Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“எனக்கு இன்னும் நேரம் வரவில்லை”

“எனக்கு இன்னும் நேரம் வரவில்லை”

“எனக்கு இன்னும் நேரம் வரவில்லை”

ஒரு டிரைவர் பெரிய குப்பை லாரியை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று அதை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு தம்பதியர் மீதும் 23 வயது வாலிபர் மீதும் மோதியது. நியு யார்க் நகர செய்தித்தாள் ஒன்றின் அறிக்கைப்படி, அந்தத் தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள், அந்த வாலிபரோ சுயநினைவை இழந்தார். அவர் மயக்கம் தெளிந்து, சுற்றும்முற்றும் பார்த்தவுடனேயே, ‘என்னால நம்பவே முடியல. கடவுளே, எனக்குத் தாங்கிக்கிற சக்தியைக் கொடுங்க’ என்று சொல்லிக்கொண்டார். பிற்பாடு, “எனக்கு இன்னும் நேரம் வரவில்லை” என்றார்.

இதுபோன்ற பல சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவர் ஏதோவொரு ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பினால், ‘அவருடைய நேரம் இன்னும் வரவில்லை’ என்று மக்கள் பொதுவாகச் சொல்கிறார்கள்; ஆனால், ஒருவர் எதிர்பாராத விபத்தில் திடீரென்று செத்துவிட்டால், ‘அவருடைய நேரம் வந்துவிட்டது’ அல்லது ‘கடவுள் அவரை எடுத்துக்கிட்டார்’ என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு விதி, துரதிர்ஷ்டம், தலையெழுத்து, கடவுள் சித்தம் என எதை அவர்கள் காரணங்காட்டினாலும், அடிப்படையில் அவர்கள் நம்புவது ஒரே விஷயத்தைத்தான். அதாவது, தங்கள் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொன்றும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றும், அதைத் தங்களால் மாற்றவே முடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சாவோ விபத்தோ நடக்கும்போது மட்டுமல்ல, மற்ற சமயங்களிலும் அவர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள்; அதுவும் இன்றோ நேற்றோ அல்ல, காலங்காலமாகவே இப்படித்தான் நினைத்து வருகிறார்கள்.

உதாரணத்திற்கு, நட்சத்திரங்களும் கிரகங்களின் பெயர்ச்சிகளும் மனித வாழ்வைக் கட்டுப்படுத்துவதாகப் பூர்வ பாபிலோனியர்கள் நம்பினார்கள். ஆகவே, வானத்தைப் பார்த்து நேரங்களையும் சகுனங்களையும் கணித்தார்கள், அவற்றின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் செய்தார்கள். கிரேக்கர்களும் ரோமர்களும் விதியின் தேவதையை வணங்கினார்கள்; நல்லது கெட்டதை அருளும் அபார சக்தி அந்தத் தேவதைக்கு இருந்ததாகவும் தங்களுடைய முக்கியக் கடவுட்களான சீயுஸையும் யூப்பித்தரையுமே விஞ்சிவிடும் சக்தி சிலசமயங்களில் அத்தேவதைக்கு இருந்ததாகவும் அவர்கள் நம்பினார்கள்.

பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தையும் புண்ணியத்தையும் பொறுத்தே இந்த ஜென்மம் ஒருவருக்கு அமைவதாகக் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்து மதத்தினரும் புத்த மதத்தினரும் நினைக்கிறார்கள்; அதேபோல், ஒருவர் இந்தப் பிறவியில் செய்யும் நல்லது கெட்டதைப் பொறுத்தே அடுத்த பிறவி அமையும் என்று நினைக்கிறார்கள். அநேக சர்ச்சுகளும் மற்ற மதங்களும்கூட, மனிதர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் இல்லை என்றும் அது முன்தீர்மானிக்கப்படுகிறது என்றும் கற்பிக்கின்றன.

முற்போக்கான இந்த யுகத்தில் பலர் இப்படி நம்புவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் என்ன நிலைமையில் இருக்கிறார்கள், தினந்தினம் எதையெல்லாம் சந்திக்கிறார்கள், கடைசியில் எங்கே போய்ச் சேருவார்கள் என்பதெல்லாம் அவர்கள் கையில் இல்லையாம், விதிதான் தீர்மானிக்கிறதாம். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? வெற்றி தோல்வி, பிறப்பு இறப்பு என வாழ்க்கையில் நடக்கும் எல்லாச் சம்பவங்களும் உண்மையிலேயே முன்தீர்மானிக்கப்படுகின்றனவா? உங்கள் வாழ்க்கையை விதிதான் ஆட்டிப்படைக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதிலைப் பார்க்கலாம். (w09 3/1)

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

Ken Murray/New York Daily News