Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர் நம்மை விசேஷித்தவர்களாய் கருதுகிறார்

அவர் நம்மை விசேஷித்தவர்களாய் கருதுகிறார்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

அவர் நம்மை விசேஷித்தவர்களாய் கருதுகிறார்

லூக்கா 12:6, 7

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்கலாம்’ என்று பைபிள் சொல்கிறது. எல்லா தவறுக்கும் நாம்தான் காரணம் என்று நம்முடைய மனம் நம்மீது குற்றம் சுமத்தலாம் என்று இதிலிருந்து தெரிகிறது. கடவுள் நம்மிடம் அன்பும் அக்கறையும் காட்ட நாம் தகுதியானவர்கள் அல்ல என்று நம்முடைய மனம் அடிக்கடி சொல்லலாம். என்றாலும், “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்று பைபிள் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. (1 யோவான் 3:19, 20) நம்மைப்பற்றி நம்மைவிட கடவுளுக்கு நன்றாகத் தெரியும். நாம் நம்மைப் பார்க்கும் விதத்திற்கும் கடவுள் நம்மைப் பார்க்கும் விதத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. யெகோவா தேவனின் கருத்தே முக்கியமானதாய் இருப்பதால் அவர் நம்மை எவ்வாறு கருதுகிறார்? இரண்டு சந்தர்ப்பங்களில் இயேசு சொன்ன ஓர் அருமையான உவமையிலிருந்து இதற்கான பதிலை தெரிந்துகொள்ளலாம்.

“ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகளை விற்கிறார்கள்” என்று இயேசு ஒரு சமயம் சொன்னார். (மத்தேயு 10:29, 31, NW) “இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. . . . ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்றும் லூக்கா 12:6, 7-ல் இயேசு சொன்னார். எளிமையானாலும் வலிமையான இந்த உவமை, யெகோவா தம்மை வணங்கும் ஒவ்வொருவரையும் எப்படிக் கருதுகிறார் என சொல்கிறது.

இயேசுவின் காலத்தில், உணவுக்காகப் பயன்படுத்தப்பட்ட பறவைகளில் சிட்டுக் குருவிகளே மிகவும் மலிவானவை. சந்தையில், ஏழை பெண்கள் ஏன், அவருடைய அம்மாவும்கூட இந்தச் சின்னஞ்சிறிய பறவைகளை வாங்கிச் செல்வதை இயேசு பார்த்திருப்பார். இன்றைய மதிப்பின்படி சுமார் இரண்டு ரூபாய்க்கு சமமான ஓர் அசாரியன் காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகளை வாங்க முடிந்தது. இந்தப் பறவைகள் அவ்வளவு மலிவாக இருந்ததால் இரண்டு காசுக்கு நான்கு அல்ல ஐந்து சிட்டுக் குருவிகளை வாங்க முடிந்தது; அதில் ஒன்று இலவசமாகக் கிடைத்தது.

இந்தச் சிட்டுக் குருவிகளில் ஒன்றையும் ‘தேவன் மறப்பதில்லை’ அல்லது அவற்றில் ஒன்றுகூட தேவனுக்குத் தெரியாமல் ‘தரையிலே விழுவதில்லை’ என்று இயேசு விளக்கினார். (மத்தேயு 10:29) சிட்டுக் குருவிகள் ஒவ்வொரு முறை தரைக்கு வரும்போதும் ஒருவேளை அடிப்பட்டு கீழே விழும்போது அல்லது உணவு தேடி வரும்போது யெகோவா அவற்றைக் கவனிக்கிறார். நமக்கு இந்தச் சிட்டுக் குருவிகள் அற்பமானவையாகத் தோன்றலாம். ஆனால், யெகோவா அவற்றை அப்படிக் கருதுவதில்லை; அதனால்தான் அவற்றைப் படைத்து நினைவிலும் வைத்திருக்கிறார். சொல்லப்போனால், இந்த உயிரினங்கள் அவருக்கு மதிப்புவாய்ந்ததாய் இருப்பதால் அவற்றை உயர்வாய்க் கருதுகிறார். இந்த உவமையில் இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

இயேசு போதித்தபோது பொதுவாக ஒப்புமைகளை உபயோகித்தார்; ஒரு சாதாரண விஷயத்தை சொல்லி அதை முக்கியமான ஒரு விஷயத்தோடு ஒப்பிட்டார். உதாரணத்திற்கு, ‘காகங்கள் . . . விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்’ என்றும் இயேசு சொன்னார். (லூக்கா 12:24) சிட்டுக் குருவிகளைப் பற்றிய உவமையில் இயேசு சொல்ல வந்த குறிப்பு இப்போது உங்களுக்குத் தெளிவாகப் புரிகிறதல்லவா? சின்னஞ்சிறிய இந்தப் பறவைகள்மீதே யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறதென்றால் தம்மை அன்போடு வணங்குகிறவர்கள்மீது அவருக்கு எந்தளவு அக்கறை இருக்கும்!

கடவுள் நம்மைக் கவனிப்பதற்கும் நம்மீது அக்கறை காட்டுவதற்கும் நாம் தகுதியற்றவர்களாக நினைக்கத் தேவையில்லையென இயேசுவின் இந்த உவமையிலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஏனென்றால், அவர் ‘நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருக்கிறார்.’ நம்மைப்பற்றி நமக்கே தெரியாத விஷயங்கள் கடவுளுக்குத் தெரிந்திருப்பதை அறியும்போது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! (w08 4/1)

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

சிட்டுக் குருவிகள்: © ARCO/D. Usher/age fotostock