Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றார்

தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றார்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

தன்னுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றார்

நாலா பக்கத்திலிருந்தும் வந்த சத்தம் யோனாவின் காதைத் துளைக்கிறது. கப்பலின் பாய்மர கயிற்றையே உலுக்குமளவுக்குப் பலமாய் வீசிய காற்றின் பேரிரைச்சல் ஒருபக்கம்; இராட்சத அலைகள் கப்பலின் இருபக்கங்களிலும் வந்து மோதியதால் மரக்கட்டைகள் எழுப்பிய கிறீச்சொலி மறுபக்கம். கப்பல் மூழ்கிவிடாதிருக்க போராடிய தலைவனும் மாலுமிகளும் போட்ட கூச்சல் கூப்பாடு இன்னொரு பக்கம். இவர்கள் எல்லாரும் நிச்சயம் ஜலசமாதி ஆகப்போகிறார்கள், அதற்கு தான்தான் காரணம் என்பதை யோனா அறிந்திருந்தார்!

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் யோனா எப்படி மாட்டிக்கொண்டார்? அவருடைய கடவுளான யெகோவாவுக்கு விரோதமாக அவர் மிகப் பெரிய தவறு செய்திருந்தார். அப்படியென்ன தவறு செய்திருந்தார்? கடவுளோடு அவருக்கிருந்த பந்தமே முறிந்துவிட்டதா? இதற்கான பதில்கள் நமக்குப் பல பாடங்களைக் கற்பிக்கிறது. உதாரணத்திற்கு, கடவுள்மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருப்பவர்கள்கூட தவறுகள் செய்துவிடலாம் என்பதையும், அவற்றை அவர்கள் எப்படிச் சரிசெய்யலாம் என்பதையும் தெரிந்துகொள்ள யோனாவின் அனுபவம் நமக்கு உதவுகிறது.

கலிலேயாவைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசி

யோனா என்ற பெயரைக் கேட்டதும் அவர் செய்த தவறுகள்தான் பலருடைய கண்முன் வந்து நிற்கின்றன; அதாவது அவர் கீழ்ப்படியாமல் போனது.. தான் நினைத்ததைச் சாதிக்க விரும்பியது.. இவையே அவர்களுடைய கண்முன் வந்து நிற்கின்றன. ஆனால், இவரைப் பற்றி அறிந்துகொள்ள எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. யெகோவா தேவனின் தீர்க்கதரிசியாக சேவைசெய்ய யோனா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர் உண்மையற்றவராக இருந்திருந்தால், இத்தகைய பொறுப்பான வேலைக்கு யெகோவா அவரைத் தேர்ந்தெடுத்திருப்பாரா?

யோனாவின் பின்னணியைப் பற்றி 2 இராஜாக்கள் 14:​25-⁠லிருந்து கொஞ்சம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவர் காத்தேப்பேர் என்னும் நகரத்தைச் சேர்ந்தவர். இந்நகரம் நாசரேத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது; நாசரேத்தில்தான் சுமார் 800 வருடங்களுக்குப் பிறகு இயேசு கிறிஸ்து வளர்ந்தார். a இரண்டாம் யெரொபெயாம் ராஜா இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தை ஆட்சி செய்த காலத்தில்தான் தீர்க்கதரிசியாக யோனா சேவை செய்தார். எலியா தீர்க்கதரிசி இறந்து வெகு காலம் ஆகியிருந்தது; எலியாவுக்குப் பின் வந்த எலிசா தீர்க்கதரிசியும் யெரொபெயாமுடைய அப்பாவின் ஆட்சிக் காலத்தில் இறந்துவிட்டார். பாகால் வழிபாட்டை இஸ்ரவேலிலிருந்து ஒழித்துக்கட்ட யெகோவா இவர்களைப் பயன்படுத்தியிருந்தபோதிலும் இஸ்ரவேலர் வேண்டுமென்றே அந்த வழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள். ‘கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்த’ ராஜாவின் கைகளில் இஸ்ரவேல் தேசம் இருந்தது. (2 இராஜாக்கள் 14:24) எனவே, யெகோவாவுக்குச் சேவை செய்வது யோனாவுக்கு இலகுவாகவோ இனிமையாகவோ இருந்திருக்க முடியாது. ஆனாலும் அவர் உண்மையோடு யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தார்.

ஒருநாள் யோனா மிக முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தை எதிர்ப்பட்டார். யெகோவா அவருக்கு ஒரு வேலையைக் கொடுத்தார். அதைத் தன்னால் செய்யவே முடியாதென யோனா நினைத்தார். அப்படி என்ன வேலையை யெகோவா அவருக்குக் கொடுத்தார்?

“நீ எழுந்து . . . நினிவேக்குப் போ”

“நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது” என்று யோனாவிடம் யெகோவா சொன்னார். (யோனா 1:2) இதற்குப்போய் யோனா ஏன் அந்தளவு பயந்துபோனார்? இதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. நினிவே நகரம் கிழக்கே சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது; இந்த இடத்திற்கு நடந்து செல்ல சுமார் ஒரு மாத காலம் எடுக்கலாம். இத்தகைய நடைப்பயணத்தில் எதிர்ப்படும் கஷ்டங்கள்கூட யோனாவுக்குப் பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனால், யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்தியை நினிவே வாசிகளுக்கு, அதாவது அசீரியர்களுக்கு, அறிவிப்பது அவருக்குக் கஷ்டமாக இருந்தது; ஏனெனில் மூர்க்கத்தனமானவர்கள், மிருகத்தனமானவர்கள் என அவர்கள் பெயரெடுத்திருந்தார்கள். கடவுளுடைய சொந்த ஜனங்களே அவருடைய பேச்சைக் கேட்டு நடக்காத பட்சத்தில், அப்படிப்பட்ட புறமதத்தாரிடம் என்ன மாற்றத்தை யோனா எதிர்பார்க்க முடியும்? பரந்து விரிந்த இந்த நினிவே நகரில், பிற்காலத்தில் ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில், யோனா எப்படித் தன்னந்தனியாக நின்று யெகோவாவின் வேலையைச் செய்து முடிக்க முடியும்?​—⁠நாகூம் 3:​1, 7.

இப்படிப்பட்ட எண்ணங்கள் யோனாவின் மனத்திரையில் ஓடியிருக்கலாம். ஆனால் அது நமக்கு உறுதியாகத் தெரியாது. அவர் ஓடிப்போனார் என்பது மட்டும் நமக்குத் தெரியும். கிழக்கு நோக்கிப் போகும்படி யெகோவா அவரிடம் சொன்னார்; அவரோ மேற்கு நோக்கிப் போனார், எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போனார். கரையோரமிருந்த யோப்பா என்ற துறைமுகப் பட்டணத்திற்குப் போய் தர்ஷீசுக்குச் செல்கிற கப்பலில் ஏறினார். இந்தத் தர்ஷீஸ், ஸ்பெயின் நாட்டில் இருந்ததாக அறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள். அப்படியென்றால், நினிவேயிலிருந்து சுமார் 3,500 கிலோமீட்டர் தூரம் அவர் செல்லவிருந்தார். பெருங்கடலின் (அதாவது, மத்தியதரைக் கடல்) மறுகோடிக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுக்கலாம்! அப்படி ஒரு வருட காலம் பயணித்தாலும் பரவாயில்லை, யெகோவா கொடுத்த வேலையைச் செய்யக்கூடாதென யோனா உறுதியாய் இருந்தார்.

அப்படியென்றால், யோனா ஒரு கோழை என நாம் முடிவுகட்டிவிடலாமா? நாம் அவசரப்பட்டு அந்த முடிவுக்கு வரக்கூடாது. ஏனென்றால், யோனாவுக்கு அசாதாரண தைரியம் இருந்ததை நாம் பார்க்கப்போகிறோம். என்றாலும், நம்மைப் போலவே அபூரணரான யோனாவும், ஏராளமான குறைகளோடு போராடிக்கொண்டிருந்தார். (சங்கீதம் 51:5) பயத்தைச் சமாளிக்க நம்மில் யார்தான் போராடாமல் இருந்திருக்கிறோம்?

கடினமான ஒன்றை, ஏன், செய்யவே முடியாத ஒன்றைச் செய்யும்படி கடவுள் நம்மிடம் கேட்பதாகச் சில சமயங்களில் நமக்குத் தோன்றலாம். கிறிஸ்தவர்களாகிய நமக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பது ஒரு சவாலாக இருக்கலாம். (மத்தேயு 24:14) ஆனால், இயேசு சொன்ன கருத்தாழ்ந்த ஓர் உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. ஆம், “தேவனாலே எல்லாம் கூடும்.” (மாற்கு 10:27) சில சமயங்களில், நாம் அதை மறந்துவிடுகிறோம், யோனாவும் அப்படித்தான் அதை மறந்துவிட்டார், அதனால்தான் யெகோவா கொடுத்த வேலையைக் கஷ்டமாக நினைத்தார். ஆனால், யோனா ஓடிப்போனதால் வந்த விளைவு என்ன?

கீழ்ப்படியாத தீர்க்கதரிசியை யெகோவா திருத்துகிறார்

யோனா கப்பலில் ஏறி வசதியான ஓரிடத்தில் அமருவதாகக் கொஞ்சம் கற்பனை செய்வோம்; அது, பெனீஷிய சரக்குக் கப்பலாக இருந்திருக்கலாம். துறைமுகத்திலிருந்து கப்பலைக் கிளப்ப கப்பல் தலைவனும் மாலுமிகளும் அரக்கப்பரக்க வேலை செய்வதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். கரை மெல்ல மெல்ல கண்ணைவிட்டு அகன்று, மறைந்து போனபோது, இனி எந்த ஆபத்துமில்லை என்று நினைத்து அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கலாம். ஆனால், திடீரென சீதோஷ்ணநிலை மாறியது.

மூர்க்கமாக வீசிய காற்று கடலை அலைக்கழித்தது. அலைகள் பொங்கியெழுந்தன. இப்படிப்பட்ட பேரலைகளை இக்கால கப்பல்களும்கூட தாக்குப்பிடிக்க முடியாது. அப்படியானால், சின்னஞ்சிறிய, வலுவற்ற இந்த மரக்கப்பல், ஆளுயரத்திற்கு எழும்பிய அலைகளுக்கு முன்னால் எம்மாத்திரம்? ‘கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்’ என யோனா பின்னர் எழுதினார். ஆனால், அந்தச் சமயத்தில் அது அவருக்குத் தெரிந்திருந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது. எனினும், தங்கள் தங்கள் தெய்வங்களிடம் மாலுமிகள் கூக்குரலிடுவதை அவர் பார்த்தார்; அந்தத் தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்ற முடியாதெனவும் அறிந்திருந்தார். “கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது” என அவர் பின்னர் எழுதினார். (யோனா 1:​4, பொது மொழிபெயர்ப்பு; லேவியராகமம் 19:4) ஆனால், எந்தக் கடவுளைவிட்டு யோனா ஓடிப்போனாரோ அந்தக் கடவுளிடமே அவரால் எப்படி ஜெபம் செய்ய முடியும்?

நிலைமை கைமீறிவிட்டது என்பதை அறிந்து, கப்பலின் கீழ்த்தளத்திற்குச் சென்று நல்ல இடமாகப் பார்த்து யோனா படுத்துக்கொண்டார். அங்கே அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். b தூங்கிக் கொண்டிருந்த யோனாவை கப்பல் தலைவன் தட்டியெழுப்பி, மற்ற எல்லாரையும் போலவே அவரையும் தன் கடவுளிடம் மன்றாடும்படி ஊக்கப்படுத்தினார். இது சாதாரண புயல்காற்று அல்ல, இதற்குப் பின்னால் ஏதோவொரு சக்தி இருக்கிறது என்பதை மாலுமிகள் புரிந்துகொண்டு, இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க சீட்டுக்குலுக்கிப் போட்டார்கள். ஒவ்வொருவருடைய பெயரும் விடுபட விடுபட யோனாவின் நெஞ்சம் படபடத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சீக்கிரத்திலேயே குட்டு வெளிப்பட்டுவிட்டது. புயல் காற்று வீசுவதற்கும், சீட்டில் யோனாவின் பெயர் விழுவதற்கும் யெகோவாவே காரணம். யோனாவுக்காகத்தான் அப்படிச் செய்தார் என்பது தெளிவானது.​—யோனா 1:5–7.

நடந்த எதையும் மறைக்காமல் யோனா அந்த மாலுமிகளிடம் சொன்னார். அவர் சர்வவல்லமையுள்ள யெகோவா தேவனின் ஊழியர் என்று சொன்னார். அதோடு, கடவுளுக்குப் பயந்தே தான் ஓடிப்போவதாகவும், கடவுளை தான் புண்படுத்திவிட்டதாகவும், அவர்கள் எல்லாருடைய உயிரும் ஆபத்தில் இருப்பதற்குத் தானே காரணம் என்றும் சொன்னார். அதைக் கேட்ட அந்த மாலுமிகள் திகிலடைந்தார்கள்; அவர்களுடைய கண்களில் பயம் நிழலாடுவதை யோனா கண்டார். கப்பலையும் தங்களையும் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமென அவர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் என்ன சொன்னார்? கொந்தளிக்கும் கடலில், குளிர்ந்த நீரில் தான் மூழ்கிப்போவதை நினைத்து அவர் நடுநடுங்கி இருக்கலாம். ஆனால், தன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை அறிந்தும் அவர்களையும் இந்தச் சவக்குழியில் தள்ள அவருக்கு எப்படி மனம் வரும்? எனவே அவர், “நீங்கள் என்னைத் தூக்கி கடலில் எறிந்துவிடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்; நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்” என்று சொன்னார்.​—யோனா 1:​12, பொ.மொ.

அவர் ஒரு கோழையாக இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருப்பாரா? அந்த இக்கட்டான சமயத்திலும், யோனா காட்டிய தைரியத்தையும் தன்னலமற்ற மனப்பான்மையையும் கண்டு யெகோவா நிச்சயம் ஆனந்தப்பட்டிருப்பார். அந்தச் சமயத்தில், கடவுள்மீது யோனா அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருந்ததைக் காண்கிறோம். நம்முடைய நலனைவிட மற்றவர்களுடைய நலனை முதலிடத்தில் வைத்தால் நாமும் அவரைப் போல நடந்துகொள்ள முடியும். (யோவான் 13:​34, 35) உடல் ரீதியிலோ உணர்ச்சி ரீதியிலோ ஆன்மீக ரீதியிலோ உதவி தேவைப்படுகிற ஒருவரை நாம் பார்க்கும்போது, தன்னலம் கருதாமல் அவருக்கு உதவ முன்வருகிறோமா? அப்படிச் செய்யும்போது யெகோவா எவ்வளவாய்ச் சந்தோஷப்படுவார்!

யோனா சொன்னதைக் கேட்டு ஒருவேளை அந்த மாலுமிகளும் மனம் நெகிழ்ந்துபோயிருக்கலாம்; அதனால்தான் யோனாவைக் கடலில் தூக்கிப்போட முதலில் மறுத்தார்கள். புயல் காற்றைச் சமாளித்து கப்பலை செலுத்த தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். ஆனால், பயனில்லாமல் போய்விட்டது. நேரம் செல்லச்செல்ல காற்றின் வேகமும் அதிகரித்துக்கொண்டே போனது. கடைசியில், தங்களுக்கு வேறு வழியே இல்லை என்பதை மாலுமிகள் புரிந்துகொண்டார்கள். யோனாவின் கடவுளாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; தங்கள்மீது கருணை காட்டும்படி கேட்டு, யோனாவைக் கடலில் தூக்கி வீசினார்கள்.​—யோனா 1:13–15.

யோனா கருணை பெற்றார், காப்பாற்றப்பட்டார்

சீறியெழுந்த அலைகளின் நடுவே யோனா சிக்கிக்கொண்டார். நீரில் அவர் தத்தளித்திருக்கலாம், மூழ்கிவிடாதிருக்க முயற்சி செய்திருக்கலாம். அப்போது, நுரைபொங்கிய நீரைக் கிழித்துக்கொண்டு கப்பல் வேகமாகக் கடந்து செல்வதை அவர் கண்டார். ஆனால், ராட்சத அலைகள் அவர்மீது மோதி அவரை கடலுக்குள் அமிழ்த்தின. உயிர்பிழைப்போம் என்ற நம்பிக்கையிழந்து கடலுக்குள் அவர் மூழ்கிக்கொண்டிருந்தார்.

இந்தச் சமயத்தில் அவர் மனதில் அலைமோதிய உணர்ச்சிகளை பின்னர் அவர் விவரித்தார். அவருடைய மனத்திரையில் பல காட்சிகள் வந்துபோயின. எருசலேமிலிருந்த யெகோவாவின் அழகிய ஆலயத்தை இனி பார்க்கவே முடியாது என்பதை நினைத்து உருகினார். கடலின் ஆழத்திற்குச் செல்வதுபோல், மலைகளின் அஸ்திவாரத்தை நெருங்குவதுபோல், கடற்பூண்டுகளுக்குள் சிக்கிக்கொள்வதுபோல் அவர் உணர்ந்தார். அதுவே தனது சவக்குழி என அவர் எண்ணியிருப்பார்.​—யோனா 2:2–6.

சற்றுப் பொறுங்கள்! கருப்பு நிறத்தில், மிகப் பெரிய உயிரினம் ஒன்று அருகே அசைவதை அவர் பார்த்தார். அந்த உருவம் திடீரென அவரிடம் நெருங்கி வந்து, அதன் மிகப் பெரிய வாயைத் திறந்து, அவரை அப்படியே விழுங்கியது.

அத்தோடு அவர் கதை முடிந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. ஓர் அற்புதம் நிகழ்ந்திருப்பது யோனாவுக்குப் புரிந்தது. அவர் இன்னமும் உயிரோடுதான் இருந்தார்! அவர் சிதைந்துவிடவோ ஜீரணமாகிவிடவோ இல்லை, மூச்சுத்திணறி சாகவுமில்லை. ஆம், எங்கே அவர் சமாதியாகவிருந்தாரோ அங்கே அவர் உயிரோடிருந்தார். அதை நினைத்து ஆச்சரியத்தில் உறைந்துபோனார். யோனாவின் கடவுளான யெகோவா ‘ஏற்பாடு செய்திருந்தபடியே ஒரு பெரிய மீன் வந்து அவரை விழுங்கியது’ என்பதில் சந்தேகமே இல்லை. cயோனா 1:​17, பொ.மொ.

நிமிடங்கள் கரைந்து, மணிநேரங்கள் ஆயின. அவருடைய கண்களுக்குப் பழக்கமில்லாத ‘கும்’ இருட்டில் இப்போது யோசிக்க யோனாவிற்கு அவகாசம் கிடைத்தது; யெகோவா தேவனிடம் அவர் ஜெபம் செய்தார். யோனா புத்தகத்தின் இரண்டாம் அதிகாரம் முழுவதிலும் காணப்படும் அவருடைய ஜெபம் அவர் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சங்கீதத்திலுள்ள வசனங்களை அவர் அடிக்கடி குறிப்பிட்டிருப்பது வேதவசனங்களை அவர் நன்கு அறிந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அவர் இதயத்தில் நன்றி பொங்கிவழிந்ததும் அந்த ஜெபத்தில் தெரிகிறது. இது மனதுக்கு இதமளிக்கும் குணம், அல்லவா? “நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே [அதாவது, யெகோவாவே]” என்று சொல்லி யோனா ஜெபத்தை முடித்தார்.​—யோனா 2:​9, பொ.மொ.

எந்த நபரையும் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் யெகோவாவால் மீட்க முடியும் என்பதை யோனா புரிந்துகொண்டார். கதிகலங்கிப் போயிருந்த தம் ஊழியரை ‘மீன் வயிற்றிலிருந்து’ யெகோவா காப்பாற்றினார். (யோனா 1:17) பெரிய மீனின் வயிற்றில் மூன்று இராப்பகல் இருந்த ஒரு நபரை யெகோவாவால் மட்டுமே உயிரோடு மீட்க முடியும். யெகோவாவே, ‘தம்முடைய கையில் நமது சுவாசத்தை வைத்திருக்கிறவர்’ என்பதை இன்று நாம் நினைவில் வைப்பது நல்லது. (தானியேல் 5:23) அவராலேயே நாம் சுவாசிக்கிறோம், உயிரோடிருக்கிறோம். இதற்கு நாம் நன்றியுடன் இருக்கிறோமா? அப்படியென்றால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம், அல்லவா?

யோனாவைக் குறித்து என்ன சொல்லலாம்? கீழ்ப்படிவதன் மூலம் யெகோவாவுக்கு நன்றிகாட்டக் கற்றுக்கொண்டாரா? ஆம், கற்றுக்கொண்டார். அந்த மீன் மூன்று நாளுக்குப்பின் ‘யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.’ (யோனா 2:10) கரைவரைகூட யோனா நீந்த வேண்டிய அவசியமில்லாமல் போனதைக் கவனித்தீர்களா? ஆனால், அங்கிருந்து அவர் போக வேண்டிய இடத்திற்கு அவரே வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. என்றாலும், அவர் நன்றியுள்ளவராக இருக்கிறாரா என்பதைக் காட்ட மற்றொரு சோதனை வந்தது. யோனா 3:​1, 2 இவ்வாறு சொல்கிறது: “இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.” யோனா என்ன செய்தார்?

அவர் துளியும் தாமதிக்கவில்லை. ‘யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனார்’ என்று நாம் வாசிக்கிறோம். (யோனா 3:3) ஆம், இந்த முறை அவர் கீழ்ப்படிந்தார். தன்னுடைய தவறுகளிலிருந்து அவர் பாடம் கற்றார் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த விஷயத்திலும்கூட நாம் யோனாவின் விசுவாசத்தைப் பின்பற்ற வேண்டும். நாம் எல்லாரும் பாவிகள்; நாம் எல்லாரும் தவறுகள் செய்கிறோம். (ரோமர் 3:23) ஆனால், நாம் சோர்ந்துபோய் விடுகிறோமா? அல்லது, நம்முடைய தவறுகளிலிருந்து பாடம் கற்று, கீழ்ப்படிதலோடு கடவுளுக்குச் சேவை செய்கிறோமா?

கீழ்ப்படிதலைக் காட்டியதால் யோனாவுக்கு யெகோவா பலன் அளித்தாரா? ஆம், பலன் அளித்தார். அந்த மாலுமிகள் தப்பிப்பிழைத்தார்கள் என்பதை யோனா பின்னர் அறிந்துகொண்டதாகத் தெரிகிறது. தன்னலம் கருதாமல் யோனா தன்னைக் கடலில் தூக்கிப் போடும்படிச் சொன்னார். அப்படிச் செய்தவுடனேயே புயல் காற்று நின்றுபோனது. அந்தக் கப்பலாட்கள் தங்களுடைய பொய் தெய்வங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே ‘மிகவும் பயந்து,’ அவருக்குப் பலி செலுத்தினார்கள்.​—யோனா 1:​15, 16.

இதைவிடவும் பெரிய பலனை அவர் பின்னர் பெற்றார். இயேசு தாம் பிரேதக்குழியில், அதாவது ஷீயோலில், இருக்கப்போகும் நாட்களை பெரிய மீனின் வயிற்றில் யோனா இருந்த நாட்களோடு ஒப்பிட்டுப் பேசினார். (மத்தேயு 12:38–40) பூமியில் வாழ மீண்டும் உயிரோடு எழுப்பப்படும் சமயத்தில் யோனா இதைப் பற்றிக் கேள்விப்படும்போது எவ்வளவாய் பூரித்துப்போவார்! (யோவான் 5:​28, 29) உங்களையும் யெகோவா ஆசீர்வதிக்க விரும்புகிறார். யோனாவைப் போல, உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்று, கீழ்ப்படிதலையும் தன்னலமற்ற மனப்பான்மையையும் காட்டுவீர்களா? (w09 1/1)

[அடிக்குறிப்புகள்]

a யோனா கலிலேயா பட்டணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது; ஏனென்றால், இயேசுவைக் குறித்து பரிசேயர்கள் பேசுகையில், “கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும்” என்று வீராப்போடு சொன்னார்கள். (யோவான் 7:52) இந்தச் சாதாரண பட்டணமாகிய கலிலேயாவிலிருந்து எந்தத் தீர்க்கதரிசியும் வரவில்லை, வரப்போவதுமில்லை என பரிசேயர்கள் பொதுப்படையாகச் சொன்னதாக அநேக மொழிபெயர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அப்படியென்றால், அந்தப் பரிசேயர்கள் சரித்திரத்தையும் தீர்க்கதரிசனத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.​—⁠ஏசாயா 9:​1, 2.

b யோனா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை வலியுறுத்துவதற்கு, அவர் குறட்டைவிட்டதாகவும் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு சொல்கிறது. ஆனால், யோனா கவலையில்லாமல் தூங்கியதாக நாம் முடிவு செய்துவிடக் கூடாது; மனச்சோர்வில் துவண்டு போனவர்கள் சிலசமயத்தில் தங்களையே அறியாமல் தூங்கிவிடுவார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். கெத்சமனே தோட்டத்தில் இயேசு கடும் துயரத்திலிருந்த சமயத்தில் பேதுருவும் யாக்கோபுவும் யோவானும் ‘துக்கத்தினாலே நித்திரை பண்ணினார்கள்’ என்பது நம் நினைவுக்கு வரலாம்.​—⁠லூக்கா 22:⁠45.

c ‘மீன்’ என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு கிரேக்கில் “கடல் மிருகம்,” அதாவது, “மிகப் பெரிய மீன்” என்று அர்த்தம். எத்தகைய கடல் மிருகம் யோனாவை விழுங்கியது என்பது திட்டவட்டமாய் தெரியாவிட்டாலும் முழு மனிதனையும் விழுங்கக்கூடிய பெரிய சுறா மீன்கள் மத்தியதரைக் கடலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதைவிடவும் பெரிய சுறா மீன்கள் வேறு இடங்களிலும் இருக்கின்றன; திமிங்கில வகை சுறா மீன் 15 மீட்டர் அல்லது அதைவிடவும் நீண்டதாக இருக்கலாம்!

[பக்கம் 31-ன் பெட்டி/படம்]

விமர்சகர்கள் பிடியில் யோனா புத்தகம்

▪ யோனா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் உண்மையில் நடந்தனவா? ஆரம்ப காலத்திலிருந்தே இப்புத்தகம் விமர்சகர்களின் கையில் சிக்கியிருக்கிறது. இன்று பைபிளைக் கடுமையாய் விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் இப்புத்தகத்தை பழங்கதை, புனைகதை என்றெல்லாம் சொல்லி புறக்கணிக்கிறார்கள். யோனாவைப் பற்றிய பதிவை விநோதமான நீதிக்கதையென்று மதகுரு குறிப்பிட்டதாக 19-⁠ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் எழுதினார்: யோப்பா நகரில், திமிங்கல சின்னம் என்ற விடுதியில் யோனா தங்கியிருந்தாராம். வாடகை தர அவரிடம் போதுமான பணமில்லாதபோது அந்த விடுதியின் சொந்தக்காரர் அவரை வெளியேற்றினாராம். திமிங்கலம் அவரை “உள்ளே” விழுங்கியதும் பின்னர் அவரைக் ‘கக்கியதும்’ இப்படித்தானாம்! சொல்லப்போனால், யோனாவை விழுங்குவதில் அந்தப் பெரிய மீனைவிட பைபிள் விமர்சகர்கள்தான் துடியாய்த் துடிப்பதுபோல் தெரிகிறது!

ஏன் நிறைய பேர் இப்புத்தகத்தை நம்ப மறுக்கிறார்கள்? அதிலுள்ள அற்புதங்களே அதற்குக் காரணம். அற்புதங்கள் நடக்கவே நடக்காது என்பது அநேக விமர்சகர்களுடைய வாதம். ஆனால் அவர்களுடைய வாதம் சரியா? உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பைபிளிலுள்ள முதல் வசனத்தை நான் நம்புகிறேனா?’ “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று அது சொல்கிறது. (ஆதியாகமம் 1:⁠1) சிந்திக்கும் மனம்படைத்த லட்சக்கணக்கானவர்கள் இந்த எளிய உண்மையை தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு விதத்தில், பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள எல்லா அற்புதங்களையும்விட இந்த ஒரே வசனத்தில் அடங்கியுள்ள அற்புதங்கள் ஏராளம்.

இதைச் சிந்தித்துப் பாருங்கள்: விண்ணிலுள்ள நட்சத்திரக் கூட்டங்களையும் மண்ணிலுள்ள வியத்தகு உயிரினங்களையும் படைத்தவருக்கு யோனா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதங்களைச் செய்வது கஷ்டமா, என்ன? புயல் காற்றை வீசச் செய்வது, ஒரு பெரிய மீன் மனிதனையே விழுங்குவது, பின்பு அவனைக் கக்குவது என்பதெல்லாம் முடியாத காரியமா? எல்லையில்லா வல்லமை படைத்தவருக்கு இத்தகைய செயல்களை நடப்பிப்பது பெரிய விஷயமே இல்லை.​—⁠ஏசாயா 40:⁠26.

கடவுளுடைய தலையீடு இல்லாமலே சில சமயங்களில் அற்புதச் செயல்கள் நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு, 1758-⁠ல் ஒரு செய்தி வெளியானது: மத்தியதரைக் கடலில் பயணித்த ஒரு மாலுமி கப்பலிலிருந்து தவறி விழுந்தபோது, ஒரு திமிங்கலம் அவரை விழுங்கிவிட்டது. பீரங்கியால் அதைச் சுட்டபோது, அந்த மனிதனை அது கக்கிவிட்டது; பெரிதாக காயம் ஏதுமில்லாமல் அவர் உயிர்தப்பினார். இது உண்மை சம்பவம் என்றால், இதைக் கேட்டு நாம் வியப்படையலாம், ஆச்சரியப்படலாம், ஆனால் அதை ஓர் அற்புதம் என்று சொல்ல மாட்டோம். கடவுளால் தமது வல்லமையைப் பயன்படுத்தி இதைவிட மகத்தான செயல்களைச் செய்ய முடியாதா, என்ன?

மேலும், மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிரோடிருக்கிற ஒருவர் மூச்சுத்திணறாமல் இருக்க முடியாது என்றும் விமர்சகர்கள் சொல்கிறார்கள். என்றாலும், நீருக்கடியில் வெகுநேரம் இருக்கும்போது மூச்சுத்திணறாமல் இருப்பதற்கு மனிதன் ஆக்ஸிஜன் சிலிண்டரை கண்டுபிடித்திருக்கிறான்; அப்படியிருக்கும்போது யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றுக்குள் மூச்சுத்திணறாமல் இருப்பதற்குத் தம்முடைய அளவிலா ஞானத்தையும் வல்லமையையும் கடவுள் பயன்படுத்தியிருக்க மாட்டாரா? யெகோவாவின் தூதன் இயேசுவின் தாயான மரியாளிடம் சொன்னதுபோல், “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.”​—⁠லூக்கா 1:⁠37.

யோனா புத்தகத்தில் உள்ள சம்பவங்கள் நிஜமாக நடந்தவை என்பதை நம்புவதற்கு வேறென்ன அத்தாட்சிகள் இருக்கின்றன? கப்பலையும் அதன் மாலுமிகளையும் பற்றிய யோனாவின் பதிவில் நுட்பமான, நம்பகமான தகவல்கள் இருக்கின்றன. கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக மாலுமிகள் அதிலிருந்த பொருள்களை கடலில் தூக்கி எறிந்ததாக யோனா 1:​5-⁠ல் நாம் வாசிக்கிறோம். மோசமான சீதோஷ்ண நிலையில் இப்படிச் செய்வது வழக்கமென பூர்வகால சரித்திராசிரியர்களும் சொல்கிறார்கள், ரபீனிய சட்டமும் சொல்கிறது. நினிவேயைப் பற்றி யோனா பின்னர் எழுதிய தகவல்களை சரித்திரமும் தொல்லியல் அத்தாட்சிகளும் ஆதரிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, பெரிய மீனின் வயிற்றில் யோனா மூன்று நாட்கள் இருந்தது, தாம் மூன்று நாட்கள் கல்லறையில் இருக்கப்போவதற்குத் தீர்க்கதரிசனமாக இருப்பதாக இயேசு கிறிஸ்து கூறினார். (மத்தேயு 12:38–40) இயேசுவே அளித்த இந்த அத்தாட்சி யோனாவின் கதை உண்மை சம்பவம் என்பதை உறுதிப்படுத்துகிறது. (w09 1/1)

“தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.”​—⁠லூக்கா 1:⁠37