Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகெங்கும் உள்ளோரின் ஏகோபித்த வேண்டுகோள்

உலகெங்கும் உள்ளோரின் ஏகோபித்த வேண்டுகோள்

உலகெங்கும் உள்ளோரின் ஏகோபித்த வேண்டுகோள்

லட்சக்கணக்கானோர், சொல்லப்போனால் கோடிக்கணக்கானோர் ஒரே காரியத்திற்காக வேண்டிக்கொள்வதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். இந்தச் சர்வலோகத்திலேயே மிக உன்னத ஆட்சியாளரிடம் ஒரு குறிப்பிட்ட வேண்டுகோளை நிறைவேற்றும்படி கெஞ்சி மன்றாடுகிறார்கள். ஆனால், அவர்களில் வெகு சிலரே அதற்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு விண்ணப்பிக்கிறார்கள். எதைக் கேட்கிறோம் என்பதே தெரியாமல் விண்ணப்பம் செய்ய முடியுமா? முடியும். அப்படித்தான் தினந்தினம் நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் அப்படி எதைக் கேட்டு மன்றாடுகிறார்கள்? கடவுளுடைய ராஜ்யம் வரவேண்டுமென்று மன்றாடுகிறார்கள்.

தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும், இயேசு கிறிஸ்துவே தங்களுடைய தலைவர் என்றும் சொல்லிக்கொள்ளும் சுமார் 37,000 மதப்பிரிவுகள் உலகில் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவற்றின் அங்கத்தினர்களின் எண்ணிக்கை 200 கோடிக்கும் மேல். இவர்களில் அநேகர் பரமண்டல ஜெபம் என்று அழைக்கப்படும் ஜெபத்தைச் சொல்கிறார்கள். உங்களுக்கு இந்த ஜெபம் தெரியுமா? இயேசு சொல்லிக்கொடுத்த இந்த ஜெபம், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று துவங்குகிறது.—மத்தேயு 6:9, 10.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, மக்கள் பயபக்தியோடு இந்த வார்த்தைகளை ஆலயத்தில் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள். குடும்பமாக ஒன்றுசேர்ந்தும், தனியாகவும் இதை ஒப்பித்திருக்கிறார்கள். கஷ்டத்திலும் மகிழ்ச்சியிலும் அவர்களுடைய உதடுகள் இந்த ஜெபத்தையே உச்சரித்திருக்கின்றன. இந்த வார்த்தைகளை உள்ளப்பூர்வமாக, உணர்ச்சி பொங்கச் சொல்லியிருக்கிறார்கள். அர்த்தத்தை யோசிக்காமல் பலர் இந்த ஜெபத்தை மனப்பாடம் செய்து, கடகடவென ஒப்பிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் மட்டுமே, கடவுளுடைய ராஜ்யத்திற்காக நம்பிக்கையோடு எதிர்பார்த்து, ஜெபித்துக் கொண்டிருப்பதாக நினைத்துவிடாதீர்கள். பிற மதத்தவரும் இதற்காக ஜெபிக்கிறார்கள்.

மத எல்லைகளைக் கடந்த வேண்டுகோள்

துக்கத்தில் இருப்போரின் ‘காதீஷ்’ என்பது யூத மதத்தினரின் பிரபல ஜெபம். இந்த ஜெபத்தில் மரணத்தையோ துக்கத்தையோ பற்றி எதுவும் நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், பொதுவாகவே துக்கமான சமயத்தில் இது சொல்லப்படுகிறது. “[கடவுள்] உம்முடைய வாழ்நாளில் தம் ராஜ்யத்தை ஏற்படுத்துவாராக . . . விரைவாக அதைச் செய்வாராக” என்று அந்த ஜெபத்தில் விண்ணப்பிக்கப்படுகிறது. a யூத ஜெப ஆலயத்தில் சொல்லப்படும் மற்றொரு ஜெபத்தில், தாவீதுடைய வம்சத்தின் மூலமாக மேசியாவின் ராஜ்யம் வரும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

பிற மதத்தினருக்கும் கடவுளுடைய ராஜ்யம் என்ற விஷயம் பிடித்திருக்கிறது. “கிழக்கும் மேற்கும் இணைந்தாலொழிய கடவுளுடைய உண்மையான ராஜ்யம் நிஜமாகாது” என்று இந்தியாவைச் சேர்ந்த பிரபல மதத்தலைவர் ஒருவர் கூறியதாக த டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தித்தாள் குறிப்பிட்டது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒற்றுமைகளைக் கண்டறிவதில் ஆர்வம் காட்டினார். ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராத்ஃபீல்ட் என்ற இடத்திலுள்ள இஸ்லாமிய கல்லூரியின் தலைமையாசிரியை ஒரு செய்தித்தாளுக்கு பின்வருமாறு எழுதினார்: “இயேசு திரும்பி வந்து, இறைவனுடைய உண்மையான ராஜ்யத்தை ஏற்படுத்துவார் என்று முஸ்லிம்கள் எல்லாரையும் போலவே நானும் நம்புகிறேன்.”

கடவுளுடைய ராஜ்யத்திற்காக எதிர்நோக்கியிருக்கும் கோடிக்கணக்கானோர் அதற்காக ஜெபம் செய்து வருகிறார்கள். ஆனால், சுவாரஸ்யமான இந்தக் கருத்தைக் கவனியுங்கள்.

இந்தப் பத்திரிகையைப் பிரசுரிக்கும் யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் உங்களுடைய பகுதியில் வீட்டுக்கு வீடு சென்று, மக்களிடம் பைபிளைப்பற்றிப் பேசுகிறோம் என்பது அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதுவரை, இந்த வேலையை உலகெங்கும் கிட்டத்தட்ட 236 நாடுகளில் நாங்கள் செய்துவருகிறோம். 400-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தச் செய்தி அறிவிக்கப்படுகிறது. கடவுளுடைய ராஜ்யம்தான் எங்கள் செய்தியின் மையப்பொருளாகும். சொல்லப்போனால், இந்தப் பத்திரிகையின் முழு பெயரையும் கவனியுங்கள். அது, காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்பதாகும். அந்த ராஜ்யத்திற்காக ஜெபம் செய்கிறார்களா என்று மக்களிடம் நாங்கள் பெரும்பாலும் கேட்கிறோம். ‘ஆமாம்’ என்றுதான் அநேகர் பதில் அளிக்கிறார்கள். எனினும், அந்த ராஜ்யம் என்றால் என்னவென்று கேட்டால் பெரும்பாலோர் ‘தெரியாது’ என்றுதான் பதில் சொல்கிறார்கள். அல்லது தெளிவற்ற, நிச்சயமற்ற பதிலைச் சொல்கிறார்கள்.

கடவுளுடைய ராஜ்யத்திற்காக ஜெபம் செய்தும்கூட, அநேகருக்கு அதைப்பற்றி ஏன் தெரியவில்லை? கடவுளுடைய ராஜ்யம் என்பது சிக்கலான, புரியாத புதிராக இருப்பதாலா? இல்லை. கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி பைபிள் முழுமையாகவும் தெளிவாகவும் விளக்கியிருக்கிறது. இந்த இருண்ட காலத்தில் ராஜ்யத்தைப் பற்றிய பைபிளின் செய்தி உங்கள் மனதில் உண்மையான நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்கும். அந்த நம்பிக்கையை பைபிள் எப்படி விளக்குகிறது என்பதை அடுத்த கட்டுரையில் கவனிக்கலாம். ராஜ்யம் வரவேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்திற்கு எப்போது பதில் கிடைக்கும் என்பதை அதற்குப் பிறகு சிந்திக்கலாம். (w08 1/1)

[அடிக்குறிப்பு]

a இயேசு கற்பித்த பரமண்டல ஜெபத்தைப் போலவே, துக்கத்தில் இருப்போரின் காதீஷிலும் கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும் என்ற மன்றாட்டு இடம் பெற்றிருக்கிறது. இந்தக் காதீஷ் கிறிஸ்துவின் காலத்திற்குரியதா, அல்லது அதற்கும் முந்தைய காலத்திற்குரியதா என்பது விவாதத்தில் உள்ளது. இதற்கும் பரமண்டல ஜெபத்திற்கும் இடையிலிருக்கும் ஒற்றுமைகளைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. புதிய ஜெபத்தைக் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தோடு இயேசு இதைச் சொல்லித்தரவில்லை. இதிலிருக்கும் ஒவ்வொரு வேண்டுகோளும் அந்தச் சமயத்தில் யூதர்கள் அனைவரிடத்திலும் இருந்த வேதவாக்கியங்களின்மீது முழுமையாகச் சார்ந்திருந்தது. தாம் பூமிக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் ஜெபம் செய்திருக்க வேண்டிய காரியங்களை நினைவுபடுத்தி, அவற்றிற்காக ஜெபம் செய்யும்படி தம் சக யூதர்களுக்கு இயேசு ஊக்கமூட்டினார்.