Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது!

பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது!

பைபிள்​—⁠ஆளையே மாற்றும் சக்தி படைத்தது!

வைரக்கடத்தல் செய்து வந்த, தன் முதலாளியிடமிருந்தே திருடி வாழ்ந்து வந்த ஒரு பெண் எப்படி நேர்மையுள்ளவளாய் மாறினாள்? இருமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்ற பெண் உயிர் வாழ்வதற்கான காரணத்தை எப்படிக் கண்டுபிடித்தாள்? மதுபானத்திற்கும் போதைப் பொருளுக்கும் அடிமைப்பட்டிருந்த ஒருவர், அதிலிருந்து வெளிவர எங்கிருந்து பலத்தைப் பெற்றார்? இதை அவர்களே சொல்லக் கேட்போமாக.

பின்னணிக் குறிப்பு

பெயர்: மார்கரெட் டபேரன்

வயது: 45

நாடு: போட்ஸ்வானா

முன்பு: கடத்தல்காரி, திருடி

கடந்த காலம்: என் அப்பாவுடைய சொந்த ஊர் ஜெர்மனி; ஆனால், பிறகு தென்மேற்கு ஆப்பிரிக்காவின் (இப்போது நமிபியா) பிரஜையானார். என் அம்மா போட்ஸ்வானாவிலுள்ள மங்கோலோகா இனத்தைச் சேர்ந்தவர். நான் நமிபியாவில் கோபாபிஸ் என்ற நகரத்தில் பிறந்தேன்.

1970-⁠களில் தென் ஆப்பிரிக்க அரசு நமிபியாமீது பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது; நகரங்கள்.. கிராமங்கள்.. என எல்லா இடங்களிலும் இன ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதில் கெடுபிடியாக இருந்தது. என் பெற்றோர் வெவ்வேறு இனத்தவராக இருந்ததால் பிரிந்துபோக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, என்னையும் என்னுடன் பிறந்தவர்களையும் கூட்டிக்கொண்டு அம்மா போட்ஸ்வானாவிலுள்ள கான்ஸி பகுதிக்கு வந்துவிட்டார்.

1979-⁠ல் போட்ஸ்வானாவிலுள்ள லோபாட்ஸே என்ற நகருக்குச் சென்று, பள்ளிப் படிப்பு முடியும் வரை வளர்ப்புப் பெற்றோருடன் தங்கினேன். பின்னர், வாகனங்களைப் பழுதுபார்க்கும் இடத்தில் எனக்கு ‘கிளார்க்’ வேலை கிடைத்தது. ‘என்ன செய்ய நினைக்கிறாயோ அதை செய், அது சரியாக இருந்தாலும் சரி தவறாக இருந்தாலும் சரி. அப்போதுதான் உன்னையும் உன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். ஏனென்றால், கடவுள் ஜனங்களுக்கு எதையும் கொடுக்க மாட்டார்’ என்ற நம்பிக்கை சிறுவயது முதல் என் மனதில் ஆழப் பதிந்திருந்தது.

வேலை செய்யும் இடத்தில் எல்லா பொறுப்புகளையும் நானே கவனித்துக்கொண்டேன், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என் முதலாளியின் கடையிலிருந்து வாகனங்களின் உபரி பாகங்களைத் திருடினேன். இரவில் எங்கள் நகரத்தின் வழியாக ரயில் எப்போது சென்றாலும் நானும் என் கூட்டாளிகளும் அதில் ஏறிக்கொண்டு, கையில் கிடைத்ததையெல்லாம் கொள்ளையடித்தோம். வைரம், தங்கம், வெண்கலம் ஆகியவற்றைக் கடத்தும் தொழிலிலும் ஈடுபட்டேன். போதைப் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்து, வெறித்தனமாய் நடந்துகொண்டேன்; அநேக ஆண்களுடன் நட்பு வைத்திருந்தேன்.

கடைசியில், 1993-⁠ல் திருடும்போது கையும் களவுமாகப் பிடிபட்டேன்; என் வேலை பறிபோனது. எங்கே தாங்களும் பிடிபட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் என் “கூட்டாளிகள்” என்னை அம்போவென விட்டுவிட்டுத் தலைமறைவானார்கள். அப்படி அவர்கள் சென்றது என் மனதைச் சுக்குநூறாக்கிவிட்டது. யாரையும் நம்பக் கூடாதென அன்று முடிவெடுத்தேன்.

பைபிள் என்னை மாற்றிய விதம்: 1994-⁠ல், மிஷனரி ஊழியம் செய்கிற டிம், வர்ஜீனியா என்ற யெகோவாவின் சாட்சி தம்பதியைச் சந்தித்தேன். புதிதாக நான் வேலைக்குச் சேர்ந்திருந்த இடத்தில் இவர்கள் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்; மதிய உணவு வேளையின்போது பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்ள எனக்கு உதவினார்கள். பின்னர், இவர்களை நம்பலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதும், வீட்டுக்கு வந்து எனக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கச் சொன்னேன்.

கடவுளுக்குப் பிரியமாக நடக்க வேண்டுமென்றால் என் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்வது அவசியமென புரிந்துகொண்டேன். உதாரணத்திற்கு, “விபசாரக்காரரும், . . . திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்பதை 1 கொரிந்தியர் 6:​9, 10-⁠லிருந்து அறிந்துகொண்டேன். என்னுடைய கெட்ட பழக்கங்களை ஒவ்வொன்றாக விட்டொழித்தேன். திருட்டுத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். கலகக் கும்பல்களுடன் எனக்குப் பல வருடங்களாக இருந்த தொடர்பை அறுத்துக்கொண்டேன். பின்னர், ஆண்கள் பலருடன் வைத்திருந்த நட்பை யெகோவா தந்த பலத்தால் முழுமையாய் விட்டொழித்தேன்.

நான் பெற்ற பலன்கள்: என் கோபத்தைக் கட்டுப்படுத்தவும், என் மகன்கள் தப்பு செய்யும்போது அவர்கள்மீது எரிந்து விழாதிருக்கவும் பெரிதும் முயற்சி செய்தேன். (எபேசியர் 4:31) பிரச்சினைகளைச் சுமூகமாய்ப் பேசி சரிசெய்ய முயற்சி எடுத்தேன். இப்படிப் பேசி சரிசெய்தது, விரும்பிய பலன்களைத் தந்தது, எங்கள் குடும்பத்திலும் ஒற்றுமை வளர்ந்தது.

என் பழைய நண்பர்களும் அக்கம்பக்கத்தாரும்கூட இப்போது என்னை நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். வேலை செய்யுமிடத்தில் நேர்மையானவள் என்று பெயர் எடுத்திருக்கிறேன், இப்போதெல்லாம் பணத்தையும் பொருளையும் என்னிடத்தில் நம்பி ஒப்படைக்கிறார்கள். இப்போது நான் வேலை செய்வதால், என் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன். அதோடு, பைபிளைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவதில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறேன். நீதிமொழிகள் 10:​22-⁠ல் காணப்படும் பின்வரும் வார்த்தைகள் உண்மை என்பதை இப்போது அனுபவப்பூர்வமாய் உணர்ந்திருக்கிறேன்: “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”

பின்னணிக் குறிப்பு

பெயர்: குளோரியா எலிசாராராஸ் டே சோபாரேனா

வயது: 37

நாடு: மெக்சிகோ

முன்பு: தற்கொலைக்கு முயன்றேன்

கடந்த காலம்: மெக்சிகோ நகரில் நுகால்பான் என்ற செல்வச்செழிப்புமிக்க இடத்தில் நான் வளர்ந்தேன். சிறுவயதிலிருந்தே, நான் யாருக்கும் அடங்க மாட்டேன். பார்ட்டிகளுக்குப் போக எனக்கு ரொம்பப் பிடிக்கும். 12 வயதில் புகைக்க ஆரம்பித்தேன், 14 வயதில் குடிக்க ஆரம்பித்தேன், 16 வயதில் போதைப் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறினேன். என் நண்பர்கள் பலரும் ஒழுங்கில்லாத குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், அவர்கள் எல்லாரும், வீட்டில் அடிஉதை பட்டுக்கொண்டும் சதா திட்டு வாங்கிக்கொண்டும் இருந்தவர்கள். வாழ்ந்து என்ன பயன் என்ற எண்ணம் என்னை பலமாய் ஆக்கிரமித்தபோது இருமுறை தற்கொலைக்கு முயன்றேன்.

எனக்கு 19 வயதானபோது மாடலிங் தொழிலில் இறங்கினேன்; இதனால், அரசியல் பிரமுகர்களுடனும் பிரபல நட்சத்திரங்களுடனும் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர், திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டேன். இருந்தாலும், குடும்பத்தில் நானே எல்லா தீர்மானங்களையும் எடுத்தேன். புகைப்பதையும் குடிப்பதையும்கூட நான் நிறுத்தவில்லை; மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் சமூக வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருந்தேன். நான் வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகள் சரளமாய்க் கொட்டின, அசிங்கமான ஜோக்குகளையே எப்போதும் சொல்ல விரும்பினேன்; தொட்டதற்கெல்லாம் கோபப்படுவேன்.

நான் பழகியவர்களில் பெரும்பாலோர் என்னைப் போல்தான் இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, நான் எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக வாழ்வதாக நினைத்தார்கள். ஆனால், எனக்கு வாழ்க்கை சூனியமாய் இருந்தது.

பைபிள் என்னை மாற்றிய விதம்: 1998-⁠ல் யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிள் படிக்க ஆரம்பித்தேன். வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள பைபிள் எனக்கு உதவியது. யெகோவா தேவன் பூமியைப் பூங்காவனமாய் மாற்றப் போகிறார், அதில் இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்புவார், அத்தகைய சூழ்நிலையில் நானும் வாழலாம் என்பதையெல்லாம் கற்றுக்கொண்டேன்.

கடவுள்மீது அன்பு காட்டுவதற்கு ஒரு வழி அவருக்குக் கீழ்ப்படிவதாகும் என்பதைக் கற்றுக்கொண்டேன். (1 யோவான் 5:3) கடவுளுக்குக் கீழ்ப்படிவது ஆரம்பத்தில் எனக்கு ரொம்ப கஷ்டமாய் இருந்தது; ஏனெனில், அதுவரை வாழ்க்கையில் நான் யாருக்கும் அடங்கிப் போனதில்லை. ஆனால், இப்படியே என் இஷ்டப்படி வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்பதைக் கடைசியில் புரிந்துகொண்டேன். (எரேமியா 10:23) இந்த விஷயத்தில் எனக்கு உதவும்படி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். அவருடைய நெறிகளுக்கு இசைவாக வாழ எனக்கு உதவும்படி கேட்டேன். என் பிள்ளைகள் நான் வளர்ந்தது போல் மோசமாக வளரக்கூடாதென்று ஆசைப்பட்டேன். அதனால் அவர்களை நன்றாக வளர்க்க எனக்கு உதவும்படி அவரிடம் கேட்டேன்.

வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்வது எனக்குப் பெரும்பாடாய் இருந்தது; “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, . . . மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் [“புதிய சுபாவத்தை,” NW] தரித்துக்கொள்ளுங்கள்” என எபேசியர் 4:22–24-⁠ல் சொல்லப்பட்ட புத்திமதிக்குக் கீழ்ப்படிந்தேன். என்னைப் பொறுத்தவரை, புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதற்கு புகைப்பது போன்ற மோசமான பழக்கவழக்கங்களை நான் விட்டுவிட வேண்டியிருந்தது; அதோடு, அசிங்கமான வார்த்தைகளைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேச கற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது. தேவையான மாற்றங்களைச் செய்து, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் நான் முழுக்காட்டுதல் பெறுவதற்குக் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆனது.

அதோடு, மனைவியாகவும் தாயாகவும் எனக்கிருந்த பொறுப்புகளைச் சரிவர செய்ய ஆரம்பித்தேன். “மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்” என 1 பேதுரு 3:​1, 2-⁠ல் சொல்லப்பட்ட புத்திமதியைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

நான் பெற்ற பலன்கள்: வாழ்க்கையின் அர்த்தத்தை இப்போது புரிந்துகொள்ள முடிந்திருப்பதால் யெகோவாவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இப்போது நான் எவ்வளவோ மாறியிருக்கிறேன்; என் அப்பா, அம்மா என்னை வளர்த்ததைப் போல் அல்லாமல் மிகச் சிறந்த விதத்தில் என் பிள்ளைகளை வளர்க்க முடிவதை எண்ணி ஆனந்தப்படுகிறேன். சில சமயங்களில், என் கடந்த கால வாழ்க்கை என் கண்முன் தோன்றி என் மனதைப் பாடாய்ப் படுத்துகிறது; அது யெகோவாவுக்குத் தெரியும். (1 யோவான் 3:​19, 20) பைபிள் நெறிகளுக்கு இசைய வாழ்வது எத்தனையோ ஆபத்துகளிலிருந்து என்னைப் பாதுகாத்திருக்கிறது, மனசமாதானத்தைத் தந்திருக்கிறது.

பின்னணிக் குறிப்பு

பெயர்: ஜேல்ஸன் கரேயா டே ஒலிவேரா

வயது: 33

நாடு: பிரேசில்

முன்பு: குடிகாரன், போதைப் பொருளுக்கு அடிமை

கடந்த காலம்: பிரேசில் நாட்டில், பாஷே என்ற நகரத்தில் பிறந்தேன். இது பிரேசில்-⁠உருகுவே எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது, இங்கு சுமார் 1,00,000 பேர் வசிக்கிறார்கள். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் இங்குள்ளவர்களின் முக்கியத் தொழில். வறுமை கோட்டிற்கு கீழிருந்த ஒரு மாவட்டத்தில்தான் நான் வளர்ந்தேன்; கலகக் கும்பல்களின் ஆதிக்கம் அங்கே கொடிகட்டிப் பறந்தது; அவர்களுடைய வன்முறையால் அந்த மாவட்டமே கதிகலங்கி நின்றது. இளைஞர்கள் மதுபானங்களையும், போதைப் பொருள்களையும் மனம்போல் பயன்படுத்தினார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும், குடிப்பழக்கத்தில் விழுந்தேன், மரிஹுவானா புகைக்கவும் ஹெவி-⁠மெட்டல் இசையைக் கேட்கவும் ஆரம்பித்தேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. உலகத்தில் இந்தளவு வேதனைகளும் குழப்பங்களும் இருப்பதால் கடவுளே இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

நான் நன்கு ‘கிட்டார்’ வாசிப்பேன், பாடல்களை எழுதுவேன்; பெரும்பாலும் பைபிளின் வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்த கருத்துகளின் அடிப்படையில்தான் பாடல்கள் எழுதினேன். என் இசைக் குழு நான் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை; எனவே, வீரியமிக்க போதைப் பொருள்களை அளவுக்குமீறி பயன்படுத்த ஆரம்பித்தேன். சாவை நினைத்துத் துளியும் கவலைப்படாததால் எக்கச்சக்கமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்தினேன். என் இதயத்தில் நான் சிம்மாசனமிட்டு வைத்திருந்த பல பாடகர்களுடைய கதை இப்படித்தான் முடிந்திருந்தது.

என்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டியம்மாவிடம் பணத்தைக் கடன்வாங்கி போதைப் பொருள் வாங்கினேன். அந்தப் பணத்தை எதற்குப் பயன்படுத்தினேன் என அவர் கேட்டபோதெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றினேன். போதாக்குறைக்கு ஆவியுலகத் தொடர்புடைய பழக்கங்களிலும் ஈடுபட்டேன். பிசாசுடன் சம்பந்தப்பட்ட மாயமந்திர வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தேன்; ஏனென்றால், சிறந்த பாடல்களை எழுத அவை உதவும் என நான் நினைத்தேன்.

பைபிள் என்னை மாற்றிய விதம்: பைபிளைப் படிக்கவும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்த பிறகு வாழ்க்கை பற்றிய என் கண்ணோட்டம் மாறத் தொடங்கியது. வாழவேண்டும், சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்ற ஆசை மெல்ல மெல்ல என் மனதை ஆக்கிரமித்தது. அதனால், என் நீளமான தலைமுடியை வெட்டத் தீர்மானித்தேன். வாழ்வில் எனக்கு ஏற்பட்ட விரக்தியையும், நான் யாருக்கும் அடங்காதவன் என்பதையும் காட்டவே நீளமாக முடியை வளர்த்திருந்தேன். கடவுள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், புகைப்பதை நிறுத்துவதோடு, குடிப்பழக்கத்துக்கும் போதைப் பொருள்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். இசையைப் பொறுத்ததிலும் என் ரசனையை மாற்றிக்கொள்ள வேண்டுமென புரிந்துகொண்டேன்.

யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்கு முதன்முதலாகச் சென்றிருந்தபோது அங்கே எழுதி மாட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு வசனத்தைக் கவனித்தேன். அந்த வசனம் நீதிமொழிகள் 3:​5, 6. அது இவ்வாறு வாசிக்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [அதாவது, யெகோவாவில்] நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” இந்த வசனத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தேன்; என் வாழ்க்கையில் யெகோவாவுக்கு இடம்கொடுத்தால் நான் அடியோடு மாற அவர் எனக்கு உதவுவார் என்ற தைரியம் கிடைத்தது.

என் இரத்தத்தில் ஊறிப்போயிருந்த வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொள்வதும் போதைப் பொருள் பழக்கத்தை ஒழித்துக்கட்டுவதும் என் கையையே வெட்டி எறிவதைப் போல் அவ்வளவு கஷ்டமாக இருந்தது. (மத்தேயு 18:​8, 9) இந்தப் பழக்கங்களையெல்லாம் என்னால் மெல்ல மெல்ல நிறுத்த முடியவில்லை. அப்படிச் செய்ய முடியுமென எனக்குத் தோன்றவுமில்லை. எனவே, அவற்றை ஒரேயடியாக நிறுத்தினேன். என் உயிருக்கே உலைவைக்கும் அந்தப் பழைய வாழ்க்கைப் பாணிக்குத் திரும்பிவிடாமலிருக்க சில இடங்களுக்குச் செல்வதையும் சிலருடன் பழகுவதையும் அறவே தவிர்த்தேன்.

என் தோல்விகளை நினைத்து சில சமயங்களில் நான் துவண்டுபோனேன்தான். என்றாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் தினந்தோறும் முன்னேற்றப் பாதையில் நான் எடுத்து வைத்த அடிகளைக் கண்டு பூரித்துப்போனேன். யெகோவாவின் பார்வையில் உடல் ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமாக இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயமென நினைத்தேன். பழைய பாதைக்கு நான் திரும்பிப் போகாமல் எனக்கு முன்பு இருக்கிற பாதையில் ஒழுங்காக நடப்பதற்கு உதவும்படி கேட்டு யெகோவாவிடம் மன்றாடினேன், அவரும் எனக்கு உதவினார். அவ்வப்போது நான் சறுக்கி விழுந்து விட்டேன். சில சமயங்களில் அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டு கஷ்டப்பட்டேன். ஆனாலும், தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்தும்படி எனக்குப் படிப்பு நடத்தியவரிடம் கேட்டுக்கொண்டேன்.

கடவுளைப் பற்றிய உண்மைகளை பைபிளிலிருந்து கற்றறிந்தேன். நம் ஒவ்வொருவர் மீதும் அவருக்கு அக்கறை இருக்கிறது, அவர் பொய் மதங்களை அழித்துவிடுவார், தற்போது உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கும் வேலையை நடத்திவருகிறார் என்றெல்லாம் அறிந்துகொண்டபோது இதுதான் உண்மையென்று பட்டது. (மத்தேயு 7:21–23; 24:14; 1 பேதுரு 5:​6, 7) ஜிக்ஸா புதிர் விளையாட்டில் எல்லாத் துண்டுகளையும் இணைக்கும்போது முழுமையான படத்தைப் பார்க்க முடிவதைப் போலவே நான் அறிந்துகொண்ட இந்த விஷயங்களை ஒன்றோடொன்று பொருத்திப் பார்த்தபோது இதுதான் உண்மை என்று எனக்குப் புரிந்தது. கடைசியில், கடவுளுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தீர்மானித்தேன். அவர் எனக்குச் செய்திருக்கும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி காட்ட விரும்பினேன்.

நான் பெற்ற பலன்கள்: என் வாழ்க்கைக்கான அர்த்தத்தை இப்போது புரிந்திருக்கிறேன். (பிரசங்கி 12:13) இப்போதெல்லாம் என் குடும்பத்தாருக்கு நான் பாரமாக இருப்பதில்லை, நான்தான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். பைபிளிலிருந்து நான் கற்ற நல்ல விஷயங்களை என் பாட்டியம்மாவிடம் பகிர்ந்துகொண்டேன்; இப்போது அவர் தன்னை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிறார். என் குடும்பத்தாரில் பலரும் என் இசைக் குழுவில் இருந்த ஒரு நபரும் இப்போது தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இப்போது எனக்குத் திருமணமாகிவிட்டது. நானும் என் மனைவியும் பைபிளைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவதிலேயே எங்கள் நேரத்தைப் பெரும்பாலும் செலவிடுகிறோம். ‘முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கை’ வைக்க கற்றுக்கொண்டதால் என் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. (w09 2/1)

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

“வாழவேண்டும், சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்ற ஆசை மெல்ல மெல்ல என் மனதை ஆக்கிரமித்தது”