Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்க இதுவே காலம்

எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்க இதுவே காலம்

எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்க இதுவே காலம்

“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”—ஆதியாகமம் 1:27.

பைபிளின் முதல் அதிகாரத்தில் காணப்படும் இந்த வார்த்தைகள், பரிபூரண மனிதத் தம்பதிகளான ஆதாமையும் ஏவாளையும் கடவுள் படைத்ததைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. கடவுள் “அதினதின் காலத்திலே நேர்த்தியாக” உண்டாக்கிய அற்புதமான படைப்புகளில் அந்த மனிதர்களுடைய படைப்பும் ஒன்று. (பிரசங்கி 3:11) அவர்களைப் படைத்த கடவுளாகிய யெகோவா அவர்களிடம் இப்படிச் சொன்னார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.”—ஆதியாகமம் 1:28.

இவ்வாறு, அந்த முதல் மனிதத் தம்பதிகளுக்குக் கடவுள் தமது நோக்கத்தைத் தெரியப்படுத்தினார். அவர்கள் பிள்ளைகளைப் பெற்றுப் பெருகி, பூமியைப் பராமரிக்க வேண்டியிருந்தது; முழு பூமியையும் ஒரு பூஞ்சோலையாக மாற்றி தங்கள் சந்ததியாரோடு குடியிருக்க வேண்டியிருந்தது. அவர்கள் எவ்வளவு காலம் வாழ வேண்டும், எப்போது சாக வேண்டும் என்றெல்லாம் முன்னரே தீர்மானிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறும் வாய்ப்பைக் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் சரியான தீர்மானத்தை எடுத்து, கடவுளுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் அளவில்லா சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் சதாகாலமும் வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால், அவர்கள் தவறான தீர்மானத்தை எடுத்தார்கள்; அதன் விளைவாக, முதுமையும் மரணமும் மொத்த மனிதகுலத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்தன. முற்காலத்தில் வாழ்ந்த யோபு என்பவர் சொன்னபடியே, “பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி.” (யோபு 14:1, பொது மொழிபெயர்ப்பு) இந்தப் பிரச்சினையெல்லாம் எப்படி ஆரம்பமானது?

“ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று பைபிள் விளக்குகிறது. (ரோமர் 5:12) அந்த ‘ஒரே மனிதன்’ ஆதாம்தான்; கடவுள் கொடுத்த எளிமையான, தெளிவான கட்டளையை அவன் வேண்டுமென்றே மீறினான். (ஆதியாகமம் 2:17) இவ்வாறு, ஆதாம் தவறான தீர்மானத்தை எடுத்ததால், பூஞ்சோலையான பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறும் வாய்ப்பை இழந்தான். அதோடு, தன்னுடைய சந்ததியும் அந்த அருமையான வாய்ப்பை இழக்கக் காரணமானான். அவர்களைப் பாவம் மற்றும் மரணத்தின் சாபத்திற்கு ஆளாக்கினான். அப்போது, எல்லாம் பறிபோய்விட்டதாகத் தோன்றியது; நிஜமாகவே எல்லாம் பறிபோய்விட்டதா?

புதுப்பிப்பதற்கான காலம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுளுடைய தூண்டுதலால் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) ஆதாம் ஏவாளிடம் கடவுள் சொன்ன வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு உத்தரவாதமாக, அவர் சீக்கிரத்தில் என்ன செய்யப்போகிறாரென அவருடைய புத்தகம் குறிப்பிடுகிறது; ஆம், “[மனிதர்களுடைய] கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்” என்று அது அழகாய் வர்ணிக்கிறது. பின்பு, “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” எனக் கடவுளே சொல்வதாகக் குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 21:4, 5.

எல்லாவற்றுக்கும் ஒரு காலமுண்டு என்பதால், ‘கடவுள் எல்லாவற்றையும் புதுப்பித்துத் தம்முடைய அருமையான வாக்குறுதிகளை நிறைவேற்றப்போகிற காலம் எது?’ என்ற கேள்வியை நாம் கேட்பது நியாயம்தான். பைபிளின்படி நாம் “கடைசிநாட்களில்” வாழ்கிறோம், கடவுள் ‘எல்லாவற்றையும் புதிதாக்கப்போகிற’ காலம் மிக அருகில் வந்துவிட்டது; இந்த விஷயத்தை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு, இந்தப் பத்திரிகையை வெளியிடுபவர்களான யெகோவாவின் சாட்சிகள் அதிக முயற்சி எடுத்து வந்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1) நீங்கள் பைபிளை ஆராய்ந்து பார்த்து, உங்களுக்குக் காத்திருக்கும் அருமையான எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். “யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்திலேயே அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையிலேயே அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” என்ற அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும் உற்சாகப்படுத்துகிறோம். (ஏசாயா 55:6, திருத்திய மொழிபெயர்ப்பு) இப்போது நீங்கள் தெரிந்துகொண்டபடி, உங்களுடைய தற்போதைய வாழ்க்கையும் எதிர்கால வாழ்க்கையும் விதியின் கையில் இல்லை, உங்கள் கையில்தான்! (w09 3/1)

[பக்கம் 8-ன் சிறுகுறிப்பு]

“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”