Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முக்கியத்துவம் வாய்ந்த “அடையாளப்பூர்வ நாடகம்”

முக்கியத்துவம் வாய்ந்த “அடையாளப்பூர்வ நாடகம்”

முக்கியத்துவம் வாய்ந்த “அடையாளப்பூர்வ நாடகம்”

பைபிளிலுள்ள சில பகுதிகளைப் பற்றி அதன் மற்ற பகுதிகள் அதிக விவரங்களை அளித்திருக்காவிட்டால், அவற்றின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ள எவ்வளவு சிரமமாய் இருந்திருக்கும்! கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் சரித்திர சம்பவங்களை படித்த மாத்திரத்திலேயே நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், சில சம்பவங்களில் ஆழ்ந்த சத்தியங்கள் புதைந்து கிடக்கின்றன; அவற்றைப் படித்த மாத்திரத்திலேயே புரிந்துகொள்ள முடியாது. அதற்கு ஓர் உதாரணம்தான் கோத்திர பிதாவான ஆபிரகாமின் குடும்பத்திலிருந்த இரண்டு பெண்களைப் பற்றிய சம்பவம். அப்போஸ்தலன் பவுல் அதை “அடையாளப்பூர்வ நாடகம்” என்று அழைத்தார்.​—கலாத்தியர் 4:24, NW.

இந்த நாடகத்திற்கு நாம் உன்னிப்பாகக் கவனம் செலுத்துவது தகுந்ததே, ஏனென்றால் இது சித்தரித்துக் காட்டுகிற உண்மைகள் யெகோவா தேவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாய் இருக்கின்றன. அதற்கான காரணத்தை ஆராயும் முன், இந்த நாடகத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்துவதற்கு பவுலைத் தூண்டுவித்த சூழ்நிலைகளைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கலாத்திய கிறிஸ்தவர்களுக்கிடையே ஒரு பிரச்சினை நிலவியது. அவர்களில் சிலர், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே ‘நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் மிகக் கவனமாகக் கடைப்பிடித்து வந்தார்கள்.’ அத்துடன், கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்ள நியாயப்பிரமாணச் சட்டங்களுக்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்கள். (கலாத்தியர் 4:10, NW; 5:2, 3) என்றாலும், கிறிஸ்தவர்கள் அவற்றையெல்லாம் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்பதை பவுல் அறிந்திருந்தார். அதை நிரூபிப்பதற்காக, யூதப் பின்னணியைச் சேர்ந்த அனைவருக்கும் தெரிந்த ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.

யூத ஜனங்களின் தந்தையான ஆபிரகாமுக்கு இஸ்மவேல், ஈசாக்கு என இரண்டு மகன்கள் இருந்ததைப் பற்றி கலாத்தியருக்கு பவுல் நினைப்பூட்டினார். ஆகார் என்ற அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்தான் மூத்தவன், உரிமைப் பெண்ணான சாராளுக்குப் பிறந்தவன் இளையவன். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென வலியுறுத்திக்கொண்டிருந்த கலாத்தியருக்கு, மலடியாக இருந்த சாராளைப் பற்றியும், குழந்தை பெற்றுத்தருவதற்காக அவள் தனது அடிமைப் பெண்ணான ஆகாரை ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்ததைப் பற்றியும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆகார், இஸ்மவேலை வயிற்றில் சுமக்க ஆரம்பித்த சமயத்திலிருந்து தன் எஜமானியான சாராளை அற்பமாகக் கருதியதைப் பற்றிக்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கும். என்றாலும், கடவுளுடைய வாக்குறுதியின்படி, கடைசியில் சாராள் தன்னுடைய வயதான காலத்தில் ஈசாக்கைப் பெற்றெடுத்தாள். பிற்பாடு, ஈசாக்கை இஸ்மவேல் மோசமாக நடத்தியதால் அவனையும் ஆகாரையும் ஆபிரகாம் வீட்டைவிட்டே வெளியேற்றினார்.​—ஆதியாகமம் 16:1-4; 17:15-17; 21:1-14; கலாத்தியர் 4:22, 23.

இரண்டு பெண்கள், இரண்டு உடன்படிக்கைகள்

இந்த ‘அடையாளப்பூர்வ நாடகத்திலுள்ள’ அம்சங்களைப் பற்றி பவுல் விளக்கினார். “அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய் மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளை பெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே. . . . அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.” (கலாத்தியர் 4:24, 25) எருசலேமை தலைநகராகக் கொண்டிருந்த சொல்லர்த்தமான இஸ்ரவேல் தேசத்திற்கு ஆகார் அடையாளமாக இருந்தாள். சீனாய் மலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி நடக்க யூத தேசத்தார் யெகோவாவுக்குக் கடமைப்பட்டிருந்தார்கள். தாங்கள் பாவத்திற்கு அடிமைகள் என்பதையும் தங்களுக்கு மீட்பு தேவை என்பதையும் இஸ்ரவேலருக்கு அந்த நியாயப்பிரமாணம் நினைப்பூட்டிக்கொண்டே இருந்தது.​—எரேமியா 31:31, 32; ரோமர் 7:14-24.

அப்படியானால், ‘சுயாதீனமுள்ளவளான,’ அதாவது உரிமைப் பெண்ணான சாராளும் அவளுடைய மகனான ஈசாக்கும் யாருக்கு அடையாளமாக இருக்கிறார்கள்? ‘பிள்ளை பெறாத மலடியாக’ இருந்த சாராள் கடவுளுடைய மனைவிக்கு, அதாவது அவருடைய அமைப்பின் பரலோக பாகத்திற்கு, அடையாளமாக இருந்தாள் என பவுல் குறிப்பிட்டார். இந்தப் பரலோகப் பெண் மலடியாக இருந்தது எப்படி? இயேசு வருவதற்கு முன்னர், அவளுக்கு ஆவியால் அபிஷேகம்செய்யப்பட்ட ‘பிள்ளைகள்’ பூமியில் இருக்கவே இல்லை. (கலாத்தியர் 4:27; ஏசாயா 54:1-6) என்றாலும், பொ.ச. 33-⁠ல் பெந்தெகொஸ்தே தினத்தன்று, ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு தொகுதியினர்மீது பரிசுத்த ஆவி பொழியப்பட்டபோது அவர்கள் அந்தப் பரலோகப் பெண்ணின் பிள்ளைகளாக மறுபடியும் பிறந்தார்கள். அந்தப் பரலோக அமைப்பினால் பிறப்பிக்கப்பட்ட பிள்ளைகள், ஒரு புதிய உடன்படிக்கைக்குள் கடவுளுடைய பிள்ளைகளாகவும் இயேசு கிறிஸ்துவின் உடன் சுதந்தரராகவும் தத்தெடுக்கப்பட்டார்கள். (ரோமர் 8:15-17) அதனால்தான், அந்தப் பிள்ளைகளில் ஒருவரான பவுலால் பின்வருமாறு எழுத முடிந்தது: “மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள் [அதாவது, உரிமைப்பெண்], அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.”​—கலாத்தியர் 4:26.

இரு பெண்களின் பிள்ளைகள்

பைபிள் பதிவின்படி, ஈசாக்கை இஸ்மவேல் துன்புறுத்தினான். அவ்வாறே, அடிமைப்பட்ட நிலையிலிருந்த எருசலேமின் பிள்ளைகள் மேலான எருசலேமின் பிள்ளைகளை பொ.ச. முதல் நூற்றாண்டின்போது கேலிசெய்து துன்புறுத்தினார்கள். “மாம்சத்தின்படி பிறந்தவன் [இஸ்மவேல்] ஆவியின்படி பிறந்தவனை [ஈசாக்கை] அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது” என பவுல் விளக்கினார். (கலாத்தியர் 4:29) ஆபிரகாமின் உண்மை வாரிசான ஈசாக்கிடம் ஆகாரின் மகனான இஸ்மவேல் எப்படி நடந்துகொண்டானோ அப்படியே, இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ராஜ்யத்தைப் பற்றி அறிவிக்கத் தொடங்கியபோது யூத மதத் தலைவர்களும் நடந்துகொண்டார்கள். இயேசு கிறிஸ்துவை அவர்கள் கேலிசெய்தார்கள், துன்புறுத்தினார்கள்; தங்களை ஆபிரகாமின் சட்டப்பூர்வ வாரிசுகளாகவும், இயேசுவைத் தங்கள் வழியில் குறுக்கிடும் நபராகவும் அவர்கள் கருதியதால் ஒருவேளை அவ்வாறெல்லாம் செய்திருக்கலாம்.

மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் தேசத்தின் ஆட்சியாளர்கள் தம்மைக் கொன்றுபோடுவதற்குக் கொஞ்ச நாட்கள் முன்பு, இயேசு இவ்வாறு சொன்னார்: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.”​—மத்தேயு 23:37, 38.

ஆகார் அடையாளப்படுத்துகிற மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் தேசம், இயேசுவோடு உடன் சுதந்தரராகப்போகிற பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லை; முதல் நூற்றாண்டுச் சம்பவங்களைப் பற்றிய பைபிள் பதிவு இதைக் காண்பிக்கிறது. தங்களுடைய வம்சாவளியின் காரணமாக அத்தகைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ள உரிமை இருப்பதாய் அகந்தையோடு நம்பிய யூதர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள், யெகோவாவினால் நிராகரிக்கப்பட்டார்கள். என்றாலும், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரில் சிலர் கிறிஸ்துவின் உடன் சுதந்தரராக ஆனார்கள். ஆனால், இயேசுவில் நம்பிக்கை வைத்ததால்தான் அந்த விசேஷ வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதே தவிர, அவர்களுடைய வம்சாவளியினால் அல்ல.

கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்களாக ஆகவிருந்த சிலருடைய அடையாளம் பொ.ச. 33-⁠ல் பெந்தெகொஸ்தே தினத்தன்று தெரியவந்தது. காலம் செல்லச்செல்ல, மேலான எருசலேமின் பிள்ளைகளாக இன்னும் பலரை யெகோவா அபிஷேகம் செய்தார்.

மோசேயின் மூலம் செய்யப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையைக் காட்டிலும், புதிய உடன்படிக்கை மேலானது என்பதைக் காட்டுவதற்காகவே பவுல் இந்த ‘அடையாளப்பூர்வ நாடகத்தை’ விளக்கினார். மோசேயின் நியாயப்பிரமாணக் கிரியைகள் மூலம் எந்த மனிதனும் கடவுளுடைய தயவைப் பெற முடியவில்லை, காரணம், எல்லா மனிதர்களுமே அபூரணர்கள்; அதோடு, பாவத்திற்கு அவர்கள் அடிமைப்பட்டிருப்பதை மட்டுமே அந்த நியாயப்பிரமாணம் சிறப்பித்துக் காட்டியது. இருந்தபோதிலும், “நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக” இயேசு வந்தார் என பவுல் விளக்கினார். (கலாத்தியர் 4:4, 5) எனவே, கிறிஸ்துவுடைய பலியில் விசுவாசம் வைத்த ஜனங்கள் நியாயப்பிரமாணத்தின் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.​—கலாத்தியர் 5:1-6.

நமக்கு ஏன் முக்கியம்

பவுல் தேவ ஆவியால் ஏவப்பட்டு இந்த நாடகத்திற்கு அளித்த விளக்கம் நமக்கு ஏன் ஆர்வமூட்ட வேண்டும்? ஒரு காரணம், இது பைபிளிலுள்ள மற்ற சம்பவங்களின் ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது, அப்படி இல்லையென்றால் அந்த அர்த்தங்கள் நமக்கு விளங்காமலே போயிருக்கும். அதோடு, இந்த விளக்கம் பைபிளுடைய ஒத்திசைவின் மீது நமக்குள்ள நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.​—1 தெசலோனிக்கேயர் 2:13.

அதுமட்டுமல்ல, இந்த நாடகம் சித்தரித்துக் காட்டிய உண்மைகள் நம்முடைய சந்தோஷமான எதிர்காலத்திற்கு முக்கியமானவையாகவும் இருக்கின்றன. கடவுளுடைய வாக்குறுதியின்படி, அவருடைய ‘பிள்ளைகள்’ தோன்றியிருக்காவிட்டால், நாம் பாவத்திலும் மரணத்திலும் அடிமைப்பட்டுக் கிடப்பதைத் தவிர வேறு வழியே இருந்திருக்காது. என்றாலும், கிறிஸ்து மற்றும் அவருடைய உடன் சுதந்தரவாளிகளின் (ஆபிரகாமோடு செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி உடன் சுதந்தரவாளிகளாக ஆனவர்களின்) அன்பான மேற்பார்வையில், ‘பூமியிலுள்ள சகல தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. (ஆதியாகமம் 22:18) பாவம், அபூரணம், துன்பம், மரணம் ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து அவர்கள் என்றென்றும் விடுவிக்கப்படும்போது அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும். (ஏசாயா 25:8, 9) அது எப்பேர்ப்பட்ட மகத்தான காலமாக இருக்கும்!

[பக்கம் 11-ன் படம்]

சீனாய் மலையில் நியாயப்பிரமாண உடன்படிக்கை ஆரம்பிக்கப்பட்டது

[படத்திற்கான நன்றி]

Pictorial Archive (Near Eastern History) Est.

[பக்கம் 12-ன் படம்]

அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட ‘அடையாளப்பூர்வ நாடகத்தின்’ முக்கியத்துவம் என்ன?