Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

வாசகரின் கேள்வி

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

மனிதர்கள் படும் துன்பத்திற்கு கடவுள் காரணமல்ல. “அக்கிரமம் தேவனுக்கு . . . தூரமாயிருக்கிறது!” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 34:10) அப்படியானால், துன்பத்திற்கெல்லாம் யார் முக்கிய காரணம்?

சாத்தானை, “இந்த உலகத்தின் அதிபதி” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:30) யெகோவா இப்பிரபஞ்சத்தின் பேரரசர் என்பது உண்மைதான். தமக்குரிய இந்த ஸ்தானத்தை அவர் ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார். இருந்தாலும், சில காலத்திற்கு மனிதகுலத்தில் பெரும்பாலானோரை ஆட்சிசெய்ய சாத்தானை அவர் அனுமதித்திருக்கிறார்.—1 யோவான் 5:19.

சாத்தான், இதுவரை எப்படிப்பட்ட ஓர் அதிபதியாக அதாவது, ஆட்சியாளனாக இருந்திருக்கிறான்? மனிதர்களுடன் அவன் தொடர்புகொண்ட நாள்முதல் கொலைகாரனாகவும் வஞ்சிப்பவனாகவும் இருந்திருக்கிறான். சாத்தான் மனிதகுலத்தின் மீது படுபயங்கரமான பாதிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறான். அதனால்தான் இயேசு, “அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” என்று சாத்தானைக் குற்றம்சாட்டினார். (யோவான் 8:44) இயேசு, தம்மைக் கொல்வதற்காக வழிதேடிக்கொண்டிருந்த மனிதர்களையும், முதல் கொலைகாரனின் பிள்ளைகள் என்று கூறினார். அவர்கள், சாத்தானைப் போலவே நடந்துகொண்டதன்மூலம் அவனுடைய பிள்ளைகள் என்று நிரூபித்தார்கள். அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறான் என்ற பழமொழி அவர்களுடைய விஷயத்தில் உண்மையாக இருக்கிறதல்லவா?

கொலை செய்யும் எண்ணத்தை இன்றும் மனிதர்களின் மனதில் சாத்தான் விதைத்துக்கொண்டுதான் இருக்கிறான். உதாரணத்திற்கு, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து, இப்போது ஓய்வுபெற்றிருக்கும் ஆர். ஜெ. ரமல் என்பவரின் கணிப்பின்படி, 1900-லிருந்து 1987-க்குள் அநேக அரசாங்கங்கள், மொத்தம் 16,91,98,000 பேரை கொன்று குவித்திருக்கின்றன. இந்தக் கொலைகள், கட்சி கலவரங்களின்போதும், இனப் படுகொலைகளின்போதும், கண்மூடித்தனமான வன்முறைகளின்போதும் நடந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இதுபோக, அந்த வருடங்களில் நடந்த போர்களிலும் கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்திருக்கிறார்கள்.

துன்பத்திற்கு கடவுள் காரணம் இல்லையென்றால், அவர் ஏன் அதை அனுமதிக்கிறார்? ஏனென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். எது சரி, எது தவறு என்பதன் பேரில் எழுந்துள்ள இந்தக் கேள்விகள் பிரபஞ்சத்திலுள்ள எல்லாரையுமே பாதித்திருக்கின்றன. அந்தக் கேள்விகளில் ஒன்றை மட்டும் நாம் இப்போது சிந்திக்கலாம்.

மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் ஆதாமும் ஏவாளும், சாத்தானுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டார்கள். கடவுளுடைய ஆட்சியை நிராகரித்துவிட்டு சுய ஆட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள். சுயமாக ஆட்சி செய்வதாக நினைத்தார்கள், ஆனால், உண்மையில் பிசாசின் ஆட்சியின்கீழ்தான் இருந்தார்கள்.—ஆதியாகமம் 3:1-6; வெளிப்படுத்துதல் 12:9.

மனிதனின் ஆட்சி வெற்றிபெறாது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தேவை. அந்த ஆதாரங்களை அளிப்பதற்கு காலம் தேவை. யெகோவா நியாயமான கடவுளாக இருப்பதால் அதை உணர்ந்து காலத்தை அனுமதித்திருக்கிறார். அதன் விளைவு? சாத்தானின் கைக்குள்ளிருக்கும் மனித ஆட்சி, துன்பத்திற்குத்தான் வழிநடத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், கடவுள் இவ்வளவு நீண்ட காலத்தை அனுமதித்தது, மனிதனுக்கு நன்மையை விளைவித்திருக்கிறது. எப்படியெனில், சிலர் அந்த ஆதாரங்களைக் கவனமாகப் பார்த்து, கடவுளுடைய ஆட்சிதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கடவுளின் ஆட்சியின்கீழ் தாங்கள் வாழ விரும்புவதைக் காட்டுவதற்கு வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். கடவுள் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் கற்று, அவற்றை செய்பவர்கள் என்றென்றும் வாழ வாய்ப்பிருக்கிறது.—யோவான் 17:3; 1 யோவான் 2:17.

இந்த உலகம் சாத்தானின் கொடூரமான ஆதிக்கத்தின்கீழ் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது நெடுநாள் நீடிக்காது. சீக்கிரத்தில், யெகோவா, தம் மகன் மூலமாக, ‘பிசாசினுடைய கிரியைகளை [அதாவது, செயல்களை] அழித்துவிடுவார்.’ (1 யோவான் 3:8) கடவுளுடைய வழிநடத்துதலின்கீழ் இயேசு, மக்களின் மனவேதனைகளை நீக்குவதோடு நொறுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை சந்தோஷம் நிறைந்ததாக மாற்றுவார். மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரையாக பலவித துன்பங்களை அனுபவித்து இறந்துபோன கோடானுகோடி மக்களை அவர் மறுபடியும் உயிருக்குக் கொண்டுவருவார்.—யோவான் 11:25.

பிசாசின் செயல்களை கடவுள் அழித்துவிடுவார் என்பதற்கு இயேசுவின் உயிர்த்தெழுதல் சான்றளிக்கிறது. அதேசமயம், கடவுளுடைய ஆட்சியைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்பதற்கும் அது உறுதியளிக்கிறது. (அப்போஸ்தலர் 17:31) வரப்போகும் அந்த எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள பின்வரும் தகவலை பைபிள் அளிக்கிறது: “தேவன்தாமே அவர்களோடேகூட [மனிதர்களோடேகூட] இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” இது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!—வெளிப்படுத்துதல் 21:3, 4. (w08 2/1)