Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் வலி அவர் இருதயத்தில்

நம் வலி அவர் இருதயத்தில்

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

நம் வலி அவர் இருதயத்தில்

யோவான் 11:33-35

“மற்றவர்கள் படும் வேதனையை நம் இருதயத்தில் உணர்வதே அனுதாபம்.” யெகோவாவின் சாட்சியான ஒரு வயதான மிஷனரி இந்த அருமையான குணத்தை இப்படித்தான் விளக்கினார். யெகோவா அனுதாபம் காட்டுவதில் சிகரமாய்த் திகழ்கிறார். தம்முடைய மக்களின் வலியை அவர் உணருகிறார். எதை வைத்து அப்படிச் சொல்கிறோம்? இயேசு பூமியில் இருந்தபோது தம்முடைய சொல்லிலும் செயலிலும் யெகோவாவின் கனிவான இந்தப் பண்பை முழுமையாக வெளிக்காட்டினார். (யோவான் 5:19) உதாரணமாக, யோவான் 11:33-35-ல் உள்ள சம்பவத்தை எடுத்துக்கொள்வோம்.

இயேசுவின் நண்பர் லாசரு அகால மரணம் அடைந்தபோது, அவருடைய ஊருக்கு இயேசு சென்றார். லாசருவின் சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் துக்கத்தில் துவண்டுபோயிருந்தார்கள். இந்தக் குடும்பத்தாரை இயேசு மிகவும் நேசித்தார். (யோவான் 11:5) எனவே, இப்போது அவர் என்ன செய்வார்? “[மரியாள்] அழுவதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது அவருடைய உள்ளம் குமுறியது, மனம் களங்கியது; ‘அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு அவர்கள் ‘எஜமானே, வந்து பாருங்கள்’ என்றார்கள். அப்போது அவர் கண்ணீர் விட்டார்” என்று அங்கே வாசிக்கிறோம். (யோவான் 11:33–35, NW) இயேசு ஏன் அழுதார்? அவருடைய ஆருயிர் நண்பர் இறந்தது உண்மைதான். என்றாலும், அவரை உயிர்த்தெழுப்புவதன் மூலம் துயரத்தைத் துடைக்கப்போகிறார். (யோவான் 11:41–44) அப்படியென்றால், வேறு ஏதாவது இயேசுவின் நெஞ்சை நெகிழச் செய்திருக்குமா?

மேற்கூறப்பட்ட வசனங்களை மீண்டும் பாருங்கள். மரியாளும் அவளோடேகூட மற்றவர்களும் அழுகிறதை இயேசு கண்டபோது, மனம் ‘கலங்கினார்,’ ‘துயரமடைந்தார்.’ மூல மொழியில், இவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள், ஆழ்ந்த உணர்வுகளைக் குறிக்கின்றன. a அங்கிருந்த சூழ்நிலையைக் கண்ட இயேசு உள்ளம் உருகினார். துக்கம் தொண்டையை அடைக்க, அவருக்குள் பொங்கியெழுந்த உணர்வுகள் கண்ணீராக வடிந்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது? மற்றவர்களின் வேதனையை இயேசு தன் இருதயத்தில் உணர்ந்தார். நீங்கள் நேசிக்கிற ஒருவர் அழுததைப் பார்த்து நீங்களும் எப்போதாவது அழுதிருக்கிறீர்களா?​—ரோமர் 12:15.

இயேசு காட்டிய அனுதாபம், அவருடைய தகப்பனாகிய யெகோவாவின் பண்புகளையும் வழிகளையும் பற்றி நன்கு தெரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. இயேசு தம் தகப்பனின் பண்புகளை அச்சுப் பிசகாமல் வெளிக்காட்டியதால்தான், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று சொன்னார் என்பதை நினைத்துப் பாருங்கள். (யோவான் 14:9) ஆகவே, ‘இயேசு கண்ணீர் விட்டார்’ என்று வாசிக்கும்போது, யெகோவாவும் தம்முடைய ஊழியர்களின் வேதனையை உணருகிறார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். சொல்லப்போனால், பைபிளின் மற்ற எழுத்தாளர்களும் இதை ஆமோதிக்கிறார்கள். (ஏசாயா 63:9; சகரியா 2:8) யெகோவா எவ்வளவு பாசமான கடவுள்!

அனுதாபம் காட்டுவோரிடம் நாம் ஈர்க்கப்படுகிறோம். நாம் சோர்ந்துபோய் இருக்கும்போது, அல்லது மனம் உடைந்துபோய் இருக்கும்போது, நம் சூழ்நிலையைப் புரிந்துகொள்கிற, நம் வேதனையை உணருகிற ஒருவரை நாடிச் செல்கிறோம். அப்படியானால், யெகோவாவிடம் எவ்வளவாய் நெருங்கிச் செல்ல வேண்டும்! ஏனென்றால் அவர் பரிவுள்ள கடவுள், நம் வலியை உணருகிற கடவுள், நம் கண்ணீருக்கான காரணத்தைப் புரிந்துகொள்கிற கடவுள்!​—சங்கீதம் 56:8. (w08 5/1)

[அடிக்குறிப்பு]

a “கண்ணீர் விட்டார்” என்பதற்கான கிரேக்க வார்த்தை பொதுவாக ‘மௌனமாக அழுவதை’ குறிக்கிறது. அதே சமயத்தில், மரியாளும் அவளோடேகூட மற்றவர்களும் அழுவதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையோ, ‘சத்தமாக அழுது புலம்புவதை’ குறிக்கலாம்.