Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீராத வியாதியால் அவதிப்படுவோருக்கு ஆறுதல்

தீராத வியாதியால் அவதிப்படுவோருக்கு ஆறுதல்

தீராத வியாதியால் அவதிப்படுவோருக்கு ஆறுதல்

“அம்மாவுக்கு வந்திருக்கிற வியாதி, அவர்களுடைய உயிரைப் பறித்துவிடும் என்று தெரிந்ததும், என்னால் நம்பவே முடியவில்லை. என் பாசத்திற்குரிய அம்மா சீக்கிரத்தில் இறந்துவிடுவார்கள் என்ற செய்தி இடிபோல் இறங்கியதால் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.”​—⁠கிரேஸ், கனடா.

நமக்குப் பிரியமான ஒருவருக்குத் தீராத வியாதி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகையில், அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் மனமுடைந்துபோகலாம், செய்வதறியாமல் தவிக்கலாம். நோயாளியிடம் என்ன வியாதியென்று சொல்வதா வேண்டாமா என்று சிலர் யோசிக்கலாம். அன்பான ஒருவர், நோயின் பிடியில் சிக்கித் தவிப்பதையும், அதனால் ஒருவேளை சுயமரியாதையை இழந்துவிட்டதாக உணர்வதையும் தங்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்றும் சிலர் நினைக்கிறார்கள். வியாதியில் கிடப்பவர்கள் இறக்கும் தறுவாயில் என்ன சொல்வோம், என்ன செய்வோம் என்று தெரியாமல் அநேகர் கவலைப்படுகிறார்கள்.

இதுபோன்ற சோகசெய்தியைக் கேட்கையில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இந்த இக்கட்டான சமயத்தில், நீங்கள் எப்படி ஓர் உண்மைச் ‘சிநேகிதனாக,’ அல்லது சிநேகிதியாக இருந்து, ஆறுதலையும் ஆதரவையும் அளிக்க முடியும்?​—நீதிமொழிகள் 17:17.

நம் இயல்பு

பிரியமான ஒருவருக்குத் தீராத வியாதி வரும்போது நாம் கவலையில் ஆழ்ந்துவிடுவது இயல்புதான். சாவைப் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன மருத்துவர்களும்கூட இதுபோன்ற நோயாளிகள் உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் அவதிப்படுவதைக் கண்டு வேதனையில் துவண்டுபோகிறார்கள், மனதளவில் சோர்ந்துவிடுகிறார்கள்.

நீங்கள் நேசிப்பவர் வேதனையில் துடிப்பதைக் காணும்போது உங்களாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமற்போகலாம். பிரேசிலில் வசிக்கும் ஹாஸாவின் தங்கையும் தீராத வியாதியால் அவதிப்பட்டவர்; ஹாஸா இவ்வாறு கூறுகிறார்: “நமக்குப் பிரியமானவர்கள் சதா வலியில் துடிப்பதை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது.” உண்மைதவறாத மோசேயும்கூட தன் அக்கா தொழுநோயால் பீடிக்கப்பட்டதைக் கண்டபோது, “என் தேவனே, அவளைக் குணமாக்கும்” என்று கெஞ்சினார்.​—எண்ணாகமம் 12:12, 13.

நம் அன்பானவர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் கஷ்டப்படுவதைக் கண்டு நாம் பரிதாபப்படுகிறோம், ஏனென்றால், இரக்க குணமுள்ள கடவுளாகிய யெகோவாவின் சாயலில் நாம் உருவாக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:27; ஏசாயா 63:9) நாம் துன்பப்படுவதைக் கண்டு யெகோவா எப்படி உணர்கிறார்? இயேசு எப்படி உணர்ந்தாரென்பதைக் கொஞ்சம் சிந்தியுங்கள். அவர் தம் தகப்பனின் சுபாவத்தை அப்படியே வெளிக்காட்டினார். (யோவான் 14:9) மக்கள் வியாதியால் கஷ்டப்படுவதைப் பார்த்தபோது மனதுருகினார். (மத்தேயு 20:29–34; மாற்கு 1:40, 41) முந்தின கட்டுரையில் நாம் சிந்தித்தபடி, அவருடைய நண்பரான லாசரு இறந்தபோது, துக்கத்தில் துவண்டுபோயிருந்த அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் கதறி அழுததைப் பார்த்த இயேசுவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் “கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:32–35) சொல்லப்போனால், மரணத்தை ஒரு சத்துருவாக பைபிள் சித்தரிக்கிறது; சீக்கிரத்தில், வியாதியும் மரணமும் தடம்தெரியாமல் மறைந்து போய்விடுமென்று வாக்குறுதியும் அளிக்கிறது.​—1 கொரிந்தியர் 15:26; வெளிப்படுத்துதல் 21:3, 4.

உங்கள் பாசத்திற்குரிய ஒருவருக்குத் தீராத நோய் வந்திருப்பது பற்றிய கசப்பான செய்தியைக் கேட்டவுடன் யார்மீதாவது நீங்கள் பழிசுமத்த நினைப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. என்றாலும், இதுபோன்ற நோயாளிகள்பற்றி டாக்டர் மார்ட்டா ஆர்ட்டிஸ் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில், பின்வரும் ஆலோசனையைத் தருகிறார்: “நோயாளியின் நிலைமையை எண்ணி மற்றவர்களை, அதாவது, மருத்துவர்களையோ நர்சுகளையோ உங்களையோகூட குற்றப்படுத்துவதைத் தவிருங்கள். அப்படிச் செய்தால் சூழ்நிலை இன்னும் இறுக்கமாகவே ஆகும்; அதோடு, நோயாளியைக் கவனிக்கிற முக்கியமான காரியத்தை விட்டுவிட்டு, வேறு காரியத்திற்கு நம் கவனம் போய்விடும்.” நோயாளி தனக்கு வந்திருக்கும் நோயைச் சமாளிப்பதற்கும், ஒருவேளை சாவைச் சந்திப்பதற்கும் தயாராவதற்கு நடைமுறையாக நீங்கள் என்னென்ன காரியங்களைச் செய்யலாம்?

நோயை அல்ல அந்த நபரைப் பாருங்கள்

முதலில், ஆளை உருக்குலைத்துப்போடுகிற, அல்லது சக்தியையெல்லாம் உறிந்துவிடுகிற நோயை அல்ல, அந்த நபரைப் பாருங்கள். இதை எப்படிச் செய்யலாம்? நர்சாக இருக்கும் சாரா சொல்கிறார்: “நோயாளி இளமைத் துடிப்புடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்கிறேன். தன் நினைவலைகளிலிருந்து அவர் சொல்வதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கிறேன். இப்படிச் செய்வது, நோயாளியின் தற்போதைய நிலைமீதே என் கவனத்தைப் பதிக்காமல், அந்த நபரின் பசுமையான பருவத்தில் நடந்தவற்றை நினைவில் பதித்துக்கொள்ள உதவுகிறது.”

ஆன்-காட்ரினும் ஒரு நர்சுதான்; அவர் இதை எப்படிச் செய்கிறாரென்று சொல்வதைக் கேளுங்கள்: “நான், நோயாளியின் கண்களைப் பார்த்துப் பேசுகிறேன், அவருடைய உடல்நிலை தேறுவதற்கு என்னாலானதைச் செய்வதிலேயே குறியாக இருக்கிறேன்.” சாகும் தறுவாயில் இருப்போரின் தேவைகள்—வாழ்வின் இறுதிக் கட்டத்தில் நம்பிக்கையூட்ட, ஆறுதலளிக்க, அன்பைப் பொழிய ஒரு வழிகாட்டி என்ற ஆங்கில புத்தகம் சொல்வதாவது: “நமக்குப் பிரியமானவர் நோயினாலோ, விபத்தினாலோ உருக்குலைந்து போயிருப்பதைப் பார்த்து நம்மால் சகிக்க முடியாமற்போவது இயல்புதான். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அந்த நபரின் கண்களை உற்றுப்பார்த்து, அவர் உண்மையில் யார் என்பதை உணர்வது மிகவும் நல்லது.”

அப்படிச் செய்வதற்கு சுயக் கட்டுப்பாடும் மன உறுதியும் தேவை என்பது உண்மைதான். ஸார்ஸ் என்பவர் தீராத நோயாளிகளைத் தவறாமல் சென்று சந்திக்கிற கிறிஸ்தவக் கண்காணி ஆவார்; “நண்பர்மீது நமக்கிருக்கும் பிடிப்பு, அந்த நோயின் பிடிப்பைவிட பலமாக இருக்க வேண்டும்” என்று அவர் சொல்கிறார். நோயைப் பார்க்காமல் அந்த நபரைப் பார்த்தீர்களென்றால், உங்களுக்கும் நன்மை, அவருக்கும் நன்மை. புற்றுநோயால் அவதிப்படும் குழந்தைகளைப் பராமரித்திருக்கிற இவான் சொல்கிறார்: “சுய மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள நோயாளிகளுக்கு உதவலாமென்பதை நீங்கள் அறிந்திருந்தால் அவர்கள் உடல் ரீதியில் உருக்குலைந்து போகாமல் பார்த்துக்கொள்வீர்கள்.”

காது கொடுத்துக் கேளுங்கள்

ஒருவர் இறக்கும் தறுவாயில், அவர் தங்களுக்குப் பிரியமானவராக இருந்தாலும்கூட, அவரைச் சந்தித்துப் பேச மக்கள் தயங்கலாம். ஏன்? அவரிடம் என்ன பேசுவதென்று நினைத்துக் கவலைப்படுவதே அதற்குக் காரணம். என்றாலும், தீராத நோய்க்கு ஆளான நண்பருக்குச் சமீபத்தில் சிகிச்சை அளித்துப் பராமரித்த ஆன்-காட்ரின், அமைதியாக இருந்து எதையாவது செய்வதும் பலன் தருவதாகக் குறிப்பிடுகிறார். “நாம் பேசுவது மட்டுமல்ல, நாம் நடந்துகொள்கிற விதமும் அவருக்கு ஆறுதல் அளிக்கும். ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு நோயாளிக்குப் பக்கத்தில் உட்காருவது, அவருடைய கையைப் பிடித்துக்கொள்வது, தன் உள்ளத்தில் இருப்பதை அவர் சொல்லும்போது நாம் கண்ணீர் சிந்துவது ஆகிய எல்லாச் செயல்களுமே, அவர்மீது நாம் அக்கறையாய் இருக்கிறோம் என்பதைக் காட்டும்” என்கிறார் அவர்.

உங்களுக்குப் பிரியமானவர், தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டுவதற்குப் பெரும்பாலும் ஒரு வடிகால் தேவைப்படுகிறது. என்றாலும், நோயால் அவதிப்படுகிற ஒருவர், தன் உண்மை நிலையைச் சொன்னால், தன்னை நேசிப்பவர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைத்து, அதைச் சொல்லாமல் மறைக்கலாம். மறுபட்சத்தில், நோயாளியின் நலனில் அக்கறையாய் இருக்கும் நண்பர்களும் குடும்பத்தாரும், நோயாளிக்குக் கவலைதரும் விஷயங்களை அவருக்குமுன் பேசுவதைத் தவிர்த்து, நோய் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை அவரிடம் சொல்லாமல் மறைக்கலாம். இவ்வாறு மூடி மறைப்பதால் என்ன நடக்கலாம்? தீராத நோயால் அவஸ்தைப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவர், நோயாளியிடம் உண்மையை மறைக்க முயன்றால் என்ன நடக்கும் என்பதை இவ்வாறு சொல்கிறார்: “அவரால் தன் நோயைச் சமாளிக்கவோ, அதைக் குறித்துப் பிறரிடம் ஒளிவுமறைவின்றி பேசவோ முடியாது.” ஆகவே, நோயாளி விரும்பினால், தன் உடல்நிலை குறித்தோ, தான் மரிக்கப்போவதைக் குறித்தோ வெளிப்படையாகப் பேச அவரை அனுமதிக்க வேண்டும்.

முற்காலத்தில் கடவுளுடைய ஊழியர்கள், சாகும் நிலையில் கிடந்தபோது, தங்கள் கவலைகளை யெகோவா தேவனிடம் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. உதாரணமாக, தான் சாகப்போவது தெரிந்தவுடன் 39 வயது எசேக்கியா ராஜா தன் அவல நிலைகுறித்துப் புலம்பினார். (ஏசாயா 38:9–12, 18–20) அவ்வாறே, தீராத நோயின் பிடியில் இருப்பவர்கள், தங்கள் ஆயுள் முடியப்போகிறதே என்ற ஆதங்கத்தை வாய்விட்டுச் சொல்ல அவர்களுக்குச் சந்தர்ப்பம் தரவேண்டும். தங்கள் இலட்சியக் கனவுகள், ஒருவேளை சுற்றுலா செல்வது, பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, பேரப்பிள்ளைகள் வளர்ந்து ஆளாவதைக் காண்பது, கடவுளுக்கு இன்னும் முழுமையாகச் சேவை செய்வது போன்ற கனவுகள், நிறைவேறாமற்போவதை நினைத்து விரக்தியடையலாம். தங்களிடம் எப்படி நடந்துகொள்வதெனத் தெரியாததால் குடும்பத்தாரும் நண்பர்களும் தங்களைவிட்டு எட்டி நிற்பார்களோ என்று அவர்கள் கவலைப்படலாம். (யோபு 19:16–18) வேதனை பற்றிய பயமோ, உடல் உறுப்புகள் படிப்படியாகச் செயலிழக்குமென்ற பயமோ, செத்துவிடுவோமென்ற பயமோ அவர்களை ஆட்டிப்படைக்கலாம்.

ஆன்-காட்ரின் இவ்வாறு சொல்கிறார்: “உங்கள் நண்பர் [நோயாளி] பேசும்போது நீங்கள் இடைமறிக்காமல், அவரை நியாயந்தீர்க்காமல், பயப்படத் தேவையில்லை என்று சொல்லாமல், அவரைப் பேச அனுமதிப்பது அவசியம். அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ளவும், அவரது கவலைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் அவ்வாறு அனுமதிப்பதே மிகச் சிறந்த வழியாகும்.”

முக்கியத் தேவைகளைப் புரிந்துகொள்ளுங்கள்

வீரியமிக்க மருத்துவச் சிகிச்சைகளாலும் அவற்றின் பின்விளைவுகளாலும் நோயாளியின் உடல்நிலை ஒருவேளை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைக் கண்டு ஆடிப்போன நீங்கள், நோயாளியின் ஒரு முக்கியத் தேவையை மறந்துவிடலாம். தெரிவுகள் செய்ய அவருக்கு உதவுவதே அந்தத் தேவையாகும்.

சில கலாச்சாரங்களில், நோயாளியிடம் அவரது உடல்நிலை குறித்த உண்மையை மறைப்பது வழக்கமாக இருக்கலாம்; அவருடைய விருப்பத்தைக் கேட்காமலேயே அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைமுறை பற்றித் தீர்மானிக்கலாம். மற்ற கலாச்சாரங்களில் வேறுவிதப் பிரச்சினை எழலாம். உதாரணமாக, நர்சாகப் பணிபுரியும் ஜெரி என்பவர் சொல்கிறார்: “சில சமயங்களில் நோயாளியைப் பார்க்க வருவோர், அவருடைய படுக்கைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அவர் அங்கிருப்பதையே மறந்துவிட்டு அவருடைய நோயைப் பற்றிப் பேசுவார்கள்.” இவ்விரண்டு விதங்களிலும் நடந்துகொள்வது நோயாளியின் சுயமதிப்பைக் குலைத்துவிடுகிறது.

நம்பிக்கை மற்றொரு முக்கியத் தேவையாகும். தரமான மருத்துவ வசதியுள்ள நாடுகளில், சிறந்த மருத்துவச் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து விடலாமென்ற நம்பிக்கை நோயாளிக்கு இருக்கிறது. மிஷல் என்பவர், மூன்று முறை திரும்பத் திரும்பப் புற்றுநோய்க்கு ஆளான தன் தாய்க்கு உதவியிருக்கிறார். அவர் இவ்வாறு விவரிக்கிறார்: “அம்மா, வேறொரு சிகிச்சை முறையை முயன்று பார்க்கலாமென்றோ, வேறொரு மருத்துவ நிபுணரை அணுகலாமென்றோ விருப்பம் தெரிவிக்கையில், அதுசம்பந்தமான மருத்துவக் குறிப்புகளைத் தேட அவருக்கு உதவுகிறேன். எனக்குள் நான் எதார்த்தமாக இருக்க வேண்டுமென்பதையும், அதே சமயத்தில் அவரிடம் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச வேண்டுமென்பதையும் நான் புரிந்துகொண்டேன்.”

நோய் குணமாவதற்கு வாய்ப்பே இல்லாதபோது என்ன செய்வது? உயிரைப் பறிக்கும் நோய்க்கு ஆளானவரிடம், அவர் பிழைக்க மாட்டார் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டுமென்பதை ஞாபகத்தில் வையுங்கள். முன்பு குறிப்பிடப்பட்ட ஸார்ஸ் என்பவர் சொல்கிறார்: “பிழைக்க மாட்டார் என்பதை நோயாளியிடம் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும். இப்படிச் சொல்வது, தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், மரணத்தைச் சந்திக்க மனதளவில் தயாராவதற்கும் வழிவகுக்கும்.” இப்படித் தயார்நிலையில் இருப்பது, சாவதற்குமுன் எல்லாவற்றையும் முடித்துவிட்டோமென்ற நிம்மதியைப் பெறவும், மற்றவர்களுக்குப் பாரமாய் இருந்துவிடுவோமோ என்ற கவலையிலிருந்து விடுபடவும் துணைபுரியும்.

இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுவது சிரமம் என்பது உண்மைதான். ஆனால், இப்படி நேரடியாகப் பேசுவது, உங்கள் மனதிற்குள் ஒளிந்திருக்கும் உண்மையை வாய்விட்டுச் சொல்வதற்கு ஓர் அருமையான சந்தர்ப்பமாகும். மரிக்கப்போகிறவருக்கும் உங்களுக்கும் இடையே முன்பு ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ளவோ, வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ அவர் விரும்பலாம். இந்தப் பரிமாற்றங்கள், இறக்கப்போகிறவருக்கும் உங்களுக்கும் இடையே மீண்டும் நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள உதவலாம்.

கடைசிக் கட்டத்தில் ஆறுதல் அளித்தல்

இறுதி மூச்சை விடப்போகிற கட்டத்தில் ஒருவருக்கு நீங்கள் எப்படி ஆறுதல் அளிக்கலாம்? முன்பு குறிப்பிடப்பட்ட டாக்டர் ஆர்ட்டிஸ் கூறுவதாவது: “நோயாளி தன் கடைசி ஆசையைத் தெரிவிக்க அனுமதியுங்கள். அவர் அதைத் தெரிவிக்கும்போது காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களால் அந்த ஆசையைத் தீர்த்துவைக்க முடியுமென்றால் அதைச் செய்ய முயலுங்கள். முடியாதென்றால், அவரிடம் நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.”

தனக்கு வேண்டியவர்கள் எல்லாரும் தன் பக்கத்திலேயே இருக்கவேண்டுமென்று அவர் ஆசைப்படலாம். “அவரால் அதிகம் பேச முடியாவிட்டாலும், சுருக்கமாக இரண்டு வார்த்தை பேச அவருக்கு உதவுங்கள்” என்று ஸார்ஸ் சொல்கிறார். நேரில் பேசமுடியாவிட்டாலும் தொலைபேசி மூலமாவது அப்படிப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்; இவ்வாறு தொடர்புகொள்வது ஒருவருக்கொருவர் உற்சாகத்தைப் பெறவும், சேர்ந்து ஜெபம் செய்யவும் வாய்ப்பளிக்கும். கனடா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டீனா தான் நேசித்த மூன்று பேரை அடுத்தடுத்துப் பறிகொடுத்தவர்; அவர் சொல்கிறார்: “அவர்கள் இறுதி மூச்சை விடப்போகிற நேரம் நெருங்க நெருங்க, அதிகமதிகமாய் ஜெபம் செய்யும்படி தங்கள் கிறிஸ்தவ நண்பர்களைக் கேட்டுக்கொண்டார்கள்.”

இறக்கப்போகிறவருக்கு முன் அழக்கூடாதென்று நீங்கள் நினைக்க வேண்டுமா? வேண்டியதில்லை. சொல்லப்போனால் அப்படி நீங்கள் அழுவது, அவர் உங்களை ஆசுவாசப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும். சாகும் தறுவாயில் இருப்போரின் தேவைகள் புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இறுதி மூச்சை விடப்போகிறவர் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்பது, மனதை நெகிழச்செய்யும் ஓர் அனுபவமாகும்; இது அவருக்குப் பெரிய விஷயமாக இருக்கலாம்.” இவ்வாறு, இதுவரை மற்றவரிடமிருந்து ஓயாமல் பராமரிப்பைப் பெற்றுவந்த அவரால், ஒரு நண்பராகவோ தகப்பனாகவோ தாயாகவோ இருந்த தன் நிலையை இப்போது மீண்டும் உணர முடிகிறது.

உங்கள் பாசத்திற்குரியவர் இறுதி மூச்சை விடுகிற சமயத்தில், சூழ்நிலை காரணமாக நீங்கள் அவர் பக்கத்தில் இருக்க முடியாமற்போகலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. மாறாக, வீட்டிலோ மருத்துவமனையிலோ அவரோடு நீங்கள் இருக்க முடிந்தால், கடைசி வரையில் அவர் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள். இந்தக் கடைசிக் கட்டத்தில், இதுவரை நீங்கள் வாய்திறந்து சொல்லாத உணர்வுகளைக்கூட வெளிப்படையாகச் சொல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அவரால் பதில் பேச முடியாவிட்டாலும், அவருக்கு நீங்கள் பிரியாவிடை சொல்லி, உங்கள் அன்பைத் தெரிவித்து, உயிர்த்தெழுந்து வரும்போது அவரைப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையை அளிக்கத் தயங்காதீர்கள்.—யோபு 14:14, 15; அப்போஸ்தலர் 24:15.

இந்தக் கடைசிக் கட்டத்தில் உங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்தீர்களென்றால், பின்பு வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படாது. சொல்லப்போனால், இந்தக் கட்டத்தில் ஆழ்ந்த உணர்ச்சிகளை நீங்கள் வெளிக்காட்டியதை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். ஆம், ‘இடுக்கணில் உதவுகிற’ உண்மைச் சிநேகிதனாக அல்லது சிநேகிதியாக நீங்கள் இருந்ததை உணர்வீர்கள்.—நீதிமொழிகள் 17:17. (w08 5/1)

[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]

நோயைப் பார்க்காமல் அந்த நபரைப் பார்த்தீர்களென்றால், உங்களுக்கும் நன்மை, அவருக்கும் நன்மை

[பக்கம் 29-ன் பெட்டி/படம்]

நோயாளியின் சுயமரியாதையை மதிப்பதற்கான ஒரு வழி

அநேக நாடுகளில், தீராத நோய்க்கு ஆளானவர் சுயமரியாதை இழக்காமல், நிம்மதியாகக் கண்மூடுவதற்கான உரிமையைத் தெரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நோயாளியின் விருப்பங்களை முன்கூட்டியே எழுதி வைத்திருக்கும் ஓர் ஆவணம் இதற்குக் கைகொடுக்கிறது; நோயாளியின் உரிமைகளை மதிக்கவும், தன் இறுதி மூச்சை எங்கே விட நினைக்கிறார், வீட்டிலா அல்லது விசேஷப் பராமரிப்பு மையத்திலா என்பதுபற்றித் தெரிந்துகொள்ளவும் இது உதவியாக இருக்கிறது.

முன்கூட்டியே எழுதி வைத்திருக்கும் ஆவணத்தின் பயன்பாடுகள்:

• மருத்துவர்களோடும் உறவினர்களோடும் சுமுகமாகப் பேசுவதற்கு உதவுகிறது

• தீர்மானம் செய்கிற பெரும் பொறுப்பிலிருந்து குடும்பத்தாரை விடுவிக்கிறது

• அநாவசியமான, பயனற்ற, வீரியமிக்க, செலவுபிடிக்கிற சிகிச்சை முறைகளைத் தவிர்க்க உதவுகிறது

இந்த ஆவணத்தில் இருக்க வேண்டிய சில முக்கியத் தகவல்கள்:

• உடல்நலப் பராமரிப்பாளராக நீங்கள் நியமித்திருக்கிறவரின் பெயர்

• உடல்நிலை தேறாதபோது நீங்கள் பெற விரும்பும் அல்லது மறுக்கும் சிகிச்சைமுறைகள்

• முடிந்தால், உங்கள் விருப்பங்களை அறிந்த மருத்துவரின் பெயர்