Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படியுங்கள்’

‘பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படியுங்கள்’

‘பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படியுங்கள்’

“பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.”​—⁠எபேசியர் 6:1.

1. கீழ்ப்படிவது எவ்வாறு உங்களைப் பாதுகாக்கும்?

 கீழ்ப்படிந்து நடந்ததால் நாம் இப்பொழுது உயிரோடு இருக்கலாம், கீழ்ப்படியத் தவறியதால் மற்றவர்கள் உயிரோடு இல்லாதிருக்கலாம். எவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும்? எச்சரிக்கைகளுக்கு. உதாரணமாக, “அதிசயமாய் உண்டாக்கப்பட்ட” நமது உடல் விடுக்கும் எச்சரிக்கைகளுக்கு. (சங்கீதம் 139:14) நம்முடைய கண்கள் கரிய மேகங்களைப் பார்க்கின்றன, காதுகள் இடிமுழக்கங்களைக் கேட்கின்றன. பிறகு பலத்த காற்று வீச ஆரம்பிக்கிறது. இவையெல்லாம் மின்னலுடனும் உயிரையே குடிக்கக்கூடிய ஆலங்கட்டி மழையுடனும் வரவிருக்கிற பெரும் புயலுக்கு அறிகுறிகளாய் இருக்கின்றன. எத்தகைய பயங்கர ஆபத்துகள் வரலாமென கற்பிக்கப்பட்டவர்களுக்கு, அந்தப் புயலில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பான இடத்திற்குப் போவதற்கான எச்சரிக்கையாக அவை இருக்கின்றன.

2. பிள்ளைகளுக்கு எச்சரிக்கைகள் ஏன் தேவை, பெற்றோருக்கு அவர்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

2 பிள்ளைகளான உங்களுக்குப் பயங்கர ஆபத்துகள்பற்றிய எச்சரிக்கைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய எச்சரிக்கைகளைக் கொடுக்க உங்கள் பெற்றோருக்குப் பொறுப்பு இருக்கிறது. “அந்த அடுப்பைத் தொடாதே, அது சூடாயிருக்கிறது,” “அது ஆழமான குளம் பக்கத்தில் போகாதே, அது ஆபத்தானது,” “சாலையைக் கடக்கும்போது இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும்” என்று சொல்லப்பட்டவை உங்கள் நினைவுக்கு வரலாம். வருத்தகரமாக, இவற்றிற்குக் கீழ்ப்படியாததால் பிள்ளைகளுக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது அல்லது மரணம்கூட நேர்ந்திருக்கிறது. உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது ‘நியாயமானது,’ சரியானதும் பொருத்தமானதும்கூட. மேலும், அது ஞானமானது. (நீதிமொழிகள் 8:33) அது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் “பிரியமானது” என்று இன்னொரு பைபிள் வசனம் சொல்கிறது. உண்மையில், உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியும்படி கடவுளே உங்களுக்குக் கட்டளையிடுகிறார்.​—கொலோசெயர் 3:20; 1 கொரிந்தியர் 8:6.

கீழ்ப்படிவதால் நித்திய நன்மைகள்

3. நம்மில் அநேகருக்கு ‘நித்திய ஜீவன்’ என்பது என்ன, பிள்ளைகள் அதை எவ்வாறு அனுபவிக்க முடியும்?

3 பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் உங்களுடைய ‘இந்த ஜீவனைப்’ பாதுகாக்கிறது, அது, ‘நித்திய ஜீவன்’ என்றழைக்கப்படுகிற ‘இதற்குப் பின்வரும் ஜீவனை’ அனுபவிக்கவும் வழிசெய்கிறது. (1 தீமோத்தேயு 4:8; 6:19) நம்மில் அநேகருக்கு நித்திய ஜீவன் என்பது புதிய உலகில் முடிவில்லா வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது. இதைத் தம்முடைய கட்டளைகளுக்கு உண்மையுடன் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தருவதாகக் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்தக் கட்டளைகளில் மிக முக்கியமான ஒன்று இவ்வாறு சொல்கிறது: “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.” எனவே, நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தால் சந்தோஷமாயிருப்பீர்கள். உங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாயிருக்கும், பூங்காவன பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்கும் வாய்ப்பும் இருக்கிறதே!​—எபேசியர் 6:2, 3.

4. பிள்ளைகள் எவ்வாறு கடவுளைக் கனப்படுத்த முடியும், அது எவ்வாறு பலன் அளிக்கும்?

4 உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவர்களைக் கனப்படுத்துகையில் உண்மையில் நீங்கள் கடவுளையே கனப்படுத்துகிறீர்கள். ஏனெனில், அவர்தான் பெற்றோருக்குக் கீழ்ப்படியும்படி உங்களுக்குக் கட்டளையிடுகிறார். அதே சமயத்தில் நீங்களும் பயன் அடைகிறீர்கள். ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதிக்கிற உன் தேவனாகிய கர்த்தர் நானே’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 48:17; 1 யோவான் 5:3) கீழ்ப்படிந்திருப்பது எவ்வாறு உங்களுக்கு பலன் அளிக்கிறது? அது உங்களுடைய தாயையும் தகப்பனையும் சந்தோஷப்படுத்துகிறது; பதிலாக, அவர்கள் உங்களுடைய வாழ்க்கையைச் சந்தோஷமாக்கும் வழிகளில் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டுவார்கள். (நீதிமொழிகள் 23:22-25) ஆனால், உங்களுடைய கீழ்ப்படிதல் உங்கள் பரலோகத் தகப்பனை மகிழ்விக்கிறது என்பதே மிக முக்கியமானது! அதோடு, அற்புதமான வழிகளில் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ‘பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என்று தம்மைப்பற்றி சொன்ன இயேசுவை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார், பாதுகாத்தார் என்று இப்பொழுது பார்க்கலாம்.​—யோவான் 8:29.

இயேசு​—⁠நல்ல வேலையாள்

5. இயேசு நல்ல வேலையாளாக இருந்தார் என நம்புவதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?

5 இயேசு தம்முடைய தாய் மரியாளுக்கு முதல் மகன். அவருடைய வளர்ப்புத் தந்தையான யோசேப்பு ஒரு தச்சர். இயேசுவும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொண்டார்; அதை யோசேப்பிடமிருந்து கற்றிருப்பார் என்பது நிச்சயம். (மத்தேயு 13:55; மாற்கு 6:3; லூக்கா 1:26-31) இயேசு எத்தகைய தச்சராக இருந்திருப்பாரென நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர் தம்முடைய கன்னித்தாயின் வயிற்றில் அற்புதகரமாய்க் கருவாக உருவாவதற்குமுன் பரலோகத்தில் இருந்தபோது, ‘நான் அவர் [கடவுள்] அருகே கைதேர்ந்த வேலையாளாக இருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்தேன்’ என்று ஞானமாக உருவகப்படுத்தப்பட்டவர் கூறினார். பரலோகத்தில் நல்ல வேலையாளாக இருந்த இயேசுவுடன் கடவுள் மகிழ்ச்சியாக இருந்தார். பூமியில் அவர் பிள்ளையாக இருந்தபோது நல்ல வேலையாளாக, நல்ல தச்சராக இருப்பதற்குக் கடுமையாக முயற்சி செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?​—நீதிமொழிகள் 8:30; NW; கொலோசெயர் 1:15, 16.

6. (அ) இயேசு பிள்ளையாக இருந்தபோது வீட்டு வேலைகளைச் செய்திருப்பாரென நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? (ஆ) பிள்ளைகள் இயேசுவை என்ன வழிகளில் பின்பற்றலாம்?

6 சிறுபிள்ளையாக இருந்தபோது சில சமயங்களில் இயேசுவும்கூட விளையாடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், பூர்வ காலங்களில் சிறுபிள்ளைகள் விளையாடியதைப்பற்றி பைபிள் சொல்கிறது. (சகரியா 8:5; மத்தேயு 11:16, 17) என்றாலும், வசதியில்லாத பெரிய குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்ததால் ஒரு தச்சராக ஆவதற்கு யோசேப்பிடமிருந்து இயேசு பயிற்சி பெற்றதோடுகூட அன்றாட வீட்டு வேலைகளையும் செய்திருப்பார் என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். பிறகு, இயேசு ஒரு போதகராக ஆனார். ஊழியத்துக்காக தம்மையே அர்ப்பணிக்க எத்தனையோ சொந்த செளகரியங்களைத் தியாகம் செய்தார். (லூக்கா 9:58; யோவான் 5:17) இயேசுவை நீங்கள் என்ன வழிகளில் பின்பற்றலாம் என நினைக்கிறீர்கள்? உங்களுடைய அறையைச் சுத்தம் செய்யும்படி அல்லது மற்ற வீட்டு வேலைகளைச் செய்யும்படி பெற்றோர் உங்களிடம் கேட்கிறார்களா? உங்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டு, கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் கடவுளை வணங்குவதில் பங்குகொள்ள அவர்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறார்களா? இந்த வேண்டுகோள்களுக்கு இளம் இயேசு எவ்வாறு பதில் அளித்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஊக்கமான பைபிள் மாணவரும் போதகரும்

7. (அ) பஸ்கா பண்டிகைக்காக இயேசு யாருடன் சென்றிருக்கலாம்? (ஆ) மற்றவர்கள் வீடு திரும்பியபோது இயேசு எங்கே இருந்தார், ஏன் அங்கே இருந்தார்?

7 யூதர்கள் கொண்டாடிய மூன்று பண்டிகைகளின்போதும் இஸ்ரவேல் குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் ஆலயத்திற்குச் சென்று யெகோவாவை வழிபட வேண்டும் என்ற கட்டளை இருந்தது. (உபாகமம் 16:16) இயேசுவுக்கு 12 வயதானபோது, அவருடைய முழுக்குடும்பமும் பஸ்கா பண்டிகையை ஆசரிக்க எருசலேமுக்குப் பயணப்பட்டிருக்கும். அப்பயணத்தில் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்களும் சகோதரிகளும் உடன் இருந்திருப்பார்கள். என்றாலும் அந்தப் பயணத்தில் இயேசுவின் குடும்பத்தில் ஒருவேளை மரியாளின் சகோதரியாக இருந்த சலோமேவும் அவளுடைய கணவன் செபெதேயுவும், பின்னர் இயேசுவின் சீஷர்களாக ஆன அவர்களுடைய மகன்கள் யாக்கோபும் யோவானும் இருந்திருக்கலாம். * (மத்தேயு 4:20, 21; 13:54-56; 27:56; மாற்கு 15:40; யோவான் 19:25) வீடு திரும்புகையில் இயேசு உறவினர்களுடன் இருப்பதாக யோசேப்பும் மரியாளும் நினைத்திருக்கலாம்; அதனால் அவர் இல்லாததை முதலில் கவனிக்கவில்லை. கடைசியாக, மூன்று நாட்களுக்குப் பிறகு மரியாளும் யோசேப்பும் இயேசுவை, “போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.”​—லூக்கா 2:44-46.

8. ஆலயத்தில் இயேசு என்ன செய்துகொண்டிருந்தார், மக்கள் ஏன் பிரமித்தார்கள்?

8 இயேசு எந்த விதத்தில் போதகர்களை ‘வினாவிக்’ கொண்டிருந்தார்? அவர் கேள்வி கேட்டது ஆர்வப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்கு அல்லது தகவலைத் தெரிந்துகொள்வதற்கு மட்டுமே இருந்திருக்காது. இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, நீதி விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பயன்படுத்தப்படுகிற வார்த்தையைக் குறிக்கலாம்; இது, குறுக்கு விசாரணையை உட்படுத்தலாம். ஆம், இயேசு சிறுபிள்ளையாக இருந்தபோது புலமைவாய்ந்த மத போதகர்களே ‘அடேயப்பா!’ என்று வியக்குமளவுக்குக் கரைகண்ட பைபிள் மாணவராக இருந்தார். “அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங் குறித்துப் பிரமித்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது.​—லூக்கா 2:47.

9. பைபிளைப் படிப்பதில் இயேசுவின் முன்மாதிரியை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம்?

9 தம்முடைய சிறு வயதிலேயே அனுபவம் வாய்ந்த போதகர்களும் ஆச்சரியப்படுமளவுக்கு பைபிள் அறிவை இயேசு பெற்றிருந்ததற்குக் காரணம் என்னவென நினைக்கிறீர்கள்? சிசுப் பருவத்திலிருந்தே கடவுளுடைய அறிவுரைகளை அவருக்கு ஊட்டி வளர்த்த தேவபயமுள்ள பெற்றோரிடமிருந்து அவர் பயன் அடைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. (யாத்திராகமம் 12:24-27; உபாகமம் 6:6-9; மத்தேயு 1:18-20) மேலும், வேதவாக்கியங்கள் வாசிக்கப்படுவதையும் விளக்கப்படுவதையும் கேட்பதற்குப் பிள்ளையாகிய இயேசுவை யோசேப்பு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்க முடியும். உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தி, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லும் அருமையான சந்தர்ப்பங்களை உடைய பெற்றோர் உங்களுக்கு இருக்கிறார்களா? இயேசு தம்முடைய பெற்றோரின் முயற்சிகளை மதித்ததைப்போலவே நீங்களும் உங்களுடைய பெற்றோரின் முயற்சிகளை மதிக்கிறீர்களா? இயேசு செய்ததுபோல நீங்களும் உங்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறீர்களா?

இயேசு கீழ்ப்பட்டிருந்தார்

10. (அ) இயேசுவை எங்கே கண்டுபிடிக்கலாமென அவருடைய பெற்றோர் ஏன் அறிந்திருக்க வேண்டும்? (ஆ) பிள்ளைகளுக்கு என்ன அருமையான முன்மாதிரியை இயேசு வைத்தார்?

10 கடைசியாக, மூன்று நாட்களுக்குப் பிறகு இயேசுவை ஆலயத்தில் கண்டுபிடித்த மரியாளும் யோசேப்பும் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருப்பார்கள் என்பது உண்மையே. என்றாலும், இயேசு எங்கே இருந்திருப்பார் என்று அவர்கள் அறியாதிருந்ததைக் குறித்து அவர் ஆச்சரியப்பட்டார். அவர்கள் இருவரும் இயேசுவின் அற்புதப் பிறப்பைப்பற்றி அறிந்திருந்தார்கள். கூடுதலாக, அவர்களுக்கு எல்லா விவரங்களும் தெரிந்திராவிட்டாலும்கூட இரட்சகராகவும் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாகவும் ஆகவிருந்த இயேசுவின் எதிர்கால பங்கைப்பற்றி ஓரளவு அவர்களுக்குத் தெரிந்திருக்கும். (மத்தேயு 1:21; லூக்கா 1:32-35; 2:11) எனவே இயேசு, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.” இருப்பினும், இயேசு தம்முடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நாசரேத்திலுள்ள வீட்டுக்குத் திரும்பிச் சென்றார். அவர், “அவர்களுக்குத் [“தொடர்ந்து,” NW] கீழ்ப்படிந்திருந்தார்” என்றும் “அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்” என்றும் பைபிள் சொல்கிறது.​—லூக்கா 2:48-51.

11. கீழ்ப்படிதலைப்பற்றி இயேசுவிடமிருந்து நீங்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

11 இயேசுவைப் போலவே எப்பொழுதும் உங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிவது உங்களுக்குச் சுலபமாக இருக்கிறதா? அல்லது இன்றைய உலகத்தை அவர்கள் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை என்றும் அவர்களைவிட உங்களுக்கு அதிகம் தெரியுமென்றும் நினைக்கிறீர்களா? செல்ஃபோன் எனப்படும் நடமாடும் தொலைபேசிகள், கணிப்பொறிகள், இன்னும் பிற நவீன கருவிகள் என சில பொருள்களைப் பயன்படுத்துவதைப்பற்றி நீங்கள் அதிகம் தெரிந்திருப்பீர்கள் என்பது உண்மைதான். ஆனால், தம்முடைய ‘புத்தியினாலும் தாம் சொன்ன மாறுத்தரங்களாலும்’ அனுபவம் வாய்ந்த போதகர்களையே பிரமிக்கவைத்த இயேசுவைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவரோடு ஒப்பிடும்போது நீங்கள் ஒன்றுமே இல்லை என்பதைப் பெரும்பாலும் ஒத்துக்கொள்வீர்கள். என்றாலும், இயேசு தம்முடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தார். அவர்கள் எடுத்த எல்லாத் தீர்மானங்களுக்கும் அவர் ஒத்துப்போனார் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. என்றாலும், அவருடைய பருவ வயது முழுக்க “அவர்களுக்குத் [“தொடர்ந்து,” NW] கீழ்ப்படிந்திருந்தார்.” அவருடைய முன்மாதிரியிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?​—உபாகமம் 5:16, 29.

கீழ்ப்படிதல்​—⁠ஒரு சவால்

12. கீழ்ப்படிதல் எவ்வாறு உங்கள் உயிரைப் பாதுகாக்கலாம்?

12 கீழ்ப்படிவது எப்பொழுதுமே சுலபமில்லை. உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகள் அகலமான நெடுஞ்சாலையைக் கடப்பதற்கு மேம்பால நடைபாதையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அந்தச் சாலை வழியாக விரைந்தோடினார்கள். “வா ஜான்” என்று அவர்களுடன் வந்தவனை அவசரப்படுத்தினார்கள்; அவனோ உயரே செல்லும் நடைபாதையில் போக முற்பட்டான். “நீயும் எங்களுடன் வருகிறாய்தானே?” என்று அவர்கள் அவனைக் கேட்டார்கள். அவன் தயங்கினபோது, அவர்களில் ஒரு பெண் “நீ சரியான பயந்தாங்கொள்ளிடா!” என்று சொல்லி கேலிசெய்தாள். இருந்தாலும், துளியும் பயப்படாத ஜான், “நான் எங்கம்மா சொல்கிறபடிதான் கேட்பேன்” என்று சொன்னான். அவன் நடந்து செல்கையில், சில வினாடிகளுக்குப் பிறகு ‘கிறீச்’சென்ற சக்கரங்களின் ஒலியைக் கேட்டு கீழே பார்த்தான்; அந்தப் பெண்களின்மீது ஒரு வாகனம் மோதியிருந்தது. ஒரு பெண் இறந்துபோனாள்; மற்றவளோ ஒரு கால் வெட்டப்படுமளவுக்குப் படுகாயமடைந்தாள். உயரே செல்லும் நடைபாதையைப் பயன்படுத்தும்படி தன் மகள்களிடம் சொல்லியிருந்த அந்தத் தாய் பிற்பாடு ஜானுடைய அம்மாவிடம், “உங்களுடைய பிள்ளையைப்போல அவர்களும் கீழ்ப்படிந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்” என்று சொன்னாள்.​—எபேசியர் 6:1.

13. (அ) உங்களுடைய பெற்றோருக்கு நீங்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? (ஆ) பெற்றோர் சொல்லும்போது ஒரு பிள்ளை அதைச் செய்யாமல் இருப்பது எப்போது சரியாயிருக்கும்?

13 ‘பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படியுங்கள்’ என்று கடவுள் ஏன் சொல்கிறார்? உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதன்மூலம் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறீர்கள். அதுமட்டுமல்லாமல், உங்களுடைய பெற்றோர் உங்களைவிட அதிக அனுபவம் வாய்ந்தவர்கள். உதாரணமாக, மேலே சொல்லப்பட்ட விபத்து நடப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்புதான் ஜானுடைய அம்மாவின் தோழியுடைய மகன் அதே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்துபோயிருந்தான்! உங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிவது எப்பொழுதும் சுலபமாயிருக்காது என்பது உண்மைதான், ஆனால் நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென கடவுள் சொல்கிறார். என்றாலும், உங்களுடைய பெற்றோர் அல்லது மற்றவர்கள் உங்களைப் பொய் சொல்லவோ திருடவோ கடவுளுக்குப் பிடிக்காத எதையாவது செய்யவோ சொன்னால், நீங்கள் “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” அதனால்தான், “உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. கடவுளுடைய சட்டங்களுக்கு இசைவாக இருக்கும்வரை எல்லாக் காரியங்களிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதை இது உட்படுத்துகிறது.​—அப்போஸ்தலர் 5:29.

14. பரிபூரணமான நபருக்குக் கீழ்ப்படிதல் ஏன் சுலபமானது, என்றாலும் அதை ஏன் அவர் கற்றுக்கொள்ள அவசியமிருக்கும்?

14 ‘மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமான’ இயேசுவைப்போல நீங்களும் பரிபூரணராக இருந்தால் உங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிவது எப்பொழுதும் சுலபமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? (எபிரெயர் 7:26) நீங்கள் பரிபூரணராக இருந்தால், இப்பொழுது இருப்பதைப்போல, மோசமானதைச் செய்ய நாட மாட்டீர்கள். (ஆதியாகமம் 8:21; சங்கீதம் 51:5) என்றாலும், இயேசுவும்கூட கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ‘அவர் [இயேசு] குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்’ என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 5:8) பரலோகத்தில் கற்றுக்கொள்ள அவசியப்படாத கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ள இயேசுவின் பாடுகள் அவருக்கு எவ்வாறு உதவின?

15, 16. இயேசு எவ்வாறு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்?

15 யெகோவாவின் வழிநடத்துதலின்கீழ் யோசேப்பும் மரியாளும் குழந்தையாயிருந்த இயேசுவை ஆபத்திலிருந்து பாதுகாத்தார்கள். (மத்தேயு 2:7-23) ஆயினும், முடிவில் தமது பாதுகாப்பைக் கடவுள் இயேசுவிடமிருந்து விலக்கினார். இயேசுவின் மனரீதியான, உடல்ரீதியான துன்பங்கள் சொல்ல முடியாதளவுக்கு அதிகரித்தன; அவர், ‘பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 5:7) இது எப்போது நடந்தது?

16 இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி மணித்துளிகளில் இது நடந்தது; அப்போது, அவருடைய உத்தமத்தன்மையை முறியடிக்க சாத்தான் முழுவீச்சில் முயற்சி செய்தான். தீய நபரைப்போல் மரிப்பது தம்முடைய பிதாவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்று எண்ணி மிகவும் வேதனைப்பட்டதால் இயேசு “[கெத்செமனே தோட்டத்தில்] அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.” சில மணிநேரங்களுக்குப் பிறகு, வாதனையின் கழுமரத்தில் அவர் மரித்த விதம் மகா வேதனை அளித்ததால் இயேசு “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்” கூப்பிட்டார். (லூக்கா 22:42-44; மாற்கு 15:34) இவ்வாறு அவர், ‘பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்,’ இதன்மூலம் தம்முடைய பிதாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தினார். இப்போது பரலோகத்தில் இருக்கிற இயேசு, கீழ்ப்படிதலைக் காட்ட நாம் போராடும்போது நம்முடைய வலியைப் புரிந்துகொள்கிறார்.​—நீதிமொழிகள் 27:11; எபிரெயர் 2:18; 4:15.

கீழ்ப்படிதல் எனும் பாடத்தைக் கற்றுக்கொள்ளுதல்

17. சிட்சை பெறுவதை நாம் எவ்வாறு கருத வேண்டும்?

17 அப்பாவும் அம்மாவும் உங்களுக்குச் சிட்சை கொடுக்கும்போது, உங்களுக்குச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்பதையும் அது காட்டுகிறது. “தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” என்று பைபிள் கேட்கிறது. நேரமெடுத்து உங்களைச் சரிப்படுத்த முயற்சி செய்யும் அளவுக்குப் பெற்றோர் போதுமான அன்பை உங்களிடம் காட்டாவிட்டால் அது எவ்வளவு வருத்தகரமானதாக இருக்கும்? அதேபோல, யெகோவா உங்களை நேசிப்பதாலேயே சரிப்படுத்துகிறார். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”​—எபிரெயர் 12:7-11.

18. (அ) அன்பான சிட்சை எதற்கு அத்தாட்சி அளிக்கிறது? (ஆ) இதுபோன்ற சிட்சை பயன்தரும் என்ன வழிகளில் மக்களைச் செதுக்கிச் சீர்படுத்தியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

18 மகா ஞானமுள்ளவரென இயேசு குறிப்பிட்ட பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன், பெற்றோரின் அன்பான கண்டிப்பைப்பற்றிப் பேசுகிறார். “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்” என்று அவர் எழுதினார். ஒரு நபர் பெறுகிற அன்பான கண்டிப்பு மரணத்திற்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிக்கும் என்பதாகவும்கூட அவர் சொன்னார். (நீதிமொழிகள் 13:24; 23:13, 14; மத்தேயு 12:42) தான் சிறுபிள்ளையாய் இருக்கையில் கிறிஸ்தவக் கூட்டங்களில் குறும்பு செய்தால் வீடு திரும்பியதும் தனக்குத் தண்டனை கிடைக்குமென தன்னுடைய அப்பா சொன்னதைப்பற்றி மணமான ஒரு கிறிஸ்தவப் பெண் இப்போது சொல்கிறார். தன்மேல் அன்பு வைத்திருந்ததால் தன்னுடைய அப்பா அன்பாகக் கண்டித்ததையும், அது தன்னுடைய வாழ்வை நல்ல விதத்தில் செதுக்கிச் சீர்படுத்தியதையும் இப்பொழுது அவர் நினைவுகூருகிறார்.

19. விசேஷமாக உங்களுடைய பெற்றோருக்கு நீங்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

19 நேரமெடுத்து உங்களைச் சிட்சிக்க முயற்சி செய்யும் அளவுக்கு போதுமான அன்பைக் காட்டுகிற பெற்றோர் உங்களுக்கு இருந்தால் மிகவும் சந்தோஷப்படுங்கள். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பெற்றோரான யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிந்ததுபோல நீங்களும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். விசேஷமாக, உங்கள் பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவன் சொல்வதால் அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அதன்மூலம் நீங்கள் பயன் அடைவீர்கள், “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்” அது உதவும்.​—எபேசியர் 6:2, 3.

[அடிக்குறிப்பு]

^ யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கம் 841-ஐக் காண்க.

நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?

• பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிவதால் என்ன நன்மைகளைப் பெறலாம்?

• ஒரு பிள்ளையாக இயேசு தம்முடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிவதில் என்ன முன்மாதிரி வைத்தார்?

• இயேசு கீழ்ப்படிதலை எவ்வாறு கற்றுக்கொண்டார்?

[கேள்விகள்]

[பக்கம் 24-ன் படம்]

பன்னிரண்டு வயதான இயேசு வேதவாக்கியங்களில் கரைகண்டவராக இருந்தார்

[பக்கம் 26-ன் படம்]

பட்டபாடுகளினால் இயேசு எவ்வாறு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்?