Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’

‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’

வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை மரியாள் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள். வியப்பில் அவளுடைய கண்கள் அகல விரிகின்றன. வந்தவர் மரியாளின் அப்பா அம்மாவை அல்ல, மரியாளைத்தான் பார்க்க வந்திருக்கிறார்! அவர் நாசரேத் ஊரைச் சேர்ந்தவரல்ல என்பது மட்டும் அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஏனென்றால், அவளுடைய ஊர் ஒரு குக்கிராமம், அதனால் வெளியூர்காரர்களைச் சட்டென்று கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், இவர் எந்த ஊருக்குப் போனாலும் வித்தியாசமாகத்தான் தெரிவார். அவர் மரியாளைப் பார்த்து “பெருந்தயவைப் பெற்றவளே, வாழ்க! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்று வாழ்த்துகிறார். அவளை யாருமே இதுவரை அப்படி வாழ்த்தியதில்லை.—லூக்கா 1:28, NW.

இப்படித்தான் ஏலியின் மகளான மரியாளை பைபிள் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இவள் கலிலேயாவிலுள்ள நாசரேத் ஊரைச் சேர்ந்தவள். இப்போது அவள் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய ஒரு தருணத்தில் இருக்கிறாள். யோசேப்பு என்ற தச்சு ஆசாரியருக்கு அவள் நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள்; இவர் பணக்காரர் அல்ல, ஆனால் தேவபக்தியுள்ளவர். ஆகவே, அவளுடைய வருங்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அவளால் ஓரளவிற்குக் கற்பனை செய்துபார்க்க முடிந்தது; அதாவது, யோசேப்பின் மனைவியாய் அவருக்கு ஒத்தாசையாக இருந்து, பிள்ளைகளைப் பெற்று ஓர் எளிமையான வாழ்க்கை வாழ்வதே அவளுடைய வருங்கால வாழ்க்கை. ஆனால், திடீரென அவளைச் சந்திக்க வந்தவர் ஒரு பெரிய பொறுப்பை அவளுக்கு அளிக்கிறார். அது கடவுளிடமிருந்து வந்த பொறுப்பு; அது அவளுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையவிருந்தது.

மரியாளைப் பற்றி பைபிள் அதிகமாக எதுவும் சொல்லாதது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அவளுடைய பின்னணியைப் பற்றியும் சுபாவத்தைப் பற்றியும் சில தகவல்களே இருக்கின்றன; அவளுடைய தோற்றத்தைப் பற்றியோ ஒரு தகவலும் இல்லை. என்றாலும், மரியாளைப் பற்றி பைபிளில் என்ன தகவல்கள் இருக்கின்றனவோ அவற்றிலிருந்தே அவளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மரியாளைப் பற்றி பல மதங்கள் பல விதமாகச் சொல்கின்றன. அவளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்கு, முதலில் மக்கள் மத்தியில் அவளைப் பற்றி நிலவும் அபிப்பிராயங்களை ஒதுக்கி வைத்துவிடலாம். ஓவியங்களில், சலவைக் கற்களில், சுவர்களில் என ஆங்காங்கே சித்தரிக்கப்பட்டிருக்கும் அவளுடைய “தோற்றத்தை” கொஞ்சம் மறந்துவிடலாம். அதோடு, இந்தத் தாழ்மையான பெண்ணை “தெய்வத்தாய்,” “விண்ணரசி” என்ற பட்டங்களால் வர்ணிக்கிற சிக்கலான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஓரங்கட்டிவிடலாம். இப்போது, பைபிள் அவளைப் பற்றி உண்மையிலேயே என்ன சொல்கிறது என்பதற்கு கவனம் செலுத்தலாம். அவளுடைய விசுவாசத்தையும் அதை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்பதையும் பற்றிய பொன்னான தகவல்களைப் பைபிள் தருகிறது.

ஒரு தேவதூதரின் சந்திப்பு

உங்களுக்குத் தெரிந்தபடி, மரியாளை சந்திக்க வந்தவர் ஒரு மனிதரல்ல, அவர் ஒரு தேவதூதர்! அவருடைய பெயர் காபிரியேல். அவர் மரியாளை, “பெருந்தயவைப் பெற்றவளே” என்று அழைத்தபோது அவள் ‘கலக்கமடைந்தாள்.’ அதன் அர்த்தம் புரியாமல் திகைத்தாள். (லூக்கா 1:29, NW) மரியாள் யாருடைய தயவைப் பெற்றாள்? மனிதருடைய தயவைப் பெறவேண்டுமென்ற ஆசை அவளுக்குத் துளிகூட இருந்ததில்லை. ஆனால், அவள் யெகோவாவின் தயவைப் பெற்றிருப்பதாக அந்தத் தூதர் சொன்னார். அதுதான் அவளுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதே சமயம், கடவுளுடைய தயவு தனக்கு ஏற்கெனவே இருந்ததாக அவள் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. நாமும் கடவுளுடைய தயவைப் பெற விரும்பினால் மரியாள் புரிந்துகொண்டதை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ‘கர்வம் உள்ளவர்களை கடவுள் எதிர்க்கிறார், தாழ்மையுள்ளவர்களையோ நேசித்து ஆதரவளிக்கிறார்’ என்பதை மரியாள் புரிந்துகொண்டாள்.—யாக்கோபு 4:6.

கற்பனையே செய்ய முடியாத அரும்பெரும் பாக்கியத்தை தேவதூதர் மரியாளுக்கு அளிப்பதால் அவளுக்கு இப்படிப்பட்ட மனத்தாழ்மை தேவையாக இருந்தது. மனிதர்களிலேயே மகத்தானவரை அவள் பெற்றெடுப்பாள் என காபிரியேல் சொன்னார். “அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார்; யாக்கோபின் குடும்பத்தின் மீது அவர் என்றென்றும் ராஜாவாக ஆளுவார்; அவருடைய அரசாட்சிக்கு முடிவே இருக்காது” என்றும் அவர் சொன்னார். (லூக்கா 1:32, 33, NW) சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தாவீதுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியை, அதாவது அவருடைய சந்ததியில் வரும் ஒருவர் என்றென்றும் அரசாளுவார் என்ற வாக்குறுதியை மரியாள் அறிந்திருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. (2 சாமுவேல் 7:12, 13) அவளுடைய மகன்தான் மேசியாவாக இருப்பார். இவருக்காகத்தான் பல நூற்றாண்டுகளாக கடவுளுடைய ஜனங்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.

அதுமட்டுமா, அவளுடைய மகன் ‘உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார்’ என்றும் காபிரியேல் சொன்னார். மனுஷியாக இருக்கும் ஒரு பெண்ணின் வயிற்றில் எப்படி கடவுளுடைய மகன் பிறக்க முடியும்? உண்மையில், மரியாளுக்கு எப்படி குழந்தை பிறக்க முடியும்? ஏனென்றால், யோசேப்புக்கு அவள் நிச்சயம் செய்யப்பட்டிருந்தாளே தவிர அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால்தான், “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்று எதார்த்தமாக தேவதூதரிடம் மரியாள் கேட்டாள். (லூக்கா 1:34, ஈஸி டு ரீட் வர்ஷன்) மரியாள் தான் இன்னும் கன்னியாக இருக்கிறாள் என்று சொல்ல கொஞ்சமும் வெட்கப்படவில்லை. ஏனென்றால், அவள் தன்னுடைய கற்பை பொக்கிஷமாகக் கருதினாள். ஆனால், இன்று இளைஞர்கள் பலர் தங்களுடைய கற்பை துச்சமாகக் கருதுகிறார்கள். அதைப் பொக்கிஷமாகக் கருதுகிறவர்களையோ கேலி கிண்டல் செய்கிறார்கள். உண்மையில், இன்று உலகம் தலைகீழாக மாறிவிட்டது. ஆனால், யெகோவா மாறவில்லை. (மல்கியா 3:6) மரியாளின் காலத்தில் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தவர்களை அவர் உயர்வாய் மதித்ததைப் போலவே இன்றும் மதிக்கிறார்.—எபிரெயர் 13:4.

மரியாள் கடவுளுக்கு உண்மையாய் நடந்துகொண்டபோதிலும் எல்லோரையும் போலவே அவளும் ஒரு சாதாரண பெண்தான், அவளிடமும் குறைகள் இருந்தன. அப்படியிருக்க, அவளால் எப்படி எந்தக் குறையும் இல்லாத ஒரு பரிபூரண மகனை, அதுவும் கடவுளுடைய மகனைப் பெற்றெடுக்க முடியும்? அதற்கு காபிரியேல் பதில் சொன்னார்: “கடவுளுடைய சக்தி உன்மீது வரும்; உன்னதமானவருடைய வல்லமை உன்மீது தங்கும். இதன் காரணமாக, உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.” (லூக்கா 1:35, NW) பரிசுத்தம் என்றால் “சுத்தம்,” “தூய்மை,” “புனிதம்” என்று அர்த்தம். பொதுவாக பெற்றோர் வழிவழியாகப் பெற்ற பாவத்தன்மையைத் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கடத்துகிறார்கள். ஆனால், மரியாளுடைய விஷயத்தில் யெகோவா மாபெரும் அற்புதத்தைச் செய்தார். பரலோகத்தில் இருந்த தன்னுடைய மகனின் உயிரை மரியாளுடைய கர்ப்பப்பைக்குள் வைத்து, தம்முடைய பரிசுத்த ஆவி, அதாவது தம்முடைய சக்தி மரியாள்மீது ‘தங்கியிருக்கும்படி’ செய்தார். இதன்மூலம் பாவம் என்ற எந்தக் கறையும் தம் மகன்மீது ஒட்டாதவாறு பாதுகாத்தார். தேவதூதர் சொன்னதை மரியாள் நம்பினாளா? அவள் என்ன சொன்னாள்?

காபிரியேலிடம் மரியாள் சொன்னவை

கன்னிப்பெண்ணால் எப்படிக் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவ இறையியலாளர் சிலருக்கும் சந்தேகவாதிகளுக்கும் கடினமாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும் ஒரு சாதாரண விஷயத்தைப் புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். காபிரியேல் சொன்னபடி, “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.” (லூக்கா 1:37) காபிரியேல் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்று இளம் மரியாள் ஒத்துக்கொண்டாள். ஏனென்றால், அவளுக்கு மலைபோன்ற விசுவாசம் இருந்தது. ஆனால், அது குருட்டு விசுவாசமல்ல. எந்தவொரு சிந்திக்கும் நபரைப் போல மரியாளுக்கும் விசுவாசிப்பதற்கு பலமான ஆதாரம் தேவைப்பட்டது. ஏற்கெனவே இருந்த ஆதாரங்களுடன் கூடுதல் ஆதாரங்களை வழங்க காபிரியேலும் தயாராக இருந்தார். பல வருடங்கள் மலடியாக இருந்த அவளுடைய சொந்தக்கார பெண் எலிசபெத்தைக் குறித்து அவர் மரியாளிடம் சொன்னார். அதாவது, வயதான எலிசபெத் இப்போது கடவுளுடைய தயவால் அற்புதமாக கர்ப்பம் தரித்திருப்பதாகச் சொன்னார்.

இப்போது மரியாள் என்ன செய்வாள்? அவளுக்கு ஒரு மாபெரும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, காபிரியேல் சொன்ன அனைத்தையும் கடவுளே செய்யப்போகிறார் என்பதற்கு அத்தாட்சியும் அவளிடம் இருக்கிறது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் எந்த ஆபத்தோ பிரச்சினையோ இருக்காது என்று நாம் நினைக்க முடியாது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மரியாளுக்கு ஏற்கெனவே யோசேப்புடன் நிச்சயமாகியிருந்தது. இப்போது அவள் கர்ப்பமாக இருப்பது அவருக்கு தெரிந்தால் அவர் எப்படி அவளைத் திருமணம் செய்துகொள்வார்? மற்றொரு விஷயம் என்னவென்றால், அவளுக்கு முன் இருப்பதோ ஒரு மாபெரும் பொறுப்பு! கடவுளுடைய படைப்புகளிலேயே மகத்தான படைப்பை, ஆம் அவருடைய சொந்த மகனின் உயிரை சுமக்கும் பொறுப்பு அது! அவர் பச்சிளங்குழந்தையாக இருக்கும்போது அவரை கண்ணும்கருத்துமாக வளர்க்க வேண்டியிருந்தது. அதோடு, இந்தப் பொல்லாத உலகில் அவரைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. இது உண்மையிலேயே ஒரு கனமான பொறுப்பு!

உடல் வலிமையும் தேவபக்தியுமுள்ள ஆண்களும்கூட கடவுள் தரும் சவாலான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு சில சமயங்களில் தயங்கியதாக பைபிள் சொல்கிறது. தன்னால் சரளமாகப் பேசமுடியாது என்பதால் கடவுளுடைய செய்தியை அறிவிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மோசே மறுத்தார். (யாத்திராகமம் 4:10) எரேமியாவும் தான் ‘சிறுபிள்ளையாக’ இருப்பதாகச் சொல்லி கடவுள் தந்த வேலையை ஏற்றுக்கொள்ள தயங்கினார். (எரேமியா 1:6) யோனாவோ தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் ஓடிப்போனார்! (யோனா 1:3) ஆனால், மரியாள் என்ன செய்தாள்?

அவளுடைய மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் அவளுடைய வார்த்தைகள் இன்றுவரை எதிரொலிக்கின்றன. ‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது’ என்று காபிரியேலிடம் கூறினாள். (லூக்கா 1:38) ஓர் அடிமைப்பெண், வேலைக்காரர்களிலேயே மிகவும் தாழ்வானவளாகக் கருதப்பட்டாள்; அவளுடைய முழு வாழ்க்கையும் அவளுடைய எஜமானருடைய கையில் இருந்தது. அப்படித்தான் மரியாளும் தன்னுடைய எஜமானராகிய யெகோவாவைக் குறித்து உணர்ந்தாள். அவருடைய காக்கும் கரங்களில் தான் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதையும் அவருக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு அவரும் உண்மையாக இருப்பார் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். (சங்கீதம் 18:25) அதேசமயம், இந்தச் சவாலான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்போது யெகோவா அவளை ஆசீர்வதிப்பார் என்பதையும் அறிந்திருந்தாள்.

கஷ்டமான அல்லது செய்யவே முடியாதென நாம் நினைக்கும் ஒரு வேலையை செய்யும்படி சில சமயங்களில் கடவுள் நம்மிடம் சொல்லலாம். ஆனால், அவரை நம்புவதற்கும் மரியாளைப்போல் நம்மையே அவருடைய கையில் ஒப்படைத்துவிடுவதற்கும் அநேக காரணங்களை நமக்கு பைபிளில் கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 3:5, 6) நாமும் அவரை நம்பி நம்மை அவர் கையில் ஒப்படைப்போமா? அப்படிச் செய்தால், அவர்மீது அசைக்கமுடியாத விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்குத் தேவையான காரணங்களை அளிப்பார்.

எலிசபெத்துடன் சந்திப்பு

எலிசபெத்தைப் பற்றி காபிரியேல் சொன்ன வார்த்தைகள் மரியாளுக்கு நம்பிக்கையூட்டின. எலிசபெத்தை தவிர உலகத்தில் வேறெந்த பெண்ணால் மரியாளின் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்? மலைப்பிரதேசமான யூதேயாவுக்கு மரியாள் அவசர அவசரமாக கிளம்பிச் சென்றாள். அங்கு போய்ச் சேர மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும். ஆலயத்தில் குருவாக சேவை செய்யும் சகரியா மற்றும் அவருடைய மனைவியான எலிசபெத்தின் வீட்டிற்குள் மரியாள் கால் வைத்ததும் அவளுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு மற்றொரு ஆணித்தரமான அத்தாட்சியை யெகோவா அவளுக்கு அளித்தார். மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் அவளுடைய வயிற்றிலிருந்த குழந்தை சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதை உணர்ந்தாள். அப்போது எலிசபெத் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியால், அதாவது அவருடைய சக்தியின் உதவியால், மரியாளை ‘என் எஜமானருடைய தாய்’ என அழைத்தாள். மரியாளின் மகன் தன்னுடைய எஜமானராக, மேசியாவாக ஆகப்போகிறார் என்பதை எலிசபெத்துக்கு கடவுள் தெரியப்படுத்தினார். அதோடு, மரியாள் உண்மையுடன் கீழ்ப்படிந்ததற்காக அவளைப் பாராட்டும்படி கடவுளுடைய சக்தி அவளை தூண்டியதால் அவள் மரியாளைப் பார்த்து: ‘நம்பிக்கை வைத்தவளே சந்தோஷமுள்ளவள்’ என்றாள். (லூக்கா 1:39–45, NW) ஆம், மரியாளிடம் யெகோவா சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும்!

எலிசபெத்தின் வாழ்த்துதலைக் கேட்டு மரியாள் என்ன சொன்னாள் என்பதைக் கவனிக்கலாம். அவளுடைய வார்த்தைகள் லூக்கா 1:46–55-ல் கவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதான் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள மரியாளின் நீண்ட உரையாடல். இதிலிருந்து அவளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேசியாவின் தாயாக இருக்கப்போகும் பாக்கியத்தைப் பெற்றதற்காக அவள் யெகோவாவை போற்றி புகழ்ந்ததிலிருந்து அவர்மீது அவளுக்கு நன்றியும் போற்றுதலும் இருப்பது தெரிகிறது. கர்வமுள்ளவர்களையும் அதிகாரமுள்ளவர்களையும் யெகோவா தாழ்த்தி, அவருக்குச் சேவை செய்ய விரும்பும் தாழ்மையானவர்களையும் ஏழ்மையிலுள்ளவர்களையும் உயர்த்துகிறார் என்று சொன்னதிலிருந்து அவளுக்கு உறுதியான விசுவாசம் இருந்தது தெரிகிறது. வேதத்தை அவள் நன்கு அறிந்திருந்தாள் என்பதும் இந்தப் பதிவிலிருந்து நமக்குத் தெளிவாகிறது. அவள் எபிரெய வேதாகமத்திலிருந்து 20-க்கும் அதிகமான மேற்கோள்களைப் பயன்படுத்தியிருப்பதாக ஒரு கணிப்பு தெரிவிக்கிறது.

வேதத்திலுள்ள விஷயங்களை மரியாள் ஆழ்ந்து யோசித்திருக்கிறாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும், அவள் எப்போதும் தாழ்மையாக இருந்தாள். சொந்த கருத்தை சொல்வதற்கு பதிலாக வேதத்தில் உள்ளதையே சொன்னாள். அவளுடைய வயிற்றில் வளர்ந்துவந்த மகனும் பின்பு ஒருநாள் அவளைப் போலவே சொன்னார்: “நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தது.” (யோவான் 7:16, ERV) எனவே, நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘அவர்களைப் போல எனக்கும் பைபிள்மீது ஆழ்ந்த மரியாதையும் பக்தியும் இருக்கிறதா? அல்லது, என்னுடைய சொந்த கருத்துகளையும் போதனைகளையும் சொல்ல விரும்புகிறேனா?’ இந்தக் கேள்விகளுக்கு மரியாளின் பதில் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

மரியாள் எலிசபெத்தோடு மூன்று மாதங்கள் தங்கியிருந்தாள். அந்தச் சமயத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த உற்சாகத்தைப் பரிமாறிக் கொண்டிருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. (லூக்கா 1:56) இந்த இரண்டு பெண்களும் தோழமையின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவுபடுத்துகிறார்கள். யெகோவாவை நெஞ்சார நேசிப்பவர்களோடு பழகினால் நாம் ஆன்மீக ரீதியில் வளருவோம், அவருடன் இன்னும் நெருக்கமான உறவையும் அனுபவிப்போம். (நீதிமொழிகள் 13:20) இப்போது, மரியாள் தன்னுடைய வீட்டுக்கு செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று யோசேப்புக்கு தெரிந்தால் அவர் என்ன சொல்வார்?

மரியாளும் யோசேப்பும்

மரியாள் தான் கர்ப்பமாக இருப்பது தானாகவே தெரியவரும்வரை காத்திருக்காமல் யோசேப்பிடம் இந்த விஷயத்தைக் குறித்து பேசினாள். கண்ணியமும் தேவபக்தியுமுள்ள யோசேப்பு அதைக் கேட்டு என்ன சொல்வார் என்று அவள் குழம்பிப்போய் இருக்கலாம். என்றாலும், மரியாள் அவரைச் சந்தித்து நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னாள். இந்தச் சூழ்நிலையில் யோசேப்பு இருதலைக் கொள்ளி எறும்புபோல தவித்திருப்பார். ஒருபக்கம், அவர் விரும்பும் இந்த இளம் பெண் சொல்வதை நம்பவேண்டும் என நினைத்திருப்பார். அதேசமயம், இதுவரை இதுபோல் நடந்ததே இல்லை என்பதால் அதை நம்பவும் தயங்கியிருப்பார். அவருடைய மனதில் என்னவெல்லாம் ஓடியது, அவர் எப்படியெல்லாம் யோசித்தார் என பைபிள் சொல்லவில்லை. ஆனால், மரியாளை விவாகரத்து செய்ய முடிவு செய்தார் என்று மட்டுமே சொல்கிறது. அந்தக் காலத்தில், நிச்சயமானாலே திருமணமானது போல் கருதப்பட்டது. என்றாலும், இந்த விஷயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தி அவளை அவமானப்படுத்தவோ அவளுக்கு தண்டனை வாங்கித் தரவோ அவர் விரும்பவில்லை. அதனால், அவளை இரகசியமாக விவாகரத்து செய்ய முடிவு செய்தார். (மத்தேயு 1:18, 19) இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தக் கனிவான மனிதர் படும் மனவேதனையைப் பார்த்து மரியாள் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பாள். இருந்தாலும், தான் சொன்னதை யோசேப்பு நம்பாததால் மனம் கசந்துவிடவில்லை.

தான் எடுத்த முடிவே சரியென நினைத்த யோசேப்பை யெகோவா அவர் போக்கிலேயே போகவிடவில்லை. மரியாள் அற்புதமாக கர்ப்பமாகியிருப்பதை யோசேப்புக்குக் கடவுளுடைய தூதர் கனவில் தெரிவித்தார். விஷயம் தெரிந்ததும் யோசேப்புக்கு நிம்மதியாக இருந்திருக்கும். இதுவரை மரியாள் நடந்துகொண்டதைப் போலவே யோசேப்பும் நடக்க ஆரம்பித்தார், அதாவது யெகோவாவின் வழிநடத்துதலுக்கு ஏற்றபடி நடக்க ஆரம்பித்தார். மரியாளை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டு, யெகோவாவின் மகனை கவனித்துக்கொள்ள வேண்டிய அரிய பொறுப்பை ஏற்க தயாரானார்.—மத்தேயு 1:20–24.

2,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இந்த இளம் தம்பதி, திருமணமானவர்களுக்கும் திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறவர்களுக்கும் ஒரு நல்ல முன்மாதிரி. பொறுப்பான மனைவியாகவும் அன்பான தாயாகவும் இளம் மரியாள் தன் கடமைகளைச் செய்ததை யோசேப்பு பார்த்தபோது யெகோவாவின் தூதர் தன்னை வழிநடத்தியதற்காக அவர் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார். முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதன் அவசியத்தை யோசேப்பு புரிந்திருக்க வேண்டும். (சங்கீதம் 37:5; நீதிமொழிகள் 18:13) ஒரு குடும்பத் தலைவராக தீர்மானங்களை எடுக்கையில் அவர் கவனமாகவும் கனிவாகவும் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை.

மறுபட்சத்தில், யோசேப்பை திருமணம் செய்துகொள்வதற்கு மரியாள் மனமுள்ளவளாக இருந்ததிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? ஆரம்பத்தில் அவள் சொன்னதை நம்புவது யோசேப்புக்குக் கடினமாக இருந்திருக்கலாம், இருந்தாலும் குடும்பத் தலைவராக ஆகப்போகிறவருக்காக அவள் காத்திருந்தாள். அது அவளுக்கு ஒரு நல்ல பாடமாக இருந்தது; அதுபோலவே இன்றைய கிறிஸ்தவ பெண்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாக இருக்கிறது. முடிவாக, எதையும் மூடிமறைக்காமல் மனந்திறந்து பேசுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவங்கள் யோசேப்புக்கும் மரியாளுக்கும் கற்றுக்கொடுத்திருக்கும்.

இந்த இளம் தம்பதியினர் தங்களுடைய மண வாழ்க்கையை மிகச் சிறந்த அஸ்திவாரத்தின் மீது கட்ட ஆரம்பித்தார்கள் என நிச்சயமாகவே சொல்லலாம். அவர்கள் இருவரும் எல்லாவற்றையும்விட யெகோவாவையே அதிகமாக நேசித்தார்கள். பொறுப்பும் அக்கறையும் உள்ள பெற்றோராக இருந்து அவரைப் பிரியப்படுத்தவே விரும்பினார்கள். ஒருபக்கம் அவர்களுக்கு மகத்தான ஆசீர்வாதங்களும் மறுபக்கம் பெரும் சவால்களும் காத்திருந்தன. இதுவரை உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே மாமனிதராக திகழப்போகும் இயேசுவை வளர்க்கும் பாக்கியம் அவர்களுக்கு முன் இருந்தது. (w08 7/1)