Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள தொழுநோயும் இன்றைய தொழுநோயும் ஒன்றுதானா?

இன்று “தொழுநோய்” [அல்லது, குஷ்டரோகம்] என்பது, மைக்கோபேக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் மனிதருக்கு வரும் நோயைக் குறிக்கிறது. இந்த பாக்டீரியாவை 1873-ல் டாக்டர் ஜி.ஏ. ஹான்ஸன் என்பவர் முதன்முதலில் கண்டுபிடித்தார். இந்த பாக்டீரியா மனித உடலுக்கு வெளியே, அதாவது மூக்கிலிருந்து வடிகிறவற்றில், ஒன்பது நாட்கள்வரை உயிர்வாழ முடியுமென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தொழுநோயாளிகளுடன் சேர்ந்தே இருப்பவர்களுக்கு இந்த நோய் தொற்றுவதற்கான சாத்தியம் அதிகமிருப்பதாகவும், நோயாளிகளுடைய உடை மூலமாகத் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும்கூட அந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 2007-ல் 2,20,000-க்கும் அதிகமானோருக்கு இந்த நோய் தொற்றியிருந்ததாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தனியாக விலக்கி வைக்க வேண்டுமென இஸ்ரவேலருக்குக் கடவுள் கட்டளை கொடுத்திருந்தார்; ஆகவே, பண்டைய காலங்களில் வாழ்ந்த இஸ்ரவேலர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. (லேவியராகமம் 13:4, 5) ஆனால், “தொழுநோய்” அல்லது “குஷ்டரோகம்” என பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை (சாரேயாத்) மனிதர்களைப் பாதித்த தொற்றுநோயை மட்டுமே குறிக்கவில்லை. அது துணிமணிகளையும் வீடுகளையும் பாதித்த தொற்றுநோயையும் குறித்தது. அந்தத் தொழுநோய், கம்பளி ஆடைகளை, நார்ப்பட்டு உடைகளை, அல்லது தோலினால் செய்த பொருள்களைப் பாதித்தது. சில சமயங்களில் தண்ணீரினால் கழுவியோ துவைத்தோ அந்தத் தொற்றைப் போக்க முடிந்தது; ஆனால், ‘குஷ்டதோஷம் பச்சையாக அல்லது சிவப்பாக’ அந்த ஆடைகளிலோ தோல் பொருள்களிலோ தொடர்ந்து இருந்தபோது அவற்றை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டியிருந்தது. (லேவியராகமம் 13:47-52) இந்தத் தொற்று வீட்டுச் சுவர்களைப் பாதித்தபோது, ‘கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்தது.’ அவ்வாறு பாதிக்கப்பட்ட கற்களையும் காரையையும் பெயர்த்தெடுத்து நகரத்துக்கு வெளியே போட வேண்டியிருந்தது. அதன் பிறகும் இந்தத் தொற்று வந்தால், அந்த வீட்டையே இடித்துவிட்டு, கல்லையும் மண்ணையும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. (லேவியராகமம் 14:33-45) இன்று பூஞ்சணம் அல்லது பூஞ்சக்காளான் என குறிப்பிடப்படுவதே அன்று துணிமணிகளிலோ வீடுகளிலோ ஏற்பட்ட தொழுநோயாக இருக்கலாமென சிலர் குறிப்பிடுகிறார்கள். என்றாலும், இதை உறுதியாய்ச் சொல்ல முடியாது. (w09 2/1)