Skip to content

ஏன் இயேசுவின் மூலம் ஜெபம் செய்ய வேண்டும்?

ஏன் இயேசுவின் மூலம் ஜெபம் செய்ய வேண்டும்?

இயேசு ஜெபம் செய்வதைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கொடுத்தார். அவருடைய காலத்திலிருந்த யூத மதத் தலைவர்கள் ‘முக்கியமான தெருக்களின் முனைகளில் நின்று’ ஜெபம் செய்தார்கள். ஏன்? மற்றவர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்! ‘இவர் எவ்ளோ பெரிய பக்திமான்’ என்று மக்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தார்கள். “நிறைய வார்த்தைகளைச் சொல்லி” ஜெபம் செய்தால் கடவுள் தங்கள் ஜெபத்தைக் கேட்பார் என்று நினைத்துக்கொண்டு நீளமாகவும் சொன்ன வார்த்தைகளைச் திரும்பத் திரும்ப சொல்லியும் ஜெபம் செய்தார்கள். (மத்தேயு 6:5-8) இப்படிச் செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று இயேசு சொன்னார். எப்படியெல்லாம் ஜெபம் செய்யக் கூடாது என்று சொல்லிக் கொடுத்ததோடு, இன்னும் நிறைய விஷயங்களையும் இயேசு சொல்லிக்கொடுத்தார்.

கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்… அவருடைய அரசாங்கம் வர வேண்டும்… அவருடைய விருப்பம் நிறைவேற வேண்டும்… என்ற ஆசை நமக்கு இருப்பதை நம் ஜெபங்கள் காட்ட வேண்டும் என்று இயேசு சொல்லித்தந்தார். தனிப்பட்ட விஷயங்களுக்காக ஜெபம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்றும் சொன்னார். (மத்தேயு 6:9-13; லூக்கா 11:2-4) ஜெபங்கள் கேட்கப்பட வேண்டும் என்றால், அதை விசுவாசத்தோடும் மனத்தாழ்மையோடும் செய்ய வேண்டும் என்றும் விடாமல் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். சில உதாரணங்களைப் பயன்படுத்தி இவற்றை மக்களுக்குப் புரியவைத்தார். (லூக்கா 11:5-13; 18:1-14) கற்றுக்கொடுத்த விஷயங்களின்படி தானும் செய்துகாட்டினார்.—மத்தேயு 14:23; மாற்கு 1:35.

இன்னும் நன்றாக ஜெபம் செய்வதற்கு இந்த விஷயங்கள் இயேசுவின் சீஷர்களுக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கும். ஆனாலும், ஜெபத்தைப் பற்றிய ஒரு முக்கியமான பாடத்தை இயேசு அவர்களுக்கு இன்னமும் சொல்லிக்கொடுக்க வேண்டியிருந்தது. அதற்காக, இறப்பதற்கு முந்தின ராத்திரிவரை அவர் காத்திருந்தார்.

“ஜெபம் செய்யும் விதத்தில் வந்த புதிய மாற்றம்”

தான் இறப்பதற்கு முந்தின ராத்திரி தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களை இயேசு உற்சாகப்படுத்தினார். அந்தச் சமயத்தில், புதிதாக ஒரு விஷயத்தைச் சொன்னார். அதைச் சொல்வதற்கான சரியான நேரமும் அதுவாகத்தான் இருந்தது! “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று சொன்னார். பிறகு, இந்த நம்பிக்கையையும் கொடுத்தார்: “மகன் மூலம் தகப்பன் மகிமைப்படும்படி, என் பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன். என் பெயரில் நீங்கள் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.” அதோடு, “இதுவரை நீங்கள் எதையுமே என்னுடைய பெயரில் கேட்கவில்லை. கேளுங்கள், அப்போது பெற்றுக்கொள்வீர்கள், நிறைவான சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள்” என்று கடைசியாகச் சொன்னார்.—யோவான் 14:6, 13, 14; 16:24.

இயேசு சொன்ன வார்த்தைகள் ரொம்ப ரொம்ப முக்கியமானதாக இருந்தது. “இத்தனை காலமாக ஜெபம் செய்துகொண்டிருந்த விதத்தில் இதுவொரு மாற்றத்தைக் கொண்டுவந்தது” என்று ஒரு பைபிள் அகராதி சொல்கிறது. ‘கடவுளிடம் ஜெபம் செய்யாமல் இனிமேல் என்னிடம் ஜெபம் செய்யுங்கள்’ என்று இயேசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவை அணுகும் விதத்தில் செய்யப்பட்ட ஒரு புதிய மாற்றத்தைப் பற்றித்தான் சொன்னார்.

காலங்காலமாக கடவுள் தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்கள் செய்த ஜெபங்களைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தார். (1 சாமுவேல் 1:9-19; சங்கீதம் 65:2) ஆனால், இஸ்ரவேலர்களோடு கடவுள் ஒப்பந்தம் செய்த பிறகு, அவர்களுடைய ஜெபங்களை கடவுள் கேட்க வேண்டும் என்றால் அவர்கள் பங்கில் ஒன்றைச் செய்ய வேண்டியிருந்தது. அதாவது, இஸ்ரவேல் தேசம்தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசம் என்பதை ஏற்றுக்கொண்டு ஜெபம் செய்ய வேண்டியிருந்தது. சாலொமோன் ராஜாவின் காலத்தில், வழிபாட்டுக்காக ஆலயத்தைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. (உபாகமம் 9:29; 2 நாளாகமம் 6:32, 33) ஆனால், வழிபாட்டுக்காக யெகோவா செய்த இந்த ஏற்பாடுகள் தற்காலிகமாகத்தான் இருந்தன. இதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது, இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த சட்டமும் ஆலயத்தில் செலுத்தப்பட்ட பலிகளும் “வரப்போகிற நன்மைகளின் நிஜம் அல்ல, அவற்றின் நிழல்தான்” என்று சொன்னார். (எபிரெயர் 10:1, 2) நிழல் என்றாலே அது மறைந்துபோய் நிஜமான ஒன்று வரும் என்றுதானே அர்த்தம்! (கொலோசெயர் 2:17) கி.பி. 33-லிருந்து திருச்சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, திருச்சட்டம் மக்களை யாரிடம் வழிநடத்தியதோ அவருக்கு, அதாவது இயேசு கிறிஸ்துவுக்கு, அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.—யோவான் 15:14-16; கலாத்தியர் 3:24, 25.

“எல்லா பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குக் கொடுத்தார்”

யெகோவாவை அணுகுவதற்கு ஒரு மேலான வழியை இயேசு அறிமுகப்படுத்தினார். இயேசு ஒரு செல்வாக்குள்ள நண்பரைப் போல் இருந்து நம்முடைய ஜெபத்தை யெகோவா கேட்பதற்கும் பதில் கொடுப்பதற்கும் வழி செய்கிறார். இயேசுவால் எப்படி இதுபோல செயல்பட முடிகிறது?

நாம் என்னதான் உழைத்தாலும் எப்பேர்ப்பட்ட பலிகளைக் கொடுத்தாலும், பாவத்திலிருந்து நம்மை நாமே சுத்தப்படுத்திக்கொள்ள முடியாது. அதேபோல, பரிசுத்தமாக இருக்கிற யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளும் உரிமையையும் தானாகவே சம்பாதித்துவிட முடியாது. ஏனென்றால், பிறக்கும்போதே நாம் பாவிகளாக இருக்கிறோம். (ரோமர் 3:20, 24; எபிரெயர் 1:3, 4) அதனால்தான், பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக குறையில்லாத மனித உடலை இயேசு நமக்காகக் கொடுத்தார். (ரோமர் 5:12, 18, 19) இயேசுவின் மீட்பு பலியில் விசுவாசம் வைத்து, அவருடைய பெயரைப் பயன்படுத்தி ஜெபம் செய்தால் யெகோவாவுக்கு முன் சுத்தமான மனசாட்சியோடு இருக்க முடியும்; அவரிடம் “தயக்கமில்லாமல் பேச” முடியும்.—எபேசியர் 3:11, 12.

யெகோவாவுடைய விருப்பம் நிறைவேறுவதில் இயேசுவுக்கு மூன்று முக்கியமான பங்கு இருக்கிறது. இயேசுவுடைய பெயரில் நாம் ஜெபம் செய்யும்போது அவருக்கு இருக்கிற அந்தப் பங்கை ஏற்றுக்கொள்கிறோம் என்பதையும் அதை விசுவாசிக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம். கடவுளுடைய நோக்கத்தில், இயேசுவுக்கு என்னென்ன பங்கெல்லாம் இருக்கிறது? (1) இயேசு, ‘கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டியாக’ இருக்கிறார். அவருடைய பலியின் அடிப்படையில்தான் யெகோவா நம் பாவங்களை மன்னிக்கிறார். (2) இயேசு, “தலைமைக் குருவாக” இருக்கிறார். உயிர்த்தெழுந்த பிறகு, தன்னுடைய மீட்பு விலையிலிருந்து நாம் நன்மை அடைவதற்கு தலைமைக் குருவாக இருந்து உதவி செய்கிறார். (3) இயேசு, ‘வழியாக’ இருக்கிறார். அவர் வழியாகத்தான் யெகோவாவை ஜெபத்தில் அணுக முடியும்.—யோவான் 1:29; 14:6; எபிரெயர் 4:14, 15.

இயேசுவின் பெயரில் ஜெபம் செய்யும்போது அவரை மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். அப்படி மதிப்பு கொடுப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், யெகோவாவுடைய விருப்பம் அதுதான்! ‘எல்லாரும் இயேசுவின் பெயரில் மண்டிபோட வேண்டும், . . . இயேசு கிறிஸ்துதான் எஜமான் என்று எல்லாரும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். . . . இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்காகத்தான்’ என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 2:10, 11) எல்லாவற்றையும்விட, இயேசுவின் பெயரில் ஜெபம் செய்யும்போது நாம் யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம். ஏனென்றால், அவர்தான் இயேசுவை நமக்காகக் கொடுத்தார்.—யோவான் 3:16.

“முழு இதயத்தோடு” ஜெபம் செய்யவேண்டும்; பழக்கதோஷத்தில் அல்ல

இயேசுவுக்கு இருக்கும் பொறுப்புகளைப் புரிந்துகொள்வதற்கு, அவரைப் பற்றி விவரிக்கும் பல பெயர்களையும் காரணப்பெயர்களையும் பற்றி பைபிள் சொல்கிறது. இவையெல்லாம், இயேசு நமக்காகச் செய்ததை… செய்துகொண்டிருப்பதை… செய்யப்போவதை… புரிந்துகொள்ள உதவுகின்றன. ( இயேசுவின் முக்கியப் பொறுப்புகள் என்ற பெட்டியைப் பாருங்கள்.) இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் மற்ற “எல்லா பெயர்களுக்கும் மேலான [ஒரு] பெயர்!” * அப்படியென்றால், பரலோகத்திலும் பூமியிலும் அவருக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.—பிலிப்பியர் 2:9; மத்தேயு 28:18.

இயேசுவின் பெயரில் ஜெபம் செய்வது வெறுமனே பழக்கதோஷமாக இருக்கக் கூடாது

யெகோவா நம் ஜெபத்தைக் கேட்க வேண்டும் என்றால், நாம் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்யவேண்டும் என்பது உண்மைதான்! (யோவான் 14:13, 14) அதற்காக, ஜெபத்தின் முடிவில் இயேசுவின் பெயரில் கேட்கிறோம் என்று வெறுமனே பழக்கதோஷத்தில் சொல்லக் கூடாது. ஏன்?

ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு கம்பெனி மேனேஜரிடமிருந்து உங்களுக்கு ஒரு கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தின் முடிவில் “உங்கள் உண்மையுள்ள” என்று இருக்கிறது. அந்த வார்த்தைகளைப் படிக்கும்போது, அவர் மனதிலிருந்து அதை எழுதியிருக்கிறார் என்று நினைப்பீர்களா? அல்லது, ஒரு கடிதத்தை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்றவொரு முறை இருப்பதால் அப்படி எழுதியிருப்பார் என்று நினைப்பீர்களா? இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? ஜெபத்தின் முடிவில் இயேசுவுடைய பெயரை வெறுமனே பழக்கதோஷத்தில் பயன்படுத்தக் கூடாது! கடிதத்தின் கடைசி வார்த்தைகள் மாதிரி!! அதற்குப் பதிலாக, அந்த வார்த்தைகளுடைய அர்த்தத்தைப் புரிந்து மனசார அதைப் பயன்படுத்த வேண்டும். நாம் ‘எப்போதும் ஜெபம் செய்ய’ வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அப்படிச் செய்யும்போதெல்லாம் “முழு இதயத்தோடு” செய்ய வேண்டும்; பழக்கதோஷத்தில் அல்ல.—1 தெசலோனிக்கேயர் 5:17; சங்கீதம் 119:145.

“இயேசுவின் பெயரில்” ஜெபிக்கிறோம் என்று வெறும் பழக்கதோஷத்தில் சொல்வதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? இயேசுவிடம் இருக்கிற அருமையான குணங்களை ஆழமாக யோசித்துப் பார்க்கலாம். அவர் இதுவரைக்கும் நமக்காகச் செய்த… செய்ய ஆசைப்படுகிற… விஷயங்களை யோசித்துப் பார்க்கலாம். அதோடு, இயேசுவை யெகோவா எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்பதை யோசித்து அதற்காக ஜெபத்தில் நன்றி சொல்லலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, “நீங்கள் என் தகப்பனிடம் எதைக் கேட்டாலும், அதை அவர் என்னுடைய பெயரில் உங்களுக்குத் தருவார்” என்று இயேசு கொடுத்த வாக்குறுதியின் மேல் இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகமாகும்.—யோவான் 16:23.

^ பாரா. 14 “பெயர்” என்று மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் கிரேக்க வார்த்தை அந்தப் பெயரோடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் உட்படுத்தலாம். அதாவது, அதிகாரம், உயர்ந்த குணம், பதவி, கம்பீரம், வல்லமை, தனித்துவம் போன்றவற்றை உட்படுத்தலாம் என்று வைன்ஸ் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் வர்ட்ஸ் சொல்கிறது.