Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பெயரின் சரியான உச்சரிப்பு தெரியவில்லை என்றாலும் அதை ஏன் பயன்படுத்த வேண்டும்?

கடவுளுடைய பெயரின் சரியான உச்சரிப்பு தெரியவில்லை என்றாலும் அதை ஏன் பயன்படுத்த வேண்டும்?

வாசகரின் கேள்வி

கடவுளுடைய பெயரின் சரியான உச்சரிப்பு தெரியவில்லை என்றாலும் அதை ஏன் பயன்படுத்த வேண்டும்?

பூர்வகால எபிரெயர்கள் கடவுளுடைய பெயரை எப்படி உச்சரித்தார்கள் என இன்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடவுளுடைய பெயர் பைபிளில் ஏறத்தாழ 7,000 தடவை இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். இயேசு பூமியில் வாழ்ந்த சமயத்தில் கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் தெரியப்படுத்தினார். கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்த வேண்டுமென தமது சீஷர்களுக்குச் சொல்லித் தந்தார். (மத்தேயு 6:9; யோவான் 17:6) இதிலிருந்து ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகிறது: கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரை அவசியம் உபயோகிக்க வேண்டும். அப்படியென்றால், அந்தப் பெயரின் சரியான உச்சரிப்பு ஏன் இன்று யாருக்கும் தெரியவில்லை? இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்: சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடவுளுடைய பெயரை உச்சரிப்பது தவறு என்ற மூடநம்பிக்கை யூதர்கள் மத்தியில் உருவானது. பைபிளை வாசிக்கையில் கடவுளுடைய பெயர் வந்தால், அந்தப் பெயரை உச்சரிப்பதற்குப் பதிலாக “கர்த்தர்” என்று உச்சரிப்பார்கள். இப்படியே பல நூற்றாண்டுகளாக கடவுளுடைய பெயர் புழக்கத்தில் இல்லாமல் போனதால், அவருடைய பெயரை எப்படி உச்சரிப்பது என்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள்.

இரண்டாவது காரணம்: பூர்வகாலத்தில் எபிரெய வார்த்தைகள் உயிரெழுத்துக்கள் இன்றி எழுதப்பட்டன. ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் எழுதப்படுவதைப் போல் அது சுருக்கமாக எழுதப்பட்டது. ஒருவர் எபிரெயுவில் வாசிக்கும்போது, அவருடைய ஞாபகத்தில் இருக்கும் உயிரெழுத்துக்களை இடையிடையே சேர்த்துக்கொண்டு வாசிப்பார். இப்படியே விட்டுவிட்டால், எபிரெய வார்த்தைகளின் உச்சரிப்பு ஒரேயடியாக மறந்துபோய்விடும் என்பதால் ஒரு புதுவிதமான முறை ஆரம்பிக்கப்பட்டது. எபிரெய பைபிளில் ஒவ்வொரு வார்த்தையிலும் உயிரெழுத்துக்கள் வரவேண்டிய இடத்தில் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், கடவுளுடைய பெயர் வரும் இடத்தில் அந்தப் பெயருக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்ட “கர்த்தர்” என்ற பெயருக்குரிய குறியீடுகளைப் பயன்படுத்தினார்கள் அல்லது எந்தக் குறியீடுகளையுமே பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

கடவுளுடைய பெயரில் கடைசியாக மிஞ்சியது டெட்ராகிராமட்டன் என்று அழைக்கப்படும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களே. இதற்கு ஓர் அகராதி இவ்வாறு விளக்கம் அளித்தது: “பொதுவாக YHWH அல்லது JHVH என்று ஒலிபெயர்ப்பு செய்யப்படும் நான்கு எபிரெய எழுத்துக்களே பைபிளில் கடவுளுடைய பெயராக இருக்கிறது.” அப்படியென்றால், JHVH என்ற வார்த்தையோடு உயிரெழுத்துக்களைச் சேர்த்தால் “Jehovah” அல்லது “யெகோவா” என்ற வார்த்தைதான் வருகிறதல்லவா? இதுவே கடவுளுடைய பெயராக ஆங்கிலத்திலும் தமிழிலும் பரவலாக அறியப்பட்டு வருகிறது.

இருந்தாலும், அறிஞர்கள் சிலர் “யாவே” என்பதுதான் கடவுளுடைய பெயரின் சரியான உச்சரிப்பு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், கடவுளுடைய பெயர் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட இப்படித்தான் உச்சரிக்கப்பட்டதா? ஆம் என்று யாராலும் அடித்துச் சொல்ல முடியாது. சொல்லப்போனால், யாவே சரியான உச்சரிப்பு இல்லை என்பதற்கு சில அறிஞர்கள் அநேக காரணங்களைக் கொடுத்திருக்கிறார்கள். உண்மையில், பைபிள் பெயர்களை நாம் உச்சரிக்கும்போது எபிரெய பாஷையில் அவை எப்படி உச்சரிக்கப்படுமோ அதேபோல் துல்லியமாக உச்சரிக்காமல் இருக்கலாம். அப்படி உச்சரிக்கக்கூடாது என்று பொதுவாக யாரும் சொல்வதில்லை. அதற்குக் காரணம், அந்தப் பெயர்கள் நம்முடைய பாஷையுடன் ஒன்றிவிட்டதோடு அவை நமக்கு நன்கு பரிச்சயமாயும் ஆகிவிட்டன. யெகோவா என்ற பெயரும் அதேபோல்தான்.

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயருக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனமாய் இருந்தார்கள். கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் தெரியப்படுத்தினார்கள், மற்றவர்களும் அதை உபயோகிக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள். (அப்போஸ்தலர் 2:21; 15:14; ரோமர் 10:13–15) எனவே, நாம் எந்த மொழியைப் பேசினாலும் சரி, கடவுளுடைய பெயரை உபயோகிப்பதும் அந்தப் பெயரின் முக்கியத்துவத்தை அறிந்து அதற்கேற்றபடி வாழ்வதும் மிகமிக முக்கியம். (w08 8/1)