Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் அற்புதங்கள்—நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இயேசுவின் அற்புதங்கள்—நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இயேசுவின் அற்புதங்கள்—நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றிய பைபிள் பதிவுகளில் “அற்புதம்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்படவில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். “அற்புதம்” என சிலசமயங்களில் மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தை (தீனாமிஸ்) சொல்லர்த்தமாக “வல்லமை” என பொருள்படுகிறது. (லூக்கா 8:46) அதை “திறமை” அல்லது ‘பலத்த செய்கைகள்’ என்றும் மொழிபெயர்க்கலாம். (மத்தேயு 11:20; 25:15) இந்தக் கிரேக்க வார்த்தை, “நடப்பிக்கப்பட்ட பலத்த செயலை வலியுறுத்துகிறது, முக்கியமாக அது எந்த வல்லமையால் நிறைவேற்றப்பட்டதோ அதை வலியுறுத்துகிறது. கடவுளுடைய வல்லமை செயலில் வெளிப்பட்டதாக அந்த சம்பவம் விவரிக்கப்படுகிறது” என அறிஞர் ஒருவர் கூறுகிறார்.

மற்றொரு கிரேக்க வார்த்தை (டெராஸ்) பொதுவாக ‘வியத்தகு செயல்கள்’ என்றோ ‘அதிசயம்’ என்றோ மொழிபெயர்க்கப்படுகிறது. (யோவான் 4:48, NW; அப்போஸ்தலர் 2:19, NW) பார்வையாளர்மீது ஏற்பட்ட தாக்கத்தை இந்தப் பதம் சிறப்பித்துக் காட்டுகிறது. இயேசு நடப்பித்த வல்லமையான செயல்களைக் கண்ட கூட்டத்தாரும் சீஷர்களும் அடிக்கடி ஆச்சரியப்பட்டார்கள், வியந்தார்கள்.​—மாற்கு 2:12; 4:41; 6:51; லூக்கா 9:⁠43.

இயேசுவின் அற்புதங்களை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் மூன்றாவது கிரேக்கப் பதம் (சிமியான்) ஓர் ‘அடையாளத்தைக்’ குறிக்கிறது. “இது, அற்புதத்தின் ஆழமான அர்த்தத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது” என ராபர்ட் டெஃபின்பாவ் என்ற அறிஞர் கூறுகிறார். “ஓர் அடையாளம் என்பது நமது கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய சத்தியத்தை வெளிப்படுத்தும் ஓர் அற்புதம்” என அவர் மேலும் கூறுகிறார்.

மாயத்தோற்றமா கடவுளால் அருளப்பட்ட வல்லமையா?

மக்களை மகிழ்விப்பதற்காக செய்யப்பட்ட மாயவித்தைகளாகவோ மாயத்தோற்றங்களாகவோ இயேசுவின் அற்புதங்களை பைபிள் வர்ணிப்பதில்லை. ஒரு சிறுவனிடமிருந்து பிசாசை இயேசு துரத்திய சம்பவத்தில் நடந்ததைப் போல, அவை ‘தேவனுடைய மகத்துவத்தின்’ வெளிக்காட்டுகளாக இருந்தன. (லூக்கா 9:37-43) இத்தகைய வல்லமையான செயல்கள் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு​—⁠‘மகா பெலமுடைய’ ஒருவராக வர்ணிக்கப்படுகிறவருக்கு​—⁠முடியாத ஒன்றா? (ஏசாயா 40:26) நிச்சயமாகவே இல்லை!

இயேசு நடப்பித்த சுமார் 35 அற்புதங்களை சுவிசேஷ பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அவர் செய்த அற்புதங்களின் மொத்த எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. உதாரணமாக, மத்தேயு 14:14 இவ்வாறு கூறுகிறது: “இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.” அந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனை வியாதியஸ்தரை அவர் சுகப்படுத்தினார் என்பது நமக்கு சொல்லப்படவில்லை.

தாம் கடவுளுடைய குமாரன், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை இயேசு நிரூபிப்பதற்கு இத்தகைய அற்புதமான செயல்கள் அவசியமாக இருந்தன. கடவுளுடைய வல்லமையால்தான் இயேசு அற்புதங்கள் செய்தார் என்பதை வேதவசனங்களும் உறுதிப்படுத்துகின்றன. “நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்” என அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 2:22) “இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” என மற்றொரு சந்தர்ப்பத்தில் பேதுரு சுட்டிக்காட்டினார்.​—அப்போஸ்தலர் 10:37, 38.

இயேசு நடப்பித்த அற்புதங்கள் அவருடைய செய்தியுடன் பின்னிப்பிணைந்திருந்தன. இயேசுவின் செய்திக்கும் அவருடைய அற்புதங்களில் ஒன்றுக்கும் மக்கள் எப்படி பிரதிபலித்தனர் என்பதை மாற்கு 1:21-27 வெளிப்படுத்துகிறது. “அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்” என மாற்கு 1:22 கூறுகிறது. அவர் ஒரு பேயை விரட்டியபோது மக்கள் ‘ஆச்சரியப்பட்டதாக’ 27-⁠ம் வசனம் குறிப்பிடுகிறது. இயேசுவின் வல்லமையான செயல்களும் அவருடைய செய்தியும் அவரே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதற்கு அத்தாட்சி அளித்தன.

தாமே மேசியா என்று இயேசு வெறுமனே உரிமை பாராட்டவில்லை; மாறாக, அவரது வார்த்தைகள் மற்றும் செயல்களோடுகூட, அற்புதங்கள் வாயிலாக வெளிப்பட்ட கடவுளுடைய வல்லமை அவரே மேசியா என்பதற்கு அத்தாட்சி அளித்தது. அவர் வகித்த பாகத்தையும் அதிகாரத்தையும் பற்றி கேள்விகள் எழுந்தபோது, முழுக்காட்டுபவரான “யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்து வருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறது” என இயேசு தைரியமாக பதிலளித்தார்.​—யோவான் 5:⁠36.

நம்பகத்தன்மைக்கு சான்றுகள்

இயேசுவின் அற்புதங்கள் நிஜமானவை, நம்பகமானவை என நாம் எப்படி உறுதியாக சொல்ல முடியும்? அவற்றின் நம்பகத்தன்மைக்கு சான்றுகள் சிலவற்றை இப்பொழுது கவனியுங்கள்.

வல்லமை வாய்ந்த கிரியைகளைச் செய்தபோது, இயேசு ஒருபோதும் மற்றவர்களுடைய கவனத்தை தம்மிடம் ஈர்க்கவில்லை. எந்தவொரு அற்புதத்திற்குரிய மகிமையும் புகழும் கடவுளுக்கே சேரும்படி பார்த்துக்கொண்டார். உதாரணமாக, பார்வையிழந்த ஒருவனை சுகப்படுத்துவதற்கு முன்பு, ‘தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு’ இந்தச் சுகப்படுத்துதல் நடைபெறும் என அவர் வலியுறுத்திக் கூறினார்.​—யோவான் 9:1-3; 11:1-4.

மந்திரவாதிகள், மாயவித்தைக்காரர்கள், விசுவாச சுகப்படுத்துதல் செய்பவர்கள் ஆகியோரைப் போல இயேசு ஒருபோதும் ஹிப்னாடிஸத்தையோ, கண்கட்டு வித்தையையோ, பிரமாண்டமான காட்சிகளையோ, மந்திர வசியங்களையோ, உணர்ச்சிகளைத் தூண்டும் சடங்குகளையோ பயன்படுத்தவில்லை. மூடநம்பிக்கையை அல்லது புனித சின்னங்களை அவர் நாடவில்லை. எந்த ஆரவாரமுமின்றி குருடர்கள் இருவரை இயேசு குணப்படுத்தியதைக் கவனியுங்கள்: “இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்” என பதிவு சொல்கிறது. (மத்தேயு 20:29-34) எந்தவித சடங்கோ பகட்டோ இதில் இல்லை. இயேசு தமது அற்புதங்களை வெளிப்படையாக செய்தார், பெரும்பாலும் அநேக ஆட்களின் முன்னிலையில் நடப்பித்தார். எந்தவித விசேஷ ஒளிகளையோ மேடை அமைப்புகளையோ அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் நவீன காலத்தில் நடப்பிக்கப்படுவதாக சொல்லப்படும் பெரும்பாலான அற்புதங்கள் நம்பகமானவையாக பதிவு செய்யப்பட முடியாதவை.​—மாற்கு 5:24-29; லூக்கா 7:11-15.

தாம் நடப்பித்த அற்புதங்களால் பயனடைந்தவர்களுக்கு விசுவாசம் இருந்ததை இயேசு சிலசமயங்களில் ஒத்துக்கொண்டார். ஆனால் ஒருவருடைய விசுவாச குறைவு அற்புதம் செய்ய இயேசுவுக்குத் தடையாக இருக்கவில்லை. கலிலேயாவிலுள்ள கப்பர்நகூமில் இருந்தபோது, ‘பிசாசு பிடித்திருந்த அநேகரை ஜனங்கள் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகள் எல்லாரையும் சொஸ்தமாக்கினார்.’​—மத்தேயு 8:⁠16.

இயேசுவின் அற்புதங்களெல்லாம் ஜனங்களுடைய சரீர தேவைகளைத் திருப்திப்படுத்துவதற்கே செய்யப்பட்டன, பார்வையாளர்களுடைய ஆர்வத்தை திருப்திப்படுத்துவதற்கு அல்ல. (மாற்கு 10:46-52; லூக்கா 23:8) எவ்விதத்திலும் தனிப்பட்ட வகையில் பயனடைய இயேசு அற்புதங்கள் செய்யவே இல்லை.​—மத்தேயு 4:2-4; 10:⁠8.

சுவிசேஷ பதிவுகள் நம்பகமானவையா?

இயேசு செய்த அற்புதங்களைப் பற்றிய உண்மைகள் நான்கு சுவிசேஷ பதிவுகள் மூலம் நமக்கு கிடைத்துள்ளன. இயேசு செய்ததாக சொல்லப்படும் அற்புதங்களைப் பற்றிய இந்தப் பதிவுகள் நம்பகமானவை என்பதற்கு காரணங்கள் இருக்கின்றனவா? ஆம், இருக்கின்றன.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இயேசுவின் அற்புதங்கள் பொது மக்கள் காண அவர்கள் முன்னிலையில் நடப்பிக்கப்பட்டன. கண்கண்ட சாட்சிகள் பெரும்பாலோர் உயிரோடிருக்கையிலேயே ஆரம்ப சுவிசேஷங்கள் எழுதப்பட்டன. சுவிசேஷ எழுத்தாளர்களுடைய நேர்மையைப் பற்றி அற்புதங்களும் உயிர்த்தெழுதலும் என்ற ஆங்கில நூல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மத நம்பிக்கைகளைப் பரப்புவதற்காக சரித்திர உண்மைகளை மறைத்து அற்புதங்களைப் பற்றிய கதைகளை சுவிசேஷகர்கள் புனைந்து எழுதியதாக குற்றம்சாட்டுவது அநீதியிலும் அநீதி. . . . நேர்மையுடன் பதிவு செய்வதே சுவிசேஷ எழுத்தாளர்களின் நோக்கமாக இருந்தது.”

கிறிஸ்தவ மதத்தை எதிர்த்த யூத விரோதிகள் சுவிசேஷகங்களில் விவரிக்கப்பட்டுள்ள வல்லமையான செயல்களை எதிர்த்து ஒருபோதும் சவால்விடவில்லை. இவையெல்லாம் எந்த வல்லமையால் செய்யப்பட்டன என்பதைப் பற்றித்தான் கேள்வி எழுப்பினார்கள். (மாற்கு 3:22-26) பிற்காலத்தில் குறைகண்டவர்களும்கூட இயேசுவின் அற்புதங்களை மறுக்க முடியவில்லை. மாறாக, பொ.ச. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில், இயேசு நடப்பித்த அற்புதங்களைப் பற்றிய குறிப்புரைகள் இருந்தன. அவருடைய அற்புதங்களைப் பற்றிய சுவிசேஷ பதிவுகள் நம்பகமானவை என்பதற்கு நம்மிடம் தகுந்த காரணங்கள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

அற்புதங்களை நடப்பித்த அந்த மனிதர்

இயேசுவின் அற்புதங்கள் எந்தளவு நம்பகமானவை என்ற தர்க்கரீதியான விவாதத்திற்கு மட்டுமே அவற்றை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சி முழுமை பெற்றதாக இருக்காது. இயேசு செய்த அற்புதங்களை சுவிசேஷங்கள் விவரிக்கும்போது, சக மனிதருடைய நலனில் அதிக அக்கறை கொண்ட, ஆழ்ந்த உணர்ச்சிகளும் ஈடற்ற இரக்கமுமுடைய ஒரு மனிதராக அவரை சித்தரிக்கின்றன.

“உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என இயேசுவிடம் வேண்டிக்கொண்ட குஷ்டரோகியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். “இயேசு மனதுருகி” தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார். அந்த மனிதன் உடனடியாக குணமடைந்தான். (மாற்கு 1:40-42) இந்த விதமாக இயேசு அனுதாபத்தை வெளிக்காட்டினார், அந்த அனுதாபமே அற்புதங்களை செய்ய கடவுள் கொடுத்த வல்லமையைப் பயன்படுத்துவதற்கு அவரைத் தூண்டியது.

நாயீன் ஊரிலிருந்து வந்து கொண்டிருந்த சவ ஊர்வலத்தை இயேசு எதிர்ப்பட்டபோது என்ன நிகழ்ந்தது? விதவையாக இருந்த தாயின் ஒரே மகனுடைய சவ ஊர்வலம் அது. இயேசு “மனதுருகி” அந்தத் தாயிடம் சென்று, “அழாதே” என்று சொன்னார். பிறகு அவளுடைய மகனை அவர் உயிர்த்தெழுப்பினார்.​—லூக்கா 7:11-15.

இயேசு “மனதுருகி” மக்களுக்கு உதவிகள் செய்தார் என்பதே அவருடைய அற்புதங்கள் நமக்கு புகட்டும் ஆறுதலான ஒரு பாடம். ஆனால் இத்தகைய அற்புதங்கள் வெறும் சரித்திர பதிவுகள் அல்ல. “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என எபிரெயர் 13:8 கூறுகிறது. இப்பொழுது அவர் பரலோக ராஜாவாக ஆட்சி செய்கிறார்; கடவுளால் கொடுக்கப்பட்ட வல்லமையைப் பயன்படுத்தி மனிதராக பூமியில் வாழ்ந்தபோது செய்த அற்புதங்களைவிட மாபெரும் அற்புதங்களை மகத்தான அளவில் செய்ய தயாராக இருக்கிறார், அவற்றை அவரால் செய்யவும் முடியும். விரைவில், கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்தை சுகப்படுத்துவதற்கு அப்படிப்பட்ட வல்லமையை இயேசு பயன்படுத்துவார். இத்தகைய ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கூடுதலாக அறிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் உதவ ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

[பக்கம் 4, 5-ன் படங்கள்]

இயேசு செய்த அற்புதங்கள் ‘தேவனுடைய மகத்துவத்தின்’ வெளிக்காட்டாகும்

[பக்கம் 7-ன் படம்]

இயேசு ஆழ்ந்த உணர்ச்சிகள் நிறைந்தவராக இருந்தார்