Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் வல்லமையைப் பறைசாற்றும் நட்சத்திரங்கள்

கடவுளின் வல்லமையைப் பறைசாற்றும் நட்சத்திரங்கள்

கடவுளின் வல்லமையைப் பறைசாற்றும் நட்சத்திரங்கள்

“மேலே வானங்களைப் பாருங்கள். இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்? வானத்தில் இந்தப் படைகளை எல்லாம் படைத்தது யார்? ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்? உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர். எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.”​—⁠ஏசாயா 40:26, ஈஸி டு ரீட் வர்ஷன்.

நம் சூரியன் நடுத்தரமான அளவுள்ள ஒரு நட்சத்திரமே. என்றாலும், அது பூமியைவிட 3,30,000 மடங்கு பெரியது. நம் பூமிக்கு அருகிலிருக்கும் பெரும்பாலான நட்சத்திரங்கள் சூரியனைக் காட்டிலும் சிறியவைதான். ஆனால், V382 சிக்னி என்று பெயரிடப்பட்ட நட்சத்திரமும், அதைப் போன்ற மற்ற நட்சத்திரங்களும் சூரியனைவிட கிட்டத்தட்ட 27 மடங்கு பெரியவை.

நம் சூரியனிலிருந்து எந்தளவு ஆற்றல் வெளிப்படுகிறது? எரியும் நெருப்பிலிருந்து நீங்கள் 15 கிலோமீட்டர் தள்ளி நின்றாலும் அதன் வெப்பத்தை உணருகிறீர்கள் என்றால், அது எந்தளவுக்கு சூடாக இருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள்! நம் பூமி, சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சுழலுகிறது. அவ்வளவு தூரத்தில் இருந்தாலும், உச்சி வெயிலில் வெளியே சென்றால் அந்த வெப்பத்தால் சிலருக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்படலாம். சூரிய ஆற்றலில் சுமார் 100 கோடியில் ஒரு பாகம் மட்டுமே நம் கிரகத்தை எட்டுகிறது என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம். ஆனால், பூமியிலுள்ள உயிரினங்களைக் காக்க இந்தத் துளி ஆற்றலே போதுமானது.

ஒருவேளை, பூமியைப் போன்று சுமார் 31 லட்சம் கோடி கிரகங்கள் இருந்தால் அவற்றிலுள்ள உயிரினங்களைக் காக்க நம் சூரியனிலிருந்து வெளிவரும் ஒட்டுமொத்த ஆற்றல் போதுமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். சூரியனிலிருந்து எந்தளவுக்கு அதிகமான ஆற்றல் வெளிவருகிறது என்பதை வேறு விதத்திலும் கணக்கிடலாம். சூரியனிலிருந்து ஒரு நொடியில் வெளிவரும் ஆற்றலை, அமெரிக்கா போன்ற தொழில்துறை நாடுகள், “அடுத்த 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று விண்வெளி வானிலை கணிப்பு மையம் (SWPC) என்ற ஒரு வெப்-சைட் கூறுகிறது.

அணுஉலையைப் போல் சூரியன் அதன் மையப் பகுதியிலிருந்து ஆற்றலைக் கக்குகிறது. சூரியன் மிகப் பெரியதாகவும் அதன் மையப்பகுதி மிக அடர்த்தியாகவும் இருப்பதால் அதன் உள்ளே உற்பத்தியாகும் ஆற்றல் மேற்பரப்பிற்கு வருவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் எடுக்கிறது. “ஒருவேளை, இன்று சூரியன் தன் ஆற்றலை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டது என்றால், 5 கோடி ஆண்டுகளுக்கு பின்னரே அதன் பாதிப்பு நம் பூமியில் தெரியவருமாம்!” என்று SWPC வெப்-சைட் கூறுகிறது.

சரி, இப்படிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மேகமூட்டமில்லாத இரவில் வானத்தை சற்று அண்ணாந்து பார்த்தீர்களென்றால், அள்ளித் தெறித்தாற்போல் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும். இவை ஒவ்வொன்றும் நம் சூரியனைப் போல் அளவிலா ஆற்றலை வெளியிடுகின்றன. அதோடு, இந்தப் பிரபஞ்சத்தில் கோடானுகோடி நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்த விண்மீன் கூட்டங்கள் எங்கிருந்து வந்தன? நம் பிரபஞ்சம் சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு திடீரென தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் பலர் நம்புகிறார்கள். ஆனால், அதற்கான காரணத்தை அவர்களால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (ஆதியாகமம் 1:1) பிரமாண்டமான அணுஉலைகளாக இருக்கும் இந்த நட்சத்திரங்களைப் படைத்த கடவுளை ‘மகா வல்லமையுள்ளவர்’ என அழைப்பது பொருத்தமாய் இருக்கும்.​—ஏசாயா 40:26.

கடவுள் தம் வல்லமையைப் பயன்படுத்தும் விதம்

யெகோவா தேவன் தம்முடைய விருப்பத்தைச் செய்யும் ஆட்களை ஆதரிப்பதற்காக தம் வல்லமையைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக, ஊழியம் செய்ய இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பவுல், கடவுளைப்பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்குத் தன் சக்தியை எல்லாம் பயன்படுத்தினார். பவுலும் சாதாரண மனிதர்தான், அவரிடம் விசேஷ சக்தி எதுவும் இருக்கவில்லை. இருந்தாலும், கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் மற்றவர்களுக்கு அவரால் ஏராளமான நன்மைகளைச் செய்ய முடிந்தது. எப்படி? கடவுளிடமிருந்து “ஈடு இணையற்ற வல்லமை” பெற்றதாக அவரே ஒத்துக்கொண்டார்.​—2 கொரிந்தியர் 4:7–9, பொது மொழிபெயர்ப்பு.

யெகோவா தேவன் தம்முடைய ஒழுக்க நெறிகளை வேண்டுமென்றே மீறுகிறவர்களை அழிப்பதற்கும் தமது வல்லமையைப் பயன்படுத்தியிருக்கிறார். நல்லவர்களைக் காப்பாற்றி கெட்டவர்களை மட்டுமே அழிப்பதற்கு யெகோவா தம் வல்லமையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு சோதோம் கொமோரா பட்டணங்களின் அழிவையும் நோவாவின் காலத்தில் வெள்ளத்தால் வந்த அழிவையும் உதாரணங்களாக இயேசு குறிப்பிட்டார். யெகோவா தேவன் தம்முடைய நீதிநெறிகளை மீறி நடக்கிறவர்களை அழிப்பதற்காக நம்முடைய காலத்தில் மீண்டும் தம் வல்லமையை விரைவில் பயன்படுத்துவார் என இயேசு முன்பே சொல்லியிருக்கிறார்.​—மத்தேயு 24:3, 37–39; லூக்கா 17:26–30.

நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

இறைவனின் வல்லமையை நட்சத்திரங்கள் பறைசாற்றுவதைப் பற்றி ஆழ்ந்து யோசித்த பிறகு, தாவீது ராஜாவைப் போலவே நீங்களும் உணரலாம். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று அவர் சொன்னார்.​—சங்கீதம் 8:3, 4.

உண்மைதான், பரந்து விரிந்திருக்கும் இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிட நாம் ஒன்றுமே இல்லை என்பதை நாம் கட்டாயம் ஒத்துக்கொள்ள வேண்டும். என்றாலும், யெகோவாவின் வல்லமையைக் கண்டு நாம் அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. தீர்க்கதரிசியாகிய ஏசாயாவிடம் நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகளை எழுதும்படி யெகோவா சொன்னார்: “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் [கடவுள்] பெலன் கொடுத்து, சத்துவமல்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.”​—ஏசாயா 40:29–31.

நீங்கள் கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய விரும்பினால், அதைத் தொடர்ந்து செய்வதற்கு அவர் தம் சக்தியின் மூலமாக உதவுவார் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். ஆனால், அந்தச் சக்தியைத் தரும்படி நீங்கள் கடவுளிடம் மன்றாட வேண்டும். (லூக்கா 11:13) கடவுளுடைய உதவியுடன் உங்களால் எப்படிப்பட்ட கஷ்டத்தையும் சகிக்க முடியும். அதோடு, சரியானதைச் செய்வதற்கான பலத்தையும் பெற முடியும்.​பிலிப்பியர் 4:13. (w08 5/1)

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

கடவுளுடைய உதவியுடன் சரியானதைச் செய்வதற்கான பலத்தை நீங்கள் பெற முடியும்

[பக்கம் 7-ன் படங்கள்]

மேலிருந்து வலப் பக்கமாக: வெர்ல் பூல் நட்சத்திர மண்டலம், ப்ளைடஸ் நட்சத்திர கொத்து, ஆர்யன் நெபூலா, ஆன்ட்ரோமீடா நட்சத்திர மண்டலம்

[பக்கம் 7-ன் படங்கள்]

கதிரவன் பூமியைவிட 3,30,000 மடங்கு பெரியது

[பக்கம் 7-ன் படங்களுக்கான நன்றி]

ப்ளைடஸ்: NASA, ESA and AURA/Caltech; மேலே உள்ள மற்ற அனைத்தும்: National Optical Astronomy Observatories