Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இவர் உண்மை வணக்கத்திற்காக உறுதியோடு நின்றார்

இவர் உண்மை வணக்கத்திற்காக உறுதியோடு நின்றார்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

இவர் உண்மை வணக்கத்திற்காக உறுதியோடு நின்றார்

கர்மேல் மலைச்சரிவுகளில் கூட்டமாக மக்கள் சிரமப்பட்டு ஏறி வருவதை எலியா பார்த்தார். அந்தக் கூட்டத்தார் பஞ்சத்தில் அடிபட்டிருப்பது, பொழுது புலர்ந்து வரும் அந்த மங்கிய வெளிச்சத்திலும்கூட தெளிவாய்த் தெரிந்தது. மூன்றரை ஆண்டு காலம் நீடித்த பஞ்சம் அவர்களை உலுக்கியிருந்தது.

அந்தக் கூட்டத்தின் நடுவே பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேர் தலைக்கனத்தோடு நடந்து வந்தார்கள்; ஆணவமிக்க அந்தத் தீர்க்கதரிசிகள் யெகோவாவின் தீர்க்கதரிசியான எலியாவை அடியோடு வெறுத்தார்கள். யெகோவாவின் ஊழியர்களில் அநேகரை யேசபேல் ராணி கொலை செய்திருந்தாள்; எலியாவோ பாகால் வணக்கத்துக்கு எதிராக உறுதியோடு நின்றார். ஆமாம், இதெல்லாம் எத்தனை நாளைக்கு? தங்கள் எல்லாரையும் பகைத்துக்கொண்டு தனி ஆளாக அவர் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாதென அந்தத் தீர்க்கதரிசிகள் ஒருவேளை நினைத்திருக்கலாம். (1 இராஜாக்கள் 18:3, 19, 20) தன் ராஜ ரதத்தில் ஆகாப் ராஜாவும் வந்திருந்தான். இவனுக்கும் எலியா எட்டியாய்க் கசந்தார்.

ஒற்றை ஆளாய் நின்ற எலியா தீர்க்கதரிசிக்கு அது ஒப்பற்ற நாளாய் ஆகவிருந்தது. எலியா பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, உலகில் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கவிருந்த பெரும் பரபரப்பூட்டும் மோதல்களில் ஒன்று அரங்கேறவிருந்தது. பொழுது விடிகையில் அவருக்கு எப்படி இருந்தது? அவர், ‘நம்மைப்போலப் பாடுள்ள [அதாவது, உணர்வுகளுள்ள] மனுஷனாய்’ இருந்ததால் அவரையும் பயம் கவ்விக் கொண்டது. (யாக்கோபு 5:17) உண்மையற்ற மக்கள், அவர்களுடைய விசுவாசதுரோக ராஜா, கொலைவெறி பிடித்த அந்தத் தீர்க்கதரிசிகள் ஆகியோரின் மத்தியில் தனிமரமாய் நிற்கிறோமே என்ற எண்ணம் அவர் மனதை அலைக்கழித்தது என்னவோ நிஜம்தான்.—1 இராஜாக்கள் 18:22.

சரி, இத்தகைய நெருக்கடி நிலையை இஸ்ரவேலர் ஏன் எதிர்ப்பட நேர்ந்தது? இன்று இந்தச் சம்பவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுளுடைய சேவையில் தங்களை அர்ப்பணித்திருந்த ஊழியர்களைக் கூர்ந்து கவனித்து, ‘அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றும்படி’ பைபிள் நம்மை ஊக்கப்படுத்துகிறது. (எபிரெயர் 13:7) இப்போது, எலியாவின் உதாரணத்திற்குக் கவனம் செலுத்துவோம்.

நீண்ட போராட்டத்தின் உச்சக்கட்டம்

எலியாவுடைய தாய்நாட்டின் சிறப்புக்கும், அவருடைய மக்களின் பெருமைக்கும் மணிமகுடமாய் திகழ்ந்த உண்மை வணக்கம் தூக்கியெறியப்பட்டு, நசுக்கப்பட்டிருந்தது. எனினும், இதையெல்லாம் பல பத்தாண்டுகளாக கைகட்டப்பட்டதைப்போல் அவரால் பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிந்தது. இஸ்ரவேல் தேசத்தில் உண்மை மதத்திற்கும் பொய் மதத்திற்கும் இடையே போராட்டம் நிலவியது. அதாவது, யெகோவா தேவனுடைய வழிபாட்டுக்கும் சுற்றியுள்ள தேசங்களின் விக்கிரக வழிபாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக போராட்டம் நிலவியது. அந்தப் போராட்டம், முக்கியமாய் எலியாவின் காலத்தில் உச்சக்கட்டத்தை எட்டியது.

ஆகாப் ராஜா சீதோன் நாட்டு இளவரசியான யேசபேலை மணமுடித்திருந்தான். அவள், யெகோவாவின் வணக்கத்தை இஸ்ரவேலிலிருந்து துடைத்தழித்துவிட்டு பாகால் வணக்கத்தை பரப்பும் வெறியோடு இருந்தாள். சீக்கிரத்திலேயே ஆகாப் அவளுடைய கைப்பாவை ஆனான். பாகாலுக்கு ஓர் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டினான், இந்தப் புறமத தெய்வத்தை வழிபடுவதில் தலைமைதாங்கினான். இப்படியாக, யெகோவாவை இவன் மிகவும் வேதனைப்படுத்தினான்.—1 இராஜாக்கள் 16:30-33. a

பாகால் வழிபாடு ஏன் அந்தளவுக்கு வெறுக்கத்தக்கதாய் இருந்தது? இது, இஸ்ரவேலரில் அநேகரைத் தந்திரமாய் மயக்கி, உண்மைக் கடவுளைவிட்டு விலகிப்போகச் செய்தது. அருவருக்கத்தக்கதாயும் கொடுமைமிக்கதாயும் இருந்தது. ஆண்களையும் பெண்களையும் ஆலய விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், காம வெறியாட்டங்களும், பிள்ளைகளை நரபலி கொடுப்பதும்கூட இதில் உட்பட்டிருந்தது. இதையெல்லாம் பார்த்த யெகோவா, நாட்டில் பஞ்சம் நிலவும் என்றும், மீண்டும் தம்முடைய தீர்க்கதரிசி வந்து அறிவிக்கும்வரை அது நீடிக்கும் என்றும் ஆகாபிடம் தெரிவிக்க எலியாவை அனுப்பினார். (1 இராஜாக்கள் 17:1) பல ஆண்டுகள் கழித்தே எலியா மீண்டும் ஆகாபைச் சந்தித்தார், கர்மேல் மலையில் மக்களையும் பாகால் தீர்க்கதரிசிகளையும் ஒன்றுகூட்டும்படி அவனிடம் கூறினார்.

இந்தப் போராட்டம் இன்று நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? இப்போது நம்மைச் சுற்றி பாகாலின் ஆலயங்களோ பலிபீடங்களோ இல்லாததால், பாகால் வழிபாடு பற்றிய கதைக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என சிலர் நினைக்கலாம். ஆனால், இது சரித்திரப் பதிவு மட்டுமல்ல, இதில், நமக்குத் தேவையான பாடங்களும் உள்ளன. (ரோமர் 15:4) “பாகால்” என்ற வார்த்தைக்கு “உரிமையாளர்” அல்லது “எஜமானர்” என்று அர்த்தம். தம்மையே அவர்களுடைய ‘பாகாலாக,’ அதாவது எஜமானராக, தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி தம்முடைய மக்களிடம் யெகோவா சொன்னார். (ஏசாயா 54:5) இன்றும்கூட சர்வவல்லவரான தேவனுக்குப் பதிலாக பல்வேறு எஜமானர்களுக்கு மக்கள் சேவை செய்கிறார்கள் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள், அல்லவா? பணம், வேலை, பொழுதுபோக்கு, பாலியல் சுகபோகம் போன்ற இன்னும் எண்ணற்ற தெய்வங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கையை மக்கள் அர்ப்பணிக்கும்போது, யெகோவாவுக்குப் பதிலாக அவற்றைத் தங்களுடைய எஜமானராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். (மத்தேயு 6:24; ரோமர் 6:16) ஒரு விதத்தில், பாகால் வணக்கத்தின் மிக முக்கியமான அம்சங்கள் இன்றும் தழைத்தோங்குகின்றன என்றே சொல்லலாம். யெகோவாவுக்கும் பாகாலுக்கும் பூர்வத்தில் நிகழ்ந்த போராட்டத்தைப் பற்றிய பதிவு, நாம் யாருக்குச் சேவை செய்யப் போகிறோம் என்பதை ஞானமாய் தீர்மானிக்க நமக்கு உதவலாம்.

‘குந்திக்குந்தி நடப்பது’—எந்த விதத்தில்?

காற்று சுழன்று சுழன்று அடிக்கும் கர்மேல் மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் இஸ்ரவேல் தேசத்தின் பெரும் பகுதி நன்கு தெரியும். கீழேயுள்ள, காட்டாறு பெருக்கெடுத்து ஓடும் கீசோன் பள்ளத்தாக்குமுதல் வடக்கே தொலைதூரத்திலுள்ள லீபனோன் மலைத்தொடர்களுக்குப் பக்கத்திலுள்ள மகா கடல் வரையிலும் (மத்தியதரைக் கடல் வரையிலும்) நன்கு பார்க்க முடியும். b உச்சக்கட்ட போராட்டம் நடந்த அன்று இந்த நிலம் பெரிதும் பாழ்ப்பட்டிருந்தது சூரியனின் வெளிச்சத்தில் தெளிவாய் தெரிந்தது. ஒருகாலத்தில் ஆபிரகாமின் தலைமுறையினருக்கு கடவுள் தந்திருந்த வளம் கொழிக்கும் இந்தத் தேசம், இப்போது, வாடி வதங்கி, பொட்டலாய்க் கிடந்தது. சுள்ளென சுட்டெரித்த சூரிய கிரணங்களால் இந்தத் தேசம் இப்போது இறுகிக் கிடந்தது. தேசம் இப்படிப் பாழாய்ப் போனதற்கு கடவுளுடைய சொந்த மக்கள் முட்டாள்தனமாய் நடந்துகொண்டதே காரணம். இந்த மக்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவந்ததும், எலியா அவர்களை அணுகி, “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்” என்று சொன்னார்.—1 இராஜாக்கள் 18:21.

‘இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பதாக’ எலியா சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்? யெகோவாவை வணங்குவதா பாகாலை வணங்குவதா என்று தாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்ததை அந்த மக்கள் உணராதிருந்தார்கள். இருவரையுமே வழிபடலாமென்று நினைத்தார்கள்; அதாவது, அருவருக்கத்தக்க வழிபாட்டுச் சடங்குகளில் கலந்துகொள்வதன்மூலம் பாகாலைப் பிரியப்படுத்திவிட்டு, அதே சமயத்தில் தங்களை ஆசீர்வதிக்கும்படி யெகோவா தேவனையும் கேட்கலாம் என்று நினைத்தார்கள். தங்களுடைய பயிர்களையும் மந்தைகளையும் பாகால் ஆசீர்வதிப்பான் என்றும், போர்க்களத்தில் ‘சேனைகளின் யெகோவா’ தங்களைப் பாதுகாப்பார் என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். (1 சாமுவேல் 17:45) ஆனால், தம்முடைய வணக்கத்தை யெகோவா யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டார் என்ற முக்கியமான உண்மையை அவர்கள் மறந்து போனார்கள்; இதை இன்றுகூட அநேகர் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள். தம்மை மட்டுமே வழிபட வேண்டுமென யெகோவா சொல்கிறார்; அத்தகைய வணக்கத்தைப் பெற அவர் தகுதியுள்ளவராகவும் இருக்கிறார். வேறு யாரையாவது வணங்கிக்கொண்டே தம்மையும் வணங்கினால், அதை யெகோவா ஏற்றுக்கொள்வதில்லை; அதை அவர் அருவருக்கிறார்.—யாத்திராகமம் 20:5.

இவ்வாறு, ஒரே சமயத்தில் இரண்டு பாதைகளில் நடக்க முயற்சி செய்கிற ஒரு நபரைப்போல, இந்த இஸ்ரவேலர் ‘குந்திக்குந்தி நடந்தார்கள்.’ இதே போன்ற தவறை இன்று அநேகர் செய்கிறார்கள்; வேறு ‘பாகால்களுக்கு’ தங்களுடைய வாழ்க்கையில் மெல்ல மெல்ல இடமளிப்பதன்மூலம் உண்மைக் கடவுளை வழிபடாமல் ஒதுக்கிவிடுகிறார்கள். குந்திக்குந்தி நடக்காதிருக்கும்படி எலியா விடுத்த அறைகூவல், வாழ்க்கையில் நாம் எவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறோம், யாரை வணங்குகிறோம் என்பவற்றை மீண்டும் பரிசீலிக்க நமக்கு உதவலாம்.

உச்சக்கட்ட பரிட்சை

அடுத்ததாக, எலியா ஒரு பரிட்சையை முன்வைத்தார். அது மிக எளிய பரிட்சை. பாகாலின் ஆசாரியர்கள் ஒரு பலிபீடத்தைத் தயார்படுத்தி, அதன்மீது ஒரு மிருகத்தைக் கிடத்த வேண்டியிருந்தது; பிறகு, அதற்கு நெருப்பு மூட்டும்படி தங்கள் தெய்வத்திடம் அவர்கள் மன்றாட வேண்டியிருந்தது. அதையே எலியாவும் செய்யவிருந்தார். “அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே [“உண்மையான,” NW] தெய்வம்” என்று அவர் சொன்னார். உண்மைக் கடவுள் யாரென்பதை எலியா நன்கு அறிந்திருந்தார். அவருக்கு மலைபோன்ற உறுதியான விசுவாசம் இருந்ததால், துளியும் தயங்காமல் பாகால் தீர்க்கதரிசிகளை முதலாவது வேண்டிக்கொள்ளும்படி சொன்னார். பலிசெலுத்துவதற்குரிய காளையைத் தேர்ந்தெடுத்ததிலும்சரி, பாகாலிடம் முதலாவது வேண்டுதல் செய்ய வாய்ப்பளித்ததிலும்சரி, தன் எதிரிகளுக்கு சகல விதத்திலும் அவர் அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். c1 இராஜாக்கள் 18:24, 25.

இன்று அற்புதங்கள் எதுவும் நடப்பதில்லை. ஆனால், யெகோவா மாறாதவராய் இருக்கிறார். எனவே, எலியாவைப் போல நாமும் அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கலாம். உதாரணத்திற்கு, பைபிள் கற்பிப்பவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது, தங்கள் மனதிலுள்ளதை அவர்கள் சொல்ல நாம் அனுமதிக்கலாம்; இவ்விஷயத்தில் நாம் பயப்படத் தேவையில்லை. எலியாவைப் போல, நாமும் இந்த விஷயத்தை உண்மைக் கடவுளின் கையில் விட்டுவிடலாம். அப்படியென்றால், நம்மீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட பைபிள்மீது நாம் சார்ந்திருப்போம்; ஏனெனில், இது “சீர்திருத்தலுக்கு,” அதாவது காரியங்களைச் சரிசெய்ய உதவும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.—2 தீமோத்தேயு 3:17.

பாகால் தீர்க்கதரிசிகள் பலியைத் தயார்படுத்திவிட்டு, தங்கள் தெய்வத்திடம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள். “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்” என்று அவர்கள் திரும்பத் திரும்ப சத்தமாய்க் கூப்பிட்டார்கள். இப்படியே மணிக்கணக்காகக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். “ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை” என்று பைபிள் சொல்கிறது. மத்தியான வேளையிலே எலியா அவர்களைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்தார். பதில் சொல்லக்கூட நேரமில்லாதளவுக்கு பாகால் அதிக வேலையாய் இருக்கலாம், கழிப்பிடத்திற்குச் சென்றிருக்கலாம் அல்லது தூங்குகிறானோ என்னவோ அவனை யாராவது எழுப்ப வேண்டும் என்றெல்லாம் சொல்லி ஏளனம் செய்ய ஆரம்பித்தார். “உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்” என அந்தப் பித்தலாட்டக்காரர்களை எலியா உசுப்பிவிட்டார். பாகால் வணக்கம் ஒரு கேலிக்கூத்து, மோசடி என்பதை எலியா நன்கு அறிந்திருந்தார்; இது உண்மையில் ஏமாற்று வேலை என்பதை மக்கள் நேரில் கண்டு புரிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்பினார்.—1 இராஜாக்கள் 18:26, 27.

அவர் சொன்னதைக் கேட்டு, பாகாலின் ஆசாரியர்கள் இன்னும் அதிக வெறித்தனமாய் செயல்பட்டார்கள்; அவர்கள், “உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.” இதுவும் பலிக்கவில்லையே! “ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.” (1 இராஜாக்கள் 18:28, 29) உண்மையில் பாகால் என யாருமே இல்லை. யெகோவாவிடமிருந்து தந்திரமாய் மக்களைத் திசைதிருப்ப சாத்தான் உருவாக்கிய கற்பனை படைப்புதான் அவன். அன்றும் சரி, இன்றும் சரி, யெகோவாவை விட்டுவிட்டு வேறு எந்த எஜமானரைத் தேர்ந்தெடுத்தாலும், அது ஏமாற்றத்துக்கு, சொல்லப்போனால் தலைகுனிவுக்கே வழிநடத்துகிறது.—சங்கீதம் 25:3; 115:4-8.

பதில் கிடைத்தது!

மாலை வேளை நெருங்கியது, எலியாவின் முறை வந்தது. உண்மை வணக்கத்தின் எதிரிகள் தகர்த்துப்போட்டிருந்த யெகோவாவின் பலிபீடம் ஒன்றை அவர் செப்பனிட்டார். பலிபீடத்தை அமைக்க அவர் 12 கற்களைப் பயன்படுத்தினார். 12 கோத்திரத்தாருக்கும் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண சட்டத்திற்கு இன்னும் கீழ்ப்படிய கடமைப்பட்டிருப்பதை பத்துக் கோத்திர இஸ்ரவேலிலுள்ள அநேகருக்கு நினைப்பூட்டுவதற்காக அவர் இவ்வாறு செய்திருக்கலாம். பிறகு பலிக்குரிய மிருகத்தை அதன்மீது கிடத்தினார்; எல்லாவற்றின்மீதும் தண்ணீர் ஊற்றும்படி செய்தார். இந்தத் தண்ணீர் அருகிலுள்ள மத்தியதரைக் கடலிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம். அந்தப் பலிபீடத்தைச் சுற்றி வாய்க்காலை உண்டாக்கவும் அதைத் தண்ணீரால் நிரப்பவும் சொன்னார். பாகால் தீர்க்கதரிசிகளுக்கு எல்லா விதத்திலும் எந்தளவு அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அந்தளவு அனுகூலமற்ற நிலையை யெகோவாவுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்; எத்தகைய நிலையையும் யெகோவா வெற்றிகொள்ள வல்லவரென அவர்மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்ததே அதற்குக் காரணம்.—1 இராஜாக்கள் 18:30-35.

எல்லாம் தயார் செய்யப்பட்ட பிறகு, எலியா ஜெபம் செய்தார். எந்தக் காரியங்களுக்கு எலியா முக்கியத்துவம் கொடுத்தார் என்பது அவருடைய வலிமையான, எளிமையான ஜெபத்தில் தெளிவாய்த் தெரிந்தது. முதலாவதாக, யெகோவாவே ‘இஸ்ரவேலில் தேவன்,’ பாகால் அல்ல என்பதை எல்லாரும் அறிய வேண்டுமென்பதே அவருடைய முக்கியக் குறிக்கோளாக இருந்தது. இரண்டாவதாக, தான் யெகோவாவின் ஊழியராக செயல்படுவதை எல்லாரும் அறிய வேண்டும் என்றும் சகல மகிமையையும் புகழையும் யெகோவாவே பெற வேண்டும் என்றும் அவர் விரும்பினார். கடைசியாக, இன்னமும் தன் நாட்டவர்மீது தனக்கு அக்கறை இருப்பதையும் அவர் தெரிவித்தார். ஏனெனில் யெகோவா, ‘அவர்களுடைய இருதயத்தை மறுபடியும் திருப்புவதைக்’ காண அவர் ஆவலாய் இருந்தார். (1 இராஜாக்கள் 18:36, 37) கடவுளுக்கு உண்மையாய் நடக்காமல் எல்லா விதத்திலும் துயர நிலையை வருவித்தபோதிலும் இன்னமும் அந்த ஜனங்கள்மீது எலியா அன்பு வைத்திருந்தார். நாம் ஜெபம் செய்யும்போது, எலியாவைப் போலவே, கடவுளுடைய பெயருக்கு முக்கியத்துவத்தையும் உதவி தேவைப்படுவோரிடம் மனத்தாழ்மையையும் இரக்கத்தையும் காட்டுகிறோமா?

பாகால் என்று யாரும் இல்லாதது நிரூபணமானதும், யெகோவாவும் அப்படித்தானோ என்று எலியா ஜெபம் செய்வதற்கு முன் அந்தக் கூட்டத்தார் நினைத்திருக்கலாம். ஆனால், ஜெபம் செய்த பிறகு, அவர்கள் அப்படி நினைப்பதற்கு நேரமில்லாமல் போனது. “அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது” என்று பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 18:38) அற்புதமாய் பதில் கிடைத்தது! அப்போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?

“யெகோவாவே உண்மையான கடவுள்! யெகோவாவே உண்மையான கடவுள்!” என்று அவர்கள் எல்லாரும் ஆர்ப்பரித்தார்கள். (1 இராஜாக்கள் 18:39, NW) கடைசியில் உண்மையைப் புரிந்துகொண்டார்கள். ஆனால், அவர்களுடைய விசுவாசத்தை இன்னமும் செயலில் காட்டவில்லை. ஜெபத்திற்கு பதில் அளிக்கும் விதமாக வானத்திலிருந்து அக்கினி வந்ததைப் பார்த்த பிறகுதான், யெகோவாவே உண்மையான கடவுள் என அவர்கள் ஒப்புக்கொண்டது, அவர்களுக்கு உண்மையிலேயே விசுவாசம் இருந்ததற்கான அடையாளம் அல்ல. எனவே, தங்களுக்கு விசுவாசம் இருந்ததை வேறு விதத்தில் வெளிக்காட்டும்படி அவர்களிடம் எலியா சொன்னார். அதாவது, யெகோவாவின் நியாயப்பிரமாண சட்டத்திற்குக் கீழ்ப்படியும்படி சொன்னார். இதை அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். பொய்த் தீர்க்கதரிசிகளும் விக்கிரகாராதனை செய்பவர்களும் கொல்லப்பட வேண்டுமென கடவுளுடைய நியாயப்பிரமாணம் சொன்னது. (உபாகமம் 13:5-9) பாகாலின் ஆசாரியர்கள் யெகோவா தேவனின் பரம விரோதிகளாக இருந்தார்கள். அவருடைய நோக்கங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செயல்பட்டார்கள். இப்படிப்பட்டவர்களிடம் ஈவிரக்கம் காட்டலாமா? சரி, பழிபாவம் அறியாத குழந்தைகளை எல்லாம் துடிதுடிக்க உயிரோடு எரித்து பாகாலுக்குப் பலிகொடுத்தபோது அந்தக் குழந்தைகளிடம் ஈவிரக்கம் காட்டப்பட்டதா என்ன? (நீதிமொழிகள் 21:13; எரேமியா 19:5) இல்லையே. இரக்கத்தைப் பெறுவதற்கு இந்த ஆசாரியர்கள் துளியும் அருகதையற்றவர்கள். எனவே, இவர்களைக் கொன்றுபோடும்படி எலியா கட்டளையிட்டார்; ஆம், இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.—1 இராஜாக்கள் 18:40.

கர்மேல் மலையில் நடந்த இந்தப் பரிட்சையின் முடிவை இன்றைய அறிஞர்கள் சிலர் விமர்சிக்கிறார்கள். மத சகிப்புத்தன்மை இல்லாமல் வன்முறைகளில் இறங்குவதை நியாயப்படுத்த மதவெறியர்கள் இதைச் சுட்டிக்காட்டாதிருக்க வேண்டுமே என சிலர் கவலைப்படலாம். சொல்லப்போனால், இன்று வன்முறையில் இறங்குகிற மதவெறியர்கள் ஏராளமானோர் இருப்பது வருந்தத்தக்கது. ஆனால், எலியா மத வெறியர் அல்ல. யெகோவாவின் சார்பாக நீதியான தண்டனைத்தீர்ப்பை அவர் நிறைவேற்றினார். அதோடு, துன்மார்க்கரைக் கொல்வதற்கு எலியாவைப்போல் தாங்கள் வாளைக் கையிலெடுக்க முடியாது என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்று பேதுருவிடம் கிறிஸ்து கூறினார்; மேசியா வந்த பிறகு, இயேசுவின் சீஷர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறை இந்த வார்த்தைகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (மத்தேயு 26:52) எதிர்காலத்தில் தம்முடைய குமாரனைப் பயன்படுத்தி யெகோவா நீதியைச் செயல்படுத்துவார்.

விசுவாசத்துடன் வாழ வேண்டிய கடமை உண்மை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. (யோவான் 3:16) இதற்கு, எலியா போன்ற விசுவாசமுள்ளவர்களைப் பின்பற்றுவது ஒரு வழியாகும். அவர் யெகோவாவை மட்டுமே வழிபட்டார், அவ்வாறு வழிபட மற்றவர்களையும் ஊக்கப்படுத்தினார். யெகோவாவிடமிருந்து மக்கள் வழிவிலகிச் செல்ல சாத்தான் தந்திரமாய் பயன்படுத்திய அந்த மதம் போலியானது என அவர் தைரியமாய் அம்பலப்படுத்தினார். காரியங்களைச் சரிப்படுத்துவதற்கு தன்னுடைய திறமைகளையோ விருப்பத்தையோ சார்ந்திருப்பதற்குப் பதிலாக, யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆம், எலியா உண்மை வணக்கத்திற்காக உறுதியோடு நின்றார். நாம் ஒவ்வொருவரும் அவருடைய விசுவாசத்தைப் பின்பற்றுவோமாக.(w08 1/1)

[அடிக்குறிப்புகள்]

a ஆகாப்-எலியா சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, 1992, ஏப்ரல் 1 தேதியிட்ட காவற்கோபுர இதழில், “எலியாவுக்கிருந்ததைப் போன்ற விசுவாசம் உங்களுக்கு உண்டா?” என்ற கட்டுரையைக் காண்க.

b கடலிலிருந்து வீசுகிற ஈரப்பதமிக்க காற்று, மேலெழும்பி வருகையில் கர்மேல் மலைச் சரிவுகளில் அடிக்கடி மழையாய் பொழிவதாலும், ஏராளமான பனியைப் பெய்வதாலும் இந்தப் பகுதி பொதுவாக பச்சைப் பசேலென வளமாக இருக்கிறது. மழையைத் தருவதாக பாகாலுக்குப் புகழாரம் சூட்டப்பட்டதால், குறிப்பாக இந்த மலை பாகால் வழிபாட்டிற்குரிய முக்கியத் தலமாய் விளங்கியது. எனவே, வளமற்று, வறண்டு கிடந்த இந்தக் கர்மேல் மலை, பாகால் வணக்கம் போலியானது என்பதை அம்பலப்படுத்த மிகப் பொருத்தமான இடமாய் அமைந்தது.

c பலிக்குரிய மிருகத்தின்மீது, “நெருப்புப் போடாமல்” இருக்கும்படி அவர்களிடம் எலியா சொன்னது கவனிக்க வேண்டிய விஷயம். இத்தகைய விக்கிரக ஆராதனைக்காரர்கள் சில சமயங்களில் பலிபீடத்தின் கீழே ரகசிய குழி தோண்டி, தாங்களே நெருப்பு மூட்டிவிட்டு, கடவுள் நெருப்பு மூட்டியதைப்போல் தோன்றச் செய்தார்களென சில அறிஞர்கள் சொல்கிறார்கள்.

[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]

யெகோவாவை விட்டுவிட்டு வேறு எந்த எஜமானரைத் தேர்ந்தெடுத்தாலும், அது ஏமாற்றத்துக்கே வழிநடத்துகிறது

[பக்கம் 21-ன் படம்]

“யெகோவாவே உண்மையான கடவுள்!”