Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள்

ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள்

ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள்

“போகும் துறைமுகத்தை அறியாத மனிதனுக்கு காற்று எந்தப் பக்கம் வீசினால் என்ன!” முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம தத்துவஞானி சொன்னதாக கருதப்படும் இவ்வார்த்தைகள், வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க இலக்குகள் மிக அவசியம் என்ற உண்மையை படம்பிடித்துக் காட்டுகின்றன.

இலக்குகளை வைத்து செயல்பட்ட நபர்களின் உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. நோவா சுமார் 50 ஆண்டுகள் வேலை செய்து ‘தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினார்.’ தீர்க்கதரிசியாகிய மோசே ‘இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தார்.’ (எபிரெயர் 11:7, 26) மோசேக்குப் பின் வந்த யோசுவா, கானான் தேசத்தை கைப்பற்ற வேண்டுமென்ற இலக்கை கடவுளிடமிருந்து பெற்றார்.​—⁠உபாகமம் 3:21, 22, 28; யோசுவா 12:7-24.

‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்கும் . . . பிரசங்கிக்கப்படும்’ என்ற இயேசுவின் இந்த வார்த்தைகள்தான் பொ.ச. முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுலின் ஆன்மீக இலக்குகளுக்கு முக்கிய தூண்டுதலாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. (மத்தேயு 24:14) ‘புறஜாதிகளுக்கு . . . [இயேசுவின்] நாமத்தை அறிவிக்கும்’ பொறுப்பு உட்பட, கர்த்தராகிய இயேசுவே நேரடியாக கொடுத்த செய்திகளாலும் தரிசனங்களாலும் பவுல் உற்சாகத்தைப் பெற்றார்; ஆசியா மைனரிலும் ஐரோப்பாவிலும் அநேக கிறிஸ்தவ சபைகளை ஸ்தாபிப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார்.​—⁠அப்போஸ்தலர் 9:15; கொலோசெயர் 1:22, 23.

ஆம், சரித்திரம் முழுவதிலும் கடவுளுடைய ஊழியர்கள் உயரிய இலக்குகளை வைத்து, கடவுளுக்கு மகிமை உண்டாக அவற்றை எட்டியிருக்கிறார்கள். இன்று நாம் எப்படி ஆன்மீக இலக்குகளை வைக்கலாம்? என்ன இலக்குகளை எட்டுவதற்கு கடினமாய் முயலலாம்? அவற்றை எட்டுவதற்கு என்ன நடைமுறை படிகளை எடுக்கலாம்?

சரியான உள்நோக்கங்கள் தேவை

வாழ்க்கையில் கிட்டத்தட்ட எந்த அம்சத்தை எடுத்துக்கொண்டாலும் இலக்குகளை வைக்கலாம், இந்த உலகிலும்கூட இலக்குகளை வைத்து அதை எட்டியிருக்கும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் தேவராஜ்ய இலக்குகள் உலகப்பிரகாரமான இலட்சியங்களைப் போன்றவை அல்ல. உலகில் பெரும்பாலான இலக்குகளுக்கு, பணப் பித்தும், பதவியையும் அதிகாரத்தையும் பெற வேண்டுமென்ற வெறியுமே முக்கிய உள்நோக்கங்களாக இருக்கின்றன. பேரும் புகழும் அடைவதற்காகவே இலக்கு வைப்பது மகா தவறு! யெகோவா தேவனுக்கு மகிமை சேர்க்கும் இலக்குகள் அவரை வணங்குவதுடனும் ராஜ்ய அக்கறைகளுடனும் நேரடியாக தொடர்புடையவை. (மத்தேயு 6:33) அத்தகைய இலக்குகள் கடவுள் மீதும் அயலார் மீதும் உள்ள அன்பின் அடிப்படையில் உருவாகின்றன; தேவ பக்தியே அவற்றின் நோக்கம்.​—⁠மத்தேயு 22:37-39; 1 தீமோத்தேயு 4:7.

கூடுதல் ஊழிய சிலாக்கியங்களை பெறுவது அல்லது ஆன்மீக விதத்தில் தனிப்பட்ட முன்னேற்றம் செய்வது போன்ற எப்படிப்பட்ட ஆன்மீக இலக்குகளையும் வைத்து அவற்றை எட்டுவதற்கு முயலுகையில், நம்முடைய உள்நோக்கங்கள் தூயதாக இருக்க வேண்டும். இருப்பினும், சரியான உள்நோக்கமுடைய இலக்குகளையும்கூட சில சமயங்களில் அடைய முடியாமல் போகலாம். இலக்குகளை வைத்து, அவற்றை எட்டும் வாய்ப்பை எப்படி அதிகரிக்கலாம்?

பலமான ஆசை வேண்டும்

யெகோவா இந்தப் பிரபஞ்சத்தை எப்படி படைத்தார் என்பதைக் கவனியுங்கள். “சாயங்காலமும் விடியற்காலமுமாகி” என்ற வார்த்தைகளில் படைப்பின் அடுத்தடுத்த காலப்பகுதியை யெகோவா திட்டமாக வரையறுத்தார். (ஆதியாகமம் 1:5, 8, 13, 19, 23, 31) படைப்பின் ஒவ்வொரு காலப்பகுதியின் ஆரம்பத்திலும் அந்த நாளுக்கான தம் இலக்கை அல்லது குறிக்கோளை அவர் நன்கு அறிந்திருந்தார். எல்லாவற்றையும் படைக்கும் தம் நோக்கத்தை கடவுள் நிறைவேற்றினார். (வெளிப்படுத்துதல் 4:11) “எதை அவர் [யெகோவா] விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்” என கோத்திரப் பிதாவாகிய யோபு சொன்னார். (யோபு 23:13, பொது மொழிபெயர்ப்பு) “தாம் உண்டாக்கின எல்லாவற்றையும்” பார்த்து அது “மிகவும் நன்றாயிருந்தது” என யெகோவா அறிவித்தபோது அது அவருக்கு எவ்வளவு திருப்தி அளித்திருக்க வேண்டும்!​—⁠ஆதியாகமம் 1:31.

நமது இலக்குகள் நிஜமாவதற்கு, அவற்றை அடைய வேண்டுமென்ற பலமான ஆசையும் நமக்கு வேண்டும். அத்தகைய உள்ளான ஆசையை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்? பூமி உருப்பெறாமல் வெறுமையாய் இருந்த சமயத்திலேயே, அது விண்வெளியில் அழகிய மணிக்கல்லாய் ஜொலித்து தமக்கு மகிமையையும் கனத்தையும் சேர்க்குமென யெகோவாவால் காண முடிந்தது. அதேபோல், நாம் வைத்துள்ள இலக்கை எட்டுவதால் கிடைக்கப் போகும் பலன்களையும் நன்மைகளையும் குறித்து தியானிப்பதன் மூலம் அதை அடைவதற்கான ஆசையை நாம் வளர்த்துக் கொள்ள முடியும். அதுவே 19 வயது டோனியின் அனுபவமும்கூட. மேற்கு ஐரோப்பாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கிளை அலுவலகத்திற்கு முதன்முதலாக சென்று பார்த்தபோது அது அவனுடைய மனதில் நீங்காத முத்திரையை பதித்தது. அப்போதிலிருந்து அவனது மனதில் எப்பொழுதும் எழுந்த கேள்வி, ‘அதுபோன்ற ஓர் இடத்தில் இருந்து சேவை செய்வது எப்படி இருக்கும்?’ என்பதே. அதற்கான வாய்ப்பைக் குறித்து அவன் சிந்தித்துக் கொண்டே இருந்தான், அதை எட்டுவதற்கு தொடர்ந்து பாடுபட்டான். பல ஆண்டுகளுக்குப் பிறகு பெத்தேலில் சேவை செய்வதற்கான அவனுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அவன் எவ்வளவாய் சந்தோஷப்பட்டான்!

ஒரு இலக்கை ஏற்கெனவே எட்டியவர்களுடன் கூட்டுறவு வைத்துக்கொள்வதும்கூட அதை எட்ட வேண்டுமென்ற ஆசையை நம்மில் உருவாக்கும். ஜேசனுக்கு 30 வயது; இளம் டீனேஜராக இருந்த காலத்தில் வெளி ஊழியத்துக்குப் போவதென்றாலே அவருக்கு பிடிக்காது. ஆனால் உயர்நிலைப் பள்ளி படிப்புக்குப் பிறகு ஆர்வத்துடன் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்து முழுநேர ராஜ்ய அறிவிப்பாளர் ஆனார். பயனியர் செய்வதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ள எது ஜேசனுக்கு உதவியது? அவரே அதற்குப் பதிலளிக்கிறார்: “ஏற்கெனவே பயனியர் செய்கிறவர்களிடம் பேசியதும் அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ததும் பயனியர் செய்வதற்கான பெரும் ஆசையை ஏற்படுத்தியது.”

நம் இலக்குகளை எழுதி வைப்பது உதவலாம்

தெளிவற்ற ஒரு கருத்தை வார்த்தைகளில் விவரிக்கும்போது அது தெளிவடைகிறது, உருப்பெறுகிறது. பொருத்தமான வார்த்தைகள் வாழ்க்கையில் வழிநடத்துதலைத் தரும் தாற்றுக்கோல்கள் போல் வலிமை வாய்ந்தவையாக இருக்கலாம் என சாலொமோன் குறிப்பிட்டார். (பிரசங்கி 12:11) அந்த வார்த்தைகளை எழுத்தில் வடிக்கையில் அவை மனதிலும் இதயத்திலும் ஆழமாக பதிந்துவிடுகின்றன. இஸ்ரவேலின் ராஜாக்கள் நியாயப்பிரமாணத்தின் ஒரு பிரதியை எழுதி வைத்துக் கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டதற்கான காரணம் இப்போது புரிகிறதல்லவா? (உபாகமம் 17:18, 20) எனவே, நம்முடைய இலக்குகளையும் அவற்றை எட்டுவதற்கான திட்டங்களையும், அதோடுகூட நாம் எதிர்பார்க்கும் தடைகளையும் அவற்றை சமாளிப்பதற்கான வழிகளையும் நாம் எழுதி வைக்க விரும்பலாம். நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களையும், நாம் அடைய விரும்பும் திறமைகளையும், நமக்கு உதவிக்கரம் நீட்டி ஆதரிக்க முடிந்தவர்களையும் அடையாளம் கண்டுகொள்வதும்கூட பயனுள்ளதாக இருக்கலாம்.

ஆசிய நாட்டில் ஒதுக்குப்புற பிராந்தியத்தில் நீண்ட காலமாக விசேஷ பயனியராக சேவை செய்து வரும் ஜெஃப்ரீ என்பவர் ஆன்மீக இலக்குகளை வைத்தபோது தன்னை திடப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவருடைய மனைவி திடீரென இறந்தபோது அதிர்ச்சிக்குள்ளானார். ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்ட பிறகு, அவர் இலக்குகளை வைத்து பயனியர் ஊழியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள தீர்மானித்தார். தன் திட்டங்களை எழுதி வைத்த பிறகு, அந்த மாதம் முடிவதற்குள் மூன்று புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க வேண்டுமென அவர் ஜெப சிந்தையுடன் இலக்கு வைத்தார். ஒவ்வொரு நாளும் தன் ஊழியத்தை அவர் மறுபார்வை செய்தார், பத்து தினங்களுக்கு ஒருமுறை தன் முன்னேற்றத்தை அளவிட்டுப் பார்த்தார். அவர் தன் இலக்கை எட்டினாரா? ஆம், நான்கு புதிய பைபிள் படிப்புகளை அறிக்கை செய்ததாக அவர் சந்தோஷத்துடன் பதிலளிக்கிறார்!

மைல் கற்களாக குறுகிய கால இலக்குகளை வையுங்கள்

சில இலக்குகள் ஆரம்பத்தில் எட்டவே முடியாதவையாக தோன்றலாம். முன்னர் குறிப்பிட்ட டோனிக்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்வது என்பது வெறும் கனவாகவே தோன்றியது. காரணம், அவர் தான்தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார், அப்போது அவர் கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கக்கூட இல்லை. ஆனால் யெகோவாவின் வழிகளுக்கு இசைய தன் வாழ்க்கையை மாற்றியமைக்க தீர்மானித்தார், முழுக்காட்டுதலுக்குத் தகுதி பெறுவதை இலக்காக வைத்தார். அந்த இலக்கை எட்டிய பிறகு, துணைப் பயனியர் செய்வதற்கும், ஒழுங்கான பயனியர் ஆவதற்கும் இலக்கு வைத்து எந்தத் தேதியில் ஆரம்பிக்கப் போகிறார் என்பதை காலண்டரில் குறித்து வைத்தார். கொஞ்ச காலம் பயனியர் செய்த பிறகு, கிளை அலுவலகத்தில் சேவை செய்வது என்பது அவருக்கு எட்ட முடியாத இலக்காக தோன்றவில்லை.

நாமும்கூட நம் நீண்ட கால இலக்குகளை குறுகிய கால இலக்குகளாக பிரித்துக் கொள்வது நல்லது. இடையிடையே வைக்கும் இலக்குகள், நீண்ட கால இலக்குகளை எட்டும் பாதையிலுள்ள மைல் கற்களாக ஆகலாம். அத்தகைய மைல் கற்களின் அடிப்படையில் நம் முன்னேற்றத்தைத் தவறாமல் கணிப்பது மனதை ஒருமுகப்படுத்துவதில் நமக்கு உதவலாம். நம்முடைய திட்டங்களைப் பற்றி திரும்ப திரும்ப யெகோவாவிடம் ஜெபிப்பதும்கூட பாதை மாறிப் போகாமலிருக்க நமக்கு உதவும். “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார்.​—⁠1 தெசலோனிக்கேயர் 5:17.

உறுதியும் விடாமுயற்சியும் தேவை

கவனமாக சிந்தித்து திட்டங்கள் வகுத்து, அவற்றை செயல்படுத்த வேண்டுமென்ற பலமான ஆசை இருந்தாலும் சில இலக்குகள் அடைய முடியாமலேயே போய்விடுகின்றன. உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் தன் இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது சீஷனாகிய யோவான் என்ற மாற்குவை தன்னுடன் அழைத்துச் செல்லாமல் போனபோது அவர் எவ்வளவாய் ஏமாற்றம் அடைந்திருப்பார்! (அப்போஸ்தலர் 15:37-40) ஆனால் அவர் அந்த ஏமாற்றத்தை படிப்பினையாக எடுத்துக்கொண்டு, தன் சேவையை அதிகரிக்கும் இலக்கில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அவர் அதையே செய்தார். பின்னர் மாற்குவைப் பற்றி பவுல் பெருமையாக பேசுமளவுக்கு நடந்துகொண்டார்; அதுமட்டுமல்ல, பாபிலோனிலிருந்த அப்போஸ்தலன் பேதுருவுடன் நெருங்கிய கூட்டுறவையும் அனுபவித்தார். (2 தீமோத்தேயு 4:11; 1 பேதுரு 5:13) ஆவியின் வழிநடத்துதலால் இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய பதிவை அவர் எழுதியதே, அவர் பெற்ற மாபெரும் சிலாக்கியமாகும்.

ஆன்மீக இலக்குகளை அடையும் முயற்சியில் நாமும் அவ்வப்போது பின்தங்கிப் போகலாம். சோர்ந்துபோய் இலக்குகளை கைவிடுவதற்குப் பதிலாக, அவற்றை நாம் மறுபார்வை செய்து, மறுபடியும் மதிப்பிட்டு, மாற்றங்கள் செய்ய வேண்டும். தடைகள் குறுக்கிடுகையில் உறுதியோடும் விடாப்பிடியாகவும் முன்னேறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். “உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்” என ஞானியாகிய சாலொமோன் ராஜா நமக்கு உறுதியளிக்கிறார்.​—⁠நீதிமொழிகள் 16:3.

ஆனாலும், சில சமயங்களில் சூழ்நிலைகளின் காரணமாக குறிப்பிட்ட இலக்குகளை எட்ட முடியாது போகலாம். உதாரணமாக, சுகவீனமோ குடும்ப பொறுப்புகளோ சில இலக்குகளை நாம் எட்ட முடியாதபடி செய்துவிடலாம். ஆனால் பரலோகத்திலாகட்டும் பூமியிலாகட்டும், இறுதியில் நித்திய வாழ்க்கை எனும் பரிசு உண்டு என்ற உண்மையை ஒருபோதும் மறந்துவிடாதிருப்போமாக. (லூக்கா 23:43; பிலிப்பியர் 3:13, 14) இதை எப்படி அடையலாம்? “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 2:17) ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நமது சூழ்நிலை ஒரு தடையாக அமைந்துவிடலாம், இருப்பினும் நாம் “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்”ளலாம். (பிரசங்கி 12:13) ஆன்மீக இலக்குகள் கடவுளுடைய சித்தத்தை செய்வதில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு உதவுகின்றன. எனவே அவற்றை நம் படைப்பாளருக்கு மகிமை சேர்க்க பயன்படுத்திக் கொள்வோமாக.

[பக்கம் 22-ன் பெட்டி]

வைக்க வேண்டிய ஆன்மீக இலக்குகள்

○ தினசரி பைபிள் வாசிப்பது

காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை இதழ் தவறாமல் வாசிப்பது

○ நம் ஜெபங்களின் தரத்தை முன்னேற்றுவிப்பது

○ ஆவியின் கனியை வெளிக்காட்டுவது

○ ஊழியத்தில் அதிகளவு ஈடுபடுவது

○ போதிப்பதிலும் கற்பிப்பதிலும் இன்னும் திறம்பட்டவர்களாக ஆவது

○ தொலைபேசி மூலம் சாட்சி கொடுத்தல், சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல், வியாபார ஸ்தலத்தில் சாட்சி கொடுத்தல் என பிரசங்கிப்பதில் திறமைகளை வளர்த்துக்கொள்வது