Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் அற்புதங்கள்—நிஜமா கட்டுக்கதையா?

இயேசுவின் அற்புதங்கள்—நிஜமா கட்டுக்கதையா?

இயேசுவின் அற்புதங்கள்—நிஜமா கட்டுக்கதையா?

‘பிசாசு பிடித்திருந்த அநேகரை [இயேசு கிறிஸ்துவினிடத்தில்] ஜனங்கள் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.’ (மத்தேயு 8:16) “அவர் [இயேசு] எழுந்து, காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.” (மாற்கு 4:39) இந்த அறிக்கைகளைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? இவையெல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்த சரித்திரப்பூர்வ சம்பவங்கள் என நீங்கள் நம்புகிறீர்களா, அல்லது இவை வெறும் உருவகக் கதைகள், கட்டுக்கதைகள் என நினைக்கிறீர்களா?

இயேசு நடப்பித்த அற்புதங்கள் எந்தளவு சரித்திரப்பூர்வமானவை என்பதைக் குறித்து இன்றைக்கு அநேகர் பெரும் சந்தேகங்களை கிளப்பியிருக்கிறார்கள். தொலைநோக்கி, நுண்ணோக்கி, விண்வெளி ஆராய்ச்சி, மரபணு பொறியியல் போன்றவற்றில் மனிதர் தடம் பதித்திருக்கும் இன்றைய நவீன சகாப்தத்தில், அற்புதங்களையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் நம்புவது மக்களுக்கு அபத்தமாக தோன்றுகிறது.

அற்புதங்களைப் பற்றிய பதிவுகளெல்லாம் கற்பனை கதைகள் அல்லது உருவகக் கதைகள் என சிலர் நினைக்கின்றனர். “நிஜமான” இயேசுவை ஆராய்வதாக உரிமை பாராட்டும் ஓர் ஏட்டின் எழுத்தாளர், கிறிஸ்து நடப்பித்த அற்புதங்களைப் பற்றிய கதைகளெல்லாம் கிறிஸ்தவத்தை பரப்புவதற்குரிய “வெறும் விளம்பரங்களே” என கூறுகிறார்.

இயேசு செய்த அற்புதங்களை அப்பட்டமான பித்தலாட்டங்கள் என மற்றவர்கள் கருதுகிறார்கள். இயேசு ஒரு ஏமாற்றுக்காரர் என சில சமயங்களில் குற்றம் சாட்டப்படுகிறார். இயேசுமீது குறைகண்டவர்கள் “அவரை மந்திரவாதி என்றும் மக்களை ஏமாற்றுபவன் என்றும்கூட அழைத்தார்கள்” என பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜஸ்டின் மார்டையர் கூறினார். இயேசு “யூத தீர்க்கதரிசியாக இந்த அற்புதங்களை நடப்பிக்கவில்லை, ஆனால் ஒரு மந்திரவாதியாக புறமத கோவில்களில் வேறொருவரால் பயிற்றுவிக்கப்பட்டார்” என சிலர் வாதிடுகின்றனர்.

சாத்தியமற்றது என்பதற்குரிய விளக்கம்

ஜனங்கள் அற்புதங்களை நம்பாததற்கான அடிப்படை காரணத்தை இப்படிப்பட்ட சந்தேகங்கள் வெளிப்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளால் இத்தகைய அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதே அவர்களுக்கு கடினம்; அது சாத்தியமே இல்லை என்றுகூட அவர்கள் கருதுகிறார்கள். அறியொணாமை வாதி என தன்னை சொல்லிக்கொள்ளும் ஓர் இளைஞன், “அற்புதங்கள் எந்தக் காலத்திலும் நடப்பது கிடையாது” என கூறினான். பிறகு, 18-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்காட்லாந்து தத்துவஞானி டேவிட் ஹியூம் எழுதியதை மேற்கோள் காட்டி, “அற்புதம் என்பது இயற்கை விதிகளை மீறுவதாகும்” என்றான்.

ஆனால், அசாதாரணமான ஒரு நிகழ்ச்சி நடக்கவே நடக்காது என அடித்துக் கூறாதிருக்கும்படி அநேகர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அற்புதம் என்பது “அறியப்பட்ட இயற்கை விதிகளைக் கொண்டு விளக்க முடியாத ஒரு நிகழ்ச்சி” என தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா அழைக்கிறது. இந்த விளக்கத்தின்படி பார்த்தால், விண்வெளிப் பயணம், வயர்லெஸ் தொடர்பு, செயற்கைக்கோள் உதவியால் திசையறிதல் ஆகிய அனைத்தும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் பெரும்பாலோருக்கு “அற்புதங்களாகவே” தோன்றியிருக்கும். ஆகவே, தற்போதைய அறிவை வைத்து நம்மால் விளக்க முடியாததால் அற்புதங்கள் நிகழ சாத்தியமில்லை என சொல்வது நிச்சயமாகவே ஞானமற்றது.

இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களோடு சம்பந்தப்பட்ட வேதப்பூர்வ அத்தாட்சிகள் சிலவற்றை நாம் ஆராய்ந்தால் எதை கண்டுபிடிப்போம்? இயேசு நடப்பித்த அற்புதங்கள் நிஜமானவையா அல்லது கட்டுக்கதையா?