Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் அன்புக்கு மாபெரும் அத்தாட்சி

கடவுளின் அன்புக்கு மாபெரும் அத்தாட்சி

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

கடவுளின் அன்புக்கு மாபெரும் அத்தாட்சி

ஆதியாகமம் 22:​1-⁠18

ஆபிரகாம் கடவுளை நேசித்தார். அவர் கடவுள் பக்திமிக்கவர், வயதான காலத்தில் தனக்குப் பிறந்த மகன் ஈசாக்கையும் நேசித்தார். ஈசாக்குக்குக் கிட்டத்தட்ட 25 வயதானபோது ஆபிரகாம் பெரும் சோதனையை எதிர்ப்பட்டார்: உயிருக்கு உயிராய் நேசித்த மகனையே பலி கொடுக்கும்படி கடவுள் அவரிடம் கேட்டார்; எந்த அப்பாவுக்குத்தான் அப்படிச் செய்ய மனம் வரும். இப்படிப்பட்ட சூழலில் ஆபிரகாம் என்ன செய்தார்? ஈசாக்கை பலி செலுத்த தயாரானார்! அந்தச் சமயத்தில், ஒரு தேவதூதன் மூலம் கடவுள் குறுக்கிட்டார். பைபிளில் ஆதியாகமம் 22:​1-⁠18-⁠ல் உள்ள இந்தப் பதிவு, கடவுள் நம்மை எந்தளவு நேசிக்கிறார் என்பதற்கு ஒரு படமாக இருக்கிறது.

“தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்” என்று முதல் வசனம் சொல்கிறது. விசுவாசத்தைக் காட்டுவதில் ஆபிரகாம் தலைசிறந்த முன்மாதிரியாய் விளங்கினார்; ஆனால், வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத மாபெரும் விசுவாசப் பரிட்சையை எதிர்ப்பட்டார். “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, . . . நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்று கடவுள் சொன்னார். (2-⁠ஆம் வசனம்) தம்முடைய ஊழியர்கள் சக்திக்கு மீறி சோதிக்கப்பட கடவுள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, ஆபிரகாம்மீது கடவுள் எந்தளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை இந்தச் சோதனை காட்டியது.​—1 கொரிந்தியர் 10:⁠13.

கடவுள் சொன்னபடி ஆபிரகாம் உடனடியாகச் செயல்பட்டார். “ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டு பேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்” என்று வாசிக்கிறோம். (3-⁠ஆம் வசனம்) இந்தச் சோதனையைப் பற்றிய விவரங்களை ஆபிரகாம் யாரிடமும் சொல்லாமல் மனதில் வைத்துக்கொண்டார் என்று தெரிகிறது.

மூன்று நாட்கள் ஆபிரகாம் பயணம் செய்தார்; இந்தச் சமயத்தில் பல விஷயங்களை எண்ணிப் பார்க்க அவருக்கு அவகாசம் கிடைத்தது. ஆனால், தன்னுடைய தீர்மானத்தை ஆபிரகாம் மாற்றிக்கொள்ளவில்லை. கடவுள்மீது அவர் எந்தளவு விசுவாசம் வைத்திருந்தார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கடவுள் சொல்லியிருந்த மலையைத் தூரத்தில் அவர் பார்த்தபோது, “நீங்கள் . . . இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்” என்று வேலைக்காரர்களிடம் சொன்னார். பலி கொடுப்பதற்குரிய ஆட்டுக்குட்டி எங்கே என ஆபிரகாமிடம் ஈசாக்கு கேட்டபோது, “தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்” என்று அவர் பதில் அளித்தார். (5, 8 வசனங்கள்) தன்னுடைய மகனுடன் திரும்பி வரப்போவதாக ஆபிரகாம் நம்பினார். ஏன்? ஏனெனில், ‘[ஈசாக்கை] மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார் என்று அவர் எண்ணினார்.’​—எபிரெயர் 11:⁠18.

மலையில் இருக்கையில் ஆபிரகாம் ‘தன் குமாரனை வெட்டுவதற்கு . . . கத்தியை’ ஓங்கியபோது ஒரு தேவதூதன் அவரைத் தடுத்து நிறுத்தினார். “தன் குமாரனுக்கு” பதிலாகப் பலி செலுத்த புதரில் சிக்கியிருந்த ஓர் ஆட்டுக்கடாவை ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்தார். (10-⁠13 வசனங்கள்) கடவுளுடைய பார்வையில், ஈசாக்கை ஏற்கெனவே பலி கொடுத்துவிட்டதைப் போல் அது இருந்தது. (எபிரெயர் 11:17) “ஆபிரகாம் தன் மகனை பலிசெலுத்த மனமுள்ளவராய் இருந்ததை தமக்குப் பலி செலுத்தியதற்குச் சமமாகக் கடவுள் கருதினார்” என்று ஓர் அறிஞர் விளக்குகிறார்.

ஆபிரகாம்மீது யெகோவா வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அதேபோல் யெகோவாமீது ஆபிரகாம் நம்பிக்கை வைத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்தது; எப்படியெனில், ஆபிரகாமுடன் முன்பு செய்திருந்த உடன்படிக்கையைக் கடவுள் மீண்டும் செய்து, அதைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தந்தார். எல்லா தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதி அந்த உடன்படிக்கை மூலம் கிடைத்தது.​—15–18 வசனங்கள்.

கடைசியில், ஈசாக்கைப் பலி செலுத்த ஆபிரகாமைக் கடவுள் அனுமதிக்கவில்லை; ஆனால், அவரோ தம் மகனைப் பின்னர் பலி செலுத்தினார். ஈசாக்கைப் பலி செலுத்த ஆபிரகாம் மனமுள்ளவராய் இருந்தது, நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய ஒரே மகன் இயேசுவை பிற்பாடு கடவுள் பலி செலுத்தியதற்குப் படமாக இருந்தது. (யோவான் 3:16) கிறிஸ்துவை யெகோவா பலியாகச் செலுத்தியது நம்மீது அவர் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு மாபெரும் அத்தாட்சி அளிக்கிறது. கடவுள் நமக்காக எப்பேர்ப்பட்ட தியாகத்தைச் செய்திருக்கிறார்! எனவே, ‘கடவுளைப் பிரியப்படுத்த நான் என்ன தியாகங்களைச் செய்ய மனமுள்ளவனா(ளா)க இருக்கிறேன்?’ என நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். (w09 2/1)