுப்போம்’ என பவுல் முன்னர் விளக்குகிறார்.​—2 கொரிந்தியர் 3:16; 4:⁠4.

அவிசுவாசிகளில் சிலர் அக்கிரமக்காரராகவோ விக்கிரக வழிபாட்டினராகவோ இருக்கலாம். (2 கொரிந்தியர் 6:15, 16) என்றாலும், எல்லாருமே யெகோவாவின் ஊழியர்களை எதிர்ப்பதில்லை. அவர்களிலும் சிலர் சத்தியத்திற்கு ஆர்வம் காட்டுகின்றனர். கிறிஸ்தவர்களாக மாறிய தங்கள் மணத் துணைகளோடு அநேகர் சந்தோஷமாக குடும்பம் நடத்துகின்றனர். (1 கொரிந்தியர் 7:12-14; 10:27; 14:22-25; 1 பேதுரு 3:1, 2) என்றாலும், மேலே குறிப்பிட்டபடி, ‘அவிசுவாசிகள்’ என்ற பதத்தை கிறிஸ்தவ சபையில் இல்லாதவர்களுக்கே பவுல் எப்போதும் பயன்படுத்துகிறார்; ஏனென்றால் ‘கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களால்’ ஆனதே கிறிஸ்தவ சபை.​—அப்போஸ்தலர் 2:41; 5:14; 8:12, 13.

2 கொரிந்தியர் 6:14-ல் உள்ள நியமம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கிறிஸ்தவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. முக்கியமாக திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஞானமான ஆலோசனை வழங்குகிறது. (மத்தேயு 19:4-6) முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர் அவிசுவாசியை துணையாக நிச்சயம் தேர்ந்தெடுக்க மாட்டார்; ஏனென்றால் நம்பிக்கைகள், நெறிமுறைகள், வாழ்க்கையின் லட்சியங்கள் அனைத்திலும் மெய்க் கிறிஸ்தவர்களுக்கும் அவிசுவாசிகளுக்கும் மிகப் பெரிய வேற்றுமை இருக்கிறது.

கிறிஸ்தவ சபைக் கூட்டங்களுக்கு வரும் பைபிள் மாணாக்கர்களைப் பற்றியென்ன? முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களும் அவிசுவாசிகளா? இல்லை. சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, முழுக்காட்டுதல் பெற முன்னேறும் நபர்களை அவிசுவாசிகள் என அழைக்கக் கூடாது. (ரோமர் 10:10; 2 கொரிந்தியர் 4:13) ‘தேவ பக்தியுள்ளவன், தேவனுக்குப் பயந்தவன்’ என கொர்நேலியு முழுக்காட்டுதலுக்கு முன்னரே அழைக்கப்பட்டார்.​—அப்போஸ்தலர் 10:⁠2.

அப்படியெனில், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக அறிவிக்கப்பட்ட ஒருவருடன் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர் திருமண நோக்குடன் பழகலாமா? 2 கொரிந்தியர் 6:14-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் அறிவுரை இந்த சந்தர்ப்பத்தில் பொருந்தாது என்பதால் அது சரியாகுமா? இல்லை, அது ஞானமானதல்ல. ஏன்? கிறிஸ்தவ விதவைகளுக்கு பவுல் கொடுத்த நேரடியான புத்திமதியை சற்று கவனியுங்கள். ‘தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம் பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்’ என பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 7:39) இந்த ஆலோசனைப்படி, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் ‘கர்த்தருக்குட்பட்ட’ ஒருவரையே திருமணம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

“கர்த்தருக்குள்” என்ற பதத்தின் அர்த்தம் என்ன? அதனுடன் சம்பந்தப்பட்ட பதமாகிய “கிறிஸ்துவுக்குள்” என்பதன் பொருள் என்ன? ரோமர் 16:8-10 மற்றும் கொலோசெயர் 4:7-ல், “கர்த்தருக்குள்” அல்லது “கிறிஸ்துவுக்குள்” உட்பட்டவர்களைப் பற்றி பவுல் பேசுகிறார். அவர்கள் ‘உடன் வேலையாட்கள்,’ ‘அங்கீகரிக்கப்பட்டவர்கள்’ (NW), ‘பிரியமான சகோதரர்கள்,’ ‘உண்மையுள்ள ஊழியக்காரர்கள்,’ ‘உடன் அடிமைகள்’ (NW) என்பதை இந்த வசனங்களைப் படிக்கையில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

எப்போது ஒருவர் ‘கர்த்தருக்குள் அடிமை’ (NW) ஆகிறார்? தன்னலம் துறந்து ஓர் அடிமை எதை செய்ய வேண்டுமோ அதை மனமுவந்து செய்யும்போது அவர் கர்த்தருக்குள் அடிமை ஆகிறார். ‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்’ என இயேசு விளக்குகிறார். (மத்தேயு 16:24, பொது மொழிபெயர்ப்பு) ஒருவர் தன்னை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கையில், கிறிஸ்துவைப் பின்பற்றி கடவுளுடைய சித்தத்திற்கு தன்னை முழுமையாக கீழ்ப்படுத்த ஆரம்பிக்கிறார். அதன் பின்னர் முழுக்காட்டுதல் பெற்று நியமிக்கப்பட்ட ஊழியராகிறார்; யெகோவா தேவனுக்கு முன்பு ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிலையை அடைகிறார். * எனவே, ‘கர்த்தருக்குட்பட்டவரை விவாகம் பண்ணுதல்’ என்பது தன்னை உண்மையிலேயே ஒரு மெய்யான விசுவாசியாக நிரூபித்தவரை விவாகம் செய்வதை அர்த்தப்படுத்துகிறது; அதாவது, ‘தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாக’ ஒப்புக்கொடுத்தவரை குறிக்கிறது.​—யாக்கோபு 1:⁠1.

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்து ஆன்மீக ரீதியில் நன்கு முன்னேறி வரும் ஒருவர் பாராட்டுக்குரியவரே. என்றாலும், அவர் இன்னும் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை; தியாகத்திற்குரிய ஊழிய வாழ்க்கைக்கு இன்னும் தன்னை அர்ப்பணிக்கவில்லை. தேவையான சில மாற்றங்களை இன்னும் செய்து கொண்டே இருக்கிறார். வாழ்க்கையின் மற்றொரு மிகப் பெரிய தீர்மானமாகிய திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன் அவர் செய்ய வேண்டிய பெரிய மாற்றங்கள் சில இன்னும் உள்ளன. அதாவது, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு அந்தப் பெரிய மாற்றங்களை அவர் செய்தாக வேண்டும்.

பைபிள் படிப்பில் நன்றாக முன்னேறி வரும் ஒருவர் முழுக்காட்டுதல் எடுக்கும்வரை காத்திருந்து அவரை திருமணம் செய்யும் நோக்கோடு ஒரு கிறிஸ்தவர் அவருடன் பழகலாமா? கூடாது. ஏனெனில் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர் ஒருவர் தன்னை மணக்க விரும்புகிறார் என்றும், தான் முழுக்காட்டுதல் பெறும்வரை மணமுடிக்க மாட்டார் என்றும் அந்த மாணாக்கருக்கு தெரிய வரும்போது, அவர் என்ன நோக்கத்தோடு கிறிஸ்தவராகிறார் என்பதே சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடலாம்.

பொதுவாக, முன்னேற்றம் செய்து முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பு குறுகிய காலப்பகுதிதான் ஒருவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருக்கிறார். ஆகவே, கர்த்தருக்குள் விவாகம் பண்ணுங்கள் என மேலே சொல்லப்பட்ட ஆலோசனை நியாயமானதே. அப்படியானால், கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டு, சில வருடங்கள் சபையோடு கூட்டுறவு கொண்டு, இப்போது திருமண வயதாகும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருக்கும் ஒருவரை காதலிப்பதைப் பற்றியதென்ன? இந்த சந்தர்ப்பத்திலும் சிந்திக்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. இதுவரை யெகோவாவுக்கு தன் ஜீவனை ஒப்புக்கொடுக்காமல் இருக்க அவரை எது தடுக்கிறது? ஏன் தயங்குகிறார்? சந்தேகத்தினாலா? அவரை அவிசுவாசி என சொல்ல முடியாது; ஆனால் அதேசமயம் ‘கர்த்தருக்கு உட்பட்டவர்’ என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

திருமணத்தைப் பற்றிய பவுலின் அறிவுரை நம் நன்மைக்கே. (ஏசாயா 48:17) திருமணம் செய்யப்போகும் இருவருமே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்தால், அவர்களது திருமண பந்தம் ஸ்திரமாகவும் ஆன்மீக அஸ்திவாரம் போடப்பட்டதாகவும் இருக்கும். வாழ்க்கையில் இருவருடைய நெறிமுறைகளும் லட்சியங்களும் ஒரேவிதமாக இருக்கும். மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு இது மிக மிக முக்கியம். அதுமட்டுமல்ல, ‘கர்த்தருக்கு உட்பட்டவரை’ மணப்பதால், அவ்விருவரும் யெகோவாவுக்கு தங்களுடைய உத்தமத்தை நிரூபிக்கின்றனர்; இதனால் நிரந்தரமான ஆசீர்வாதங்களையும் அனுபவிப்பர். ஏனெனில் யெகோவா “உத்தமனுக்கு . . . உத்தமராக” இருக்கிறார்.​—சங்கீதம் 18:⁠25.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 10 அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கே பவுல் இதை எழுதினார்; ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை ‘கர்த்தருக்குள் அடிமை’ என்பது கடவுளுடைய குமாரராகவும் கிறிஸ்துவின் சகோதரராகவும் அபிஷேகம் பண்ணப்படுவதையும் அர்த்தப்படுத்தியது.

[பக்கம் 31-ன் படம்]

யெகோவா “உத்தமனுக்கு . . . உத்தமராக” இருக்கிறார்